தொடர் 02.
நோன்பை விடுகின்ற நேரத்தில் அவசியமானவை 04
- கழாச் செய்தல்.
- தெண்ட குற்றம் வழங்கல்.
- பித்யா வழங்கல்.
- நோன்பாளி போன்று எஞ்சிய பகலில் தடுத்திருத்தல்.
01. கழாச் செய்தல்.
ஏதோ
ஒரு காரணத்தினால் அல்லது காரணமில்லாமல் நோன்பை விட்ட புத்திசாலியான, பருவ வயதையடைந்த ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கழாச் செய்வது என்பது பொதுவானதாகும்.
ஹைழின் காரணத்தினால் நோன்பை விட்ட ஒரு பெண் அதைக் கழாச் செய்ய வேண்டும். மதம் மாறியவனும் இவ்வாறு கழாச் செய்ய வேண்டும். காபிர், சிறுவன், பைத்தியக் காரன் இவர்கள் கழாச் செய்ய வேண்டிய அவசியமில்லை.
றமழானுடைய நோன்பை கழாச் செய்யும் போது தொடராகச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது. அவன் விரும்பிய மாதிரி தனித்தனியாகவோ மொத்தமாகவோ கழாச் செய்யலாம்.
02. தெண்ட குற்றம் வழங்கல்.
ஒருவன் உடலுறவில் ஈடுபடும் போது மாத்திரம் தெண்ட குற்றம் வழங்குவது அவசியமாகும்.
சுய இன்பம் பெறுதல், சாப்பிடுதல், குடித்தல் போன்ற உடலுறவு தவிர்ந்த எனைய அம்சங்களைக் கொண்டு தெண்ட குற்றம் வழங்குதல் அவசியமாகாது.
தெண்ட குற்றம் என்பது ஒரு அடிமையை உரிமையிடுதல். அதற்கு முடியாவிட்டால் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்றல். அதற்கும் முடியாவிட்டால் 60 ஏழைகளுக்கு அரைக்கொத்து வீதம் உணவளித்தல்.
03. பித்யா வழங்குதல்.
பித்யா என்பது கர்ப்பிணி மற்றும் பால் கொடுக்கக் கூடிய தாய் இருவரும் தங்களின் பிள்ளைகளுக்கு ஏதாவது ஏற்பட்டுவிடும் என்பதை பயந்து நோன்பை விட்டால், அந்த நோன்பை கழாச் செய்வதுடன் ஒவ்வொரு நாளைக்கும் அரைக்கொத்து வீதம் ஒரு ஏழைக்கு வழங்குவதாகும்.
வயது முதிர்ந்த ஒருவர் முதுமையின் காரணத்தினால் நோன்பை விட்டால் ஒவ்வொரு நாளைக்கும் அரைக்கொத்து வீதம் ஸதகா கொடுக்க வேண்டும்.
04. எஞ்சிய பகலில் தடுத்திருத்தல்.
நோன்பை விடுவது கொண்டு மாறு செய்த அல்லது திறக்குறைச்சல் செய்த ஒருவன் எஞ்சிய பகல் முழுக்க நோன்பாளி போன்று தடுத்திருத்தல் அவசியமாகும்.
ஹைழு ஏற்பட்ட ஒரு பெண் சுத்தமடைந்து விட்டால் எஞ்சிய பகலில் தடுத்திருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது.
அதேபோன்று பிரயாணம் செய்த ஒருவன் நோன்பை விட்ட நிலையில் பிரயாணத்திலிருந்து திரும்பி விட்டால் எஞ்சிய பகலில் தடுத்திருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது
சந்தேகத்துக்குரிய நாளில் நீதியான ஒருவன் பிறையைக் கண்டதாக சாட்சி கூறினால் அன்று பகல் முழுக்க தடுத்திருப்பது அவசியமாகும்.
பிரயாணத்திலிருந்து நோன்பு நோற்பது அதை விடுவதை விடச் சிறந்தது. அதற்கு அவன் சக்தி பெறவில்லையாயின் நோன்பை விடலாம்.
நோன்பின் சுன்னத்துக்கள் 06
- ஸஹர் செய்வதை பிற்படுத்துதல்.
- தொழுகைக்கு முன்னால் ஈத்தம் பழத்தைக் கொண்டு அல்லது தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பதை விரைவு படுத்துதல்.
- பகல் நேரம் சூரியன் நடுமத்தியிலிருந்து நீங்கியதன் பின்னால் பல் துலக்குவதை விடுதல்.
- றமழான் மாதத்தில் கொடை வழங்குதல்.
- அல் குர்ஆன் ஓதுதல்.
- பிந்திய பத்தில் குறிப்பாக பள்ளிவாயலில் இஃதிகாப் இருத்தல்.
இது நபீ (ஸல்-அம்) அவர்களின் வழமையாகும். பிந்திய பத்து வந்துவிட்டால் விரிப்பை நபீ (ஸல்-அம்) அவர்கள் சுருட்டுவார்கள். சாறனைக் கட்டுவார்கள். இந்த அமலை செய்வதற்காக தானும் முயற்சி செய்து தனது குடும்பத்தையும் முயற்சி செய்ய வைப்பார்கள். ஏனெனில் அதிலேயே லைலதுல் கத்ர் என்ற இரவு உண்டு. பெரும்பாலும் அதன் ஒற்றைப்பட வரக்கூடிய நாளிலேயே அது வரும். ஒற்றைப்பட வரக்கூடிய நாள் என்பது 21, 23, 25, 27 ஐக் குறிக்கும். இந்த இஃதிகாபை தொடராகச் செய்வது மிகச் சிறந்ததாகும்.
ஒருவன் பள்ளிவாயலில் தொடர்ச்சியாக இஃதிகாப் இருப்பதை நேர்ச்சை செய்தால் அவசியமின்றி பள்ளிவாயலில் இருந்து வெளியாகுவது கொண்டு அவன் தொடர்ச்சியாக இருப்பது என்பது விடுபட்டுவிடும்.
அவன் ஒரு வணக்கத்திற்காக அல்லது சாட்சி கூறுவதற்காக அல்லது ஒரு ஜனாஸாவுக்காக அல்லது ஒருவரை சந்திப்பதற்காக அல்லது வுழூவைப் புதுப்பிப்பதற்காக வெளியானாலும் சரியே.
மலம் அல்லது சலம் கழிப்பதற்காக அவன் வெளியானால் தொடர்ச்சியாக இருப்பதென்பது விடுபடாது. அவன் வீட்டில் வுழூச்செய்வது அவனுக்கு ஆகும். வேறு தேவைக்காக அவன் செல்வது கூடாது.
நபீ (ஸல்-அம்) அவர்கள் மலசலம் கழிப்பதற்காக மாத்திரமே வெளியே செல்வார்கள். நடந்த நிலையிலேயே நோயாளியைப் பற்றி விசாரிப்பார்கள்.
இஃதிகாப் இருக்கக் கூடிய ஒருவன் உடலுறவில் ஈடுபடுவதனால் தொடர்ச்சியாக இருப்பதென்பது விடுபட்டு விடும். முத்தமிடுவது கொண்டு அது விடுபடாது.
பள்ளிவாயலில் மணம் பூசுதல், திருமண உடன்படிக்கை செய்தல், சாப்பிடுதல், உறங்குதல், படிக்கத்தில் கை கழுவுதல்
இவற்றைப் பற்றிப் பரவாயில்லை.
இஃதிகாப் இருக்கக் கூடிய ஒருவரின் உடலின் சில பகுதி வெளியாகுதல் கொண்டு தொடர்ச்சியாக இருத்தல் என்பது விடுபடாது. நபீ (ஸல்-அம்) அவர்கள் பள்ளிவாயலில் இருந்து கொண்டு தனது தலையை மாத்திரம் வெளிப்படுத்திக் கொடுப்பார்கள். அன்னை ஆயிஷா (றழி) அவர்கள் அவர்களின் அறையில் இருந்த நிலையில் அந்த தலையை நன்றாக சீவிவிடுவார்கள்.
இஃதிகாப் இருக்கக் கூடிய ஒருவர் மலசலம் கழிப்பதற்காக வெளியில் சென்றால் மீண்டும் பள்ளிவாயலுக்கு வரும் பொழுது நிய்யத்தை மீண்டும் வைத்துக் கொள்வது அவசியமாகும். மொத்தமாக 10 நாட்களுக்கும் நிய்யத் வைத்திருந்தாலும் அந்த நிய்யத்தை புதுப்பிப்பது மிகச் சிறந்ததாகும்.