Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அடம் பிடிப்பவன் அரக்கன் ஆவான்

அடம் பிடிப்பவன் அரக்கன் ஆவான்

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ

ஒரு விடயம் தொடர்பாக அது ஆகும் என்பதற்கு ஆதாரம் கிடைத்த பின்னும் அதை ஏற்றுச்செயல் பட மறுப்பவன் அடம் பிடிக்கும் அரக்கனேயாவான்.

சாப்பிடு முன் கை கழுவுதல் “ஸுன்னத்” நபீ வழி என்பதை தனது அறியாமையால் அது நபீ வழயல்ல என்று கூறும் ஒருவனிடம் அது நபீ வழிதான் என்பதை ஆதாரங்களோடு நிறுவினால் அவன் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லது கூறப்பட்ட ஆதாரங்களை மறுத்து அவன் ஆதாரம் கூற வேண்டும். இதுவே இஸ்லாம் கூறும் வழியும், உலக நடைமுறையுமாகும்.

இதற்கு மாறாக கூறப்பட்ட ஆதாரத்தை மறுக்காமலும், அதன் படி செயல்படாமலும் இருந்து கொண்டு தான் சொன்னதே சரியென்று அடம் பிடிப்பவன் அரக்கனேயாவான். அவன் அல்லாஹ்வின் சந்நிதானம் நிறுத்தப்பட்டு கேள்வி கேட்கப்படுவான்.

சாப்பிடு முன் கை கழுவும் விடயம் மட்டுமன்றி வேறெந்த விடயமாயினும் இதுவே நியதியாகும்.

இலங்கை நாட்டிற்கு வஹ்ஹபிஸம் வரு முன் இந்நாட்டின் பட்டணம் முதல் பட்டிக்காடு வரையுள்ள அனைத்து பள்ளிவாயல்களிலும் “அதான்” பாங்கு சொல்லு முன் “ஸலவாத்” சொல்லுதல் வழக்கத்தில் இருந்தே வந்துள்ளது. “ஸலவாத்” இன்றி பாங்கு சொல்லப்பட்டதற்கு எந்த ஓர் ஆதாரமும் இல்லை. தேடினாற் கூட அது கிடைக்காது.

எனக்கு தற்போது 77 வயதாகி விட்டது. 7 வருடங்களைக் கழித்தால் கூட 70 வருடங்கள் என்ன நடந்தது என்பதை நான் அறிவேன். நான் அறிந்த வரை வஹ்ஹாபிஸம் இலங்கையில் தலை நீட்டு முன் பாங்கு சொல்லு முன் “ஸலவாத்” சொல்லாமல் “பாங்கு” சொல்லப்பட்டதற்கு ஆதாரமில்லை.

“ஸலவாத்” மட்டுமன்றி அதோடு “ஸுப்ஹானல்லாஹ் கலிமா” என்று சொல்லப்படுகின்ற “ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்துலில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்” என்பதையும் சேர்த்துச் சொல்வார்கள்.

ஆயினும் “வஹ்ஹாபிஸம்” இந்நாட்டிற்கு வந்த பிறகுதான் இவ் வழக்கம் கட்டம் கட்டமாக நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக ஒரு தீர்க்கமான முடிவை எந்த ஒரு மார்க்க அறிஞரும் – முப்தியும் நாடளாவிய ரீதியில் அறிவித்ததற்கும் ஆதாரம் கிடைக்கவில்லை. இதனால் பொது மக்களிடம் கருத்து வேறுபாடுகள் உருவாகி விட்டன. இந்தக் கருத்து வேறுபாடு பள்ளிவாயல் “மஹல்லா” வாசிகளிடமும் மனக்கசப்பை ஏற்படுத்தி விட்டது. சிலர் “பாங்கு” சொல்லு முன் ஸலவாத் சொல்லாத பள்ளிவாயலுக்கு தொழப்போகாமல் வேறு மஹல்லாவிலுள்ள “ஸலவாத்” சொல்லப்படுகின்ற பள்ளிவாயலுக்குச் செல்கின்றனர். இன்னும் சிலர் பள்ளிவாயலுக்கு மாதச் சந்தா வழங்குவதிலும் தமது கொள்கைப் படியே செயல்படுகின்றனர்.

இந்தக் கருத்து வேறுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அ – இ – ஜ – உலமா அமைப்போ, அல்லது வேறு அமைப்புக்களோ தீர்க்கமான எந்த ஒரு முடிவையும் இதுவரை அறிவிக்கவில்லை.

ஆயினும் காத்தான்குடி ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா சபை மட்டுமே இது தொடர்பாக நாடளாவிய ரீதியில் ஓர் அறிக்கை வெளியிட்டது. அவ் அறிக்கையில், பாங்கு சொல்லும் முன்னும், சொன்ன பின்னும் “ஸலவாத்” சொல்வது நபீ வழி என்ற கருத்தை அது பகிரங்கமாக வெளியிட்டிருந்தது. அதற்கான ஆதாரங்களையும் அவ் அறிக்கையில் அது குறிப்பிட்டிருந்தது.

இது பல வருடங்களுக்கு முன் நடந்த ஒன்றாகும். அண்மையில் நான் எழுதி வெளியிட்ட “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” என்ற நூலில் இது தொடர்பாக வலியுறுத்தி எழுதியுள்ளேன்.

பாங்கு சொல்லு முன்னும், அதன் பின்னும் “ஸலவாத்” சொல்வதே நபீ வழி என்று ஆதாரங்களுடன் நான் எழுத்து மூலம் பகிரங்கமாக அறிவித்திருந்தும் கூட இதே நொடி வரை அ – இ – ஜ – உலமாவோ, வேறு அமைப்புக்களோ எனது கருத்துக்கு எதிராக எந்த ஓர் அறிக்கையும் வெளியிடவுமில்லை. நான் கூறிய கருத்தை ஏற்றுச் செயல்படவுமில்லை. ஆகையால் ஆதாரம் கிடைத்த பின்னும் அதையேற்றுச் செயல்படாமல் தமது சொள்கையை சரியென்று அடம் பிடிப்பவர்களை அரக்கர்கள் என்று சொல்வது பிழை யென்று அறிவுள்ள எவராவது சொல்வாரா?

RELATED ARTICLES

Most Popular

Recent Comments