Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்பல்சுவை விருந்து

பல்சுவை விருந்து

(தொகுப்பு: மௌலவீ: அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ)

1964ம் ஆண்டு நான் பாணந்துறை பள்ளிமுல்லை “அல்மத்றஸதுத் தீனிய்யா” அறபுக் கல்லூரியில் கண்ணியத்திற்குரிய எனது உஸ்தாத் அப்துஸ் ஸமத் ஹழறத் பலகீ அவர்களிடம் கல்வி கற்றுக் கொண்டிருந்தேன்.

பள்ளிமுல்லை ஜும்ஆப் பள்ளிவாயலிலேயே அறபுக் கல்லூரி நடைபெற்றது. கல்லூரிக்கென்று தனியான கட்டிடம் அந்நேரம் இருக்கவில்லை.

கல்லூரியில் 23 மாணவர்கள் மட்டுமே அந்நேரம் இருந்தார்கள். மாணவர்கள் 23 பேர்களாயிருந்தாலும் மாணவர்களுக்கான சட்டங்கள் 25 இருந்தன இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஹழ்றத் அவர்கள் அந்நேரம் பெரிய வகுப்பு மாணவர்களாயிருந்த எனக்கும், அட்டாளைச்சேனை ஸெய்யித் அஹ்மத் மௌலானா அவர்களுக்கும் கற்றுத் தந்தார்கள். சிறிய பாட மாணவர்களிற் சிலருக்கும் கற்றுக் கொடுத்தார்கள். நான் பெரிய வகுப்பு மாணவனாக இருந்ததால் சிறிய வகுப்பு மாணவர்களிற் சிலருக்கு கற்றுக் கொடுக்கும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டிருந்தது. அதற்கான சிறிய சம்பளமும் தரப்பட்டது.

ஒரு நாள் காலை சுமார் 9 மணியளவில் பள்ளிவாயலுக்கு முன்னால் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து ஒருவர் இறங்கினார். தூர நின்று பார்த்த எனக்கு அவர் எனக்கு அறிமுகமான காத்தான்குடியாள் போல் தெரிந்தது. நெருங்கிச் சென்று பார்த்தேன். அவர் காத்தான்குடியைச் சேர்ந்த கொழும்பில் சம்மாங்கோட் பள்ளிவாயலுக்கு அருகில் “ட்றான்ஸ்போர்ட்” நடத்திக் கொண்டிருந்த MCM முஸ்தபா என்று அறிந்துகொண்டேன். அவர் எனது தாய் வழியில் எனது உறவினராக இருந்தார்.

அவரை உள்ளே அழைத்துச் சென்று எனது படுக்கையில் அமரச் செய்து வந்த நோக்கம் பற்றி வினவினேன். காத்தான்குடி மெயின் வீதியிலுள்ள “ஸெய்யித் செய்ன் மௌலானா தைக்கா”வை உடைத்துத் தரைமட்டமாக்கி புதிய பள்ளிவாயல் கட்டுவதற்கு ஒழுங்கு செய்து கொண்டிருக்கிறோம். அதற்கு “கிப்லா” எடுக்க வேண்டும். இங்கு, இலங்கையில் “கிப்லா” எடுப்பதில் திறமையுள்ள ஒரு “ஹஸ்றத்” இருப்பதாக அறிந்து அவரை அழைத்துச் செல்ல வந்துள்ளேன் என்றார்.

நல்லது. செய்ய வேண்டிய ஒன்றுதான். என்னால் முடிந்த ஒத்துழைப்பை நான் தருகிறேன் என்று சொன்னேன். ஹழ்றத் அவர்களை எப்போது அழைத்துச் செல்ல வேண்டுமென்று கேட்டேன். அதற்கவர் இப்போதே அழைத்துச் செல்ல வேண்டும். நாளை “ஸுப்ஹ்” தொழுகையின் பின் “கிப்லா” எடுப்பதற்கான எல்லா ஏற்பாடும் செய்துவிட்டோம் என்றார்.

ஹழ்றத் அவர்கள் “கிப்லா” எடுப்பதற்கு எந்த ஊருக்கு அழைத்தாலும் மறுக்காமல் போவார்கள். ஆயினும் சுமார் 10 நாட்களுக்கு முன் அவர்களிடம் நேரமெடுத்து சொல்லி வைக்க வேண்டும். எந்த ராசா அழைத்தாலும் உடனே செல்ல மாட்டார்கள் என்று சொன்னேன்.

அவர், தம்பி ஆலிமுட மகனே! எல்லா ஏற்பாடும் செய்துவிட்டோம். நீங்கள் ஹழ்றத் அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டும். ”ஹத்யா”வும் கொடுப்போம் என்றார்.

அல்லாஹ் அக்பர். “ஹத்யா” கதை கதைத்தாலே அவர்களுக்கு கோபம் வந்துவிடும். அவ்வாறு ஒன்றும் சொல்ல வேண்டாம். நான் முயற்சிக்கிறேன் என்று கூறி அவரை அமரச் செய்துவிட்டு ஹழ்றத் அவர்களிடம் சென்று விடயத்தைக் கூறினேன். இதிலிருந்து 10 நாட்களின் பின்புதான் என்னால் வர முடியும். அதற்கிடையில் உசும்பமாட்டேன் என்று கூறிவிட்டார்கள். கை கால்களைப் பிடித்துக் கெஞ்சியழுது ஒரு சொட்டு கண்ணீரையும் வெளிப்படுத்தினேன். அதன் பின் சம்மதம் தெரிவித்தார்கள்.

வந்த MCM முஸ்தபா அவர்களை மாலை ஐந்து மணி வரை மத்ரஸாவிலேயே தங்க வைத்து அன்று மாலை 05 மணியளவில் நானும் ஹழ்றத் அவர்களும் வந்தவரின் வாகனத்தில் பயணித்து சுமார் 06.30 மணியளவில் கொழும்பை அடைந்தோம். அன்றிரவு அவரின் கடையிலேயே சாப்பிட்டபின் அதே இரவு 3.00 மணியளவில் காத்தான்குடி வந்தோம். MCM முஸ்தபா அவர்களின் வீட்டுக்குச் சென்றோம். வீட்டுக்காரர் “ஹோல்” கதவைத் திறந்தார். அவ்வளவுதான். நான் உள்ளே கால் வைப்பதாயின் சுவர்களில் கொழுகி வைக்கப்பட்டுள்ள போட்டோக்கள் அனைத்தையும் கழற்ற வேண்டும். அல்லது இப்போதே என்னை பாணந்துறைக்கு கொண்டுபோய் விட வேண்டும் என்று ஒரே பிடியில் ஹழ்றத் அவர்கள் நின்றார்கள்.

எவ்வாறு இதைச் சமாளிப்பதென்று சிந்தித்து MCM முஸ்தபா அவர்களிடம், நீங்கள் ஹழ்றத் அவர்களின் காலில் விழுந்து காலையில் நான் படங்களை எடுத்துவிடுவேன் என்று கூறுங்கள் என்று சொன்னேன். அவரும் அவ்வாறு அவர்களிடம் சொல்ல ஹழ்றத் அவர்களும் அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டு வீட்டினுள் வந்து “ஸுப்ஹ்” அதான் வரை உறங்கினார்கள். நானும் அவர்களுடன் உறங்கிவிட்டு இருவரும் காலை ஸெய்யித் செய்ன் மௌலானா பள்ளிவாயலுக்குச் சென்றோம். சுமார் 150 பேர்களுக்கு மேற்பட்ட மக்கள் கூடி நின்றார்கள். ஹழ்றத் அவர்கள் பாதிஹா சொல்ல நானும் “துஆ” ஓதி முடிந்தபின் கிப்லா எடுக்கும் பணி ஆரம்பமானது.

ஹழ்றத் அவர்களுக்கு நான் உதவியாளனாக நின்று விடயத்தை சிறப்பாக முடித்தோம். அன்று ஹழ்றத் அவர்களுக்கு எனது தாய் வீட்டில் பகல் சாப்பாடு ஒழுங்கு செய்தோம்.

எனது தந்தையிடம் கறி என்ன வாங்க வேண்டுமென்று கேட்டேன். கறி வருகிறது என்றார்கள். தகப்பனார் சொல்லி மறு நிமிடம் உத்மான் லெப்பை என்ற வயோதிபர் இரண்டு சிவப்பு நிறச் சேவல்களோடு வீட்டுக்கு வந்தார். அவர் என் தந்தையோடு பல்லாண்டுகளாகத் தொடர்புடையவர். ஸாலிஹான நல்ல மனிதர். நடந்தால் பூமிக்கு நோகாது. மென்மையானவர். ஓய்வான நேரங்களில் தகப்பனாரிடம் வந்து இறைஞான விளக்கம் பெற்றுச் செல்பவர். சில காலம் முஹ்யித்தீன் ஜும்ஆப் பள்ளிவாயலில் (மெத்தைப் பள்ளிவாயலில்) “முஅத்தின்” கடமை செய்தவர்.

எனது தந்தை அவரிடம் இன்று எனது மகனின் ஹழ்றத் அவர்களுக்கு இங்கு பகற் சாப்பாடு ஏற்பாடு செய்ய வேண்டும். மகன் என்ன கறி சமைப்போம் என்று கேட்டுக் கொண்டிருந்த நேரம் நீங்கள் இரண்டு கோழிகளுடன் பிரதான வீதியால் வந்ததுபோல் என் எண்ணத்தில் தெரிந்தது. நீங்கள் நான் கண்டதுபோல் கொண்டு வந்துள்ளீர்கள். ஏன் கொண்டு வந்தீர்கள் என்று கேட்டார்கள். அதற்கவர் இவ்விரு சேவல்களும் என் வீட்டில் வளர்ந்த சேவல்கள். எனது மனைவி இன்று காலை இவ்விரு சேவல்களில் ஒன்றை ஆலிமுக்கு (என் தந்தைக்கு) கொடுத்துவிட்டு வாருங்கள் என்று சொன்னார். ஒன்றை பிடித்துக் கொண்டு வந்த போது மற்றச் சேவலும் வந்து அதன் பக்கத்தில் நின்றது. நான் விரட்டிப் பார்த்தேன். அது போகவில்லை. அப்போது எனது மனைவி (அது போக மாட்டுது போல தெரிகிறது. இரண்டையும் கொண்டு போய் ஆலிமுக்கே கொடுங்கள்) என்றாள் என்று சொன்னார்.

அன்று இரு சேவல்கள் அறுத்துக் கறி சமைத்து, அதோடு இன்னும் சில கறிகள் ஒழுங்கு செய்து பகல் சாப்பாடு சாப்பிட்டோம். அன்று காலை 10.00 மணியளவில் வீட்டுக்கு வந்த ஹழ்றத் அவர்களும், தகப்பனாரும் “கிப்லா” எடுத்தல் எவ்வாறு என்பது தொடர்பாக “ளுஹ்ர்” தொழுகை வரை பேசிக் கொண்டிருந்தார்கள். பகல் சாப்பாட்டிற்குப் பிறகு கொழும்புக்குப் பயணித்தோம். அல்ஹம்துலில்லாஹ்.

பல்சுவை விருந்தில் கிடைத்த சுவைகள்.

மர்ஹூம் அப்துஸ் ஸமத் ஹழ்றத் முப்தீ, பலகீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “ஷரீஆ”வின் அறிவில் கரை காண முடியாத பெருங்கடலாக இருந்தார்கள். அதேபோல் علم الفلك வானவியலிலும் ஆழம் காணமுடியாத பெருங்கடலாகவே இருந்தார்கள். அக்காலத்தில் நமது நாட்டில் எங்காவது பள்ளிவாயலுக்கு “கிப்லா” எடுப்பதாயின் அவர்களையே மக்கள் அழைத்துச் செல்வார்கள்.

நான் அவர்களிடம் இரண்டு இடங்களில் கல்வி கற்றுள்ளேன். ஒன்று காலி கோட்டை பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா அறபுக் கல்லூரி. இங்கு 1958ம் ஆண்டு முதல் 1963ம் ஆண்டு வரை கற்றேன். இரண்டு. பாணந்துறை பள்ளிமுல்லை தீனிய்யா அறபுக் கல்லூரி. இங்கு 1963ம் ஆண்டு முதல் 1964ம் ஆண்டு வரை கற்றுள்ளேன்.

இந்த ஹழ்றத் அவர்கள்தான் அப்துர் றஊப் மௌலவீயின் விடயத்தில் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவும் எடுக்க வேண்டாம் என்று காத்தான்குடி உலமா சபைக்கு அறிவுரை வழங்கியவர்களாவர். அவர்கள் ஒரு “முப்தீ” “பத்வா” வழங்கும் தரமுடையவர்களாயிருந்தும் கூட தங்கள் வாழ்வில் எவருக்கும் எந்த ஒரு “பத்வா”வும் வழங்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நான் ஹழ்றத் அவர்களிடம் காலியில் ஐந்தாண்டுகளும், பாணந்துறையில் ஓர் ஆண்டும் மொத்தம் ஆறாண்டுகள் கல்வி கற்றிருந்தாலும் அவர்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பாகவோ, மெய்ஞ்ஞானம் தொடர்பாகவோ எந்த ஒரு கருத்தும் என்னிடம் சொல்லவுமில்லை. பிறரிடம் சொன்னதாக நான் அறியவுமில்லை. அவர்கள் குறித்த இந்த ஞானங்களை அறிந்திருந்தும் வெளிப்படுத்தாமல் இருந்தார்களா? அல்லது அறியாமலிருந்தார்களா? என்பது தொடர்பாக என்னால் ஒன்றுமே கூற முடியவில்லை.

ஆனால் “ஷரீஆ” உடைய விடயத்தில் ஆழமான அறிவுள்ளவர்கள் என்பதும், அந்த விடயத்தில் ஒரு “மக்றூஹ்” ஆன விடயத்தைக் கூட செய்யாதவர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

எனினும் மெய்ஞ்ஞானம் தொடர்பாக அவர்கள் என்னிடம் கூறிய விடயம் ஒன்றுள்ளது. அதை எழுத என் மனம் விரும்பவில்லை. உலமாஉகளில் யாராவது என்னிடம் நேரில் கேட்டால் அவர்களிடம் சொல்ல எப்போதும் நான் தயாராக உள்ளேன்.
اذْكُرُوا مَحَاسِنَ مَوْتَاكُمْ، وَكُفُّوا عَنْ مَسَاوِيهِمْ
மரணித்தவர்களின் நன்மைகள் பற்றி மக்களிடம் கூறுங்கள். ஆயினும் அவர்களின் தீமைகள் பற்றிப் பேசாதீர்கள் என்ற பெருமானாரின் அருள் மொழி என் கண் எதிரே நிற்கிறது. நான் என்செய்வேன்? உலமாஉகளில் “ஸுன்னீ” உலமாஉகள் மட்டும் என்னிடம் நேரில் வந்து கேட்டால் அவர்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு நான் சத்தியம் செய்து சொல்ல ஆயித்தமாயுள்ளேன்.

ஹழ்றத் அவர்கள் போட்டோவுக்கு கடும் எதிர்ப்பானவர்கள். எதற்காக போட்டோ எடுத்தாலும் அது “ஹறாம்” என்ற கருத்துள்ளவர்களாகவே இறுதி மூச்சு வரை இருந்தார்கள். التحذير من التصوير என்ற பெயரில் அறபு மொழியில் ஒரு நூல் எழுதி வைத்திருந்தார்கள். ஒரு சமயம் அவர்களின் கையெழுத்துப் பிரதியை என்னிடம் காட்டி ஒரு சில குறிப்புக்களை வாசிக்குமாறு என்னிடம் கூறினார்கள். அதை அச்சிட்டு வெளியிட்டார்களா என்பது எனக்குத் தெரியாது.

இவர்கள் “ஹஜ்” வணக்கம் செய்யவில்லை. காரணம் போட்டோவேதான். பல செல்வந்தர்கள் தமது செலவில் அவர்களை அழைத்துச் செல்ல அவர்களின் காலடி பணிந்து கேட்டும் அவர்கள் உடன்படவில்லை. அவர்கள் இந்த விடயத்தில் தனது பிடியிலேயே இருந்து மரணித்தார்கள்.

ஆயினும் உலமாஉகளிற் சிலர் போட்டோ எடுக்குமிடங்களிலும், வீடியோ பண்ணுமிடங்களிலும் முக்காடு போட்டு முகத்தை மறைத்து வந்தார்கள். ஆனால் அவர்கள் இப்போது போட்டோவுக்கும், வீடியோவுக்கும் “போஸ்” கொடுக்குமளவு முன்னேறிவிட்டார்கள். ஒரு காலத்தில் “ஹறாம்” ஆக இருந்தது பிறகு “ஹலால்” ஆகிவிட்டது போலும். அவர்களுக்கு பேர்சனல் “வஹீ” வந்ததோ என்னவோ எமக்குத் தெரியாது.

பாணந்துறையில் நான் ஹழ்றத் அவர்களிடம் ஓதிக் கொண்டிருந்த காலத்தில் அவர்களின் மருமகன் என்று சொல்லப்பட்ட “ஹம்ஸா” என்ற பெயருடைய ஒரு மாணவர் இருந்தார். அவர் இப்போது எங்கே இருக்கின்றார் என்பதை அறிய முடியாதுள்ளது. அவர் எங்கிருந்தாலும் ஹழ்றத் அவர்கள் எழுதிய التحذير من التصوير என்ற நூல் கையெழுத்துப் பிரதியாவது இருந்தால் எனது முகவரிக்கு ஒரு பிரதி அனுப்பி வைக்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.

நானும், ஹழ்றத் அவர்களும் “கிப்லா” எடுத்த பள்ளிவாயல் தற்போது அழகிய தோற்றத்தில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. “கிப்லா”வை மாற்றிவிட்டார்களா? அல்லது அதே “கிப்லா”தான் இப்போதும் உள்ளதா? என்பதை நான் அறியேன்.

اللهم اغفر لأستاذنا عبد الصمد وارحمه يا رحمن واحشره غدا فى زمرة المتقين، وعطّر قبره بعطر الرحمة والرضوان،

RELATED ARTICLES

Most Popular

Recent Comments