(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ)
அன்புக் குரியவர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
“பறாஅத்” இரவு நாளை இரவென்பது அதிகமானவர்களின் கணிப்பாகும். எவர் எவ்வாறு கணித்தாலும் “ஷஃபான்” மாதம் 15ம் இரவு “பறாஅத்” இரவு என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.
“பறாஅத்” என்ற சொல்லின் சுருக்கமான, சரியான பொருள் விடுதலை என்பதாகும். இந்த இரவு نِصْفُ شَعْبَانْ “நிஸ்பு ஷஃபான்” என்றும் அழைக்கப்படும்.
மகான்களின் வருகைக்கு முன் வாழ்ந்த மக்கள் இவ் இரவை கண்ணியத்திற்குரிய இரவாக கணித்து அவ் இரவில் தம்மாலான வணக்க வழிபாடுகள் செய்து வந்துள்ளார்கள். எல்லா ஊர்களிலும் ஆண்களை விட பெண்களே இவ் இரவை கண்ணியப்படுத்தியும் வந்துள்ளார்கள்.
அன்று ரொட்டி சுட்டு ஏழைகளுக்கு கொடுப்பார்கள். பள்ளிவாயல்களுக்கும் அனுப்பி வைப்பார்கள். மூன்று “யாஸீன்” ஓதி “துஆ” பிரார்த்தனையும் செய்வார்கள்.
குறித்த இரவின் விஷேடமென்னவெனில் நரகவாதிகள் என்று தீர்மானிக்கப்பட்டவர்களில் அல்லாஹ் தனக்கு விருப்பமானவர்களை அதிலிருந்து விடுதலை செய்கிறான். அவனுக்கு ஜமால், ஜலால் என்று இரு நிலைகள் உள்ளன. ஒன்று – கோப நிலை. மற்றது இரக்க நிலை. இவ் இரு நிலைகள் அவனுக்கு மட்டுமன்றி மனிதர்களுக்கும் உண்டு. ஜமால் நிலை மகிழ்ச்சியான, இரக்கமான, கூளான – குளிரான நிலை.
இறைவன் எந்நேரமும் ஒரே நிலையில் இருப்பதில்லை. மாறிமாறி இரு நிலைகளிலும் இருப்பான். அவனுக்கு “அல் அஸ்மாஉல் ஜமாலிய்யா” என்றும், “அல் அஸ்மாஉல் ஜலாலிய்யா” என்றும் இரு வகைத் திருநாமங்களும் உண்டு. அவன் “ஜமால்” இரக்க நிலையில் – கூளான நிலையில் இருக்கும் நிலையில் அடியான் எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவான்.
அவனுக்கு “ஜமால்” நிலை ஏற்பட்டால் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பான். அவ்வேளை றஹ்மான், றஹீம், நாபிஉ, முன்இம், ஹாதீ, முஜீப், முஃதீ, ஸபூர் முதலான அவனின் திருநாமங்களின் செயற்பாடுகள் அவனில் மிகைத் திருக்கும்.
அவ்வாறான நேரம் “என்னிடம் பாவமன்னிப்புக் கேட்போர் யாருமில்லையா? என்னிடம் உணவு கேட்போர் யாருமில்லையா? என்னிடம் உடை கேட்போர் யாருமில்லையா? என்னிடம் செல்வத்தைக் கேட்போர் யாருமில்லையா? எவர் எதைக் கேட்டாலும் அவர் கேட்டதைக் கொடுக்க நான் தயார் நிலையில் உள்ளேன்” என்று கெஞ்சும் பாணியில், கொஞ்சும் வசனத்தில் குரல் கொடுப்பான். அந்நேரம் எவன் எதைக் கேட்டாலும் கொடுப்பான் என்பதில் எவரும் கிஞ்சித்தும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. அடியானின் அழுகைக் குரல் அவனின் களஞ்சியத்தை திறந்து விடும், அவனின் உள்ளத்தை உருகச் செய்து விடும்.
قَال الله في الحديث القدسي ” اَنِيْنُ الْمُذْنِبِيْنَ اَحَبُّ اِلَيَّ مِنْ زَجْلِ الْمُسَبِّحِيْنَ.
“பாவிகளின் முனக்கம் – அனுக்கம் – அந்தக் குரல் “தஸ்பீஹ்” செய்பவர்களின் குரலை விட கேட்பதற்கு தனக்கு மிக விருப்பமானது” என்று ஹதீதுக் குத்ஸியில் கூறியுள்ளான்.
எனவே, நாளை இரவு அவனுடன் நேரடியாக தொடர்பு கொள்வோம். இரவின் பிற்பகுதியில் எழுந்து கையேந்துவோம். கண்ணீர் வடிப்போம்.
قال النّبيّ صلى الله عليه وسلم ” دَمْعَةُ الْعَاصِيْ تُطْفِئُ غَضَبَ الْجَبَّارِ”
“பாவி வடிக்கும் கண்ணீர் இறைவனின் கோபம் என்ற நெருப்பை அணைத்து விடும்” என்ற அண்ணல் நபீயின் அருள்வாக்கை நினைத்து கையேந்துங்கள், கொரோனா எமதூரை விட்டும், எமது நாட்டை விட்டும் வெளியேற முழு மனமுருகிக் கேளுங்கள்.
அல்லும் பகலும் அடிமை மனம் தேம்புதற்கு
கல்லும் கரைந்து விடும் கண்ணே றஹ்மானே!
பீற்றற்றுருத்தி தனை பீக்குழியை சாக்கடையை
கார்த்தேன் வளர்த்தேன் என் கண்ணே றஹ்மானே!
பிறருடைமையை எடுத்து என்னுடைமை என்பவர்க்கு
கப்றில் வரும் துணையே கண்ணே றஹ்மானே!