தொகுப்பு : மௌலவி அல் ஹாபிள் AU. முஹம்மட் பாஸ் றப்பானீ
#اَلتَّعَجُّبُ_بِلَفْظِ_التَّسْبِيْحِ_وَالتَّهْلِيْلِ_وَنَحْوِهِمَا#
நம்மில் – முஸ்லிம்களில் பலர் ஏதேனும் ஓர் ஆச்சரியமான, வியப்பான, அதிசயமான செய்திகளைக் கேள்விப் பட்டால் ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர், லா ஹவ்ல வலா குவ்வத போன்ற வசனங்களைக் கூறி தமது ஆச்சரிய உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். இவ்வழக்கம் பெண்களிடம், குறிப்பாக வயோதிப பெண்களிடம் அதிகமாக உண்டு. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வழக்கம் பரவலாக இருந்து வந்தது. நாகரீகம் வளர வளர இப்பண்பு குறைந்து போயிற்று.
இவ்வாறு ஒருவர் தனது வியப்பை மேற்கண்ட நல்ல வசனங்கள் மூலம் வெளிப்படுத்துதல் இஸ்லாமிய நடைமுறைகளிலும், நாகரீகத்திலும் உள்ளதேயாகும். இதில் தவறில்லை.
முஸ்லிம்கள் அல்லாதவர்கள் பொதுவாக “ஐயோ” என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள். கடவுளே, அம்மே என்றும் சொல்வதுண்டு. தமிழ் பேசும் இந்திய முஸ்லிம்கள் “ஆண்டவா” என்றும் சொல்வார்கள்.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் இவ்வாறு சொன்னதற்கு ஹதீதுகளில் ஆதாரங்கள் உள்ளன.
நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வியப்பை வெளிப்படுத்துவதற்காக அநேகமாக “ஸுப்ஹானல்லாஹ்” என்ற வசனத்தையே பயன் படுத்தியுள்ளார்கள்.
(மொழியிலக்கண குறிப்பு) இது பொது மக்களுக்குத் தேவையில்லை.
அறபு மொழியில் سَبَحَ என்றாலும், سَبْحَنَ என்றாலும், سَبْحَلَ என்றாலும் “ஸுப்ஹானல்லாஹ்” என்று சொன்னதாக பொருள் வரும். سُبْحَانَ என்ற சொல் எப்போதும் “நூன்” எழுத்து “பத்ஹ்” குறிவைக்கப்பட்டதாகவே வரும். எவரும் ஸுப்ஹானுல்லாஹ் என்றோ, ஸுப்ஹானில்லாஹ் என்றோ சொல்வதில்லை. அவ்வாறு சொல்வதும் மொழியிலக்கணத்துக்குப் பிழையாகும். ”سُبْحَانَ” என்ற சொல்லுக்கு முன்னால் எப்போதும் اُسَبِّحُ என்ற சொல் மறைந்தே இருக்கும். இச் சொல் மறைந்த சொல்லுக்கு مفعول مطلق என்று மொழியிலக்கணத்தில் சொல்லப்படும்.
سُبْحَانَ الله என்றால் அல்லாஹ் துய்யவன் என்று பொருள் வரும். இச் சொல்லுக்கு மத்ரஸா தமிழில் “தூய்மைப் படுத்துகிறதாக தூய்மைப் படுத்துகிறேன்” என்று சொல்வார்கள். ஸுப்ஹானல்லாஹ்!
இச்சொல் அல்லாஹ் என்ற சொல்லுடன் சேர்த்து வருவதால் “மௌலித்” ஓதுவதை கிண்டல் செய்கின்ற மகான்கள் سبحان مولد என்றால் அல்லாட மௌலித் என்று நக்கல் அடிப்பார்கள். பெருமானாரின் புகழை நக்கலடிப்போர் நக்குத்தின்பதற்கும் “நஸீப்” இழந்து போகட்டும்.
عَنْ عَائِشَةَ رضي الله عنها، أَنَّ امْرَأَةً سَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ غُسْلِهَا مِنَ المَحِيضِ، فَأَمَرَهَا كَيْفَ تَغْتَسِلُ، قَالَ: «خُذِي فِرْصَةً مِنْ مِسْكٍ، فَتَطَهَّرِي بِهَا» قَالَتْ: كَيْفَ أَتَطَهَّرُ؟ قَالَ: «تَطَهَّرِي بِهَا»، قَالَتْ: كَيْفَ؟، قَالَ: «سُبْحَانَ اللَّهِ، تَطَهَّرِي» فَاجْتَبَذْتُهَا إِلَيَّ، فَقُلْتُ: تَتَبَّعِي بِهَا أَثَرَ الدَّمِ
(البخاري – 314 – مسلم – 332)
ஒரு பெண் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம் மாதத்தீட்டிலிருந்து குளிப்பது எவ்வாறு என்று கேட்டார். அப்போது அவர்கள் கஸ்தூரி மணமுள்ள ஒரு துணித் துண்டைக் கொண்டு சுத்தம் செய்து கொள் என்றார்கள். அப்போது அப்பெண் அது எவ்வாறு செய்வது என்று கேட்டார். அப்போது நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அது கொண்டு சுத்தம் செய் என்று மீண்டும் சொன்னார்கள். மீண்டும் அப்பெண் அதேபோல் கேட்டார். அப்போது நபீயவர்கள் “ஸுப்ஹானல்லாஹ்” என்று கூறி வியந்தவர்களாக மீண்டும் அவ்வாறே சொன்னார்கள்.
இதைக் கவனித்துக் கொண்டிருந்த அன்னை ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள், அப் பெண்ணின் கையை பிடித்து இழுத்து இரத்தம் வருமிடத்தில் அதை வைத்துக் கொள் என்று கூறினார்கள்.
ஆதாரம் – புகாரீ – 314
முஸ்லிம் – 332
இந்த நபீ மொழி மூலம் நாம் பல விடயங்களை அறிந்து கொள்ள முடியும்.
பெண்கள் மாதத்தீட்டு ஏற்பட்டது முதல் குளிக்கும் வரை அவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும். குறிப்பாக திருமணம் செய்த பெண்கள் இருக்க வேண்டும். பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் கூட தீட்டுள்ள பெண்கள் அக்காலத்திற் கேற்றவாறு “பெம்பஸ்” பாவித்துள்ளார்கள் என்பது இந்த நபீ மொழி மூலம் விளங்கப் படுகிறது. நபீயவர்களின் காலத்தில் “மிஸ்க்” கஸ்தூரி பிரதான மணப் பொருளாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
والمختار أنّها تأخذ قليلا من مسكٍ فَتَجْعَله في قُطنة أو صُوفةٍ أو خِرقةٍ أو نَحوِها وتَجعَله في الفَرج، لِتُطَيِّبَ الْمَحلَّ وتُزيل الراحةَ الكرهيةَ،
“பெம்பஸ்” வைப்பதற்கான சரியான நடைமுறை என்னவெனில் தீட்டு வந்த ஒரு பெண் சிறிதளவு கஸ்தூரியை ஒரு துணியில், அல்லது பஞ்சில், அல்லது பொருத்தமான ஏதாவதொன்றில் வைத்து அதை பெண் குறியில் வைத்துக் கொள்வதாகும். இவ்வாறு செய்தல் பெண்குறியிலிருந்து துர்நாற்றம் வராமலிருப்பதற்காகவும், அவளிடம் நறுமணம் வீசிக் கொண்டிருப்பதற்காகவுமேயாகும்.
இவ்வாறு செய்தல் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் காலத்திலும், நபித்தோழர்களின் காலத்திலும், மற்றும் நவீன நடைமுறை வராத காலத்திலும் இருந்த வழக்கமாகும். இவ்வாறு செய்வதாயினும் தரமான வைத்தியரின் ஆலோசனையுடன் செய்தல் நல்லது. இந்த நடைமுறையை விரும்பாத பெண்கள் தற்காலத்தில் பலரும் செய்வது போல் “பெம்பஸ்” பாவித்துக் கொள்ளலாம். பாவித்த துணியை அல்லது பெம்பஸை எரித்துச் சாம்பலாக்கி அதை மண்ணில் புதைத்து விட வேண்டும். பாவித்ததை வெளியே வீசி விடுவதால் ஆபத்துகள் நிறைய உண்டு. விபரம் தேவையில்லை. தலைப் பிள்ளை பெண்ணாக இருந்தால் அவள் பாவித்தது எதுவானாலும் அதை எவரிடமும் கொடுக்காமல் பெற்றோர்களே அதை எரித்து குழியிலிட வேண்டும்.
ஒரு பிள்ளை பக்குவப் பட்டால் உறவினர்களை அழைத்து மார்க்கத்துக்கு முரணில்லாத வகையில் நிகழ்வுகள் நடத்துவது இஸ்லாம் மார்க்கத்தில் விலக்கப்பட்டதுமல்ல. அது பித்அத்துமல்ல. ஆயினும் இது வஹ்ஹாபிஸ வழிகெட்ட மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.
மேற்கண்ட நபீ மொழி தொடர்பாக இன்னும் விளக்கம் கூற வேண்டியுள்ளது. அடுத்த பதிவுகளில் இன்ஷா அல்லாஹ்.
(தொடரும்)