தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
قال الشّيخ الأكبر محي الدّين ابن عربي قدّس سرّه فى الباب التسعين وثلاثمأة ‘ لَقَدْ طُفْتُ بالكعبة مع قوم لا أعرفهم فَأَنْشَدُوْنِيْ بَيْتَيْنِ، حفظتُ واحدا ونسيت الآخر ‘
لَقَدْ طُفْنَا كَمَا طُفْتُمْ سِنِيْنَا – بِهَذَا الْبَيْتِ طُرًّا أَجْمَعِيْنَا
وقال لي واحد منهم، أَمَا تَعْرِفُنِيْ؟ فقلتُ لا، قال أنا من أجدادِك الأوَّلِ، فقلتُ له كمْ لك مُنْذُ مُتَّ؟ قال لي بضعةٌ وأربعون ألف سنة، فقلت له ليس لآدم عليه السلام هذا القدرُ من السِّنين، فقال لي عَنْ أَيِّ آدم تقول؟ عن هذا الأقرب إليك أو عن غيره؟ فتذكَّرْتُ حديثًا رُوِيَ عن رسول الله صلّى الله عليه وسلّم، إنّ الله قد خَلَقَ مأةَ أَلْفِ آدم، فقلت قد يكون ذلك الجدُّ الّذي نسبي إليه من أولئك، والتّاريخ فى ذلك مجهولٌ مع حُدوث العالم بلا شكّ، فإنّ العالم لا يصحُّ له مرتبة الأوّليّة، لأنّه مفعول الله تعالى، (الكبريت الأحمر، ص – 162، للإمام عبد الوهّاب الشّعراني)
அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
(நான் எனக்கு அறிமுகமில்லாத ஒரு கூட்டத்தோடு “கஃபா”வை “தவாப்” சுற்றிக் கொண்டிருந்தேன். அவ்வேளை அவர்கள் எனக்கு இரண்டு பாடல்கள் பாடிக் காட்டினார்கள். அவற்றில் ஒன்று எனக்கு நினைவிருக்கின்றது. மற்றது நினைவில் இல்லை.
பாடலின் பொருள்: இந்தப் புனிதமான இறையில்லத்தை நீங்கள் சுற்றுவது போல் நாங்களும் பல்லாண்டுகளாக சுற்றியுள்ளோம். சுற்றிக் கொண்டுமிருக்கின்றோம்.
அவர்களில் ஒருவர் என்னிடம் என்னைத் தெரியுமா என்று கேட்டார். தெரியாது என்றேன். அப்போது அவர் நான் உங்களின் முதற் பாட்டனார்களில் ஒருவர் என்றார். நீங்கள் மரணித்து எத்தனை வருடங்களாகிவிட்டன? என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கவர் 40 ஆயிரம் வருடங்களுக்கு மேலாகின்றன என்றார். அப்போது நான் ஆதம் நபீ அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுக்கே இத்தனை வருடங்கள் இல்லையே என்றேன். அதற்கவர் எந்த ஆதம் பற்றி நீங்கள் சொல்கிறீர்கள்? உங்களுக்கு நெருங்கிய காலத்து ஆதம் பற்றியா அல்லது வேறு ஆதம் பற்றியா என்று கேட்டார்.
அவ்வேளை பின்வரும் “ஹதீது” நபீ பெருமானின் அருள் மொழியொன்று என் நினைவுக்கு வந்தது. அதாவது “அல்லாஹ் ஓர் இலட்சம் ஆதம்களை படைத்துள்ளான்” இந்த அருள் மொழி எனக்கு நினைவுக்கு வந்த பின், அவர் நான் உங்களின் பாட்டன்மார்களில் ஒருவன் என்று கூறிய அந்தப் பாட்டன் ஓர் இலட்சம் ஆதம்களில் ஒருவராயிருப்பார் என்று விளங்கிக் கொண்டேன். இவ்வாறு ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: அல்கிப்ரீதுல் அஹ்மர் பக்கம் 162,
ஆசிரியர்: இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ
“ஆலம்” உலகம் என்பது “ஹாதித்” படைப்பாக இருந்தாலும்கூட அதன் வரலாறு அறிய முடியாத ஒன்றாகும். “ஆலம்” என்பது எப்போது ஆரம்பமானது என்று எவராலும் சரியாக சொல்ல முடியாது. அது “தாரீக்” வரலாறுக்கும் அப்பாற்பட்டதாகும். ஏனெனில் அது படைப்பாகும். முதற் படைப்புக்கு தொடக்கம் கண்டுபிடிப்பது கடினம்.
இது தொடர்பாக நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கும், தூதை நபீ பெருமானுக்கு கொண்டு வந்த “ஜிப்ரீல்” என்ற “மலக்”கிற்குமிடையே நடந்த உரையாடலொன்று அறபு மொழியிலான நூல்களில் இடம் பெற்றுள்ளது. அதை இங்கு சுருக்கமாக எழுதுகிறேன்.
ஒரு சமயம் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபீ பெருமானிடம் தூது கொண்டு வந்த போது நபீ பெருமான் அவர்கள் அவரிடம் உங்களின் வயது எத்தனை என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் என் வயது எத்தனை என்று எனக்குத் தெரியாது. ஆயினும் எனக்கு ஒன்று தெரியும். அதைக் கொண்டு எனது வயதைக் கணிக்கலாம் என்றார்கள்.
அதாவது வானில் ஒரு நட்சத்திரம் உதிக்கிறது. அது 70 ஆயிரம் வருடங்களுக்கு ஒரு தரம் மட்டும் உதித்து மறைந்து விடும். அந்த நட்சத்திரத்தை நான் 72 ஆயிரம் தரம் கண்டுள்ளேன் என்று கூறினார்கள். அப்போது நபீ பெருமான் அந்த நட்சத்திரம் நான்தான் என்று கூறினார்கள்.
இவ்வாறு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னாலும் கூட இதைக் கொண்டு ஜிப்ரீல் அவர்களின் வயது இத்தனை என்றும், நபீ பெருமானின் வயது இத்தனைதான் என்றும் எவராலும் திட்டமாகக் கூறமுடியாது. ஆயினும் குத்துக் குறிப்பு என்று பொது மக்கள் சொல்வது போலும், படித்தவர்கள் சுமார் என்று சொல்வது போலும், அறபு மக்கள் “தக்றீபன்” என்று சொல்வது போலும் ஒரு குறிப்பைக் கூறலாமே தவிர திட்டமாக இவ்வளவுதான் என்று மட்டிட்டுக் கூற முடியாது. இது கூட ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் விடயத்தில் மட்டும்.
ஆனால் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வயது இவ்வளவுதான் என்று எந்த ஒரு வரலாற்றாசிரியராலும் திட்டமாக கூற முடியாது.
நான் அறிந்தவரை ஒவ்வொரு “ஸமான்” காலத்திற்கும் ஒரு “குத்பு” இருப்பார் என்ற ஸூபீ மகான்களின் கூற்றின்படி அந்தக் “குத்பு” தனக்கு வழங்கப்படுகின்ற وَحْيُ إِلْهَامْ மூலம் இவ்வாறான செய்திகளைத் திட்டமாக அறிந்திருப்பதற்கு வாய்ப்புண்டு.
அல்லாஹ்வின் படைப்புக்களில் எவர் எதை அறிந்திருந்தாலும், அறியாதிருந்தாலும் اَلْمَظْهَرُ الْأَتَمُّ சம்பூரண பாத்திரம் என்றும், اَلْإِنْسَانُ الْكَامِلْ சம்பூரண மனிதன் என்றும் ஸூபீ மகான்களால் அழைக்கப்படுகின்ற எம்பிரான் முஸ்தபா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை என்பதே எதார்த்தம்.
عَلِمْتُ عِلْمَ الْأَوَّلِيْنَ وَالْآخِرِيْنَ
முன்னோர், பின்னோர் அனைவரின் அறிவுகளையும் நான் அறிந்தவன் என்ற பெருமானாரின் அருள் வாக்கின்படி அவர்களுக்கு எல்லாமே தெரியும்.
வஹ்ஹாபிகள் சன நடமாட்டமில்லாத வரண்டு போன வனத்தின் நடுவே கூடி திட்டமிடும் சதித்திட்டங்களையும் பெருமானார் அறிந்தவர்களே!
والله يُعْطِيْ، وَإِنَّمَا أَنَا الْقَاسِمْ
அல்லாஹ் தருகிறான். நான் பங்கு வைக்கிறேன் என்ற பெருமானாரின் “ஸஹீஹ்” பலமான அருள் மொழியின் படி அவர்களுக்கு எல்லாமே தெரியும். எவர் மொத்தமாக பணம் கொடுக்கிறாரோ அவருக்குத் தெரியாத விபரம் கூட அவர் கொடுத்த பணத்தை பங்கீடு செய்பவனுக்கு யாருக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டதென்ற விபரம் தெரியும்.
என்னுடைய இந்தப் பதிவை எந்த மதத்தினர் ஏற்றுக் கொண்டாலும் கூட இப்னு அப்தில் வஹ்ஹாபின் “உம்மத்” ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். நக்குண்பதற்கும் நஸீப் வேண்டுமல்லவா?
ஓர் இலட்சம் ஆதம் என்ற ஹதீது தனது நினைவுக்கு வந்தது என்று ஷெய்குல் அக்பர் றழியல்லாஹு அன்ஹு சொன்னார்களேயன்றி அது “ஸஹீஹ்” பலமான ஹதீதா இல்லையா என்று சொல்லவில்லை. இதனாலும், رُوِيَ “பேசிவரப்பட்டுள்ள ஹதீது” என்ற பொருளைத் தருகின்ற رُوِيَ என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்தியுள்ளதாலும் இந்த “ஹதீது” “ழயீப்” பலம் குறைந்ததாக இருப்பதற்கு சாத்தியம் அதிகமாக உண்டு என்று சிலர் விளங்கலாம்.
“ழயீப்” பலம் குறைந்ததாக இருந்தாலும் கூட இவ்விடயம் சரித்திரத்தோடு தொடர்புள்ளதாகையால் இதை ஆதாரமாக எடுக்க முடியும். சட்டத்தோடு தொடர்புள்ளதாக இருந்தால் மட்டுமே “பத்வா” வழங்குவதற்கு பலம் குறைந்த ஹதீதை எடுக்கலாகாதென்று கூறப்படுகின்றது.
என்னைப் பொறுத்த வரையில் இந்த ஹதீது பலம் கூடியதென்றே நான் நம்புகிறேன். பலம் குறைந்ததாக இருந்தால் ஷெய்குல் அக்பர் நாயகம் அவர்கள் தெளிவாகச் சொல்லியிருப்பார்கள்.