கொப்பு வித்தினுள்ளே குடியிருந்த கொள்கையென
எப் பொருட்கும் சித்தாய் இருந்தாய் என் கண்மணியே!
அன்புக்கும், கண்ணியத்திற்குமுரிய இறை அடியார்களே!
உலகம் போற்றும் இறைஞானப் பேரரசர், சத்தியத் திருத்தூதர், சன்மார்க்கப் போதகர் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின்,
لَنْ يَدْخُلَ رِجْلَ اَحَدِكُمْ شَوْكَةٌ اِلَّا وَقَدْ وَجَدْتُ اَلَمَهَا
“உங்களின் எவரின் காலில் ஒரு முள் குத்தினாலும் கூட அதன் வலியை நான் உணர்ந்தவனாகவே உள்ளேன்” என்ற அவர்களின் அன்பே உருவான அருள் மொழியையும்,
வையகம் போற்றும் ஞான வள்ளல், ஒன்றேயன்றி இரண்டில்லை என்று முழங்கிய ஏகத்துவ – ஏகதத்துவக் கடல் – இறைஞானி முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின்,
لَنْ تَبْلُغَ مِنَ الدِّيْنِ شَيْئًا حَتَّى تُوَقِّرَ خَلْقَ اللهِ تَعَالَى
“இறையடியானே ! நீ இறைவனின் படைப்புக்களை கண்ணியம் செய்யும் வரை எந்த மார்க்கத்திலிருந்தும் எப்பயனையும் அடைந்து கொள்ள மாட்டாய்” என்ற “அனைத்தும் ஒன்றே” என்ற தத்துவத்தையும்,
18 சித்தர்களில் ஒருவரான தமிழகம் ராயபுரத்தில் கொலுவீற்றுள்ள அல்ஆலிமுல் பாழில், வல்வலிய்யுல் காமில் அப்துல் காதிர் குணங்குடி மஸ்தான் அவர்களின் மேற்கண்ட தத்துவப் பாடலையும் கருத்திற் கொண்டு அவற்றையெல்லாம் என் சிந்தையிலேற்றியவனாக வார வெள்ளி விருந்தாக உங்களனைவருக்கும் விருந்தொன்று தருகிறேன். உண்டி நிறைய உண்டு இறைவனைப் புகழுங்கள். அவன் வேறு, நாம் வேறு என்ற வேற்றுமை உணர்வை அறுத்தெறிந்து உங்கள் வலக்கரத்திலுள்ள அறபு இலக்கத்தில் 18 என்ற எண்ணைக் குறிக்கும் ரேகையையும், இடக்கரத்திலுள்ள 81 என்ற எண்ணைக் குறிக்கும் ரேகையையும் (81 – 18 ) 99 இறைவனின் திருநாமங்களையும் நீங்கள் உங்களின் கரங்களில் வைத்துள்ளீர்கள் என்ற தத்துவத்தை உணர்ந்து வாழுங்கள்.
அன்புக் குரியவர்களே! நாமனைவரும் ஒரே வித்திலிருந்து வெளியான ஒரே விருட்சத்தின் – மரத்தின் கிளைகள், இலைகள், காய்கள், கனிகள், பூக்கள் போன்றவர்கள் என்ற எதார்த்தம் புரிந்து இன, மத, மொழி வேறுபாடின்றி வாழுங்கள்.
இறைவனால் தரப்படுகின்ற சோதனைகளும், வேதனைகளும், தண்டனைகளும், கொரோனா உள்ளிட்ட எல்லாமே நம்மை புனிதமான மனிதர்களாக்க இறைவன் தீட்டிய திட்டம் எனப் புரிந்து வாழுங்கள்.
கொல்லன் துருப்பிடித்த – கறைபடிந்த இரும்பை உலையில் வைத்துச் சூடாக்கி அதைச் சுத்தியலால் அடியடியென அடிப்பது எதற்காக? அதன் மீது கொண்ட கோபத்தினாலா? பொறாமையினாலா? வஞ்சகத்தினாலா? இல்லை. அதைச் சுத்தப் படுத்தி அதைப் பெறுமதியான பொருளாக்குவதற்காக! இதை நாம் உணர வேண்டாமா? உணர்ந்து அவனுக்கு நன்றி சொல்ல வேண்டாமா?
அரிசி வியாபாரி நெல்லை உரலில் போட்டு குத்து குத்தெனக் குத்துவது எதற்காக? அழுக்கான உடையை வண்ணான் நீரில் ஊறவைத்து அதற்கு சவர்க்காரம் பூசி அதைத் துவை துவையெனத் துவைப்பது எதற்காக?
அன்புக்குரிய பௌத்த மதச்சகோதரர்களே! இந்து மதச்சகோதரர்களே! இஸ்லாம் மதச்சகோதரர்களே! கிறித்துவ மதச்சகோதரர்களே! நான் மதங்கள் என்ற அணைக்கு அப்பால் நின்று, அனைவரும் அவனின் அடியார்கள் என்ற சிந்தனையை என் தலைக்கு எடுத்து, நாம் மதங்களால் வேறுபட்டாலும் ஒரேயொரு மூலத்தின் வெளிப்பாடுகள் என்பதை உணர்த்தி நல்லுறவை நிலை நாட்டவே இதை எழுதினேன். நீங்கள் இதை அனைவருக்கும் பகிருமாறு – SHARE – அன்பாய்க் கேட்டுக் கொள்வதுடன் நான் மதத்தால் ஒரு முஸ்லிம் என்பதையும், என் பெயர் அப்துர் றஊப் என்பதையும், எனதூர் காத்தான்குடி என்பதையும் நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி, வஸ்ஸலாம்.
இறையடிமை
A.J. அப்துர் றஊப்
மிஸ்பாஹீ – பஹ்ஜீ
நீரின் மேல் எழும் குமுழி நீரேதான் வேறில்லை
கடலில் எழும் அலையும் கடலேயன்றி வேறில்லை
தோற்றத்தில் ஏமாந்து தோணியைத் தொடுக்காமல்
உள்ளது ஒன்றுதான் என்றுணர்ந்து வாழ்ந்திடுவாய்.
நன்றி