Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஒரு கதை கற்றுத் தரும் ஞானப்பாடம்.

ஒரு கதை கற்றுத் தரும் ஞானப்பாடம்.

(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ)

ஒரு ஞானி இன்னொரு ஞானியைச் சந்திப்பதற்காக அவரின் ஊருக்குச் சென்றார். இருவரும் சிறிது நேரம் இறை ஞானம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

சந்திக்கச் சென்ற ஞானி மற்ற ஞானியிடம், மகானே! திருக்குர்ஆனில் அல்லாஹ் பின்வருமாறு கூறியுள்ளான். எனக்கு இவ்வசனத்தின் வெளிப்படையான பொருளும், விளக்கமும் ஓரளவு தெரியும். எனினும் இத்திருவசனத்தின் நடையும், இது அமைந்துள்ள விதமும் அல்லாஹ் கர்வத்திலும், மமதையிலும் பேசியது போல் தோணுகிறது. இதற்கான சரியான விளக்கத்தைக் கூறி எனது சந்தேகத்தை நீக்கி விடுவீர்களா? என்று கேட்டு திருவசனத்தை ஓதிக் காட்டினார். திருவசனம் பின்வருமாறு.

لَا يُسْأَلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْأَلُونَ

இதன் வெளிப்படையான பொருள்: “அல்லாஹ் செய்வது பற்றி அவனிடம் கேட்கப்படமாட்டாது. எனினும் அடியார்கள் செய்வது பற்றி அவர்களிடம் கேட்கப்படும்” என்பதாகும்.

கேள்வி கேட்ட ஞானியின் சந்தேகம் என்னவெனில் ஒரு நாட்டின் அரசன் நீதியானவனாயிருந்தால் அந்த நாட்டு மக்களிடம் நீங்கள் எது செய்தாலும் நான் உங்களிடம் கேட்பேன். நான் எது செய்தாலும் என்னிடம் நீங்கள் கேட்கக் கூடாதென்று சொல்லமாட்டான். மாறாக தான் எது செய்தாலும் நீங்கள் என்னிடம் கேட்கலாம் என்றுதான் சொல்வான். நீதியான அரசன் இவ்வாறுதான் சொல்வான்.

ஆனால் சர்வாதிகாரியான, கர்வமும், மமதையுமுள்ள அரசன் மேற்கண்ட அரசன் சொன்னது போல் சொல்லாமல் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் சொன்னது போல்தான் சொல்வான். இதுவே சந்திக்கச் சென்ற ஞானிக்குள்ள சந்தேகம். ஞானியின் கேள்வி நியாயமான கேள்விதான்.

கேள்வியை செவிமெடுத்துக் கொண்டிருந்த ஞானி, அல்லாஹ் சகல வல்லமையும் உள்ளவன். ஒரு நாட்டை மட்டும் ஆள்பவனல்ல அவன். அனைத்து உலகங்களையும், அனைத்து மக்களையும் ஆள்பவன். ஆகையால் அவன் கர்வத்தோடும், மமதையோடும், அதிகாரத்தோடும் பேசுவதில் தவறொன்றுமில்லை என்று பதில் கூறினார்கள்.

அந்த ஞானி சொன்ன பதில் போன ஞானிக்கு பிடிக்கவில்லை போலும். அவர் தன்னுடன் அழைத்துச் சென்ற நண்பனுடன் அந்த ஞானியிடம் விடை பெற்றுக் கொண்டு திரும்பி விட்டார்.

வரும் வழியில் ஞானி தனது நண்பரிடம் சூசகமாக ஒரு கதை சொன்னார். நாம் சந்திக்க வந்த ஞானி ஞானமலை உச்சியிலிருந்து ஞானப்பால் குடிப்பவரென்று நினைத்தே நான் வந்தேன். ஆனால் இவரோ மலையடியில் நின்று உப்பு நீரைத்தான் குடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் இவர் ஞான மலைப்படியில் கால் கூட வைக்கவில்லை என்று கூறி விட்டு நாம் பஸ் ஏறி ஊருக்குப் போவோம். இரண்டு நாள் கழித்து நீங்கள் என்னைச் சந்தியுங்கள் என்றும் சொன்னார்.

இருவரும் ஊர்வந்த பின் சொன்னது போல் சந்தித்தார்கள். ஞான மகான் நண்பனுக்கு பின்வருமாறு விளக்கம் சொன்னார் அவர் சொன்ன விளக்கம் இதோ!

“ لَا يُسْأَلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْأَلُونَ அல்லாஹ் செய்வது பற்றிக் கேட்கப்படாது, ஆனால் அடியார்கள் செய்வது பற்றி அவர்கள் கேட்கப்படுவர் என்பது அல்லாஹ் கர்வத்தில் பேசிய பேச்சோ, ஆணவத்தில் பேசிய பேச்சோ அல்ல.

இந்தப் பேச்சு “பனா” உடைய நிலையை காட்டுகிறது. அதாவது அடியான் அல்லாஹ்வில் “பனா”ஆகி, தானில்லை அல்லாஹ்தான் உள்ளான் என்ற நிலைக்கு அவன் வரும் போது அடியான் மூலம் வெளியாகும் செயல் அல்லாஹ்வின் செயலேயன்றி அடியானின் செயல் அல்ல என்பதே எதார்த்தமாகும். அடியான் அல்லாஹ்வில் “பனா” ஆகி தானில்லையென்ற ஒரு நிலையை அவன் உணரும் கட்டத்தில் அவனால் ஏற்படும் சொல், செயல் யாவும் அல்லாஹ்வால் ஏற்படுகின்ற சொற் செயலாகவே அது கருதப்படும்.

அவ்வாறு கருதப்படுவதால் அவரின் சொற் செயல்கள் பற்றி அவரிடம் கேட்கப்படமாட்டாது. ஏனெனில் அவர் அல்லாஹ்வில் “பனா” அழிந்து அவரில்லாமற் போய்விட்டார். அவரின் மூலம் வெளியாகும் சொல்லாயினும் செயலாயினும் அது அல்லாஹ்வின் சொல்லும், செயலுமேயாகும். இதனால்தான் لَا يُسْأَلُ عَمَّا يَفْعَلُ அவன் செய்வது பற்றிக் கேட்கப்படமாட்டாது என்று சொன்னானேயன்றி ஆணவத்திலோ, கர்வத்திலோ அவ்வாறு சொல்லவில்லை.

அடியான் அல்லாஹ்வில் “பனா” ஆவதென்றால் உடல் அழிந்து போவதில்லை. உடலுக்கும் “பனா”வுக்கும் சம்பந்தமில்லை. “பனா” ஆதல் என்பது உணர்வில் “பனா” ஆதலையே குறிக்கும்.

எந்த ஒரு மனிதனாயினும் அவனிடம் “நான்” என்ற உணர்வு நிச்சயமாக இருக்கும். இந்த உணர்வை ஸூபி மகான்கள் தங்களின் கலைச் சொல்லில் اَنِّيَّةٌ – “அன்னிய்யதுன்” நானெனும் உணர்வு என்று சொல்கிறார்கள். اَنِّيَّةٌ என்பது வேறு. اَنَانِيَّةٌ – “அனானிய்யதுன்” என்பது வேறு. இச் சொல் நான் என்ற மமதை, அகங்காரம் போன்ற தீக்குணங்களைக் குறிக்கும் சொல்லாகும். இது நீங்கு முன் நீங்க வேண்டியது “நானெனும்” உணர்வுதான்.

ஒரு ஞானியை காண்பதற்காக ஞானத்தாகமுள்ள ஒருவன் அவரின் வீட்டுக்குச் சென்றானாம். அவனைக் காவல்காரன் தடுத்தானாம். பிறகு ஞான மகானின் அனுமதி கிடைத்ததாம். அது ஒரு நிபந்தனையுடன் கிடைத்ததாம். அதாவது ஞானி விளக்கமாக சொல்லாமல் சூசகமாக சொன்னாராம் “நான் மரணித்த பின்” வருமாறு சொல்லவும் என்றாராம். காவல் காரனும் அவனிடம் வந்து அவ்வாறே சொன்னானாம். அவன் அதை தவறாக விளங்கியவனாக யோசித்துக் கொண்டு நின்றானாம். சற்றுத் தாமதமாகியே அவனுக்கு ஞானம் வெளித்தது போலும் “என்னிலுள்ள நான்” என்ற உணர்வு அழிந்த பிறகு வருமாறு சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்டான்.

இறைவனை அடையவிடாமல் ஒருவனை தடுக்கும் திரை நானெனும் உணர்வேதான். இந்த உணர்வு நீங்கி நானில்லை நானாயிருப்பது அவன்தான் என்ற உணர்வு மிகைக்குமானால் அவன் உணர்வு ரீதியாக இல்லாமலே போய்விடுவான்.

இவ்வாறு போனவன் – அந்த இடத்தை அடைந்தவன் நானே பெய்ப்பொருள் என்றும் சொல்வான், நானே எல்லாம் என்றும் சொல்வான்.

இந்த நிலையை அடைந்தவனிடம் யார் கேட்பது? எதைக் கேட்பது? இதையே لَا يُسْأَلُ عَمَّا يَفْعَلُ அவன் செய்வது பற்றி கேட்கப்படமாட்டாது என்று இறைவன் கூறியதற்கான விளக்கமென்று அந்த ஞானி சொன்னார்.” இத்துடன் போன ஞானி சொன்ன விளக்கம் முடிந்தது.

சுருக்க என்னவெனில் ஒரு மனிதனிடம் குடிகொண்டுள்ள “அன்னிய்யத்” நான் என்ற உணர்வு இல்லாமற் போகும் வரை அவன் செய்கின்ற, சொல்கின்ற ஒவ்வொரு விடயம் பற்றியும் நிச்சயமாக அவன் கேட்கப்படுவான். எப்போது மனிதன் தன்னிடமுள்ள “நான்” என்ற எல்லையைக் கடந்து நானில்லை என்ற முடிவுக்கு வருகின்றானோ அதே நேரத்திலிருந்து அவன் மூலம் வெளியாகும் செயல்களெல்லாம் நன்மையானதாகவே இருக்கும். பாவம் அவனால் வெளியாகவே மாட்டாது. ஆகையால்தான் அவனிடம் கேட்கப்படாதென்று அல்லாஹ் சொன்னான்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments