Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அல்லாஹ் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலையில் உள்ளான்.

அல்லாஹ் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலையில் உள்ளான்.

(தொகுப்பு: மௌலவீ: அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ)

كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ

அல்லாஹ் ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வேலையில் உள்ளான்.
அல்லாஹ் ஒவ்வொரு நொடியிலும்
ஒவ்வொரு வேலையில் உள்ளான்.
அல்லாஹ் ஒவ்வொரு நொடியிலும்
பல கோடி வேலையில் உள்ளான்.

தலைப்புக்கு நான் எடுத்துள்ள மேற்கண்ட வசனம் திருமறை வசனமாகும். (திருக்குர்ஆன்: 55-29)


இவ்வசனத்தின் வெளிப்படையான நேரடிப் பொருள் அல்லாஹ் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலையில் உள்ளான் என்பதாகும்.

இவ்வசனத்தில் வந்துள்ள “யவ்ம்” என்ற சொல் பற்றியும், “ஷஃன்” என்ற சொல் பற்றியும் முதலில் சிறிய விளக்கம் கூறிய பின் விடயத்தை விளக்கி வைப்பது நல்லதென்று கருதுகிறேன்.

اَلشَّأْنُ இதன் பன்மைச் சொல் شُئُوْنْ , شِآنْ , شِئِيْنْ (ஷுஊன், ஷிஆன், ஷியீன்) மூன்று விதமாகவும் வரும்.

அறபு மொழியில் “ஷுஊன்” என்பதே அதிகமாக பாவிக்கப்படும். الشَّأْنُ என்றால் مَا عَظُمَ مِنَ الْأُمُوْرِ وَالْأَحْوَالِ நிலமைகளிலும், விடயங்களிலும் முக்கியமானது என்ற பொருள் இச் சொல்லுக்கு உண்டு. اَلْأَمْرُ أَوِ الْحَالُ عُمُوْمًا பொதுவாக விஷயம், கருமம் என்ற பொருள்களும் இதற்கு உண்டு.

ஒருவன் இன்னொருவனைச் சந்திக்கும் போது مَا حَالُكَ؟ , مَا شَأْنُكَ؟ , مَا أَمْرُكَ؟ என்றெல்லாம் கேட்பதுண்டு. இவற்றுக்கு சுருக்கமாக உனது நிலமை எப்படி? என்று பொருள் கொள்ளலாம்.

திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பில் மேற்கண்ட திரு வசனத்திற்கு ஒவ்வொரு நேரமும் அவன் காரியத்தில் (செயலாற்றுவதிலேயே) இருக்கின்றான் என்று எழுதப்பட்டுள்ளது. இதை நூறு வீதம் சரியென்று கொள்ள என்னால் முடியவில்லை.

பொதுவாக அல்லாஹ் ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு வேலையில் உள்ளான், ஒவ்வொரு விஷயத்தில் உள்ளான், ஒவ்வொரு கருமத்தில் உள்ளான் என்று பொருள் கூறலாம்.

ஆயினும் அவன் செய்கின்ற வேலை என்ன? விஷயம் என்ன? கருமம் என்ன என்பதை அறிந்து கொள்வதே முக்கியமானதாகும். அதுவே ஞானமுமாகும். இக்கட்டுரையில் அது என்ன என்பதை தெளிவாக விளக்குவோம். இன்ஷா அல்லாஹ்.

شَأْنْ – “ஷஃன்” என்ற சொல்லுக்கு சிறு விளக்கம் கூறியதுபோல் திரு வசனத்தில் வந்துள்ள “யவ்ம்” என்ற சொல்லுக்கும் சிறு விளக்கம் கூற வேண்டும்.

“யவ்ம்” என்ற சொல்லுக்கு الوقتُ من طُلوع الفجر إلى غُروب الشّمس சூரியன் உதித்து அது மறையும் வரையுள்ள நேரம் என்று பொருள் வரும். பொதுவாக நேரம் என்ற பொருளும் இதற்கு உண்டு. எனினும் இது நடைமுறையில் மிகக் குறைவு. இச் சொல்லின் பன்மைச் சொல் أَيَّامٌ – “ஐயாமுன்” என்று வரும். இப் பன்மைச் சொல்லுக்கும் இன்னொரு பன்மைச் சொல் உண்டு. அது أَيَاوِيْمْ – அயாவீம் எனப்படும். எனினும் இது நடைமுறையில் குறைவு.

யவ்ம் பற்றிய விபரம்.

மேற்கண்ட திரு வசனத்தில் வந்துள்ள “யவ்ம்” என்ற சொல் பற்றி சற்று ஆய்வு செய்வோம்.

இச்சொல் மேற்கண்ட வசனத்தில் வந்துள்ளது போல் “லைலதுன்” என்ற சொல்லுடன் இணையாமல் தனியே வந்தால் இரவு, பகல் உள்ளிட்ட 24 மணி நேரத்தையும் உள்வாங்கிக் கொள்ளும்.”லைலதுன்” இரவு என்ற பொருளுக்குரிய சொல்லுடன் இணைந்து வந்தால் இதற்கு பகல் என்று மட்டும் பொருள் வரும்.

உதாரணமாக ஒருவன் இன்னொருவனிடம் كَمْ يَوْمًا قَضَيْتَ فِى لَنْدَنْ லண்டனில் எத்தனை நாட்கள் கழித்தாய்? என்று கேட்ட கேள்விக்கு அவன் قَضَيْتُ يَوْمًا وَلَيْلَةً என்று பதில் கூறினால் – அதாவது “யவ்ம்” என்ற சொல்லுடன் “லைலதுன்” என்ற சொல்லையும் சேர்த்து பதில் கூறினால் ஓர் இரவும், ஒரு பகலும் என்று பொருள் வரும். அதாவது ஒரு நாள் தங்கினேன் என்று பொருள் வரும். அவன் “லைலதுன்” என்ற சொல்லைச் சேர்க்காமல் قَضَيْتُ يَوْمًا என்று மட்டும் பதில் சொன்னால் அது “யவ்ம்” என்ற சொல்லுக்கு அகராதியில் கூறப்பட்டபடி اليوم – الوقتُ من طلوع الفجر إلى غروب الشمس “யவ்ம்” என்பது சூரியன் உதித்ததிலிருந்து அது மறையும் வரையான நேரம் என்ற விபரப்படி பகல் நேரத்தை மட்டுமே குறிக்கும். இதுவே சரியான அகராதிப் பொருளாக இருந்தாலும் “யவ்ம்” என்ற சொல் நடைமுறையில் ஒரு முழு நாளையும் – 24 மணி நேரங்களையும் உள்வாங்கிய நேரத்தைக் குறிக்கும் ஒரு சொல்லாகும்.

“யவ்ம்” என்ற சொல்லுக்கு அகராதி தருகின்ற பொருள் மட்டும் தான் சரியென்று வைத்துக் கொண்டால் كل يوم هو فى شأن என்ற திருமறை வசனத்திற்கு அவன் ஒவ்வொரு பகலிலும் ஒவ்வொரு வேலையில் உள்ளான் என்றுதான் பொருள் வரும். அவ்வாறாயின் அவன் மனிதர்கள் போல் இரவில் ஓய்வெடுக்கின்றான் என்ற கருத்து வந்துவிடும்.

எனவே, இதன் சுருக்கம் என்னவெனில் “யவ்ம்” என்ற சொல் “லைலதுன்” என்ற சொல்லுடன் சேராமல் தனியே வந்தால் அது இரவு, பகல் 24 மணி நேரங்களைக் கொண்ட முழு நாளையும் குறிக்குமென்றும், அகராதிப் பொருள்படி பகல் நேரத்தை மட்டும் குறிக்குமென்றும் விளங்கிக் கொள்ள வேண்டும். திருக்குர்ஆனின் எல்லா வசனங்களுக்கும், எல்லாச் சொற்களுக்கும் அகராதிப் பொருள் சரிவராதென்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவன் “யவ்ம்” என்ற சொல்லுக்கு அகராதிப் பொருளை மட்டும் அறிந்து கொண்டு அல்லாஹ் பகலில்தான் வேலை செய்கின்றான், இரவில் படுத்துறுங்குகிறான் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

“யவ்ம்” என்ற சொல்லுக்கு மேற்கண்ட விளக்கத்தின்படி – அதாவது 24 மணி நேரங்களைக் கொண்ட ஒரு முழு நாள் – என்ற விளக்கத்தின்படி அல்லாஹ் ஒரு நாளில் ஒரு வேலை மட்டும் செய்கிறான் என்று விளக்கம் வரும். இது ஏற்றுக் கொள்ள முடியாத விளக்கமாகும்.

ஏனெனில் சாதாரண ஒரு மனிதன் கூட ஒரு நாளில் எண்ணற்ற வேலைகள் செய்யும் நிலையில் அல்லாஹ் ஒரு வேலைதான் செய்கிறான் என்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது? இது புத்திக்கே பொருத்தமற்ற ஒன்று.

மனிதர்களில் ஒருவன் அல்லது உயிரினங்களில் ஒன்று ஒரு நாளில் செய்கின்ற வேலை பல கோடிக்கும் அதிகமானதாயும் இருப்பதை நாம் அறிகிறோம். பார்க்கிறோம். ஒரு மனிதன் ஒரு நாளில் 21600 தரம் சுவாசிக்கின்றான் என்ற ஞானிகளின் தத்துவம் சரியானதாயின் சுவாசம் தவிர அவன் செய்யும் வேலைகள் எத்தனை என்று எவராலும், அல்லது எந்த ஒரு இயந்திரத்தாலும் கணக்கெடுக்க முடியாத நிலையில் அல்லாஹ் ஒரு நாளில் ஒரு வேலை மட்டும்தான் செய்கிறான் என்று சொல்வதைக் கேட்கும் போது அறிவிலிகளின் அறிவின்மையை நினைத்து சிரித்துச் சிரித்தே மரணித்துவிடலாம் போல் தோணுகிறது.

எனவே, “யவ்ம்” என்ற சொல்லுக்கு ஒரு நாள் என்று பொருள் கொள்வது மேற்கண்ட சிக்கலை ஏற்படுத்துவதால் ஒவ்வொரு நாளிலுமென்றால் அந்த நாளிலுள்ள ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு வேலை செய்கின்றான் என்று பொருள் கொள்வதே சரியானதாகும்.

இன்னும் சற்று ஆழமாக ஆய்வு செய்தால் இவ்வாறு கணிப்பது கூட பிழையாகிவிடும். ஏனெனில் ஒரு நொடிக்கு ஒரு வேலை என்பது கூட ஒரு கட்டுப்பாடும், வரையறையுமேயாகும். ஆகையால் ஒரு நொடிக்கு ஒரு வேலை செய்கின்றான் என்று சொன்னாலும் கூட ஒவ்வொரு படைப்பைப் பொறுத்துமே ஒரு நொடிக்கு ஒரு வேலை செய்கிறான் என்று பொருள் கொள்வதே பொருத்தமானது.

#அல்லாஹ் செய்கின்ற வேலை எது?

ஒவ்வொரு படைப்பைப் பொறுத்தும் ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு வேலை செய்கிறான் என்றால் அது என்ன வேலை? இங்குதான் توحيد الأفعال செயல்கள் யாவும் ஒருவனின் செயல் என்ற செயல்களைத் “தவ்ஹீத்” செய்தல் என்ற நம்பிக்கை ஏற்படும்.

அல்லாஹ் ஒவ்வொரு படைப்பைப் பொறுத்த வரையிலும், அப்படைப்பின் ஒவ்வொரு உறுப்பைப் பொறுத்த வரையிலும், ஒவ்வொரு மரத்தைப் பொறுத்த வரையிலும், அதன் இலை, காய், பூ போன்றவற்றைப் பொறுத்த வரையிலும் “தஜல்லீ” அவன் வெளியாகிக் கொண்டிருப்பதே அவன் செய்கின்ற வேலையாகும்.

இதைவிடவும் சுருக்கமாகவும், விளக்கமாகவும் சொல்வதாயின் எந்த ஒரு படைப்பாயினும் அதன் ஆட்ட அசைவு உள்ளிட்ட அதன் அனைத்துச் செயல்களும் அவன் செயல்கள் என்றால் – அவனின் “தஜல்லீ” வெளிப்பாடுகள் என்றால் அவனின் வேலையைக் கணக்கிட இதுவரை எந்த ஓர் இயந்திரமும் கண்டு பிடிக்கப்படவுமில்லை, இதன் பிறகு கண்டு பிடிக்கப்படப் போவதுமில்லை.

அவனின் “தஜல்லிய்யாத்” வெளிப்பாடுகள் – செயற்பாடுகளில் எந்த ஒன்றும் மற்றொன்று போல் இருக்கமாட்டாது. அவனின் முந்தின “தஜல்லீ” வெளிப்பாட்டை அல்லது செயற்பாட்டை விட பிந்தின “தஜல்லீ” சக்தி மிக்கதாகவும், முந்தினதை வெல்லக் கூடியதாகவுமே இருக்கும். ஒவ்வொரு வெளிப்பாடும் புதியதாகவும், முதலுள்ளதைவிட சக்தி மிக்கதாகவுமே இருக்கும்.

செயல்களில் எச் செயலாயினும் அச் செயலுக்குரியவன் அல்லாஹ்வேயன்றி வேறு யாருமில்லை. வேறு எதுவுமே இல்லை. நெருப்பு சுடுவதுமில்லை. கத்தி வெட்டுவதுமில்லை. சுயமான செயல் நெருப்புக்கோ, கத்திக்கோ இல்லை. நெருப்புக்கு சுயமான செயல் இருக்குமாயின் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை “நும்றூத்” என்பவன் நெருப்புக்குழியில் எறிந்த நேரம் அது அவர்களை எரித்துச் சாம்பலாக்கியிருக்குமே. ஏன் எரிக்கவில்லை? நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், மகன் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து அறுத்த நேரம் அது அவரின் கழுத்தை அறுத்திருக்கும். ஏன் அறுக்கவில்லை? நெருப்புக்கு சுயமாக எரிக்கும் சக்தியில்லை என்பதற்கும், கத்திக்கு சுயமாக அறுக்கும் சக்தி இல்லை என்பதற்கும் இதைவிடப் பெரிய ஆதாரம் தேவையா?

அல்லாஹ் நெருப்புக்குச் சுடுமாறும், கத்திக்கு அறுக்குமாறும் அனுமதியளிக்கவில்லையே! அவனின் அனுமதியின்றி நெருப்பு எவ்வாறு சுடும்? கத்தி எவ்வாறு வெட்டும்? என்று எம்மிடம் கேட்க வஹ்ஹாபீ காக்காமார் நினைக்கிறார்களோ? அவ்வாறு அவர்கள் நினைத்தார்களாயின் சுயமாகச் சுடுமென்றிருந்தாலோ, சுயமாக அறுக்குமென்றிருந்தாலோ அனுமதி தேவையில்லையே! ஏன் அனுமதி பற்றி அண்ணன்மார் பேச வேண்டும்?

كل يوم هو فى شأن
இத்திரு வசனத்தில் வந்துள்ள “யவ்ம்” என்ற சொல்லுக்கு ஒரு பகல் என்றோ, இரவு பகல் சேர்ந்த ஒரு முழு நாள் என்றோ பொருள் கொள்வதால் சிக்கல் ஏற்படுவதால் முழு நாளிலுமுள்ள ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு வேலையில் உள்ளான் என்று பொருள் கொள்ள வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தேன். இந்தக் கருத்துக் கூட ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு படைப்பிலும் “தஜல்லீ” வெளியாகிக் கொண்டிருக்கின்றான் என்ற கருத்தையே தரும்.

உதாரணமாக ஒரு கோடிப் படைப்பென்று வைத்துக் கொண்டால் ஒவ்வொரு படைப்பிலும் ஒரே நேரத்தில் ஒரு கோடி “தஜல்லீ” என்றே புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கணக்கிட்டால் சர்வ சிருட்டிகளிலும் ஒரு நொடிக்கு எத்தனை கோடித் “தஜல்லீ” ஏற்படும் என்பதை நினைத்து “ஸுப்ஹானல்லாஹ்” என்று கூறிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். “தஜல்லீ” முடியாது. அது தொடர் கதையேதான். அவனின் “தாத்”துக்கு அழிவு, முடிவு இல்லாதது போல் அவனின் “தஜல்லீ”க்கும் அவை இல்லை. ஓர் எறும்பு ஒரு நூலளவு நகர்வது கூட அவன் “தஜல்லீ”தான். وبالجملة كلّ حركةٍ للخلق وكلُّ سكون تجلّياته تعالى படைப்பு அசைவதும், அது அசையாமலிருப்பதும் அவன் தஜல்லியே!

#தஜல்லீ” இம்மையுடன் முடியுமா?

இல்லை. தொடரும். மறுமையும் அவனின் “தஜல்லீ”தான். சுவர்க்கம், நரகம் என்பவையும் அவனின் “தஜல்லீ”தான். அவற்றிலுள்ள இன்ப, துன்பங்களும் அவனின் “தஜல்லீ”தான். “ஹூறுல் ஈன்” அழகு ராணிகளும் அவனின் “தஜல்லீ”தான். சுவர்க்கத்தில் அவனின் “குன்” என்ற சொல் கொண்டு வெளியான “பார்” மதுவகத்தில் நாம் அருந்தவுள்ள விலை மதிப்பற்ற மது வகைகளும் அவனின் “தஜல்லீ”தான்.

وَفِيهَا مَا تَشْتَهِيهِ الْأَنْفُسُ وَتَلَذُّ الْأَعْيُنُ وَأَنْتُمْ فِيهَا خَالِدُونَ
இன்னும் அங்கு அவர்களின் மனம் விரும்பக் கூடியதும், கண்களுக்கு இன்பம் தருபவைகளும் உள்ளன. (திருக்குர்ஆன் 43-71)
يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ
மேற்சொன்னவை மட்டுமல்ல. நிலையான இளைஞர்கள் இவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள். (திருக்குர்ஆன் 56-17)

மனதுக்கு விருப்பமான, கண்ணுக்கு கவர்ச்சியான எல்லாமே அவனின் “தஜல்லீ”தான்.

எனவே, அல்லாஹ்வின் “தஜல்லீ” என்பது முற்றுப்புள்ளிக்கு இடமில்லாத தொடர் கதையேயாகும்.

“யவ்ம்” என்ற சொல்லுக்கு அகராதியில் கூறப்பட்டதுபோல் “பகல்” என்று வைத்துக் கொண்டாலும், முழு நாள் என்று கருத்துக் கொண்டாலும் இவ்விரண்டையும் ஏற்றுக் கொள்ளலாம். ஆயினும் ஒவ்வொரு நொடியிலும் என்ற கருத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்வது? என்று ஒருவர் யோசிக்கலாம். அவற்றுக்கான விடையை இங்கு காணலாம்.

ஒரு நிமிடம் என்பது 60 நொடிகளைக் கொண்டது. ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்களைக் கொண்டது.

ஒருவன் இன்னொருவனிடம் நீ என்னை ஒரு மணி நேரம் நினைத்துக் கொண்டிரு என்று சொன்னால் 3600 நொடிகளும் (60 நிமிடங்களும்) நினைத்துக் கொண்டிரு என்பதுதானே அதன் அர்த்தம். இப்போது கணக்குப் புரிகிறதல்லவா? இப்போதாவது அவர் ஏற்றுக் கொள்வாரா?

இதேபோல் அவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலையில் உள்ளான் என்றால் ஒரு நாளிலுள்ள 24 மணி நேரங்களில் எத்தனை நிமிடங்களும், எத்தனை நொடிகளும் உள்ளனவோ (86400 நொடிகள்) அவை அனைத்திலும் அவன் வேலை செய்து கொண்டே இருக்கிறான். “தஜல்லீ” ஆகிக் கொண்டே இருக்கிறான். இதுவே எதார்த்தம். அவனின் “தஜல்லிய்யாத்” எத்தனை என்று எவரால்தான் எல்லையிட முடியும்?!

#றப்பு”ம், “#மர்பூபு”ம்

அல்லாஹ் அடியார்களின் “றப்பு” ஆவான். இது அவனின் திரு நாமங்களில் ஒன்று. அவன் “றப்பு” எனின் அடியான் “மர்பூப்” ஆவான். “றப்பு” என்றால் வளர்ப்பவன் என்றும், “மர்பூப்” என்றால் வளர்க்கப்பட்டவன், வளர்க்கப்படுபவன் என்றும் பொருள் வரும்.

ஒரு தாய் தான் பெற்ற குழந்தையை எவ்வாறு வளர்க்கிறாளோ அவ்வாறே அல்லாஹ் தனது அடியானை வளர்த்துக் கொண்டிருக்கின்றான். இதனால்தான் رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا “நான் சிறுவனாயிருந்த போது என்னை அவ்விருவரும் – பெற்றோர் – வளர்த்ததுபோல் – வளர்த்ததற்காக அவ்விருவருக்கும் அருள் சொரிவாயாக!” என்று அவர்களுக்கு பிரார்த்தனை செய்யுமாறு அல்லாஹ்வால் நாம் ஏவப்பட்டுள்ளோம்.

திரு வசனத்தில் வந்துள்ள رَبَّيَا என்ற சொல் ஒரு வகையில் அவ்விருவரும் “றப்பு” என்பதை உணர்த்துவது அறிவுள்ளவர்களுக்கு மறைவானதல்ல.

ஒரு குழந்தையை வளர்க்கும் பெற்றோருக்கு அக்குழந்தையை எந் நேரம் என்ன செய்ய வேண்டும்? எந்நேரம் என்ன கொடுக்க வேண்டும்? என்ற விபரம் நன்றாகத் தெரியும். அவ்வாறுதான் “றப்பு” என்ற திரு நாமத்திற்குரிய அல்லாஹ்வும் ஆவான்.

சிலர் மேற்கண்ட “துஆ”வை பிழையாக ஓதுவதை நாம் கேட்கிறோம். இவர்கள் இதன் பிறகு திருத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
என்ற வசனம்தான் திருக்குர்ஆன் வசனம். ஒருவன் தனியே “துஆ” ஓதும்போதும், கூட்டாக ஓதும்போதும் இவ்வாறு ஓதுவதே சிறந்தது. ஆயினும் சிலர் கூட்டாக ஓதும் போது رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّوْنَا صَغِيرًا என்று ஓதுகிறார்கள். இவ்வாறு ஓதினால் அது திருக்குர்ஆன் வசனமாகாது. அதை திருக்குர்ஆன் வசனமென்று நினைத்து ஓதினால் பெரும்பாவமாகவும் ஆகிவிடும். அவ்வாறு நினைக்காமல் அதை தனது வசனமாக நினைத்து ஓதினால் பாவமாகாது. ஆயினும் திருக்குர்ஆன் வசனம் ஓதியதற்கான நன்மை கிடைக்காது. அவ்வாறு ஓத விரும்புகின்றவர்கள் கூட பின்வருமாறு ஓதினால் மிகவும் பொருத்தமாயிருக்கும். رَبِّ ارْحَمْهُمْ كَمَا رَبَّوْنَا صِغَارًا .

இன்னும் சிலர் பின்வருமாறு ஓதுவதையும் நாம் கேட்டிருக்கின்றோம். رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صِغَارًا இது கடும் பிழையாகும். இவ்வாறு ஓதுபவர் அறபு மொழியிலக்கணம் தெரியாத كتب الأكتاب போன்றவராகவே இருப்பார். அவர் صغارا என்ற சொல்லை صغيرا என்று ஓதவாராயின் அவர் قطب الأقطاب ஆகவே இருப்பார்.

“துஆ” ஓதுபவர்கள் மௌலவீமார் அல்லாதவர்களாக இருந்தால் தாம் ஓதுகின்ற “துஆ”வை மட்டுமாவது சரியாக ஓதத் தெரிந்து கொள்ள வேண்டும். யாரோ ஒரு அரைவேக்காடு ஆலிமு “துஆ” ஓதும்போது اللهم أَرِنَا الْحَقَّ حَقًّا وَالْبَاطِلَ بَاطِلًا மேற்கண்டவாறு ஓதாமல் اللهم أَرِنَا الْحَقَّ حَقًّا வல் போத்தல போத்தலன் என்று ஓதினாராம். மஃமூமகளில் ஒருவராக நின்ற மௌலவீ ஒருவர் சிரித்த சிரிப்பில் அவருக்கு குசுவே பறந்ததாம். ஸுப்ஹானல்லாஹ்!

அல்லாஹ் ஒவ்வொரு நொடியிலும் பல கோடி வேலையில் உள்ளான்.
(முற்றும்.)

RELATED ARTICLES

Most Popular

Recent Comments