(தொகுப்பு – மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ)
1966ம் ஆண்டு இந்தியா தமிழ் நாடு – நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அறபுக் கல்லூரியில் நான் மார்க்கக் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலத்தில் நாஹூர் நகருக்கு அண்மையிலுள்ள மஞ்சக் கொல்லை கிராமத்தில் ஷிப்லீ பாவா என்று ஒரு ஞான மகான் இருப்பதாகக் கேள்விப்பட்டு அவரைச் சந்தித்து அருள் பெறும் நோக்கத்தோடு நீடூரிலிருந்து அங்கு சென்றேன்.
ஒரு நாள் மாலை நேரம் அக்கிராமத்தை அடைந்து அவரின் வீடு தேடி நடந்து சென்ற வேளை தவராஸா என்ற இந்து மத சகோதரர் ஒருவரை வழியில் கண்ட நான் அவரிடம் “ஷிப்லீ பாவா” எங்கே இருக்கிறார் என்று கேட்டேன். அதற்கவர் மகானையா கேட்கிறாய்? என்று கேட்டார். அவரின் கேள்வியை சரியாகவே விளங்கிக் கொண்ட நான் ஆம் என்றேன். அவர் என்னோடு வந்து வீட்டைக் காட்டினார். அந்த ஊரில் அவர் பல்லின மக்களாலும் மகான் என்று அழைக்கப்படுகிறார் என்பதை அப்போதுதான் அறிந்தேன்.
அவரின் சிறிய வீட்டின் சாலைப் பக்கமாக இருந்த ஒரு சிறிய அறையில் இருந்தார். கதவு உள்பக்கம் தாளிடப்பட்டிருந்தது. வெளியே நின்றவனாக ஜன்னல் வழியாக “ஸலாம்” சொன்னேன். பதில் கிடைக்கவில்லை. உள்ளே செல்ல அனுமதி கேட்டவனாக வெளியே நின்றிருந்தேன். அனுமதி கிடைக்கவில்லை.
சுமார் பத்து நிமிடங்களின் பிறகு அறையிலிருந்த அவர் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறி சாலையில் வேகமாக நடந்து சென்றார்.
பக்கத்திலிருந்த இந்து மதக் கடைக்காரனிடம் எனது விபரத்தைக் கூறி பாவா எங்கே போகிறார்? எப்போது வருவார்? என்று கேட்டேன். அவன் சற்றுக் கோபத்துடன் “பாவா” என்று சொல்லாமல் “மகான்” என்று சொல் என்று கூறிவிட்டு மகான் எங்கே போகிறார்? எப்போது வருவார்? என்று கூற முடியாது. ஒரே நாளிலும் வரலாம். பல மாதங்கள் கழித்தும் வரலாம் என்றான். நான் திரும்பி வந்து விட்டேன்.
சுமார் ஆறு மாதங்களின் பின் மீண்டும் அவரைச் சந்திக்கச் சென்றேன். அவர் உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. அவரைச் சந்திப்பதற்காக பெருங் கூட்டமொன்றே வெளியே நின்று கொண்டிருந்தது.
உள்ளே இருந்த மகான் அவர்கள் காவல் காரனிடம் இலங்கைவாசி ஒருவன் வந்துள்ளான் அவனை உள்ளே அனுப்பவும் என்று சொல்லியுள்ளார். காவற் காரன் வெளியே வந்து சொன்னதும் நான் உள்ளே சென்றேன். அங்கு மூன்று பேர்கள் இருந்தார்கள். நானும் அவர்களுடன் இருந்தேன். மகான் எவருடனும் பேசவில்லை. இருந்தவர்கள் பக்கம் முதுகையும், சுவரின் பக்கம் முகத்தையும் காட்டியவராக மௌனமாக இருந்தார். நான் சுமார் ஒரு மணி நேரம் இருந்துவிட்டு திரும்பி வந்துவிட்டேன்.
சுமார் ஒரு வருடத்தின் பின் மூன்றாம் முறையாகவும் அவரைப் பார்க்கச் சென்றேன். வழமைபோல் அவரைக் காண ஒரு கூட்டம் நின்று கொண்டிருந்தது. உள்ளே இருந்த மகான் கலர் சாறம் உடுத்து கையுள்ள பெனியன் அணிந்தவராக வெளியே வந்தார். அவரைப் பார்க்கத்தான் முடிந்ததேயன்றி அவருக்கு கை கொடுப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
வெளியே வந்த மகான் பாதையின் இருமருங்கிலுமிருந்த வீடுகள், மரங்களைப் பார்த்து சிரித்தவராகவும், கதைத்தவராகவும் சாலை நேராகச் சென்று ஓர் இந்துவுக்குரிய “றைஸ்மில்” அரிசி ஆலையொன்றில் நுழைந்தார். போனவர் போனவர்தான் வெளியே வரவில்லை. பல மணி நேரம் காத்து நின்ற மக்கள் கூட்டம் கலைந்து சென்றது. நான் மட்டும் அரிசி ஆலை உரிமையாளனிடம் சென்று மகான் அவர்களைச் சந்திக்கலாமா? என்று கேட்டேன். முயாதென்று மறுத்துவிட்டார்.
மஞ்சக் கொல்லை கிராமம்.
இது நாஹூர் ஷரீப் நகருக்கு அண்மையிலுள்ள இந்துக்களும், முஸ்லிம்களும் வாழக்கூடிய ஒரு கிராமம். இங்கு மாதிஹுர் றஸூல் ஸதகதுல்லாஹ் அப்பா அவர்களின் சகோதரர் ஒருவர் அடக்கம் பெற்றுள்ளார்கள். இவர்கள் ஸுலைமான் வலிய்யுல்லாஹ் அவர்களின் ஐந்து மக்களில் ஒருவர்.
மகான் அவர்களின் மகிமையை அறிந்த மஞ்சக் கொல்லை வாழும் இந்துக்களும், முஸ்லிம்களும் சேர்ந்து அங்கு ஒரு காணி வாங்கி அதில் மகான் அவர்களுக்கு ஒரு “மஸார்” அமைத்தார்கள். “மஸார்” என்பது ஒரு மகான் மரணித்த பின் அவரை நல்லடக்கம் செய்வதற்கும், மக்கள், பக்தர்கள் ஒன்று கூடி அவரைக் கொண்டு அருள் பெறுவதற்கும், அவர் பெயரால் அன்னதானம் வழங்குவதற்கும் ஏற்ற, வசதியான ஓர் இடத்தைக் குறிக்கும் சொல்லாகும். இந்த இடம் “தர்ஹா” என்ற பெயராலும் அழைக்கப்படும்.
எந்த நாட்டிலும், எந்த ஊரிலும் ஒரு மகானுக்காக “மஸார்” அமைப்பது அவர் மரணித்த பிறகேயாகும். ஆனால் இந்த மகான் உயிரோடிருந்த காலத்திலேயே பக்தர்கள் “மஸார்” அமைத்துவிட்டார்கள்.
இந்த மகான் உயிரோடிருந்த காலத்தில் இவரைப் பதின் முறை சந்தித்த நான் இவர் நல்லடக்கம் செய்யப்பட்ட பின்னும் மூன்று முறை சந்திக்கச் சென்றுள்ளேன்.
மகான் உயிரோடிருந்த காலத்தில் அவருக்குப் பணி செய்து கொண்டிருந்த இருவரில் ஒருவர் நான் கடைசியாகச் சென்ற போதும் அங்கு பணி செய்து கொண்டே இருந்தார். அவர் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்ற வகையில் “ஸியாறத்” வேலையை முடித்துவிட்டு சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். என்னுடன் பயணித்தவர்களும் என்னுடன் இருந்தார்கள்.
இறுதியில் அவருடன் “முஸாபஹா|| கை கொடுத்துவிட்டு வெளியேற நினைத்த நான் அவரிடம் எனது கையை நீட்டினேன். அவர் எனக்கு கை தர மறுத்துவிட்டார். ஏன் என்று கேட்டேன். எனது ஷெய்கு அவர்களின் அனுமதியின்றி நான் எவருக்கும் கை கொடுப்பதில்லை என்றார். நான் அவருடன் தொடர்ந்து பேச விரும்பாமல் வெளியில் வந்து விட்டேன்.
ஆயினும் என்னுடன் பயணித்த இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களில் ஒருவர் தீவிரப் போக்குடையவராக இருந்தார். அவர் அந்தப் பணியாளருடன் தர்க்கம் செய்யலானார். என்னை அவர் சுட்டிக் காட்டி இவருக்குக் கை கொடுக்க நீங்கள் மறுத்தீர்கள். இவரின் தரம் தெரியாமல் நடந்து கொண்டீர்கள். இலங்கை நாட்டில் இவருக்கு கை கொடுப்பதற்கு மக்கள் முண்டியடித்துக் கொண்டு போவார்கள் என்று அவரிடம் சொன்னார். அதற்கவர் யாராயிருந்தாலும் எனது ஷெய்குதான் எனக்கு அல்லாஹ்வும், றஸூலுமாவார்கள். அவர்களின் அனுமதியின்றி நான் எவருக்கும் கை கொடுக்கவுமில்லை. இதன்பிறகு கை கொடுக்கப் போவதுமில்லை என்றார். இருவரினது வாக்குவாதத்தை அவதானித்துக் கொண்டிருந்த நான் குறுக்கிட்டு அந்தப் பணியாளர் சொன்னதே சரியென்று கூறி என்னுடன் பயணித்தவர்களை அழைத்துக் கொண்டு வந்துவிட்டேன்.
இந்த சம்பவத்தின் மூலம் நாம் சில உண்மைகளையும், எதார்த்தங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு “ஷெய்கு” இடம் “பைஅத்” செய்து அவரின் முரீதானவர்கள் அனைவரும் ஷெய்குடைய பற்றிலும், பாசத்திலும் உறுதியிலும் ஒரே மாதிரியானவர்களாக இருக்கமாட்டார்கள்.
இவ்வாறுதான் அல்லாஹ்வைக் கொண்டும், றஸூலைக் கொண்டும் ஈமான் – நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒரே தரத்தில் உள்ளவர்கள் அல்லர். இவ்வாறுதான் அவர்கள் மீது “மஹப்பத்” அன்பு வைத்தவர்களின் நிலையுமாகும்.
ஆயினும் எதார்த்தம் என்னவெனில் ஒரு “ஷெய்கு” ஞானகுருவிடம் “பைஅத்” செய்து கொண்ட ஒரு “முரீத்” தனது குருவை அல்லாஹ்வாகவும், றஸூலாகவும் பார்க்க வேண்டும். குருவின் விருப்பத்தையே தனது விருப்பமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அவர் எது சொன்னாலும் ஏன்? எதற்கு? என்ற கேள்வியின்றி அவர் சொன்னதைச் செய்ய வேண்டும். இத்தகைய “முரீது”தான் ஷெய்கின் “பறகத்” அருளுக்குரியவனாவான்.
ஒரு “முரீது” தனது ஷெய்குடன் இருக்கும் போது தனது “கல்பு” மனதைப் பேணிக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர் சிஷ்யனின் மனதை நோட்டமிட்டவராகவே இருப்பார். அவன் மனதில் எழும் நல்லெண்ணம் கெட்டெண்ணம் யாவையும் நேரில் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டே இருப்பார். இதனால்தான் இறைஞானிகள் اِحْفَظْ لِسَانَكَ عِنْدَ أُسْتَاذِكَ وَاحْفَظْ قَلْبَكَ عِنْدَ شَيْخِكَ நீ உனது “உஸ்தாத்” இடம் இருக்கும் போது உனது நாவைப் பேணிக் கொள். உனது “ஷெய்கு” ஞானகுருவிடம் இருக்கும் போது உனது “கல்பு” மனதைப் பேணிக் கொள் என்று சொன்னார்கள் போலும்.
“உஸ்தாத்” என்பவர் பொதுவாக அறிவைக் கற்றுக் கொடுப்பவரையும், “ஷெய்கு” என்பவர் “பைஅத்” என்ற ஞானதீட்சை வழங்குவதுடன் பொதுவாக அறிவையும், குறிப்பாக இறை ஞானத்தையும் கற்றுக் கொடுப்பவரையும் குறிக்கும்.
ஒருவரிடம் “பைஅத்” செய்து கொண்டவன் “முரீது” என்று அழைக்கப்படுவான். இதன் பொருள் நாட்டமுடையவன் – நாடுபவன் என்பதாகும். சுருக்கமாக “சிஷ்யன்” என்று சொல்லப்படுகின்றது. “முரீத்” நாடுபவன் என்றால் “ஷெய்கு” என்பவர் நாடப்பட்டவர் என்பது சொல்லாமலேயே விளங்கும்.
இதன் சுருக்கம் என்னவெனில் “முரீத்” சிஷ்யனின் முழு “தவஜ்ஜுஹ்” முன்னோக்குதலும் தனது “ஷெய்கு” குருவாகவே இருக்க வேண்டும் என்பதாகும். இதனால்தான் “ஸலபுஸ்ஸாலிஹீன்” முன்னோர்களான நல்லடியார்கள் என்போர் தனது ஷெய்குமார்களை விழிக்கும் போது “யா கிப்லதீ” எனது கிப்லாவே! “யா கஃபதீ” எனது கஃபாவே! என்று விழித்துள்ளார்கள்.
“கிப்லா” என்பதும், “கஃபா” என்பதும் ஒருவன் தொழுகையில் முன்னோக்கும் இடத்தைக் குறிக்கும். இவ்விடத்தில் அவ்வாறு கருத்துக் கொள்ளாமல் இது إِضَافَةُ تَشْرِيْفٍ சிறப்பைக் காட்டக் கூடியதென்று கருத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக “அப்துர் றஸூல்” றஸூலின் அடிமை, “அப்து ஹாஜா” ஹாஜாவின் அடிமை என்பது போன்று. ஒருவர் ஒரு மகானுக்கு கடிதம் எழுதிவிட்டு عبدكم – அப்துகும் – உங்கள் அடிமை என்று எழுதுவது போன்று.
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் قِبْلَةُ الْوَاجِدِ وَالْمَوْجُوْدِ அல்லாஹ்வுக்கும், படைப்புக்கும் “கிப்லா” ஆனவர்கள் என்று வர்ணிக்கப்படுகின்றார்கள். இவ்விடத்தில் “கிப்லா” என்பது தொழுகைக்கான “கிப்லா”வைக் குறிக்காது.
திரு மக்கா நகரிலுள்ள “கஃபா” என்பது தொழுகின்றவனின் உடலுக்குரிய “கிப்லா” ஆகும். தொழுகின்றவன் மக்காவிலுள்ள “கஃபா”வையே முன்னோக்க வேண்டும். திரு மதீனாவிலுள்ள பெருமானாரின் “றவ்ழா” அடக்கவிடத்தை முன்னோக்க கூடாது. உடலுக்கு திரு “கஃபா” கிப்லாவாக இருப்பது போல் “கல்பு” என்ற உள்ளத்திற்கு பெருமானார் அவர்களே “கிப்லா”வாக உள்ளார்கள். இக்கருத்தை வஹ்ஹாபிகள் “ஷிர்க்” என்று கூறுவர். அவர்களுக்கு கிறுக்கு என்று நாம் கூறுவோம். கிறுக்குள்ளவனின் இருப்பிடம் எதுவென்று சொல்லத் தேவையில்லை.
பெருமானார் அல்லாஹ்வுக்கும், படைப்புக்கும் “கிப்லா”வாக உள்ளார்கள் என்ற قِبْلَةُ الْوَاجِدِ وَالْمَوْجُوْدِ என்ற வசனம் “ஸுப்ஹான மௌலித்” சிறிய “துஆ”வில் இடம் பெற்றுள்ளது. “வாஜித்” என்ற சொல் அல்லாஹ்வின் திரு நாமங்களில் ஒன்று என்பது யாவரும் அறிந்ததே!
ஒரு விசுவாசியின் உள்ளத்தின் “கிப்லா”வாக றஸூல் அவர்கள் இருப்பது போல் ஒரு “முரீத்”இன் “கிப்லா”வாக அவனின் ஷெய்கு அவர்களே இருக்க வேண்டும். அவர்தான் முரீதுடைய “முறாத்” ஆக இருப்பார்.
ஷெய்குமார்களில் மூன்று வகையினர் உள்ளனர். ஒரு வகையினர் எந்நேரமும் அல்லாஹ்வின் “ஜலாலிய்யத்” என்ற தன்மை மிகைத்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் “ஜலாலீ” என்றழைக்கப்படுவர். எந்நேரமும் கோப சுபாவமுள்ளவர்களாகவே இருப்பர். எந்நேரமும் சூடாகவே இருப்பர். இரக்கம், மன்னிப்பு, அன்பு என்பவற்றை அவர்களிடமிருந்து எதிர்பார்க்கவே முடியாது. இவர்களுடன் நெருங்கி வாழ்பவர்கள் மிகவும் பேணுதலாகவும், எச்சரிக்கையாகவும் இருந்து கொள்ள வேண்டும். இவர்கள் அல்லாஹ்வின் ஜப்பார், கஹ்ஹார், முன்தகிம் போன்ற “ஜலாலிய்யத்” ஆன திரு நாமங்களோடு மட்டும் தொடர்புள்ளவர்களாக இருப்பார்கள்.
இரண்டாம் வகையினர் எந்நேரமும் அல்லாஹ்வின் “ஜமாலிய்யத்” என்ற தன்மை மிகைத்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஜமாலீ என்றழைக்கப்படுவர். எந்நேரமும் இரக்கமுள்ளவர்களாகவே இருப்பார்கள். கோபம், சூடு, அடக்குமுறை, பாய்ச்சல் போன்றவற்றை அவர்களிடம் காணமுடியாது. இவர்களுடன் நெருங்கியிருப்பவர்களுடன் இவர்களும் செல்லப் பிள்ளைகள் போல் நடந்து கொள்வார்கள். அதிகமாக சிரித்த முகத்தோடு ஹாஷ்யமாக பேசிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் அல்லாஹ்வின் றஹ்மான், றஹீம், முன்இம், றஊப் போன்ற “ஜமாலிய்யத்” ஆன திரு நாமங்களோடு மட்டும் தொடர்புள்ளவர்களாக இருப்பார்கள்.
மூன்றாம் வகையினர் “ஜலாலிய்யத்”, “ஜமாலிய்யத்” இரண்டும் கலந்தவர்களாக இருப்பார்கள். சில நேரம் “ஜலாலிய்யத்” மிகைத்தவர்களாகவும், சில நேரம் “ஜமாலிய்யத்” மிகைத்தவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் ஜலாலீ – ஜமாலீ என்று அழைக்கப்படுவார்கள்.
இரண்டாம் வகையினரான “ஜமாலிய்யத்” மிகைத்தவர்கள் எந்நேரமும் சிரித்தவர்களாகவும், ஹாஷ்யமாகப் பேசுபவர்களாகவும், சிறு பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுபவர்களாகவும், பகடி பண்ணுபவர்களாகவும் இருப்பதால் இவர்களின் தாற்பரியம் புரியாமற் பலர் இவர்களைச் சாதாரண மனிதர்களாக எடை போட்டு இவர்களை விட்டும் தூரமாகியும் விடுவதுண்டு.
மேற்கண்ட தலைப்புக்குரிய ஷிப்லீ மகான் என்பவர் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும், சிறு வயதிலேயே தமிழகம் சென்று பல ஊர்களாக வலம் வந்து காடுகள், மணல்களில் தியானங்கள் செய்து இறுதியாக மஞ்சக்கொல்லை வந்தார்களென்றும் செவி வழி வந்த செய்திகள் கூறுகின்றன.
இவர்கள் “மஜ்தூப்” நிலையில் இருந்த கால கட்டத்திலேயே – சுமார் 1966ம் ஆண்டளவில் இவர்களை நான் முதலில் சந்தித்துள்ளேன். இவர்கள் திருமணம் செய்து ஒரு சில மாதங்கள் மட்டுமே மனைவியுடன் வாழ்ந்ததாகவும் வரலாறு கூறுகிறது. இவர்களின் “மஸார்” இல் இருந்து சுமார் 6-7 மீற்றர் தூரத்திலேயே இவர்களின் மனைவியின் “மஸார்” உள்ளது. அநேகமாக பெண்கள் அங்கு செல்வார்கள்.
“முரீது” சிஷ்யன் எப்போதும் “ஷெய்கு” அவர்களின் சந்நிதானம் பேணி நடந்து கொள்ள வேண்டும். وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ அல்லாஹ்வின் சந்நிதானம் பயந்தவனுக்கு இரண்டு சுவர்க்கம் உண்டு என்று அல்லாஹ் திருமறையில் கூறியுள்ளான். (திருக்குர்ஆன்: 55-46 )
இன்னும் சில இடங்களில் “மகாம்” என்ற சொல்லின்றி يَخَافُوْنَ رَبَّهُمْ என்று மட்டும் கூறியுமுள்ளான் அவர்களின் இரட்சகனை அவர்கள் அஞ்சுவார்கள். (திருக்குர்ஆன்: 16-50)
“றப்”பை பயப்படுதல், “றப்”புடைய சந்நிதானத்தைப் பயப்படுதல் இரண்டும் ஒரே கருத்துள்ளதல்ல. இரண்டுக்குமிடையில் வேறுபாடு உண்டு. றப்பை பயப்படுதல் என்பதை விட றப்புடைய சந்நிதானத்தைப் பயப்படுதல் என்பது மிக விஷேடமானதும், தரம் உயர்ந்ததுமாகும். “றப்”பை பயப்படுவது மிக இலகுவானது.றப்புடைய சந்நிதானத்தை பயப்படுவது மிக கடினமானது.
றப்பை பயப்படுதல், அல்லாஹ்வைப் பயப்படுதல் என்பது அவன் செய்யுமாறு பணித்ததைச் செய்வதையும், செய்ய வேண்டாமென்று தடுத்ததையும் குறிக்கும்.
எந்த ஓர் அரசனாயினும், மன்னனாயினும், ஜனாதிபதியாயினும் அவர்களிடம் நியாயம் கேட்கவும் முடியும். நியாயத்தைச் சொல்லவும் முடியும். ஆயினும் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் அவன் செய்தது பற்றி நியாயம் கேட்கவும் முடியாது. நியாயம் சொல்லவும் முடியாது. இவ்வாறுதான் நபீமார், வலீமார், ஷெய்கு – குருமார் ஆகியோரின் சந்நிதானங்களுமாகும்.
பின்னால் நான் கூறவுள்ள விடயங்கள் மூலம் சந்நிதானம் பேணப்படுவதின் மகத்துவமும், தத்துவமும் புரியும்.
إِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ طِينٍ ، فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ ، فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ ، إِلَّا إِبْلِيسَ اسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ ، قَالَ يَا إِبْلِيسُ مَا مَنَعَكَ أَنْ تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَيَّ أَسْتَكْبَرْتَ أَمْ كُنْتَ مِنَ الْعَالِينَ ، قَالَ أَنَا خَيْرٌ مِنْهُ خَلَقْتَنِي مِنْ نَارٍ وَخَلَقْتَهُ مِنْ طِينٍ ، قَالَ فَاخْرُجْ مِنْهَا فَإِنَّكَ رَجِيمٌ ، وَإِنَّ عَلَيْكَ لَعْنَتِي إِلَى يَوْمِ الدِّينِ ،
இரட்சகன் மலக்குகளிடம், நபீயே! உங்கள் “றப்பு”, நிச்சயமாக நான் மனிதனை களி மண்ணால் படைக்கப் போகின்றேன் என்று கூறிய வேளையை நீங்கள் நினைத்துப் பாருங்கள்!
பிறகு நான் அவரை அவருடைய தோற்றத்தை உருவாக்கிச் சரிபடுத்தி என் உயிரிலிருந்தும் அவரில் ஊதியபோது அவருக்குச் சிரம் பணிந்தவர்களாக விழுங்கள் எனக் கூறியதும்.
அது சமயம் மலக்குகள் – அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சிரம் பணிந்தார்கள்.
இப்லீஸைத் தவிர, அவன் கர்வம் கொண்டான். நிராகரிப்பவர்களிலும் ஆகிவிட்டான். அதற்கு, அல்லாஹ், இப்லீஸே! என் இரு கரங்களால் நான் படைத்ததற்கு நீ சிரம் பணியாது உன்னைத் தடுத்தது எது? நீ கர்வம் கொண்டுவிட்டாயா? அல்லது நீ உயர்ந்த பதவியுடையவர்களில் ஆகிவிட்டாயா? என்றான்.
அதற்கவன், நான் அவரை விட மிக மேலானவன். என்னை நெருப்பினால் படைத்தாய். இன்னும் அவரை களி மண்ணினால் நீ படைத்தாய் என்றான்.
அதற்கு அல்லாஹ் அவ்வாறாயின் நீ இதிலிருந்து வெளியேறிவிடு. நிச்சயமாக நீ விரட்டப்பட்டவன் என்று கூறினான்.
என்னுடைய சாபம் தீர்ப்பு நாள் வரை நிச்சயமாக உன் மீது இருக்கும் என்றும் கூறினான்.
(திருக்குர்ஆன் – ஸாத் அத்தியாயம், வசனங்கள் – 71-78)
மேற்கண்ட எட்டு வசனங்களில் நான் கூற நினைக்கும் கருத்தை விளக்கி வைப்பதற்கு 75, 76, 77 ஆகிய மூன்று வசனங்களும் போதும். எனினும் வாசிக்கின்ற அனைவரும் எழிதில் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இது தொடர்பான மேலும் வசனங்களையும் சேர்த்து குறிப்பிட்டுள்ளேன்.
இப்லீஸ் என்பவன் இந்த நிகழ்வுக்கு முன் மலக்குகளில் ஒருவனாகவே இருந்தான். ஒரு சமயம் மலக்குகள் அனைவரையும் ஒன்று கூட்டி – இப்லீஸ் உட்பட – நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு “ஸுஜூத்” சிரம் பணியுமாறு அவர்களைப் பணித்தான். அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள். ஆயினும் இப்லீஸ் என்பவன் சிரம் பணியவில்லை. அல்லாஹ் அவனிடம் நீ ஏன் சிரம் பணியவில்லை என்று கேட்ட போது, “நான் அவரை விடச் சிறந்தவன், நீ என்னை நெருப்பினால் படைத்தாய், அவரை மண்ணால் படைத்தாய் என்று மட்டும் பதில் கூறினான். அப்போது அல்லாஹ் நீ இதிலிருந்து வெளியேறிவிடு, நிச்சயமாக நீ விரட்டப்பட்டவன் என்று சபித்தான்.
இப்லீஸ் அல்லாஹ்வின் கேள்விக்கான பதிலும் கூறி அந்த பதிலுக்கு விளக்கமும் கூறினான். مَا مَنَعَكَ أَنْ تَسْجُدَ நீ சிரம் பணிய உன்னை தடுத்தது எது? என்றுதான் அல்லாஹ் கேட்டான். அதற்கு அவன் கூறிய பதில் أَنَا خَيْرٌ مِنْهُ நான் அவரை விடச் சிறந்தவன் என்பதாகும். இவ்வாறு சொன்ன இப்லீஸ் அவரை விட எந்த வகையில் தான் சிறந்தவன் என்பதற்கான காரணத்தையும் பின்வருமாறு கூறினான். خَلَقْتَنِيْ مِنْ نَارٍ وَخَلَقْتَهُ مِنْ طِيْنٍ என்னை நெருப்பால் படைத்தாய். அவரை மண்ணால் படைத்தாய்.
இப்லீஸ் சொன்ன பதில் நியாயமானதும், அறிவுபூர்வமானதுமாகும். ஏனெனில் நெருப்பின் தன்மை மேல்நோக்கிச் செல்வதேயன்றி கீழ் நோக்கிச் செல்வதல்ல. மண்ணின் தன்மை கீழ் நோக்கிச் செல்வதேயன்றி மேல் நோக்கிச் செல்வதல்ல. இவ்வடிப்படையில் மண்ணை விட நெருப்புச் சிறந்ததென்பது வெள்ளிடை மலை. மறுக்க முடியாத உண்மை. எதார்த்தம் இவ்வாறிருக்கும் நிலையில் அல்லாஹ் கேட்ட கேள்விக்கு நியாயமான பதில் கூறிய இப்லீஸை அவன் சபித்து துரத்தியது ஏன்? அவன் எவருக்கும் அநீதி செய்வதில்லை என்பது அவன் திருக்குர்ஆன் மூலம் மக்களுக்கு வழங்கிய உறுதி மொழியாயிருக்கும் நிலையில் ஏன் அவனைச் சபித்துத் துரத்தினான்?
இங்குதான் சந்நிதானம் பேணப்பட வேண்டுமென்ற தத்துவம் உணரப்பட வேண்டும். இப்லீஸ் நான் ஆதமுக்கு “ஸுஜூத்” சிரம் பணியமாட்டேன் என்று சொல்லவில்லை. அவ்வாறு சொல்லியிருந்தாலும் கூட அல்லாஹ் அவனை மன்னித்திருப்பான். ஆயினுமவன் நீதி கேட்கும் பாணியிலும், தத்துவம் பேசும் பாணியிலும் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் பதில் கூறியது மன்னிக்க முடியாத குற்றமாகும். இப்லீஸ் சந்நிதானம் பேணாமல் விட்டதே அவனின் அழிவுக்கு காரணமாகிவிட்டது.
அல்லாஹ்வின் சந்நிதானம் பேணாமலிருப்பது போன்றதே றஸூல் அவர்களின் சந்நிதானமும், “ஷெய்கு” ஞானகுருவின் சந்நிதானமும் பேணாமலிருப்பதுமாகும். இதனால்தான் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பொதுச் சொத்தை பங்கு வைத்துக் கொண்டிருந்த சமயம் يَا مُحَمَّدْ اِتَّقِ الله முஹம்மதே! அல்லாஹ்வைப் பயந்து கொள் என்று கூறி சந்நிதானம் பேணாமல் நடந்து கொண்டவனுக்கு إِنْ لَمْ أَعْدِلْ فَمَنْ يَعْدِلْ நான் நீதி செய்யவில்லையானால் வேறு யார் நீதி செய்வான்? என்று சூடாகப் பதில் கூறி அவனைத் தூரப்படுத்தினார்கள் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள். பெருமானாரின் சந்நிதானம் பேணாமல் அவ்வாறு நடந்து கொண்டவனின் பரம்பரையில் வந்தவர்கள்தான் வஹ்ஹாபிகள் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு ஷெய்கு ஞானகுருவிடம் “பைஅத்” ஞானதீட்சை பெற்ற ஒரு “முரீத்” அவரின் சந்நிதானம் பேணாமல் இருப்பதைச் சேர்ந்ததே அவரின் சொல்லுக்கு மாறுபடுவதும், அச்சொல் பற்றி சிஷ்யன் ஆய்வு செய்து கொண்டிருப்பதுமாகும். இன்னோரின் நிழல் இவர்களைத் தொடர்வது போல் அல்லாஹ்வின் கோபமும், சாபமும் இவர்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
மகான் ஷிப்லீ பாவா அவர்கள் பற்றி எழுதிக் கொண்டிருந்த போது தாஹா மரைக்காயர் – நாகூர் என்பவரால் ஒக்டோபர் 12, 2015 திகதியிடப்பட்ட ஒரு பிரசுரம் எமக்கு கிடைத்தது. அதை முழுமையாக பிரசுரிக்காமல் எமக்குத் தேவையான குறிப்பை மட்டும் இக்கட்டுரையுடன் சேர்த்துள்ளோம்.
தாஹா மரைக்காயர் மகான் ஷிப்லீ பாவா பற்றிக் குறிப்பிடுகையில், அவர்கள் அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பரம்பரையில், மாதிஹுர் றஸூல் ஸதகதுல்லாஹ் றஹிமஹுல்லாஹ், ஸெய்யிது முஹம்மத் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் றஹிமஹுல்லாஹ், ஷெய்கு அப்துல் காதிர் கல்வத் நாயகம் றஹிமஹுல்லாஹ் ஆகியோரின் வம்சாவழியில் வந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதன்படி ஷிப்லீ பாவா றஹிமஹுல்லாஹ் அவர்கள் “ஸித்தீக்” ஆவார்கள் என்பது விளங்கப்படுகிறது.
தாஹா மரைக்காயர் தனது பிரசுரத்தில் மகான் ஷிப்லீ பாவா அவர்கள் நிகழ்த்திய “கறாமத்” ஒன்றையும் குறிப்பிட்டிருக்கின்றார். அதையும் இங்கு எழுதுகின்றோம்.
மகான் ஷிப்லீ பாவா அவர்களின் மஞ்சக் கொல்லையை அடுத்துள்ள ஊர் ஒன்றில் கல்யாண விருந்தென்று நடைபெற இருந்தது. சமையல் வேலை எல்லாம் முடிந்த நிலையில் எதிர்பாராமல் அங்கு சென்ற மகான் ஷிப்லீ பாவா அவர்கள் கறிச் சட்டியை கொட்டி விடுங்கள், சாப்பிடாதீர்கள் என்று சத்தமிட்டார்களாம். வீட்டுக்காரனும், கறி சமைத்தவரும் என்ன செய்வதென்று யோசித்து இறுதியில் மகான் அவர்களின் சொல்லைத் தட்டக் கூடாதென்று கறிச் சட்டியை கொட்டினார்கள். ஸுப்ஹானல்லாஹ்! கறிச் சட்டிக்குள் நாக பாம்பொன்று செத்துக் கிடந்தது.
இது பாவா அவர்களின் “கறாமத்” ஆகும்.