Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்எது சிறந்தது? 'பர்ழு' கடமையான தொழுகையா? நபீ பெருமானின் அழைப்புக்கு பதில் சொல்வதா?

எது சிறந்தது? ‘பர்ழு’ கடமையான தொழுகையா? நபீ பெருமானின் அழைப்புக்கு பதில் சொல்வதா?

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اِسْتَجِيْبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ
விசுவாசிகளே! அல்லாஹ்வும், றஸூலும் உங்களை அழைத்தால் அவர்களுக்கு பதில் கூறுங்கள்.
(அன்பால் அத்தியாயம் – வசனம் – 24)

عَنْ أَبِي سَعِيدِ بْنِ المُعَلَّى رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كُنْتُ أُصَلِّي، فَمَرَّ بِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَانِي، فَلَمْ آتِهِ حَتَّى صَلَّيْتُ، ثُمَّ أَتَيْتُهُ، فَقَالَ مَا مَنَعَكَ أَنْ تَأْتِيَنِيْ؟ أَلَمْ يَقُلِ اللَّهُ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ .
( تفسير القرآن العظيم، تفسير ابن كثير،المجلد الثالث الجزء – 9 – ص – 258 )

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أُبَيٍّ وَهُوَ يُصَلِّي، فَدَعَاهُ، فَالْتَفَتَ إِلَيْهِ أُبَيٌّ، وَلَمْ يُجِبْهُ. ثُمَّ إِنَّ أُبَيًّا خَفَّفَ الصَّلَاةَ، ثُمَّ انْصَرَفَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: السَّلَامُ عَلَيْكَ ِ قَالَ وَعَلَيْكَ، مَا مَنَعَكَ إِذْ دَعَوْتُكَ أَنْ تُجِيْبَنِي؟» قَالَ: يَا رَسُولَ اللَّهِ كُنْتُ أُصَلِّي. قَالَ: ‘ أَفَلَمْ تَجِدْ فِيمَا أُوحِيَ إِلَيَّ اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ قَالَ بَلَى يَا رَسُولَ اللَّهِ، لَا أَعُودُ،
(تفسير الطّبري، سورة الأنفال ص – 3808 المجلد الخامس)

முதலாவது ஹதீது – அபூ ஸஃத் இப்னுல் முஅல்லா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு சொல்கிறார்கள். (நான் தொழுது கொண்டிருந்தேன். எனக்குப் பக்கத்தால் நடந்து சென்ற நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழுகையை முடிக்கும் வரை போகவில்லை. அதன் பிறகு அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் நான் அழைத்த போது நீங்கள் ஏன் வரவில்லை என்று கேட்டு மேற்கண்ட வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

(தப்ஸீர் இப்னு கதீர் – வால்யூம் – 03 – பாகம் – 09 பக்கம் – 258)

இரண்டாவது ஹதீது – அபூ ஹுறைறா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் “உபை” என்ற தோழரை சந்திக்கச் சென்ற நேரம் அவர் தொழுது கொண்டிருந்தார்;. நபீ பெருமான் அவரை அழைத்தார்கள். அவர் நபீகளாரை திரும்பிப் பார்த்தாராயினும் அழைப்புக்கு பதில் கூறவில்லை. போகவில்லை. எனினும் அவர் தொழுகையை சுருக்கிக் கொண்டு நபீகளாரிடம் சென்று “ஸலாம்” கூறினார். நபீ பெருமான் பதில் கூறிவிட்டு நான் உங்களை அழைத்த நேரம் ஏன் வரவில்லை என்று கேட்டார்கள். அதற்கவர் அல்லாஹ்வின் றஸூலே! நான் தொழுது கொண்டிருந்தேன் என்றார். அப்போது நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அவரிடம் எனக்கு “வஹீ” அறிவிக்கப்பட்டதில் அல்லாஹ்வும், றஸூலும் அழைத்தால் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டுமென்று கூறப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார்கள். ஆம் நாயகமே இதன் பிறகு அவ்வாறு செய்ய மாட்டேன் என்றார் தோழர்.

(தப்ஸீர் தபரீ – அன்பால் அத்தியாயம் – பக்கம் – 3808 – வால்யூம் – 05)

மேற்கண்ட இரண்டு ஹதீதுகளும் ஒரே விடயத்தைக் கூறினாலும் நபீ தோழர்கள் இருவர்களுக்கு இரண்டு சந்தர்ப்பத்தில் நடந்த சம்பவங்கள் என்பது விளங்கப்படுகிறது.

முதலாவது ஹதீதில் ஸஃத் இப்னு முஅல்லா என்ற தோழரும், இரண்டாவது ஹதீதில் உபை என்ற தோழரும் கலந்து கொண்டுள்ளார்கள்.

இவ்விரு ஹதீதுகளும் பல கேல்விகளை எழுப்புகின்றன. அவற்றில் சிலதுக்கு மட்டும் விளக்கம் எழுதுகின்றேன்.

ஒன்று – நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் இரு தோழர்களும் தொழுது கொண்டிருந்த போதுதான் அவர்களை அழைத்துள்ளார்கள். தொழுகை என்பது பிரதான வணக்கமாகும். அவ்வணக்கத்தில் இருந்தவர்களை நபீ பெருமான் அழைத்தது பிழையாகாது.

ஏனெனில் அல்லாஹ்வும், றஸூலும் அழைத்தால் பதில் கூறுங்கள் என்ற வசனம் இவ்விரு சம்பவங்களும் நடைபெருவதற்கு முன் அருளப்பட்ட வசனமாகும். இதனால் பெருமானார் அழைத்தது குற்றமாகாது. ஏனெனில் இறை கட்டளை முந்தினதும், சம்பவம் பிந்தினதுமாகும். அல்லாஹ்வும், றஸூலும் உங்களை அழைத்தால் அவர்களுக்கு பதில் கூறுங்கள் என்ற வசனம் கால, நேர கட்டுப்பாடின்றி வந்துள்ளதால் வசனத்தினுள்ளே தொழுகையிலுள்ள ஒருவரை அழைக்க முடியும் என்ற கருத்து மறைந்துள்ளது சிந்தனையாளர்களுக்கு மறையாது.

மேற்கண்ட திரு வசனத்தில் எந்த நேரத்தில் அழைத்தால் என்ற விபரம் கூறப்படாது போனாலும் பெருமானார் அலைஹிஸ்ஸலாம் தொழுது கொண்டிருந்தவர்களை அழைத்து அவர்களைத் தண்டிக்கும் பாவனையில் பேசியதன் மூலம் எந்நேரமும் அழைக்கலாம், தொழுது கொண்டிருந்தாலும் அழைக்கலாம் என்ற கருத்து விளங்கப்படுகிறது. பிட்டு என்றால் புட்டுக் காட்டத் தேவையில்லை.

இந்த நிகழ்வு இரண்டையும் ஆதாரமாக வைத்துக் கொண்டு நபீயல்லாத ஒருவர் இவ்வாறு செய்வது கூடாது.

நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அழைத்தால் மட்டுமே தொழுகையை தொடராமல் அதை விட்டு விட்டு உடனே பதில் கூற வேண்டும். வேறு எவர் அழைத்தாலும் பதில் கூறுவது கடமையுமல்ல, பதில் கூறவும் கூடாது. ஆனால் தொழுகையை முடித்து விட்டு பதில் கூறலாம்.

ஆயினும் ஒன்று செய்வதற்கு இந்த நபீ மொழியில் ஆதாரம் உண்டு. தொழுகின்ற ஒருவரை இன்னொருவர் அழைத்தால், அவரும் அந்த அழைப்புக்கு பதில் கூற விரும்பினால் தொழுகையின் “பர்ழ், ஷர்த்” என்பன தவறாமல் சுருக்கித் தொழுத பின் அவருக்கு பதில் கூற இடமுண்டு. ஏனெனில் இரண்டாவது ஹதீதில் உபை என்ற நபீ தோழர் பெருமானாருக்கு உடனே பதில் சொல்லாது போனாலும் தொழுகையை சுருக்கித் தொழுதுள்ளார் என்பதற்கு ஆதாரமுண்டு. அது خفَّفَ சுருக்கித் தொழுதார் என்ற வசனமாகும். நபீ அழைத்தால் மட்டுமே சுருக்கித் தொழலாம் என்பது கருத்தல்ல. எவர் அழைத்தாலும் தொழுபவர் அவருக்கு பதில் சொல்ல விரும்பினால் சுருக்கித் தொழ ஆதாரம் உண்டு. ஆயினும் தெழுகையில் “பர்ழ், ஷர்த்” பேணப்படுதல் அவசியமாகும். ஆனால் றஸுலுல்லாஹ் அழைத்தால் மட்டும் தொழுகையை முறித்து விட்டேனும் பதில் கூற வேண்டும். இது கடமை. இதற்கு ஆதாரம் “இஸ்தஜீபூ” நீங்கள் பதில் சொல்லுங்கள் என்ற திருவசனத்தில் வந்துள்ள ஏவல் விணைச் சொல்லேயாகும்.

மக்களின் அன்றாட நடை முறையோடு மேற்கண்ட நபீ மொழிகளை சற்று ஆராயலாம்.

சில கணவன்மார் உள்ளார்கள். அவர்கள் வீட்டின் கதவை தட்டியவுடன் அல்லது பெல் அடித்தவுடன் திறக்க வேண்டும். ஒரு நிமிடமாவது தாமதமானால் மனைவியின் கன்னம் வீங்கி விடும். இவ்வாறான மிருகப் பண்புள்ள கணவனின் தாலிக்கு தலைகுனிந்து கழுத்தைக் கொடுத்தவள் மரணத்தின் பின் நரகைக் காணமாட்டாள். இவள் தொழுகையை சுருக்க முயற்சிக்க வேண்டும். அல்லது அதை முறித்து விட்டேனும் கதவைத் திறக்க வேண்டும். இன்றேல் இவளின் கன்னம் அவன் கைக்கு பந்தாகி விடும். இதனால்தான் நற்குணமுள்ள ஆணை தேடித் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று பெண்களுக்கும். அதேபோல் நற்குணமுள்ள பெண்ணைத் தேடி திருமணம் செய்து கொள்ளுமாறு ஆண்களுக்கும் இஸ்லாம் வழிகாட்டுகிறது போலும்.
ஒருவன் தன்னுயிரையோ, பிறர் உயிரையோ காப்பாற்றுவதற்காக கடமைகளைப் பேணி தொழுகையை சுருக்குவதற்கும், அதை முறிப்பதற்கும் சட்டம் உண்டு. அத் தொழுகை “களா” மீண்டும் தொழப்பட வேண்டும்.

அல்லாஹ் நபீ பெருமான் மீது கொண்ட அன்பினால் அவர்களுக்கு மட்டும் சில விஷேடங்களை வழங்கியுள்ளான். வேறு எவருக்கும் வழங்கவில்லை. அவற்றில் ஒன்றுதான் “பர்ழ்” கடமையான வணக்கத்தில் இருப்பவனாயினும் நபீ பெருமான் அவனை அழைத்தால் அவன் அந்த வணக்கத்தை விட்டேனும் அவர்களுக்கு பதில் சொல்வது கடமை.

இன்னுமொன்று ஒரே நேரத்தில் நாலுக்கும் மேற்பட்ட பெண்களை மனைவியர்களாக வைத்திருக்கலாம். இன்னுமொன்று அவர்களின் “வபாத்” மரணத்தின் பின் அவர்களின் மனைவியை எவரும் திருமணம் செய்தல் கூடாது. அவற்றில் இன்னுமொன்று அவர்களின் மலம், சலம் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் அனைத்தும் சுத்தமானவையாயிருத்தல். இன்னுமொன்று அவர்களின் உடலில் இயற்கையாக கஸ்தூரி மணம் கமழ்தலாகும். இன்னும் இவை போன்ற பல விஷேடங்கள் உள்ளன. இவையாவும் அவர்களின் சிறப்பை எடுத்துக் காட்டுபவைகளேதான்.

ஒரு ஞான குரு தனது “முரீத்” தொழுது கொண்டிருக்கையில் அவனை அழைத்தால் அவன் தொழுகையை முறித்து விட்டு அவருக்கு பதில் கூறுதல் கூடாது. எனினும் இதில் “ஷெய்கு” ஞான குருவில் “பனா” ஆகி அவரை றஸூலாகப் பார்க்கும் முரீதுக்கு இவ்விடயத்தில் தனது ஞான குருவின் வழிகாட்டல் அவசியம்.

(ஆன்மீக நுட்பம்)
(உலமாக்களுக்கும், அறபு மொழியிலக்கணம் கற்றவர்களுக்கும் மட்டும்)

தலைப்பில் எழுதிய திருவசனத்தில் சுவை தரும் தத்துவம் மறைந்திருப்பது ஆன்மீக ஆய்வாளர்களுக்கு மறையாது.

இந்த நுட்பம் அறபு மொழியிலக்கணத்தோடு தொடர்புடையதாகும். இதை ஓர் உதாரணம் மூலம் திறந்து காட்டுகிறேன்.

اِسْتَجِيْبُوا لِمُزَمِّلٍ وَلِمُبِيْنٍ إِذَا دَعَاكُمْ

இவ்வசனத்திற்கு “முசம்மிலுக்கும், முபீனுக்கும் பதில் சொல்லுங்கள் அவர் உங்களை அழைத்தால்” என்று பொருள் வரும். இவ்வசனம் போன்றதே மேற்கண்ட திருவசனமுமாகும்.

திருவசனமும், இவ்வசனமும் சாதாரண பார்வையில் மொழியிலக் கணத்துக்கு பிழையானது போல் விளங்கும். ஏனெனில் முன்னால் இருவரின் பெயர்களைக் கூறிவிட்டு பின்னால் ஒருவரை மட்டும் சுட்டிக் காட்டுதல் பொருத்தமற்றதாகும்.

திருவசனத்திலும், எனது வசனத்திலும் வந்துள்ள دَعَا – தஆ – என்ற சொல் ஒருமையைக் குறிக்கும் சொல்லாகும். திருவசனத்தில் அல்லாஹ்வையும், றஸூலையும் முன்னால் கூறிவிட்டு ஒருமையைக் குறிக்கும் دَعَا – தஆ என்ற சொல்லைக் கூறியிருப்பதும், எனது வசனத்தில் முன்னால் முஸம்மில், முபீன் இருவரையும் கூறிவிட்டு பின்னால் ஒருமையைக் குறிக்கும் دَعَا – தஆ என்ற சொல்லைக் கூறியிருப்பதும் பொருத்தமற்றதாகும்.

நான் சொல்லும் விளக்கத்தின் படி “தஆ” என்ற சொல் வருவதனால் இருமையைக் குறிக்கும் வகையில் دَعَوَاكم – தஅவாகும் என்று வந்திருக்க வேண்டும். இவ்வாறு வந்தால் திருவசனத்துக்கு அல்லாஹ்வுக்கும், றஸூலுக்கும் பதில் சொல்லுங்கள் அவர்கள் இருவரும் அழைத்தால் என்றும், எனது வசனத்துக்கு முஸம்மிலுக்கும், முபீனுக்கும் நீங்கள் பதில் சொல்லுங்கள். அவ்விருவரும் உங்களை அழைத்தால் என்றும் பொருள் வரும்.

மொழியிலக்கண அடிப்படையில் இப்படியொரு பிழை அல்லது சிக்கல் ஏற்படுவதால் “நஹ்விய்யூன்” என்ற மொழியிலக்கண மேதைகள் இதைச் சரி செய்வதற்காக திருக்குர்ஆனில் இந்த வசனத்தை ஆதாரமாகக் கொண்டு ஒரு சட்டத்தை உருவாக்கியுள்ளார்கள்.

அதாவது ஒரு வசனத்தின் முன்னால் இருவரின் பெயர்களோ, பலரின் பெயர்களோ வந்தாலும் அவர்களில் கடைசியாக வந்த பெயரை மட்டுமே பின்னால் வந்த வினைச் சொல் குறிக்கும் என்று கூறுகிறார்கள். அவர்களின் இந்த வாதத்தை நிறுவுவதற்கு اَلضَّمِيْرُ يَعُوْدُ اِلَى الْاَقْرَبِ “ழமீர் என்பது அதற்குப் பக்கத்திலிருப்தையே குறிக்கும்” என்று ஒரு விதியை கூறிக்காட்டுகிறார்கள். அவர்களே இவ்விதியை உருவாக்கியவர்களாயிருந்தாலும் அவர்களும் பிறரின் எதிர்ப்பை மறைப்பதற்காகவே அவ்வாறு செய்துள்ளார்கள். அதாவது திருக்குர்ஆன் வசனம் பிழையாக்கப்பட்டு விடுமென்று பயந்தே அவ்வாறு ஒரு “ஷோ” காட்டுகிறார்கள். இவர்கள் கற்பனை செய்து இப்படியோரு “ஷோ” காட்டாமல் அல்லாஹ் சொன்னது சரியென்று ஏற்றுக் கொண்டால் அவர்கள் பயப்படத் தேவையில்லை. “இரண்டும் ஒன்றே” என்ற தத்துவம் புரிந்து விடும். மொழியிலக்கணத்துக்கு மூலமே திருக்குர்ஆன்தான்.

முன்னால் பலரின் பெயர்கள் கூறப்பட்டிருந்தால் அவர்கள் அவைவரும் “இன்ஸான்” மனிதன் என்ற வகையில் ஒருவன்தான் என்ற அடிப்படையில் دَعَا என்று சொல்வது சரியானதென்று கூறவேண்டும்.

இந்த அடிப்படையில் அதாவது அல்லாஹ்வும் , றஸூலும் ஒன்றுதான் இரண்டல்ல என்பதை உணர்த்தும் வகையில் அல்லாஹ் ஒருமையில் دَعَا – தஆ என்று கூறியுள்ளான் என்றால் “ஷரீஆ”வுக்கு எந்த வகையிலும் பிழையாகாது. இதை நிறுவ இன்னும் நிறைய ஆதாரங்கள் உள்ளன. தொடர்புடன் இருப்போர் ஜெயம் பெறுவர்.

இப்படியொரு தத்துவம் இத்திருவசனத்தில் இருப்பதாக முதலில் கூறி பத்ரிய்யாவில் நடைபெற்ற புகாரீ மஜ்லிஸில் உரையாற்றிய ஓர் அரைவேக்காடு இன்று திசைமாறி பீக்குழியை பூக்குழியென்று நினைத்து அதில் விழுந்து கிடப்பது வேதனையான ஒன்றேயாகும்.

நஸீப் என்பது இது தான். நக்குண்பதற்கும் நஸீப் வேண்டுமென்பர் அனுபவசாலிகள்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments