தொகுப்பு: மௌலவி அல் ஹாபிள் முஹம்மட் பாஸ் றப்பானீ
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ لَقِيَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَرِيقٍ مِنْ طُرُقِ الْمَدِينَةِ، وَهُوَ جُنُبٌ فَانْسَلَّ فَذَهَبَ فَاغْتَسَلَ، فَتَفَقَّدَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا جَاءَهُ قَالَ: «أَيْنَ كُنْتَ يَا أَبَا هُرَيْرَةَ» قَالَ: يَا رَسُولَ اللهِ، لَقِيتَنِي وَأَنَا جُنُبٌ فَكَرِهْتُ أَنْ أُجَالِسَكَ حَتَّى أَغْتَسِلَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سُبْحَانَ اللهِ إِنَّ الْمُؤْمِنَ لَا يَنْجُسُ»
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தோழர் அபூ ஹுறைறா றழியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது அபூ ஹுறைறா முழுக்காளியாக இருந்தார். மெதுவாகச் சென்று குளித்தார். நபீகளார் அவரை இழந்த நிலையில் – அவரில்லாமல் தனியே இருந்தார்கள். குளித்து விட்டு வந்த போது நீங்கள் எங்கே இருந்தீர்கள் அபூ ஹுறைறாவே என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் திருத்தூதரே! நீங்கள் என்னைக் கண்ட நேரம் நான் முழுக்காளியாக இருந்தேன். அதனால் குளிக்காமல் உங்களோடு இருப்பதற்கு நான் விரும்பவில்லை என்றார்கள். இதைச் செவி மெடுத்த செம்மல் நபீ, ஸுப்ஹானல்லாஹ்! நிச்சயமாக “முஃமின்” அசுத்தமாக மாட்டான் என்று கூறினார்கள்.
ஆதாரம் – புகாரீ 283
முஸலிம் – 371
அறிவிப்பு – அபூ ஹுறைறா
அல் அத்கார் – 530
இந்த நபீ மொழி உலகில் வாழும் முஸ்லிம்கள் அனைவருக்கும் பல பாடங்களைக் கற்றுத் தருகின்றது. அவற்றில் ஒன்று. ஒருவர் முழுக்காளியாக இருப்பதை அறிந்து கொண்ட இன்னொருவர் அவரைச் சந்திக்க செல்ல முடியும். ஆகும். மார்க்கம் அனுமதிக்கிறது. இது மார்க்க விரோதமாயிருந்தால் நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவரைச் சந்திக்க சென்றிருக்க மாட்டார்கள். நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் விஷயம் தெரியாமல் அவரைச் சந்திக்க சென்றிருப்பதற்கு வாய்ப்பு இல்லையா? இல்லை. ஏனெனில் மறைவான எண்ணற்ற, மிகப் பெரிய விடயங்களைக் கூட முன் கூட்டி அறிவிக்கின்ற வல்லமை வழங்கப்பட்ட பெருமானார் அவர்களுக்கு அபூ ஹுறைறாவின் நிலமை தெரியாமலிருக்க வாய்ப்பு இல்லை.
இரண்டு. நபீகளாரைக் கண்ட அபூஹுறைறா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது நிலவரத்தைக் காட்டிக் கொள்ளாமல் குளிக்கச் சென்றார்கள் என்பது விளங்கப்படுகிறது. ஏனெனில் நபீ மொழியில் اِنْسَلَّ என்று ஒரு சொல் வந்துள்ளது. இச் சொல்லுக்கு தனது நிலவரத்தைக் காட்டிக் கொள்ளாமல் – தான் குளிக்கச் செல்கிறேன் என்பதைக் காட்டிக் கொள்ளாமல் சற்று ஒழித்தவர் போல சென்றார்கள் என்ற கருத்து உண்டு. இச்சொல்லை அகராதி மூலம் ஆய்வு செய்தால் இவ் உண்மை புரியும்.
நபீ மொழியில் இடம்பெற்ற تَفَقَّدَهُ النَّبِيُّ என்ற வசனம் நபீ நாதர் அவர்கள் அங்கு சென்ற நேரத்திலிருந்து அபூ ஹுறைறா குளித்து விட்டு வரும் வரை தனியாக காத்திருந்தார்கள் என்ற உண்மையை சூசகமாகக் கூறுகிறது. ஆய்வு செய்வோருக்கு இவ் உண்மை மறையாது.
இந்தச் சம்பவத்தைக் கவனத்திற் கொண்டு ஆழமாக ஆய்வு செய்தால் நபீ அலைஹிஸ்ஸலாம் தன்னைச் சந்திக்க வருவார்கள் என்பதை அபூஹுறைறா அறிந்திருக்க வில்லை என்பதும் தெரியவருகிறது. ஏனெனில் அபூ ஹுறைறா முன் கூட்டி அறிந்திருந்தால் அதற்கேற்றவாறு ஒழுங்கோடு அவர் காத்திருந்திருப்பார். எதிர் பார்த்து இருந்திருப்பார்.
நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கண்ட அபூ ஹுறைறா, யா றஸூலல்லாஹ் அமருங்கள், சொற்ப நேரத்தில் வந்து விடுகிறேன் என்று கூறி பெருமானாரை அமரச் செய்து விட்டு சென்றிருக்கலாம். இதுவே ஒரு பெரியாருடன் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறையாகும். அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை.
நபீ மணி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் أَيْنَ كُنْتَ يَا أَبَا هُرَيْرَةَ நீங்கள் எங்கே இருந்தீர்கள் அபூ ஹுறைறாவே! என்று கேட்டது கூட சிந்தனையில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் அபூ ஹுறைறா குளித்து விட்டு வருவதற்கு முன் நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவரைக் கண்டிருந்தார்கள் என்பது ஹதீதில் விளக்கப்படுகிறது.
இக் கேள்விக்கு வெட்கப்படாமல் உண்மையை அபூ ஹுறைறா கூறியது பாராட்டுதற்குரியதாகும். ஏனெனில் நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அபூ ஹுறைறாவும் ஆசிரியரும், மாணவரும் போன்றவர்கள். அல்லது ஒரு ஷெய்கும், முரீதும் போன்றவர்களாவர். முழுக்காளி விடயத்தைக் கூறாமலும், பொய் சொல்லாமலும் தான் ஒரு வேலையில் இருந்ததாகச் சொல்லியிருக்க வாய்ப்பிருந்தும் அவ்வாறு சொல்லவில்லை. இது அவருடைய தூய்மையை எடுத்துக் காட்டுகிறது. நபீ தோழர் அபூ ஹுறைறா திருமணம் செய்யாதவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நபீ தோழரின் விடையை தொடர்ந்து நபீ மணி அவர்கள்سُبْحَانَ اللهِ إِنَّ الْمُؤْمِنَ لَا يَنْجُسُ வியப்படைந்த நேரம் பயன்படுத்துகின்ற வசனம்தான் இவ்வசனம். இதன் பொருள் அல்லாஹ் துய்யவன் என்பதாகும். விசுவாசி அசுத்தமாக மாட்டான் என்ற நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வசனம் சற்று ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். சுருக்கம் என்னவெனில் விசுவாசி கொள்கையில் சுத்தமானவனேயன்றி அசுத்தமானவனல்ல என்பதாகும். உடல் ரீதியாக விசுவாசியும் சுத்தமானவன்தான். அதே போல் காபிர்களும், முஷ்ரிக்குகளும் சுத்தமானவர்கள்தான்.
وَلَقَدْ كَرَّمْنَا بَنِيْ آدَمَ
ஆதமுடைய மக்கள் அனைவரையும் நாங்கள் சங்கைப் படுத்தியுள்ளோம்.
திருக்குர்ஆன் (17-70) இதன் விளக்கம் كَرَّمْنَاهُمْ بِطَهَارَةِ أَبْدَانِهِمْ அவர்களின் உடல் சுத்தம் என்பது கொண்டு அவர்களை சங்கைப் படுத்தியுள்ளோம் என்பதாகும்;. உடல் ரீதியாக பௌத்தர்கள், இந்துக்கள், கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள் அனைவரும் சுத்தமானவர்களேயாவர். மற்ற மதத்தினர் எவரும் கொரோனா காரன் போன்றவனல்ல. கை குலுக்கினால் கை கழுவத் தேவையில்லை.