தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الجَنَّةَ،
நிச்சயமாக அல்லாஹ்வுக்கு 99 திரு நாமங்கள் உள்ளன. அவற்றை மனனம் செய்தவன் சுவர்க்கம் சென்று விட்டான் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
“அல்லாஹ்” என்ற “இஸ்ம்” திருநாமத்திற்கு 99 திரு நாமங்கள் உள்ளன என்று சொன்னார்களா? அல்லாஹ் என்ற பெயருக்குரிய மெய்ப் பொருளுக்கு அல்லது அல்லாஹ் என்ற பெயரைப் பெற்ற “தாத்”திற்கு 99 திரு நாமங்கள் உள்ளன என்று சொன்னார்களா? என்பது தொடர்பாக நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
ஏனெனில் “அல்லாஹ்” என்ற “இஸ்ம்” பெயர் அதன் مُسَمَّى – அவனின் “தாத்”திற்குரிய பெயர் என்றே ஸூபீ மகான்களில் அநேகர் கூறுகின்றார்கள்.
அவர்களின் இக்கூற்றின்படி மேற்கண்ட ஹதீதின் கருத்து என்னவெனில் 99 திருநாமங்களும் “அல்லாஹ்” என்ற திரு நாமத்தின் திரு நாமங்கள் என்றே கருத வேண்டும். أَسْمَاءُ الْإِسْمِ
ஏனெனில் اللهُ عَلَمٌ لِلذَّاتِ அல்லாஹ் என்ற திரு நாமம் அவனின் “தாத்”திற்குரிய திரு நாமம் என்று சொல்வதே சரியென்று நான் விளங்குகிறேன். அல்லாஹ் மிக அறிந்தவன்.
உலமாஉகளிலும், ஏனைய பேச்சாளர்களிலும், அறிஞர்களிலும் அநேகர் இந்த ஹதீதுக்கு விளக்கம் கொடுக்கும் போது அல்லாஹ்வுக்கு 99 திரு நாமங்கள் உள்ளன என்றுதான் சொல்லி வருகிறார்களேயன்றி நான் இப்போது இங்கு சொல்கின்ற எந்த ஒரு விளக்கமும் சொன்னதாக நான் அறியவில்லை. இதனால் நான் அவர்களைக் குறை கூறவில்லை. கிணற்றிலுள்ள நீரை வாளியினால் அள்ளினால் வாளிக்கேற்ற அளவு நீர்தான் வரும்.
99 திரு நாமங்களும் “அல்லாஹ்” என்ற திரு நாமத்திற்குரிய பெயர்களேயன்றி அவை அவனின் “தாத்”திற்குரியதல்ல என்று திட்டமாகவும், உறுதியாகவும் சொல்வதற்குக் காரணம் என்னவெனில் ஸூபீ மகான்களில் ஆழ்கடலின் அடியில் குழியோடிய அறிஞர்கள் الله علم للذات அல்லாஹ் என்ற பெயர் அவனின் “தாத்”திற்குரிய பெயர் என்று சொல்லியிருப்பதும், الله اسم جامع لجميع الأسماء அல்லாஹ் என்ற பெயர் இறைவனின் ஏனைய பெயர்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்த உள்வாங்கிய திரு நாமம் என்று சொல்லியிருப்பதுமேயாகும். அதாவது ஓர் இறைஞானி
குல்ஹுவல்லாஹ் ஹூ என்று சொல்லவும்
அதன் பொருளைக் குருவிடமறிந்து கொள்ளவும்
ஜாமிஉல் அஸ்மாவை தாக்கவும் இருதயத்தில்
“லா அன இல்லா ஹூ” என்று ஏற்கவும்
என்ற பாடலில் அல்லாஹ் என்ற திரு நாமம் “ஜாமிஉல் அஸ்மாஇ” என்று சொல்லியிருப்பதுமேயாகும். மேற்கண்ட இவ்வாறான ஆதாரங்கள் மூலம் அல்லாஹ் என்ற திருப்பெயர் அவனின் “தாத்”திற்குரிய பெயரென்பது வெள்ளிடை மலைபோல் வெளிச்சமாகிறது.
அல்லாஹ் என்ற இப்பெயர் “தாத்”திற்குரியதென்றும், ஏனைய திரு நாமங்கள் யாவும் اسماء الصفات தன்மைகளின் பெயர்களென்றும் அறிந்து கொள்ள வேண்டும். “தாத்”தின் பெயரான அல்லாஹ் என்ற பெயர்தான் அவனின் திரு நாமங்களில் “பவர் புல்” சக்தி மிக்க திரு நாமமாகும்.
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மேற்கண்ட நபீ மொழியில் 99 திருநாமங்கள் என்று கூறியுள்ளதால் “அஸ்மாஉல் ஹுஸ்னா” என்று அழைக்கப்படுகின்ற, பக்தர்களில் சிலர் தினமும் ஓதி வருகின்ற 99 திரு நாமங்கள் மட்டுமே அவனுக்கு உள்ளன என்று எவரும் தீர்க்கமான முடிவு செய்தல் கூடாது.
ஏனெனில் ஒன்றை மிகைப்படுத்திச் சொல்லும் போது இவ்வாறு சொல்லும் வழக்கம் அறபிகளிடம் அன்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது. அறபிகள் அல்லாதவர்களிடமும் இவ்வழக்கம் இருப்பதை நாம் காணுகிறோம். ألف مرّة ، مأة مرة ஆயிரம் தரம், நூறு தரம் என்று அவர்கள் கூறுவார்கள்.
ஒன்றை மிகைப்படுத்திச் சொல்வது பொய்யாகாது. இது நமது பிள்ளைகளைத் தண்டிக்கும் போது 99 தரம் சொல்லியுள்ளேன். ஆயிரம் தரம் சொல்லியுள்ளேன் என்று சொல்வது போன்றதாகும்.
நாம் நமது அன்றாட வாழ்வில் சில வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். அது நாட்டு வழக்கமேயன்றி அதற்கு எதார்த்தமுமில்லை. அர்த்தமுமில்லை. அதேபோல் அது தண்டனைக்குரிய குற்றமாகவுமாட்டாது.
உதாரணமாக ஒருவன் இன்னொருவனிடம் “குளித்துவிட்டு வா” என்று சொல்ல நினைத்து “குளிச்சிட்டு கிளிச்சிட்டு வா” என்றும், “படிச்சிட்டு கிடிச்சிட்டு வா” என்றும் சொல்வது போன்றுமாகும்.
இந்த நாட்டு மரபை, வழக்கத்தை கையாண்டு பேசும் நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடமும் இருந்திருக்கச் சாத்தியமுண்டு.
அறபு நாட்டில் “ஹிம்யர்” குலத்தவர்கள் என்று ஒரு கூட்டம் இருந்தார்கள். அவர்கள் எப்போதும் “அல்” என்ற சொல்லை “அம்” என்றுதான் மொழிவார்கள். ஒரு சமயம் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த சிலர் பெருமானார் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து, “அமினம் பிர்ரிம் ஸியாமு பிம்ஸபர்” என்று அவர்களின் பேச்சு நடையில் கேட்டார்கள். அதற்கு நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அவர்களின் பாணியிலேயே “லைஸமினம் பிர்ரிம் ஸியாமு பிம்ஸபர்” என்று பதில் கூறினார்கள். இவ்வாறு மொழிவது இலக்கண, இலக்கியத்திற்கு பிழையானதாயினும் தண்டனைக்குரிய பாவமாகாது.
أمن امبر امصيام فى امسفر
ليس من امبر امصيام فى امسفر
وقد رُوي ‘ إنّ للهِ أربعةَ ألفِ اسمٍ ، ألفٌ لا يعلمه إلا الله، وألف لا يعلمه إلا الله والملائكةُ، وألفٌ لا يعلمُه إلا الله والملائكةُ والأنبياءُ، وأمّا الألْفُ الرّابعُ فإنّ المؤمنين يعلمونه، فثلاثمأةٍ منه فى التّوراة، وثلامأة فى الإنجيل، وثلاثمأة فى الزّبور، ومأةٌ فى القرآن، تسعة وتسعون منها ظاهرةٌ وواحد مكتومٌ، منْ أحصاها دخل الجنّة،
அல்லாஹ்வுக்கு நாலாயிரம் திரு நாமங்கள் உள்ளன. அவற்றில் ஆயிரம் திரு நாமங்களை அல்லாஹ் மட்டுமே அறிவான். இன்னோர் ஆயிரத்தை அல்லாஹ்வும், மலக்குகளும் அறிவர். இன்னோர் ஆயிரத்தை அல்லாஹ்வும், மலக்குகளும், நபீமார்களும் அறிவர். மற்ற ஆயிரத்தை முஃமின்கள் – விசுவாசிகள் அறிவர். அவற்றில் முன்னூறு திரு நாமங்கள் தவ்றாத் வேதத்திலும், இன்னொரு முன்னூறு இன்ஜீல் வேதத்திலும், இன்னொரு முன்னூறு ஸபூர் வேதத்திலும், எஞ்சிய நூறு திரு நாமங்கள் திருக்குர்ஆனிலும் உள்ளன. அவற்றில் 99 திரு நாமங்கள் வெளிப்படையானவையாகும். ஒன்று மட்டும் மறைக்கப்பட்டதாகும்.
ஆதாரம்: லவாமிஉல் பையினாத், பக்கம்: 71,
ஆசிரியர்: ஷெய்குல் இஸ்லாம் பக்றுத்தீன் அர்றாஸீ
மரணம்: ஹிஜ்ரீ 606
மேலே எழுதிய இரண்டு நபீ மொழிகளின் இறுதியில் فمن أحصاها دخل الجنّة அவற்றை மனனம் செய்தவன் சுவர்க்கம் சென்றுவிட்டான் என்ற வசனம் வந்துள்ளது.
“அஹ்ஸா” என்ற சொல்லை உலமாஉகள் தமிழாக்கம் செய்யும் போது மனனம் செய்தவன் என்று பொருள் கூறுகின்றார்கள். அது பற்றி நான் ஒன்றுமே எழுதாமல் நான் செய்த ஆய்வில், அல்லது அல்லாஹ் எனக்குத் தந்த விளக்கத்தில் கிடைத்த கருத்தை இங்கு எழுதுகிறேன்.
99 திரு நாமங்களை மனனம் செய்வது பெருங் கஷ்டமான காரியமல்ல. அது சிறிய காரியம்தான். ஹதீதுக்கலையில் பல இலட்சக்கணக்கான ஹதீதுகளை மனனம் செய்த ஹாபிழ்களும், பல கிதாபுகளை மனனம் செய்த இமாம்களும் உலகில் வாழ்ந்துள்ளனர். இவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 99 திரு நாமங்களை மனனம் செய்வது மிகச் சிறிய காரியமேயாகும்.
ஆகையால் பெருமானார் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் திரு நாமங்களை மக்கள் மனனம் செய்ய வேண்டுமென்று விரும்பி அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக அவ்வாறு சொல்லியிருக்கலாம் என்று சிந்திக்கவும் முடியும். அல்லது பின்வருமாறு சிந்திக்கவும் முடியும்.
அதாவது “அஹ்ஸா” என்ற சொல்லுக்கு மனனம் செய்தான் என்று பொருள் கொள்ளாமல் وَإِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللهِ لَا تُحْصُوْهَا என்ற திரு வசனத்தில் வந்துள்ள تُحْصُوا என்ற சொல்லடியிலுள்ள “அஹ்ஸா” என்ற சொல்லுக்கு “மட்டிட்டான்” என்ற பொருள் கொண்டு 99 திரு நாமங்களையும் மட்டிட்டவன் சுவர்க்கம் சென்றுவிட்டான் என்றும் பொருள் கொள்ளலாம்.
இதன் சுருக்கம் என்னவெனில் ஒருவன் 99 திருநாமங்களில் ஒவ்வொன்றையும் தன்னால் முடிந்த வரை ஆய்வு செய்து அதை மட்டிடுதல் என்பதாகும். இது சாதாரண வேலையல்ல. இதற்கு ஒருவன் கடும் முயற்சி எடுக்க வேண்டும். வேலைக் கேற்றவாறுதானே கூலி கொடுக்க வேண்டும்.
இப்பதிவை வாசித்துப் பயன் பெறுவோர் இறுதியில் எனக்காக ஒரு நிமிடம் ஏகனிடம் கரம் உயர்த்துமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.