தொகுப்பு: மௌலவி அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ
மனிதனின் உயிரைக் குடிக்கும் கொரோனாவை விட அவனின் ஈமானை விழுங்கும் “வஹ்ஹாபிஸம்” மிகக் கொடியது!
——————
வஹ்ஹாபிகளும், அவர்களுக்கு உரமிடுவோரும் வான் மறையின் எதிரிகளே!
——————
வஹ்ஹாபிஸத்தை சரி கண்டவன் திருக்குர்ஆனையும், ஹதீதுகளையும் பிழை கண்டவனாவான்!
——————
அவ்லியாஉகளின் “கறாமத்” அற்புதங்களைக் கிண்டல் செய்யும் கர்னீகள் – கொம்பர்கள் “காபிர்” இறை மறுப்பாளர்களை விடவும் கீழ்த்தரமானவர்களோயவர்.
இந்து மதத்தவர்களும், கிறிஸ்த்துவ மதத்தவர்களும், பௌத்த மதத்தவர்களும் தமது மதப் பெரியார்களுக்கும், இறைவனில் இறண்டறக் கலந்த யோகிகளுக்கும், “பனா” என்ற ஐக்கிய ஆன்மீக நிலை பெற்ற சித்தர்களுக்கும் “கறாமத்” என்ற அற்புதம் நிகழ்த்தும் வல்லமை உண்டு என்பதை ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தம்மை முஸ்லிம்களென்றும், தாமே இஸ்லாமை அதன் தூய வடிவில் புரிந்து கொண்டவர்கள் என்றும் தம்பட்டம் அடித்து வரும் கொம்பர்கள் அவ்லியாஉகளுக்கும், இஸ்லாமிய மதப் பெரியார்களுக்கும் “கறாமத்” அற்புதம் இல்லையென்று மேடை அமைத்துக் குரைப்பதைக் கேட்கும் போது இவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று புரிய முடியாதுள்ளது. இவர்கள் தம்மை நாங்கள் மத்ஹப் இல்லாதவர்கள் போல் மதமற்ற கொம்பர்கள் என்று சொன்னார்களாயின் இவர்களை ஏனைய மதவாதிகள் கால் நடைகளோடு சேர்த்துக் கொள்ள வாய்ப்புண்டு.
பணத்துக்காகவும், பதவிக்காகவும், பொன்னுக்காகவும், பெண்ணுக்காகவும், பெயருக்காகவும், புகழுக்காகவும் மார்க்கத்தைப் புரட்டிப் பேசும் ஒரு கூட்டம் உலகில் வாழ்கின்றதென்றால் அது பெருமானார் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களால் இனங் காட்டப்பட்ட கொம்பர்ளேயாவர்.
உலக நாடுகளில் குறிப்பாக இலங்கை நாட்டில் முஸ்லிம்களுக்கிடையில் பிளவுகளையும், பிரச்சினைகளையும், மனக்கசப்புக்களையும் ஏற்படுத்தி முஸ்லிம்களின் பலத்தைக் குறைத்து அவர்களை யஹூதிகளுக்கும், மன உழைச்சலுள்ள மதவாதிகளுக்கும், இனவாதிகளுக்கும் அடிமைகளாக்கத்திட்டமிட்டு கொம்பர்களைப் பயன்படுத்திய சதிகாரர்கள் யஹூதிகளேயாவர்.
இத்தகைய யஹூதிகளின் சதித் திட்டத்தைப் புரிந்து கொள்ளாமல் கர்னிஸம் அல்லது வஹ்ஹாபிஸம்தான் தூய இஸ்லாம் என்று சத்திய மார்க்கத்தை தலை கீழாய்ப் புரிந்து செயல்படுபவர்கள்தான் குண்டு வைத்து மக்களைக் கொல்லும் வஹ்ஹாபிஸக் குண்டர்களாவர்.
இன்று இலங்கையில் வாழும் “ஸுன்னத் வல் ஜமாஅத்” உலமாஉகள் – மார்க்க அறிஞர்கள் அன்று நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுடன் இணைந்து கொள்கைக்காகப் பாடுபட்ட தோழர்கள் போல் பாடுபட்டார்களாயின், அல்லது அவர்கள் கொள்கையை நிலை நாட்டுவதற்காக அர்ப்பணித்த அர்ப்பணிப்புக்களில் ஆயிரத்தில் ஒரு வீதமாவது அர்ப்பணித்தார்களாயின் கர்னீகள் பெட்டிப் பாம்புளாகிவிடுவார்கள் என்பதில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. துணிவோடும், நேர்மையாகவும் ஆட்சி செய்ய முன்வந்துள்ள அரசாங்கம் வஹ்ஹாபிஸத்தை அடக்குமென்று ஸுன்னத் ஜமாஅத் மக்கள் எதிர்பார்த்திருக்கும் இக்கால கட்டத்தில், அதற்குச் சாதகமான வழிகளும் இருக்கும் இவ்வேளையில் மார்க்க வழிகாட்டிகளான மார்க்க அறிஞர்களும் அரசோடு சேர்ந்து செயல்பட்டால் மூக்கில் அமர்ந்த கொசுவை சிறு விரலால் தட்டி விரட்டுவது போன்ற வேலைதான் வஹ்ஹாபிஸத்தை விரட்டுவதாகும்.
இந்த உண்மை மார்க்க அறிஞர்களுக்குத் தெரியாத ஒன்றல்ல. இலங்கையில் ஸுன்னீ உலமாஉகளே கொம்பர்களை விட அதிகமாக உள்ளனர். அவர்களிடம் கொம்பை உடைத்தெறியக் கூடிய பலமான ஆதார ஆயுதங்களாக திருக்குர்ஆனும், திரு நபீயின் நிறை மொழிகளும், இமாம்கள், அவ்லியாஉகளின் வாழ்க்கை நடைமுறைகளும் நிறைய உள்ளன. கைவசம் இவையிருக்கப் பயம் எதற்கு?
ஸுன்னிகளான உலமாஉகள் வழிகேட்டை எதிர்க்காமல் மௌனிகளாயிருப்பது வழிகேட்டிற்கு உதவியாகும் என்பது அவர்களுக்குத் தெரியாத ஒன்றல்ல. பின்வரும் நபீமொழி கூட அவர்களுக்கு மனனமான ஒன்றேதான்.
قال النّبي صلّى الله عليه وسلّم، مَنْ أَعَانَ عَلَى مَعْصِيَةٍ وَلَوْ بِشَطْرِ كَلِمَةٍ كَانَ شَرِيْكًا لَهُ فِيْهَا
“ஒரு சொல்லின் பாதியைக் கொண்டாயினும் பாவத்திற்கு உதவி செய்தவன் அந்தப் பாவத்தில் பங்காளியாவான்” என்ற நபீ மொழியை ஸுன்னீ உலமாஉகள் அறியாமலா உள்ளனர்?
ஒரு சொல்லின் பாதியைக் கொண்டு பாவத்திற்கு உதவுதல் எவ்வாறு? என்பதற்கு ஓர் உதாரணம் தருகிறேன்.
அறபு மொழியில் اُقْتُلْ “உக்துல்” என்றால் கொலை செய் என்று பொருள். இது நான்கு எழுத்துக்களைக் கொண்ட ஒரு சொல். இதன் பாதி اُقْ – “உக்” என்று வரும்.
ஒருவன் இன்னொருவனை அநீதியாகக் கொல்ல நினைத்து வாளுடன் வந்து இன்னொருவனிடம் இவனைக் கொல்லவா என்று கேட்கும் போது அவன் اُقْتُلْ – “உக்துல்” என்று சொல்லாமல் இச் சொல்லின் பாதியான اُقْ – “உக்” என்று சொன்னாற் கூட அவன் அந்தக் கொலைப் பாவத்தில் பங்காளியாகிவிடுவான்.
இது ஓர் உதாரணம்தான். இவ்வாறுதான் எந்த மொழியிலுள்ள ஒரு சொல்லின் பாதி கொண்டு பாவத்திற்கு உதவி செய்தாலும் உதவியவன் அப்பாவத்தில் பங்காளியாகிவிடுவான்.
இவ்வாறுதான் அதாவது ஒரு சொல்லின் பாதியைக் கொண்டு பாவத்திற்கு உதவுதல் பாவமாவது போல் தான் கண்ணால், அல்லது கையால் ஜாடை செய்து பாவத்திற்கு உதவுதலும் பாவமேதான். மேலே சொன்ன அதே உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். அநீதியாக ஒருவனை கொலை செய்ய வாளுடன் வந்து இவனைக் கொலை செய்யவா என்று கேட்பவனுக்கு கண்ணால், அல்லது கையால் கொலை செய்யுமாறு ஜாடை காட்டுவதுமாகும்.
மேலே எழுதிய நபீ மொழியில் ولو بشطر كلمة ஒரு சொல்லின் பாதியைக் கொண்டாவது பாவத்திற்கு உதவி செய்தவன் என்று பெருமானார் கூறியிருக்க இவர் ஜாடையையும் சேர்த்துச் சொல்கிறாரே இவர் யார் என்று என்மீது சீதேவி உலமாஉகள் சீறி விழுந்து விடாமல் குறித்த நபீ மொழியை கண்களை அகலவிரித்தும், “துன்யா”வின் சிந்தனைகளை அகற்றிவிட்டும் பார்த்தால் உண்மை தெளிவாகிவிடும். சீற வேண்டிய தேவையும் ஏற்படாது. “மின்பர்”களில் நின்று முழங்க வேண்டிய அவசியமும் ஏற்படாது.
كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ
“விசுவாசம் கொண்டவர்களே! மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சமுதாயத்தவர்களில் மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கின்றீர்கள். ஏனெனில் நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகின்றீர்கள். தீமையை விட்டும் நீங்கள் விலக்குகின்றீர்கள்” (திருக்குர்ஆன் 03-110)
இத்திருவசனம், விசுவாசிகளாயிருப்பவர்கள் மக்களுக்கு நன்மையான காரியங்களைச் சொல்ல வேண்டுமென்றும், தீயவற்றிலிருந்து அவர்களைத் தடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகின்றது. இவ்வாறு செய்யாமல் பெயரளவில் மட்டும் விசுவாசிகளாயிருப்பவர்கள் தண்டனைக்குரியவர்கள் என்றும் உணர்த்துகிறது.
இத்திருவசனம் விசுவாசிகளுக்கு இவ்வாறு கூறினாலும் கூட இதில் மார்க்க அறிஞர்களான உலமாஉகள் விஷேடமாக உள்வாங்கப்படுவார்கள் என்பது அறிவும், சிந்தனையும் உள்ளவர்களுக்கு நன்றாகப் புரியும்.
ஏனெனில் மனிதர்களுக்கு நன்மையான விடயங்களைச் செய்யுமாறு ஏவுவதும், தீமையான விடயங்களைச் செய்ய வேண்டாமென்று அவர்களைத் தடுப்பதும் மார்க்க அறிஞர்களுக்கே கட்டாயக் கடமையாகும்.
மார்க்க அறிஞர்களல்லாத விசுவாசிகள் குறித்த பணியை செய்யாவிட்டால் அவர்களுக்கு மன்னிப்பு உண்டு. ஆயினும் மார்க்க அறிஞர்களான உலமாக்கள் அப்பணிகளைச் செய்யவில்லையானால் அவர்கள் தண்டிக்கப்படுவார்களேயன்றி மன்னிக்கப்படமாட்டார்கள். அல்லாஹ் நாடினாலே தவிர.
மேற்கண்ட திருவசனத்தில் “முஃமின்” விசுவாசிகளைக் குறித்து நீங்கள் சமுதாயத்தில் மிகச் சிறந்தவர்கள் என்று கூறிய அல்லாஹ் அதற்கான காரணத்தையும் பின்னால் கூறியுள்ளான். அந்தக் காரணம் تأمرون بالمعروف وتنهون عن المنكر என்பதாகும். இதுவே காரணமென்று அல்லாஹ் தெளிவாகக் கூறாது போனாலும் கூட இந்த வசனம் تَعْلِيْلْ அல்லது عِلَّةٌ காரணம் கூற வேண்டிய இடத்தில் வந்துள்ளது. இந்த விபரம் அறபு மொழி தெரியாதவர்களுக்கும், திருக்குர்ஆனின் நடையும், “ஸிபாக், ஸியாக்” سباق، سياق என்று சொல்லப்படுகின்ற முன், பின் தொடர் கவனித்துப் பொருள் கூறுதல் என்ற விதி தெரியாதவர்களுக்கும் விளங்காது. ஆயினும் அறபு மொழித்திறமையும், முன் பின் தொடரறிந்தவர்களும் இதை நன்கறிவர். இத் திறமை இல்லாதவர்கள் சற்று சீறலாம். பொறுமையோடும், திருக்குர்ஆனின் நடையும், பாணியும் அறிந்தவர்களின் உதவியோடும் ஆய்வு செய்தால் சீற வேண்டியேற்படாது.
மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்கள், தீமையை தடுக்கிறீர்கள் என்ற வசனம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் “உம்மத்” சமுகம் ஏனைய நபீமாரின் சமூகத்தை விடச் சிறந்ததென்பதற்கு காரணம் என்று கூறப்பட்டிருப்பது ஆய்வாளர்களுக்கு மட்டும் ஓர் உண்மையை உணர்த்துமென்று நான் கருதுகிறேன்.
அதென்னவெனில் ஏனைய நபீமாரின் “உம்மத்” சமூகத்தில் الأمر بالمعروف والنهي عن المنكر நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் என்பது அந்த சமுகத்தின் நபீமார் மீதும், அந்த சமுகத்தின் மார்க்க அறிஞர்களான உலமாஉகள் மீதும் மட்டுமே கடமையாயிருந்தன. தவிர சமுகத்தவர்களில் ஒருவர் மற்றவருக்கு நன்மை கொண்டு ஏவுதல், தீமையிலிருந்து தடுத்தல் என்பது கடமையாக இருக்கவில்லை. இவ் அடிப்படையில் நபீ பெருமான் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் சமுகத்தவர்கள் பெரும் பாக்கியமுள்ளவர்ளேயாவர்.
வஹ்ஹாபிஸம் என்ற கொரோனா வைரஸ் முஸ்லிம்களில் அதிகமானவர்களைத் தாக்கி வருகின்ற இக்கால கட்டத்தில் ஏவல், விலக்கல் தம் மீது கடமையான உலமாஉகளில் அநேகர் அது பற்றி மக்களுக்கு சரியென்றோ, பிழையென்றோ கூறாமல் மௌனிகளாயிருப்பது தண்டனைக்குரிய குற்றமேயாகும். அதோடு பொது மக்கள் மருந்து கொடுக்கப்படாமல் மரணிப்பதற்கு வழி செய்ததாகவும் ஆகிவிடும். இன்னோர் தொடர்பாக அல்லாஹ்வின் அருள் மறையில் தெளிவான வசனங்கள் அருளப்படாது போனாலும் மேற்கண்ட வசனம் இன்னோர் பற்றி மறைமுகமாக பின்வருமாறு கூறுவது சிந்தனையாளர்களுக்கு மறைவானதல்ல.
كُنْتُمْ شَرَّ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَسْكُتُوْنَ عَنِ الْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الطَّاعَةِ،
அல்லது
كُنْتُمْ شَرَّ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُوْنَ بِالْمَعْصِيَةِ وَتَنْهَوْنَ عَنِ الطَّاعَةَ،
மக்களுக்காக அருளப்பட்ட சமுகத்தில் நீங்கள் கெட்ட சமுகமாக ஆகிவிட்டீர்கள். நல்லதை விட்டும் மௌனியாயுள்ளீர்கள். நல்லதை விட்டும் தடுக்கிறீர்கள்.
மக்களுக்காக அருளப்பட்ட சமுகத்தில் நீங்கள் கெட்ட சமுகமாக ஆகிவிட்டீர்கள். பாவத்தை ஏவுகிறீர்கள், நல்லதை விட்டும் தடுக்கிறீர்கள்.
இவ்விரு வசனங்களும் திருக்குர்ஆன் வசனங்களென்று நான் சொல்லவில்லை. இவ்விரண்டும் எனது சொந்த வசனங்களாகும். முதலில் எழுதிய திருக்குர்ஆன் வசனம் தருகின்ற கருத்துக்கு எதிரான கருத்தை எனது வசனத்தில் எழுதியுள்ளேன்.
இதை ஓர் உதாரணத்தின் மூலம் சொல்வதாயின் பின்வருமாறு கூறலாம்.
كُنْتُمْ خَيْرَ الْعَامِلِيْنَ، تَحْضُرُوْنَ الْمَتْجَرَ فِى الْوَقْتِ الْمُعَيَّنِ وَتَعْمَلُوْنَ بِإِخْلَاصٍ،
ஒரு வியாபாரி தனது கடையில் வேலை செய்பவர்களிடம் “நீங்கள் சிறந்த வேலையாட்களாவீர்கள். கடைக்கு குறித்த நேரம் வருகிறீர்கள். தூய்மையாக வேலை செய்கிறீர்கள்” என்று சொல்வது போன்று. கடைக்காரனின் மேற்கண்ட இவ்வசனத்தின் எதிரான கருத்தை அறபியில் தருகிறேன்.
كُنْتُمْ شَرَّ الْعَامِلِيْنَ، لَا تَحْضُرُوْنَ الْمَتْجَرَ فِى الْوَقْتِ الْمُعَيَّنِ وَلَا تَعْمَلُوْنَ بِإِخْلَاصٍ،
“நீங்கள் வேலையாட்களில் கெட்டவர்களாவீர்கள். கடைக்கு குறித்த நேரம் வருகிறீர்களுமில்லை. தூய்மையாக வேலை செய்கிறீர்களுமில்லை”
மேற்கண்ட உதாரணங்களை ஆய்வுக்கு எடுத்து அய்வு செய்தால், ஆய்வு செய்வோரின் எண்ணமும் தூய்மையாக இருக்குமானால் நான் கூறிய கருத்துக்களில் பிழை காணமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.
நான் இங்கு ஒரு விடயத்தை மறைமுகமாக விலியுறுத்தக் காரணமென்னவெனில் சீதேவிகளான உலமாஉகளிற் சிலரின் நடவடிக்கையேயாகும். இவர்கள் பின்வரும் கவிஞரின் கருத்தை சிந்தனைக்கு எடுப்பார்களாயின் அவர்கள் உலமாஉகளில் சிறந்தவர்கள்தான்.
وَعَيْنُ الرِّضَا عَنْ كُلِّ عَيْبٍ كَلِيْلَةٌ – وَلَكِنَّ عَيْنَ السَّخَطِ تُبْدِي الْمَسَاوِيَا
வஹ்ஹாபிகள் வஹ்ஹாபிஸம் என்ற வழிகேட்டை வெள்ளிக்கிழமை “ஜும்ஆ” பிரசங்கத்தின் போது அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் “ஸுன்னீ ஆலிமு” அதைக் கேட்டுக் கொண்டு மௌனியாயிருப்பாராயின் அவரும் அதற்கு உதவி செய்தவரோயவார்.
வஹ்ஹாபிஸம் நாடெங்கும் தலை விரித்து தாண்டவமாடும் போது அதற்கு மறுப்புக் கூறாமல் மௌனிகளாயிருக்கும் உலமா சபைகள் – உலமாஉகள் மறுமையில் மாலிக் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களைச் சந்திக்காமல் இருக்கவும் முடியாது. அவர்களுக்கு “பகா” கொடுத்து தப்பிக்கவும் முடியாது.
எனக்கு தற்போது 77 வயது. என் வாழ்க்கையில், “வஹ்ஹாபிஸம் வழிகேடு, எவரும் ஏமாந்து விட வேண்டாம்” என்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பகிரங்க எச்சரிக்கை விடுத்ததை நான் அறியவில்லை. இறால் தனது தலையில் மலத்தைச் சுமந்து கொண்டு நான் சுத்தமானவன் என்று மார்தட்டிப் பேச முன்வருமா?
எனவே, வஹ்ஹாபிஸ வழிகேட்டால் மக்கள் வழிகெட்டுப் போவதற்கும், உயிர் கொல்லும் குண்டுகள் வைத்து அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்படுவதற்கும், பல நூறாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டும், நிர்வகிக்கப்பட்டும், வலீமாரின் பக்தர்களால் தரிசிக்கப்பட்டும் வந்த பல நூறு தர்ஹாக்கள் – சமாதிகள் உடைத்து தரைமட்டமாக்கப்படுவதற்கும், புனித றமழான் மாதம் ஸஹர் நேரம் வரை வணக்க வழிபாடுகளால் ஒளிர்ந்து கொண்டிருந்த பள்ளிவாயல்கள் இரவு 9 மணியோடு இருளடைந்து போவதற்கும், வெள்ளிக்கிழமை இரவுகளில் இலங்கை நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிவாயல்களிலும் நடைபெற்று வந்த தரீகாக்களின் றாதிப், ஹழ்றா போன்ற “திக்ர்” மஜ்லிஸ்கள் நிறுத்தப்படுவதற்கும், ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட பின் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக ஓதி வந்த “தல்கீன்” நிறுத்தப்படுவதற்கும், மரணித்தவர்களின் ஆத்ம சாந்திக்காக முதலாம், மூன்றாம், ஏழாம், முப்பதாம், நாற்பதாம் நாட்களில் திருக்குர்ஆன் முழுவதையும் அல்லது “யாஸீன்” அத்தியாயம் ஓதி உறவினர், அயலவர், ஆலிம்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்த வழக்கம் முற்றாக நிறுத்தப்படுவதற்கும், பள்ளிவாயல்கள், தர்ஹாக்களின் நலன் கருதி அங்கு வைக்கப்பட்டிருந்த காணிக்கை உண்டியல்கள் உடைக்கப்படுவதற்கும், அவ்லியாஉகள் பேரில் கந்தூரி அன்னதான விழாக்கள் நிறுத்தப்படுவதற்கும், இன்னுமிவை போன்ற திருமறைக்கும், திரு நபீயின் நிறை மொழிக்கும் மாற்றமில்லாத நற் செயல்கள் நிறுத்தப்படுவதற்கும் பிரதான காரணம் வஹ்ஹாபிஸக் கொள்கையேயாகும்.
இவ்வாறான மார்க்க விரோத அட்டூழியங்கள் தலைவிரித்து தாண்டவமாடுவதை அரசாங்கம் தடை செய்யவில்லையானால், அல்லது பள்ளிவாயல்களின் நிர்வாகங்கள் ஒன்றிணைந்து தடை செய்யவில்லையானால் அல்லாஹ்வினதும், அண்ணல் நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்களினதும், அவ்லியாஉகளினதும் சாபம் இந் நாட்டைச் சூழ்ந்து கொள்ளுமென்பதில் ஐயமில்லை.