தொகுப்பு: மௌலவீ அல் ஹாபிள் AU. முஹம்மட் பாஸ் றப்பானீ.
இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “மத்ஹப்” விதிப்படி நோன்பாயினும் வேறெந்த வணக்கமாயினும் அது நிறைவேறுவதாயின் ‘’நிய்யத்’’ அவசியமே! இதில் இரண்டாம் கருத்திற்கு இடமில்லை. ‘’நிய்யத்’’ அவசியமில்லாத “மத்ஹப்”களும் உண்டு.‘’மத்ஹப்’’ என்று நான் கூறுவது ஷாபீ, ஹனபீ, ஹன்பலீ, மாலிகீ ஆகிய நான்கு மத்ஹபுகளை மட்டுமே குறிக்கும். வஹ்ஹாபிஸம் ஒரு ‘’மத்ஹப்’’ இல்லை யாதலால் அதைக் குறிக்காது.
நோன்புக்கான ‘’நிய்யத்’’ இரவில் மட்டுமே நிறைவேறும். பகலில் ‘’நிய்யத்’’ வைத்தால் நிறைவேறாது. இரவு என்பது மக்ரிப் தொழுகைக்கான நேரத்திலிருந்து ‘’ஸுப்ஹ்’’ தொழுகைக்கான நேரத்திற்கு இடைப்பட்ட நேரத்தை குறிக்கும். குறிப்பிட்ட இந்நேரத்தில் எந்த நேரத்திலும் ‘’நிய்யத்’’ வைக்கலாம். வைத்தாலும் கூட ‘’ஸுப்ஹ்’’ தொழுகைக்கான நேரம் வரை மட்டும் உண்பதும், குடிப்பதும் ஆகும். இதே போல் நோன்பை முறிக்கக் கூடிய எந்தக் காரியமாயினும் அது ஆகும்.
உதாரணமாக நோன்பு காலத்தில் இரவு எட்டு மணிக்கு ‘’நிய்யத்’’ வைத்த ஒருவன் ‘’ஸுப்ஹ்’’ தொழுகைக்கான நேரம் வரும் வரை நோன்பை முறிக்கக் கூடிய எந்த ஒரு காரியத்தையும் செய்யலாம். ஏற்கனவே எட்டு மணிக்கு வைத்த ‘’நிய்யத்’’திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படமாட்டாது. மீண்டும் அவன் ‘’நிய்யத்’’ வைக்க வேண்டிய அவசியமும் இல்லை.
மேற் சொன்னவாறு மக்ரிப், ஸுப்ஹ் இரண்டிற்கும் இடைப்பட்ட எந்த நேரத்திலும் நோன்பிற்கான ‘’நிய்யத்’’ வைத்துக் கொள்ளலாம். ‘’நிய்யத்’’ வைத்த பின் ‘’ஸுப்ஹ்’’ உடைய நேரத்திற்கிடையில் உடலுறவு உள்ளிட்ட நோன்பை முறிக்கும் காரியங்கள் எதையும் செய்ய முடியும். நிய்யத்திற்கு எந்த முறிவும் ஏற்படமாட்டாது.
எந்த ஊரைச் சேர்ந்தவராயினும் அவருக்கு மார்க்கச் சட்டம் ஏதேனும் தேவைப் பட்டால் அவர் பின்வரும் கைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும். அல்லது அவரின் ஊரிலுள்ள ‘’ஸுன்னத் ஜமாஅத்’’ கொள்கையுள்ள தரமான மௌலவீ ஒருவருடன் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
(நிய்யத்)
நோன்பிற்கான ‘’நிய்யத்’’ பின்வருமாறு,
نَوَيْتُ صَوْمَ غَدٍ عَنْ اَدَاءِ فَرْضِ رَمَضَانِ هَذِهِ السَّنَةِ لِلَّهِ تَعَالَى،
இந்த வருடத்து றமழான் மாதத்தின் பர்ழான நோன்பை அதாவாக நாளைக்குப் பிடிக்க நிய்யத் வைக்கிறேன்.
‘’நிய்யத்’’வைக்கும் போது மனதை ஒரு நிலைப்படுத்தி பக்தியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக சில குறிப்புகள் தருகிறேன்.
يُسْتَحَبُّ اَنْ يَجْمَعَ فِي نِيَّةِ الصَّوْمِ بَيْنَ الْقَلْبِ وَاللِّسَانِ، كَمَا قُلْنَا فِي غَيْرِهِ مِنَ الْعِبَادَاتِ، فَإِنْ اقْتَصَرَ عَلَى الْقَلْبِ كَفَاهُ، وَاِنِ اقْتَصَرَ عَلَى اللِّسَانِ لَمْ يُجْزِئْهُ بِلَا خِلَافٍ،
‘’நிய்யத்’’ வைக்கும் போது நாவும், மனமும் சேர்ந்து ‘’நிய்யத்’’ வைத்தல் மிக நல்லது. அதாவது நாவால் ‘’நிய்யத்’’ சொல்லும் போது மனமும் அதன் பொருளைக் கவனித்தல். இது ஒரு வகை. இதுவே நல்லது. ஏனைய வணக்கங்களுக்கும் சட்டம் இதுவே.
இன்னொரு வகை. மனதால் மட்டும் பக்தியுடன் நினைத்துக் கொள்தல். நாவால் சொல்வதில்லை. இவ்வாறு செய்தாலும் நோன்பு நிறைவேறும்.
இன்னோரு வகை நாவால் மட்டும் ‘’நிய்யத்’’ சொல்தல். மனதால் அதைக் கவனிப்பதில்லை. இவ்வாறு ‘’நிய்யத்’’ வைத்தால் நோன்பு நிறைவேறாது.
ஆதாரம் – அல் அத்கார்
ஆசிரியர் – இமாம் நபவீ
பக்கம் – 319