(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ)
எச்செயலாயினும் அதன் சொந்தக்காரன் அல்லாஹ்தான். எச்செயலுக்கும் வேறெவரும் சொந்தக்காரனல்ல. படைப்புக்கள் அனைத்தும் அவன் படைப்புக்களே! செயல்கள் அனைத்தும் அவன் செயல்களே! இவ்வாறுதான் ஒரு விசுவாசியின் “அகீதா” கொள்கை இருக்க வேண்டும். இதற்கு மாறான நம்பிக்கையுள்ளவன் இறைவனை அரை குறையாகப் புரிந்தவனேயாவான்.
الأفعال كلّها لله – لا فاعل إلّا الله
செயல்கள் எல்லாம் அல்லாஹ்வுக்குரியன. செய்பவன் அவனே!
ஒருவன் தனது தோட்டத்திற்கு சென்ற நேரம், அங்கிருந்த தென்னையிலிருந்து தேங்காய் அவனின் தலையில் விழுந்து அது இரண்டாக வெடித்தாலும் கூட அவன் மரத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுமாட்டான். மரத்தோடு கோபப்பட்டு அதற்கு அடிக்கவுமாட்டான். இது இறைவன் செயல் என்று கூறுவதோடு அச்செயலைப் பொருந்தியும் கொள்வான்.
ஆனால் ஒரு மனிதன் அவனின் தலைக்கு கல்லால் எறிந்து சிறு காயம் ஏற்பட்டாற் கூட பொலிஸில் புகார் செய்து எறிந்தவனுக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்வான். அதோடு அவனை அடித்து துன்புறுத்தவும் செய்வான். இச்செயலை எறிந்தவனின் செயல் என்றும் சொல்வான். இது மனிதனின் சுபாவம். இதற்குக் காரணம் செயலெல்லாம் இறைவனுக்குரியவையென்ற இறை ஞானத்தை அவன் அறியாமலிருந்ததும், சிருட்டிகளும், அவற்றால் ஏற்படுகின்ற செயல்களும் இறைவனும், அவனின் செயல்களும் என்று அறியாமலிருந்ததுமேயாகும்.
எவர் மூலம் எச் செயல் நடந்தாலும் அது இறைவனின் செயல் என்றும், அவன் நாட்டம் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். எவராலும் எச் செயலையும் சுயமாகச் செய்யவும் முடியாது. அதே போல் எவராலும் எச் செயலையும் அவன் நாட்டமின்றியும் செய்யவும் முடியாது.
ஒருவனிடம் நெருப்பு சுடுமா? கத்தி வெட்டுமா? என்று கேட்டால் ஆம் என்றுதான் சொல்வான். ஆனால் கத்தி சுயமாக வெட்டவுமாட்டாது, நெருப்பு சுயமாக சுடவும் மாட்டாது. நெருப்புச் சுடுவதற்கும், கத்தி வெட்டுவதற்கும் அல்லாஹ்வின் நாட்டம் அவசியமேயாகும். அவன் நாடாமல் துரும்பும் அசையாது, தூசும் பறக்காது.
கத்தி வெட்டுவதற்கும், நெருப்பு சுடுவதற்கும் அல்லாஹ்வின் நாட்டம் தேவையில்லை, அவை சுயமாகவே செயல்படுமென்று வைத்துக் கொண்டால் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபீ இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கழுத்தை அறுத்த நேரம் கழுத்து அறு பட்டிருக்க வேண்டும். நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நும்ரூத் அரசன் தீக்கிடங்கில் எறிந்த போது நெருப்பு அவர்களை எரித்திருக்க வேண்டும். நாட்டம் நீயாகும், நாடுவோனும், நாடப்பட்டதும் நீயேயாகும். தேட்டம் நீயாகும். தேடுவோனும், தேடப்பட்டதும் நீயேயாகும். என்ற தற்கலை வாழ் அற்புத வலிய்யுல்லாஹ் பீரப்பாவின் கவிதை மிகப் பிரமாதம்.
அல்லாஹ் நாடாததால் நபீ இப்றாஹீம் அவர்களின் கத்தி நபீ இஸ்மாயீல் அவர்களின் கழுத்தை அறுக்கவில்லை. அதே போல் இப்றாஹீம் நபீயை நெருப்பு சுடவுமில்லை.
நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கத்திக்கு அல்லாஹ்வின் (order) ஆடர் கிடைக்காமற் போனதால் கத்தி வெட்டவில்லை. இதே போல் நெருப்புக்கு அல்லாஹ்வின் அனுமதி கிடைக்காததால் அது சுடவுமில்லை.
இவ்வாறுதான் எவரால் வெளியாகின்ற எச்செயலுமாகும்.
மேற்கண்ட விபரங்கள் மூலம் செயல்கள் யாவும் அல்லாஹ்வின் செயல்கள் என்பதும், அவனின் நாட்டமின்றி எவராலும் அல்லது எதனாலும் எதையும் செய்ய முடியாதென்பதும் தெளிவாகி விட்டது.
அவனின் செயல் எதுவாயினும் அது அர்த்தமுள்ளதாயும், நியாயமானதாயுமே இருக்கும் என்ற விபரத்தை தொடரும் பதிவில் காண்போம்.
وَاللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ
உங்களையும், உங்கள் செயல்களையும் படைத்தவன் அல்லாஹ்தான்.
திருக்குர்ஆன் – அத்தியாயம் 37 வசனம் – 96