Tuesday, October 8, 2024
Homeஎழுத்தாக்கங்கள்பறகத் நிறைந்த பறாஅத் இரவு!

பறகத் நிறைந்த பறாஅத் இரவு!

பறாஅத் இரவு பற்றி அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமாவின் மார்க்கத் தீர்ப்பு

فقم ليلة النصف الشريف مصليا – فأشرف هذا الشهر ليلة نصفه

فكم من فتى قد بات فى النصف آمنا – وقد نسخت فيه صحيفة حتفه

فبادر بفعل الخير قبل انقضاعه – وحاذر هجوم الموت فيه بصرفه

وصم يومه لله واحسن رجائه – لتظفر عند الكرب منه بلطفه

(حسن البيان : للسيد عبد ا لله بن محمد بن الصديق الغماري ص 16)

“றஜப்” மாதத்திற்கும், “றமழான்” மாதத்திற்கும் இடையிலுள்ள மாதம் “ஷஃபான்” மாதம் என்று அழைக்கப்படுகின்றது. இம்மாதத்தின் பதினைந்தாம்    இரவு   “பறாஅத்” இரவு   “நிஸ்பு  ஷஃபான்” என்றழைக்கப்படுகின்றது.

இவ்விரவின் பிற்பகுதியில் “அல்லாஹ்” தனது அடியார்களுக்கு “தஜல்லீ” வெளியாகி பாவமன்னிப்புக் கேட்பவர்களின் பாவங்களை மன்னிக்கின்றான். அருளை வேண்டுபவர்களுக்கு அருள் செய்கிறான். அவனை அழைப்பவர்களுக்கு பதில் கூறுகிறான் – கேட்டதை கொடுக்கின்றான், துன்பத்தில் துவண்டு போனவர்களின் துன்பம் களைகின்றான், இன்னல்களில் சிக்குண்டவர்களின் இன்னல்களை நீக்கியருள்கிறான். நரகிலிருந்து பலருக்கு விடுதலை வழங்குகின்றான், அடியார்களின் விதிகளை நிர்ணயிக்கின்றான்.

இவ்விரவின் சிறப்புத் தொடர்பாக அநேக நபீ மொழிகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானவற்றை மட்டும் இங்கு   எழுதுகின்றோம்.

இது தொடர்பாக வந்துள்ள நபீ மொழிகளில் மிகப் பலவீனமானவையும், ஓரளவு பலவீனமானவையும் உள்ளன. நபீ மொழி ஆய்வாளர்களுக்கு இவ்விபரம் தெரியும்.  அவற்றில்  சில  பலமானவை என்று அல்ஹாபிள் இப்னு ஹிப்பான் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியிருப்பதை இங்கு குறிப்பிடுகின்றோம்.

“அல்லாஹ்”  குறித்த  இரவில்  அனைத்து  சிருட்டிகளுக்கும்  “தஜல்லீ” வெளியாகி  அவர்களின் பாவங்களை  மன்னிக்கின்றான்.   இருவரைத்தவிர, ஒருவன்  “முஷ்ரிக்”   இணைவைப்பவன்.  மற்றவன் “முனாபிக்” நயவஞ்சகன், (ஒற்றுமையை சீர்குலைக்கும் பகைவன்)
ஆதாரம் – “அந்நிஹாயா பீ கரீபில் ஹதீத்”
பக்கம்-  499  பாகம்  -02  இப்னுல்  அதீர்

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் பின்வருமாறு அறிவித்துள்ளார்கள் :

(என்னிடம் ஜிப்ரீல்  அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து இன்றிரவு “ஷஃபான்” மாதத்தின்  பதினைந்தாம் இரவாகும். “பனூ கல்ப்” கூட்டத்தவர்களின் ஆடுகளில் உள்ள முடிகளின் எண்ணிக்கையளவு நரகத்திலுள்ள பலரை அல்லாஹ் விடுதலை செய்கிறான். எனினும் இணைவைத்து வணங்குகின்ற “முஷ்ரிக்”,  குழப்பத்தை ஏற்படுத்துகின்ற “முனாபிக்” நயவஞ்சகன், உறவினரைத் துண்டித்து நடப்பவன், சாரம் அல்லது “றவ்ஷர்” போன்றவற்றை கரண்டைக்காலின் கீழ் உடுப்பவன், பெற்றோரைத் துன்புறுத்துகின்றவன், தொடர்ந்து மது அருந்துகின்றவன், முதலானவர்களை பார்க்கவே மாட்டான்) என்று.
அறிவிப்பு : ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா  அவர்கள்
ஆதாரம்- பைஹகீ

அறபு மக்களில் “பனூகல்ப்” கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதிகமாக ஆடுகள் வளர்த்து வந்தார்கள் அல்லது அவர்களின் ஆடுகளில்தான் அடர்த்தியான முடி இருந்தது.

“ஷஃபான்” பதினைந்தாம் இரவு – “பறாஅத் இரவு” – அல்லாஹ் அடியார்களுக்கு வெளியாகி இரண்டு பேர்கள் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் பாவங்களை மன்னிக்கின்றான். ஒருவன் நயவஞ்சகன், மற்றவன் கொலைகாரன் என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அருளினார்கள்.

அறிவிப்பு – அப்துல்லாஹ் இப்னு அம்ர் றழியல்லாஹு அன்ஹு  அவர்கள்
ஆதாரம்- அஹ்மத்

ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா  அவர்கள்  பின்வருமாறு கூறியுள்ளார்கள்:

(ஒரு நாள் இரவு நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நான் இழந்துவிட்டேன், (காணாமல் போய்விட்டார்கள்) நான் அவர்களைத் தேடி வெளியே சென்றேன். அப்போது அவர்கள் “ஜன்னதுல் பகீஉ” மதீனாவில் உள்ள மையவாடியில் வானத்தின் பக்கம் தங்களின் தலையை உயர்த்தினவர்களாக இருந்ததைக் கண்டேன். (என்னைக்கண்ட) பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷாவே! எனக்கு ஏதேனும் நடந்திருக்கலாம் என்று நீ பயந்து விட்டாயா? என்று கேட்டார்கள். நீங்கள் வேறு மனைவியர்களிடம் சென்றிருக்கலாம் என்று நினைத்தேன் என்றார்கள் ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள். இது கேட்ட நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ( “ஷஃபான்” பதினைந்தாம் இரவு “அல்லாஹ்” முன்வானத்திற்கு “தஜல்லீ” வெளியாகி “பனூ கல்ப்” கூட்டத்தவர்களின் ஆடுகளில் உள்ள முடிகளை விட அதிக அளவு பாவிகளின் பாவங்களை மன்னித்து விடுகிறான்) என்று கூறினார்கள்.

அறிவிப்பு- ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள்.
ஆதாரம்  –  துர்முதீ  –   இப்னுமாஜஹ்

“ஷஃபான்” மாதத்தின் பதினைந்தாம் இரவு “அல்லாஹ்” அடியார்களுக்கு வெளியாகி  விசுவாசிகளின் பாவங்களை மன்னித்துவிடுகின்றான். “காபிர்”களை அவ்வாறே விட்டுவிடுகின்றான். அதேபோல் பொறாமைக்காரர்கள் தமது பொறாமையை விடும்வரை அவர்களையும் விட்டுவிடுகின்றான்.

அறிவிப்பு  –  அபூதஃலபதல்  குஷ்னீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்
ஆதாரம்  –  தபறானீ,  பைஹகீ

“ஷஃபான்”  மாதத்தின்  நடுப்பகுதியில்  (பதினைந்தாம்  இரவு)  அல்லாஹ் முன்வானத்திற்கு  வெளியாகி இருவர் தவிர மற்றவர்களின் பாவங்களை மன்னித்து விடுகின்றான். ஒருவன் “முஷ்ரிக்” இணைவைத்தவன். மற்றவன் நெஞ்சில் வஞ்சகம் உள்ளவன் என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.

அறிவிப்பு – அபூபக்ர் ஸித்தீக் றழீயல்லாஹு அன்ஹு  அவர்கள்
ஆதாரம் – அல் பஸ்ஸார், பைஹகீ

(நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் இரவு தொழுதார்கள். நீண்ட நேரம் “ஸுஜூத்” செய்து கொண்டிருந்தார்கள். (நெற்றியை தரையில் வைத்த வண்ணம்  இருந்தார்கள்.  அவர்கள்  மரணித்து விட்டார்களோ என்று நான் நினைத்து அவர்களின் கால் பெருவிரலை  அசைத்துப்  பார்த்தேன்.  அது அசைந்தது. தொழுகையை முடித்த நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷாவே! நான்  உனக்கு  துரோகம் செய்துவிட்டதாக நினைக்கின்றாயா? என்று கேட்டார்கள். இல்லை அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் நீண்ட நேரம் ஸுஜூத் செய்து கொண்டிருந்ததால் நீங்கள் மரணித்து விட்டீர்களோ என்று நான் எண்ணினேன் என்று சொன்னார்கள். அப்போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இன்றிரவு உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வுக்கும், றஸூல் அவர்களுக்குமே தெரியும்  என்றேன். இன்றிரவு “ஷஃபான்” பதினைந்தாம் இரவு. இன்றிரவு அல்லாஹ் தனது அடியார்களுக்கு “தஜல்லீ” வெளியாகி பாவமன்னிப்புக் கேட்பவர்களுக்கு அவர்களின் பாவங்களை மன்னிக்கின்றான், அருள் வேண்டுவோருக்கு அருள் செய்கிறான். பொறாமை நெஞ்சுள்ளவர்களை அவ்வாறே விட்டுவிடுகின்றான்.)  என்று கூறினார்கள்.

அறிவிப்பு  –  ஆயிஷா  றழியல்லாஹு அன்ஹா அவர்கள்
அலா இப்னுல் ஹாரித் ஆதாரம்  – பைஹகீ

மேலே எழுதிக் காட்டிய நபீமொழிகள் மூலம் “பறாஅத்” இரவு மிக விஷேடமான இரவென்று தெளிவாகிவிட்டது.

இந்த  இரவில்  “நப்ல் முத்லக்”  பொதுவான  “ஸுன்னத்”  அதிகமாகத்  தொழுதல், “திக்ர்” செய்தல், திருக்குர்ஆன் ஓதுதல், “ஸலவாத்” சொல்லுதல், தானதர்மம் செய்தல், பாவமன்னிப்புக் கேட்டல், உறவினர்களைச் சந்தித்தல், “மக்பறா” மையவாடிக்குச் சென்று மரணித்தவர்களின் ஆத்மசாந்திக்காக “துஆ” கேட்டல், ரொட்டி சுட்டு ஏழைகளுக்கு கொடுத்தல், அவ்லியாஉகளின் சமாதிக்குச் சென்று அவர்களை “ஸியாறத்” தரிசித்தல் என்பன அல்லாஹ்வுக்கு விருப்பமானவையாகும்.

“பறாஅத்”   தொடர்பாக  வந்துள்ள  நபீமொழிகளிற்   சில   “ழயீப்”   பலம்   குறைந்தவையாக இருந்தாலும் கூட அவை கொண்டு அமல் செய்தல் எந்த வகையிலும் பிழையாகமாட்டாது.

“ழயீப்” பலம்  குறைந்த  நபீமொழிகள்  கொண்டு  “அமல்” செய்வது தொடர்பாக அது ஆகுமென்று உலகில் தோன்றிய அறிஞர்களில் உருப்படியானவர்கள் என்று கருதப்படுகின்ற இமாம் நவவீ றஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் இப்னு ஹஜர் றஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் றமலீ றஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் றஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் இப்னுல் முபாறக் றஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் இஸ்ஸுப்னு அப்திஸ் ஸலாம் ஆகியோர் கூறியுள்ளார்கள்.

எனவே உலகில் தோன்றிய மார்க்க மேதைகளின் – இமாம்களின் – புகஹாஉகளின் – சட்டவல்லுனர்களின் – அவ்லியாஉகளின் – “தரீகா” உடைய ஷெய்குமார்களின் கருத்துக்களை ஏற்றுச் செயற்படுவதா? அல்லது இரண்டு இப்னுகளினதும், அவ்விருவரின் கொள்கை வழித்தோன்றல்களினதும் கருத்துக்களை ஏற்று  செயல்படுவதா?  என்பதை பொதுமக்கள்  சிந்தித்து  செயல்பட வேண்டும்.

குறிப்பு : மேற்கண்ட தகவல்கள் யாவும் திரு மக்கா நகரின் பிரசித்தி பெற்ற எழுத்தாளரும், அறிஞருமான அஸ்ஸெய்யித்  முஹம்மத்  இப்னு  அலவீ இப்னு  அப்பாஸ்  அல்மாலிகீ   அல்  மக்கீ  அல்ஹஸனீ   அவர்களின் “ماذا فى شعبان” “மாதா பீ ஷஃபான்” என்ற நூல் தந்த தகவல்களாகும்.

اﻷﺧﺒﺎر والدلائل كلها ﻣﻨﻘﻮﻟﺔ ﻣﻦ ﻛﺘﺎب” ﻣﺎذا  ﺷﻌﺒﺎن “ ﻠﺴﻴﺪ محمد ابن ﻋﻠﻮي ﺑﻦ ﻋﺒﺎس المالكي المكي المدني

இவ்வண்ணம்
அகில  இலங்கை ஸூபிஸ  உலமா சபை
BJM. பில்டிங்,  காத்தான்குடி  – 06. இலங்கை.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments