(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ)
கண்ணாடியில் முகம் பார்க்கும் போது
اَللهم اَحْسِنْ خُلُقِيْ كَمَا اَحْسَنْتَ خَلْقِيْ
என்று ஓத வேண்டும். என்று ஏந்தல் நபிய்யுல்லாஹ் சொல்லியுள்ளார்கள். வேறு சில நபீ மொழிகளில் اَحْسِنْ என்ற சொல்லுக்குப் பதிலாக حَسِّنْ என்று வந்துள்ளது. இரண்டும் பொருளில் ஒன்றுதான்.
இதன் பொருள் இறைவா! எனது தோற்றத்தை அழகாக்கி வைத்தது போல் எனது குணத்தையும் அழகாக்கி வைப்பாயாக! கண்ணாடியில் முகம் பார்க்கின்ற அனைவரும் இவ்வாறு ஓதிக் கொள்வது “ஸுன்னத்” நபீ வழியாகும். முஸ்லிம்களில் மிகக் குறைந்தவர்களே இந்த நபீ வழியை பின்பற்றுவார்கள் என்று நான் நினைக்கிறேன்.
ஒரு சிறு சட்டம்! خلق என்ற இச்சொல்லின் நடு எழுத்தான “லாம்” என்ற எழுத்துக்கும், அதற்கு முன்னுள்ள “கே” என்ற எழுத்துக்கும் “ழம்மு” வைத்து “பேஷ்” வைத்து خُلُقْ என்று சொன்னால் குணம் என்ற பொருளும், அதற்கு “ஸுகூன்” வைத்தும் முதலெழுத்தான “கே” என்ற எழுத்துக்கு “பதஹ்” “சவர்” வைத்து ஓதினால் தோற்றம் என்றும் பொருள் வரும். இங்கு ஒரு கேள்வியுண்டு. அதையும் குறிப்பிட்டு அதற்கான விடையையும் எழுதுகிறேன்.
முகம் அழகில்லாத, தோற்றம் அழகில்லாத, மூக்கொரு பக்கம் நீண்டும், வாய் ஒரு பக்கம் கோணலாகியுமுள்ள ஒருவனை தோற்றம் அழகில்லாதவன் என்று மக்கள் சொல்வர். இதை அவன் கூட ஏற்றுக்கொள்வான். இவன் கண்ணாடி பார்த்து மேற்கண்ட ஓதலை ஓதும் போது كَمَا اَحْسَنْتَ خَلْقِيْ எனது தோற்றத்தை அழகாக்கியது போல் என்று சொல்வது பொருத்தமாகுமா? அவனின் மனச்சாட்சி தான் இதை ஏற்றுக் கொள்ளுமா? இதுவே கேள்வி.
நான் இதே அமைப்பில் இந்தியாவில் ஒருவரைக் கண்டபோது அவரிடம் மேற்கண்ட கேள்வியை கேட்டுப் பார்க்க நினைத்தேன். அவர் ஒரு யாசகன். அதனால் அவருக்கு உதவி செய்து அவரை எனது நண்பனாக்கிய பின் அவரிடம் மேற்கண்ட கேள்வியைக் கேட்டேன்.
அதற்கவர், நான் கண்ணாடி பார்ப்பதில்லை என்று ஒரே பதில் கூறினார். அவரின் பதில் மூலம் அல்லாஹ் அவ்வாறு படைத்ததில் அவர் திருப்தியற்றவராயுள்ளார் என்பதைப் புரிந்த நான் மேலும் அவருக்கு சிறிய உதவி செய்து அவருக்கு சில அறிவுரைகள் வழங்கினேன்.
இவர் போன்றவர்களும் கண்ணாடி பார்க்க வேண்டும் என்பதற்காகவும், இறைவனின் படைப்பை திருப்தியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அவருக்கு நான் கூறிய அறிவுரையின் சுருக்கத்தை இங்கு எழுதுகிறேன்.
அல்லாஹ் நீதிவான். அவன் எவருக்கும் ஒரு மண்ணளவும் அநீதி செய்வதுமில்லை, செய்ததுமில்லை, அவன் படைத்த படைப்புகளில் எந்த ஒரு குறையும் அவன் வைக்கவுமில்லை. இவ்வாறுதான் ஒரு “முஃமின்” விசுவாசம் கொள்ள வேண்டும். யாராவதொருவன் இதற்கு மாறாக நினைத்தால் அவன் பெயரளவில் மட்டுமே விசுவாசியாயிருப்பான். அவன்தான் “லேபல்” முஸ்லிம் ஆவான்.
எனவே, தோற்றத்தில் குறிப்பாக முகத்தில் குறையுள்ளவன் கண்ணாடியில் முகம் பார்க்கும் போது அவன் ஓதலைத் தொடங்கும் போதே “அல்லாஹும்ம” இறைவா! என்றழைக்கிறான். யாரைப் பார்த்து அவ்வாறு அழைக்கிறான். தன்னைப் பார்த்தே அழைக்கிறான். இதற்கான விபரத்தை நான் இங்கு கூற விரும்பவில்லை. சிந்திப்பவர்கள் சிந்திக்கட்டும்.
முகத்தோற்றத்தில் குறையுள்ள ஒருவன் முகம் பார்க்கும் போது, இறைவன் என் மூலம் தன்னைப் பார்ப்பதற்காக, அவன் தன்னைப் பார்க்கும் கண்ணாடியாகவே தன்னைப் படைத்துள்ளானே தவிர நான் என்னைப் பார்ப்பதற்காக அல்ல என்ற உயர் தத்துவத்தை விளங்கிக் கண்ணாடி பார்க்க வேண்டும். அவன் தன்னை தனது கண்ணாடியில் எவ்வாறு பார்க்க விரும்புகிறானோ அவ்வாறு பார்க்கட்டும். அவன் விருப்பமே என் விருப்பம் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். இந்தியாவில் யாசகனுக்கு நான் சொன்ன அறிவுரை இதுவே.
ஒருவன் தன்னை அறிதல் இறைவனை அறிதலாகும். அதெவ்வாறு? வெள்ளி விருந்துகளில் சுவைக்கலாம்.