தொடர் – 03
- பொதுவானவர்களின் நோன்பு
- விஷேடமானவர்களின் நோன்பு
- அதி விஷேடமானவர்களின் நோன்பு
பொதுவானவர்களின் நோன்பு என்பது வயிற்றையும், மர்மஸ்தானத்தையும் தடுத்திருத்தல். விஷேடமானவர்களின் நோன்பு என்பது கேள்வி, பார்வை, நாக்கு, கை, கால் ஏனைய உறுப்புக்களை பாவங்களிலிருந்து தடுத்துக் கொள்ளல்.
அதி விஷேடமானவர்களின் நோன்பு என்பது மோசமான எண்ணங்களை விட்டும், உலக சிந்தனைகளை விட்டும் உள்ளத்தை தடுத்துக் கொள்ளல். இன்னும் மொத்தமாக அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் உள்ளத்தை தடுத்துக் கொள்ளல். இந்த வகை நோன்பில் அல்லாஹ் அல்லாதவற்றைப் பற்றி சிந்திக்கும் போதும், இறுதி நாளைப் பற்றி சிந்திக்கும் போதும் அந்த நோன்பு முறிந்து விடும்.
விஷேடமானவர்களின் நோன்பு என்பது நல்லடியார்களின் நோன்பாகும். அதுதான் பாவங்களை விட்டும் உறுப்புக்களைத் தடுத்திருத்தல். இது ஆறு அம்சங்களைக் கொண்டதாகும்.
- பார்வையைத் தாழ்த்துதல்:
இழிவான, வெறுக்கப்படக் கூடிய ஒன்றைப் பார்ப்பதிலிருந்து பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுதல். இன்னும் அல்லாஹ்வின் நினைவை விட்டும் உள்ளத்தை திருப்பக் கூடிய ஒன்றைப் பார்ப்பதை விட்டும் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுதல்.
பார்வை என்பது இப்லீஸ் (லஃனதுல்லாஹி அலைஹி) உடைய அம்புகளில் நஞ்சூட்டப்பட்ட ஓர் அம்பாகும். அல்லாஹ்வைப் பயந்து எவன் அதை விட்டானோ அல்லஹுதஆலா அவனுக்கு ஈமானை வழங்குகிறான். அதன் இனிமையை அவனுடைய உள்ளத்தில் அவன் பெற்றுக் கொள்வான் என்று நபி (ஸல்-அம்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்-அம்) அவர்கள் கூறியதாக அனஸ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ஐந்து விடயங்கள் ஒரு நோன்பாளியின் நோன்பை முறித்து விடும்.
01. பொய் கூறுதல்
02. புறம் பேசுதல்
03. கோள் சொல்லுதல்
04. பொய்ச் சத்தியம் செய்தல்
05. இச்சையுடன் பார்த்தல்
- அர்த்தமில்லாத பேச்சை விட்டும், பொய்யை விட்டும், புறம் பேசுவதை விட்டும், தீமையை விட்டும், புறக்கணிப்பதை விட்டும், தர்க்கம் புரிவதை விட்டும் நாவைப் பாதுகாத்தல்.
மௌனமாயிருப்பது சிறந்தது. அந்த நாவை அல்லாஹ்வின் திக்ரைக் கொண்டும், அல் குர்ஆனை ஓதுவது கொண்டும் ஈடுபடுத்துதல். இதுவே நாவின் நோன்பாகும்.
சுப்யான் (றழி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்,
புறம் பேசுதல் நோன்பை வீணாக்கி விடும்.
முஜாஹித் (றழி) அவர்கள் கூறியதாக லைத் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்,
இரண்டு விடயங்கள் நோன்பை வீணாக்கி விடும்.
- புறம் பேசுதல்
- பொய் சொல்லுதல்
நபி (ஸல்-அம்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
நோன்பு என்பது ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பாளியாக இருந்தால் கெட்ட வார்த்தைகளைப் பேச வேண்டாம். மடையனாக இருக்க வேண்டாம்.
ஒரு மனிதன் அவனுடன் சண்டையிட்டால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி என்று அவன் சொல்லட்டும்.
நபி (ஸல்-அம்) அவர்களின் காலத்தில் இரண்டு பெண்கள் நோன்பு நோற்றார்கள். அவ்விருவரும் மரணித்து விடுவார்கள் என்ற அளவுக்கு அவ்விருவருக்கும் பகலின் இறுதிப் பகுதியில் தாகமும், பசியும் ஏற்பட்டது.
நோன்பை விடுவதற்கு அனுமதி கேட்டு நபி (ஸல்-அம்) அவர்களிடத்தில் அவ்விருவரும் ஒருவரை ஒருவர் அனுப்பி வைத்தார்கள். நபி (ஸல்-அம்) அவர்கள், வந்தவரிடம் ஒரு பாத்திரத்தைக் கொடுத்து நீங்கள் சாப்பிட்டதை இதில் வாந்தி எடுங்கள் என்று அவ்விருவருக்கும் சொல்லுங்கள் என்று கூறினார்கள். அவ்விருவரில் ஒருத்தி கலப்பற்ற இரத்தத்தையும் அதிகமான இறைச்சியையும் வாந்தி எடுத்தாள். மற்றவளும் அதே போன்று வாந்தி எடுத்தாள். இதைப் பார்த்த மக்கள் ஆச்சரியமடைந்தனர்.
நபி (ஸல்-அம்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
இவ்விருவரும் அல்லாஹுதஆலா இவ்விருவருக்கும் ஹலாலாக்கிய ஒன்றை விட்டும் நோன்பு நோற்றார்கள். அவ்விருவரின் மீதும் ஹறாமாக்கிய ஒன்றின் மீதும் நோன்பைத் திறந்தார்கள். இவ்விருவரில், ஒருத்தி மற்றவளுடன் அமர்ந்து அவ்விருவரும் மக்களைப் பற்றி புறம் பேசுபவர்களாக இருந்தார்கள். இதுவே அவர்களின் இறைச்சியிலிருந்து அவர்கள் சாப்பிட்ட ஒன்றாகும்.
- வெறுக்கப் பட்ட ஒன்றை செவிமடுப்பதை விட்டும் கேள்வியைத் தடுத்தல்.
கூறுவது ஹறாமான ஒன்றாகிறது அதை செவிமடுப்பதும் ஹறாமாகும். இதனால்தான் அல்லாஹுதஆலா பின்வரும் வசனத்தில் செவிமடுப்பவனையும், தடுக்கப்பட்டவைகளை சாப்பிடுபவனையும் சமமாகக் கூறியிருக்கிறான்.
அவர்கள் பொய்யையே அதிகம் செவிமடுப்பவர்கள். தடுக்கப்பட்டவற்றை அதிகம் சாப்பிடுபவர்கள்.
(அல்மாயிதஹ் : 42)
பாவமான அவர்களின் கூற்றிலிருந்தும், விலக்கப்பட்டவைகளை அவர்கள் சாப்பிடுவதிலிருந்தும் இறைஞானமுடைய மேதைகளும், அறிஞர்களும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா?
(அல்மாயிதஹ் : 63)
புறம் பேசுகின்ற நேரத்தில் மௌனமாயிருப்பது ஹறாமாகும். அதையே அல்லஹுதஆலா பின்வருமாறு கூறுகின்றான். நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றவர்களே
(அந்நிஸாஉ : 140)
இதனால்தான் நபி (ஸல்-அம்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். புறம் பேசுபவனும், அதை செவிமடுத்துக் கொண்டிருப்பவனும் பாவத்தில் கூட்டானவர்கள்.
- கை, கால் போன்ற ஏனைய உறுப்புக்களை பாவங்களை விட்டும், வெறுக்கப்பட்டவைகளை விட்டும் தடுத்தல்.
நோன்பு திறக்கின்ற நேரத்தில் ஹறாமும், ஹலாலும் கலந்த உணவை சாப்பிடுவதை விட்டும் வயிற்றைத்தடுத்தல். ஹலாலான உணவைத் தடுத்து ஹறாமான உணவில் நோன்பு திறக்கும் போது அதை நோன்பு என்று சொல்லப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை இந்த நோன்பாளிக்கு உதாரணம் என்னவெனில் மாளிகையைக் கட்டி கோட்டையை இடிப்பவனைப்போல.
ஹலாலான உணவு என்பது அது அதிகமாகும் போது தீங்கு செய்யும் அதன் வகையைக் கொண்டு அல்ல. நோன்பு என்பது உணவைக் குறைப்பதற்கே ஆகும். ஹறாம் மார்க்கத்தை அழிக்கக் கூடிய ஒரு நஞ்சாகும்.
ஹலால் என்பது ஒரு மருந்தாகும். அதில் குறைவானது பிரயோசனம் செய்யும். அதில் அதிகமானது தீங்கு செய்யும். நோன்பின் நோக்கம் உணவைக் குறைப்பதாகும்.
நபி (ஸல்-அம்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
எத்தனையோ நோன்பாளிகளின் நோன்பில் பசியையும், தாகத்தையும் தவிர அவனுக்கு எதுவுமில்லை.
அதுவே ஹறாமின் மீது நோன்பு திறக்கச் செய்கிறது என்றும், அதுவே ஹலாலான உணவைத்தடுக்கிறது என்றும், அதுவே புறம் பேசுவது கொண்டு மனிதர்களின் இறைச்சிகள் மீது நோன்பு திறக்கச் செய்கிறது என்றும், அதுவே பாவங்களிலிருந்து உறுப்புக்களை பாதுகாக்காமல் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
- வயிறு முழுக்க நிரம்புகின்ற அளவு நோன்பு திறக்கின்ற நேரத்தில் ஹலாலான உணவை அதிகம் சாப்பிடாமல் இருத்தல்.
ஹலாலினால் நிரம்பிய வயிற்றை விட இறைவனுக்கு மிகவும் கோபமான எந்த ஒரு பாத்திரமும் கிடையாது.
ஒரு நோன்பாளி தனக்கு பகல் வேளையில் தப்பியதை நோன்பு திறக்கின்ற நேரத்தில் அடைந்து கொண்டால், அல்லாஹ்வின் எதிரியை அடக்குதல், இச்சையை உடைத்தெறிதல் போன்ற நோன்பின் பிரயோசனங்கள் எவ்வாறு கிடைக்கும்.
- ஒரு நோன்பாளி நோன்பு திறந்ததன் பின்னால் அவனுடைய உள்ளம் பயத்துக்கும், ஆதரவுக்கும் இடையில் தொங்கவிடப்பட்டதாக இருக்கவேண்டும்.
ஏனெனில் இவனுடைய நோன்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு இறைவனுக்கு மிக நெருக்கமானவர்களில் இவன் ஆக்கப்பட்டு விட்டானா என்பது இவனுக்குத் தெரியாது.
அதேபோன்று இவனுடைய நோன்பு ரத்துச் செய்யப்பட்டு இறைவனுக்கு மிகவும் கோபமானவர்களில் இவன் ஆக்கப்பட்டுவிட்டான் என்பதும் இவனுக்குத் தெரியாது. அவன் செய்து முடிக்கின்ற ஒவ்வொரு வணக்கத்தின் இறுதியிலும் அவன் இவ்வாறு இருந்து கொள்ளட்டும்.
அபுல் ஹஸன் இப்னு அபில் ஹஸன் அல் பஸரீ (றழி) அவர்களைத்தொட்டும் அறிவிக்கப்படுகிறது.
ஒரு நாள் அவர்கள் ஒரு கூட்டத்தினருக்கு அருகில் நடந்து சென்றார்கள். அந்நேரம் அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் “நிச்சயமாக அல்லாஹுத்தஆலா றமழான் மாதத்தை சிருஷ்டிகள் தன்னை வழிப்படுவதற்கு முந்திச் செல்லக் கூடிய ஓர் மைதானமாக ஆக்கியிருக்கிறான்.
ஒரு கூட்டத்தினர் முந்திச் சென்று வெற்றி பெற்று விட்டனர். இன்னுமொரு கூட்டத்தினர் பிந்தினார்கள், அவர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள்.
முந்திச் சென்றவன் வெற்றி பெற்ற, வீணாக்கியவன் தோல்வியடைந்த இந்த நாளில் விளையாடிக்கொண்டு, சிரித்துக் கொண்டு இருக்கின்றவனைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது.
அறிந்து கொள்ளுங்கள், மூடி திறக்கப்பட்டுவிட்டால் உபகாரம் செய்பவன் அவன் உபகாரம் செய்வதில் ஈடுபடுவான். தீங்கு செய்பவன் அவன் தீங்கு செய்வதில் ஈடுபடுவான். அதாவது ஏற்றுக் கொள்ளப்பட்டவனின் மகிழ்ச்சி விளையாடுவதை விட்டும் அவனை ஈடுபடுத்திவிடும். மறுக்கப்பட்டவனின் வேதனை அவன் மீது சிரிப்பின் வாசலை அடைக்கும்.
அல் அஹ்னப் இப்னு கைஸ் (றழி) அவர்களிடம் ஒரு நாள் “நீங்கள் வயது முதிர்ந்த ஒரு ஷெய்காக இருக்கிறீர்கள். நோன்பு உங்களை பலவீனப்படுத்திவிடும்” என்று சொல்லப்பட்டது. அதற்கவர்கள் “நான் அதை நீண்ட பயணத்திற்காக ஆயத்தம் செய்கிறேன். வேதனையின் போது பொறுமை செய்வதை விட அல்லாஹுத்தஆலாவை வழிபடுகின்ற நேரத்தில் பொறுமை செய்வது மிகவும் இலகுவானதாகும்.
(முற்றும்)