தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர்றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
ஒரு முஸ்லிம் மதம் மாறுவதற்கு வறுமையும், பொறாமையும் காரணங்களாகுமா? என்பதை இந்தப்பதிவு தெளிவாக்கும்.
ஒரு மனிதனுக்கு வறுமை ஏற்படும் போதும், இன்னொருவர் மீது பொறாமை ஏற்படும் போதும் அவற்றை சகித்து சமாளித்து வாழ்பவனும் இருப்பான். அவற்றை வெல்ல முடியாமல் ஆறாம் அறிவை இழப்பவனும் இருப்பான்.
இவ்விருவருக்கும் பின்வரும் நபீ மொழி மூலம் நல்வழி காட்டுகிறார்கள் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்.
عَنْ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: جَاءَ رِجَالٌ أَصْحَابُ الصُّفَّةِ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَشَكَوْا إِلَيْهِ الْحَاجَةَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‘ كَادَ الْفَقْرُ أَنْ يَكُونَ كُفْرًا، وَكَادَ الْحَسَدُ أَنْ يَسْبِقَ الْقَدَرَ، قُولُوا: اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، اقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ ‘ (الدعاء للطبراني – 1048 )
உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். “அஸ்ஹாபுஸ் ஸுப்பஹ்” திண்ணைத் தோழர்களிற் சிலர் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம் வந்து தமக்குப் பல தேவைகள் இருப்பதாக முறையிட்டனர். அப்போது நபீ மணி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “வறுமை “குப்ர்” என்ற நிராகரிப்புக்கு – மத மாற்றத்திற்கு நெருங்கிவிட்டது என்றும், பொறாமை விதியை முந்திவிட நெருங்கிவிட்டது என்றும் கூறி பின்வரும் “துஆ”வை ஓதுமாறும் அவர்களைப் பணித்தார்கள்.
اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، اقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ
யா அல்லாஹ்! ஏழு வானங்களினதும், வலுப்பமிகு “அர்ஷ்” உடையவனுமான றப்பே! இரட்சகனே! எங்களின் கடனை இறுத்துவிடுவாயாக! வறுமையிலிருந்து எங்களை செல்வந்தர்களாக்கிவிடுவாயாக!
ஆதாரம்: அத்துஆ லித்தப்றானீ, 1048.
மேற்கண்ட இந்த நபீ மொழி சில சொற்கள் மாற்றத்தோடு பின்வரும் நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. ஹில்யதுல் அவ்லியா, ஷுஃபுல் ஈமான், முஸ்னத் ஷஹாபுல் குழாஇ.
மேற்கண்ட இரண்டு நபீ மொழிகளிலும் இரண்டு அம்சங்கள் கூறப்பட்டுள்ளன. ஒன்று வறுமை. மற்றது பொறாமை. வறுமை “குப்ர்” நிராகரிப்புக்கு நெருங்கிவிட்டது என்றும், பொறாமை விதியை முந்திவிட நெருங்கிவிட்டது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
பொருளாதார அடிப்படையில் இஸ்லாம் மனிதர்களை மூன்று பிரிவினர்களாக கூறுகின்றது.
ஒன்று “ஙனீ”, இரண்டு “மிஸ்கீன்”, மூன்று “பகீர்”.
غَنِيٌّ – “ஙனீ” என்றால் செல்வந்தன். அதாவது தனது செலவினங்களுக்கும், தனது பராமரிப்பில் வாழ்கின்றவர்களின் அவசிய செலவினங்களுக்கும் அதிகமான வருவாய் உள்ளவன்.
مِسْكِيْنٌ – “மிஸ்கீன்” என்றால் நடுத்தர வருவாய் உள்ளவன். அதாவது தனது அவசிய செலவினங்களுக்கும், தனது பராமரிப்பில் வாழ்கின்றவர்களின் செலவினங்களுக்கும் சமமான வருவாய் உள்ளவன்.
فَقِيْرٌ – “பகீர்” என்றால் ஏழை. அதாவது தனது அவசிய செலவினங்களுக்கும், தனது பராமரிப்பில் வாழ்கின்றவர்களின் அவசிய செலவினங்களுக்கும் குறைவான வருவாய் உள்ளவன்.
இரண்டாம், மூன்றாம் இருவர்களும் “ஸகாத்” நிதி பெறுவதற்கு தகுதியான எட்டு கூட்டங்களில் அடங்கிவிடுவர்.
இங்கு “பகீர்” என்ற சொல்லுக்கு ஏழை என்றே பொருள் கொள்ள வேண்டும். “பாவா” என்ற பெயரில் “தகறா” அடித்து யாசகம் செய்வோரைக் குறிக்காது. அவர்களில் செல்வந்தர்களும் உள்ளனர்.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் மூவரிலும் “பகீர்” ஏழையை மட்டுமே சுட்டிக் காட்டியுள்ளார்கள். ஏனெனில் இவன்தான் சுட்டிக் காட்டப்பட வேண்டிவனாவான். இவன் மட்டும்தான் “குப்ர்” என்ற நிராகரிப்பு – மத மாற்றத்தோடு தொடர்பு படுத்திக் கூறப்பட்டுள்ளான். இதற்கு காரணம் உண்டு. சிந்தனையாளர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. வறுமையினால் பொறுமை இழப்பவன் எதையும் செய்வான்.
வறியவன் காலமெல்லாம் பணப் பற்றாக் குறையுள்ளவனாகவே இருப்பான். இவனுக்கு எவரும் கடன் கொடுத்து உதவவுமாட்டார்.
இவனின் பொருளாதாரப் பற்றாக்குறை காரணமாக இவனுக்குப் பல பிரச்சினைகளும், சிக்கல்களும் ஏற்படும். கடன் கொடுத்தவர்கள் கூட அடிக்கடி அவனைச் சந்திக்க அவன் வீட்டுக்கு வருவர். சிலர் கௌரவமாக நடப்பர். சிலர் கை கலப்பிலும் இறங்குவர். இன்னும் சிலர் சந்தியில் அவனை அவமானப்படுத்துவர். இன்னும் சிலர் பொலிஸ் நிலையம் சென்று புகார் செய்வர். இன்னும் சிலர் அவன் வீட்டிலுள்ள சாமான்களையும் அள்ளிச் செல்வர். இவன் வறியவனாயிருந்தாலும் கௌரவமானவனாயிருந்தால் சில சமயங்களில் அவன் பொறுமையை இழக்கவும் நேரிடலாம். மனைவி மக்களின் அவசியத் தேவைகளைக் கூட நிறைவு செய்ய முடியாமற் போனால், பாலருந்தும் குழந்தைகளுக்கு பாலின்றி அழும் வேளை மனைவி இவன் மீது சீறிப் பாய்வதற்கும் வழி பிறந்து விடும். இத்தனைக்கும் மத்தியில் பிறர் மீது கொண்ட கோபத்தை மனைவியில் சாதிக்கும் நிலையும் ஏற்படலாம். இந்நிலையில் தனது வறுமையை உணராமலும், கருத்திற் கொள்ளாமலும் அடுக்கடுக்காய் பல குழந்தைகளுக்கும் தந்தையாகிவிடுவான்.
வீட்டில் தேனீர் குடிப்பதற்குக் கூட சீனி இல்லை. குழந்தை அழுகிறது. பால் வாங்குவதற்குக் கூட பணமில்லை. மறு குழந்தைக்கு வயிற்றுப் போக்கு. வைத்தியரிடம் செல்ல பணமில்லை.
இத்தனை பொறுமையுடன் வாழும் மனைவியோ ஓர் ஊதாரி. சூடான உரொட்டிக் கல் போன்று எந்நேரமும் நச்சு நச்சென்று பாய்ந்து கொண்டுதான் இருப்பாள்.
ஒரு நாள் கறி வாங்கப் பணமில்லாமல் பலரிடம் கடன் கேட்டு அலைந்தும் பணம் கிடைக்காததால் அவனின் கோபம் வெறியாக மாறிவிட்டது. கள்ளுக் கடைக்கு விரைந்தான். ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல போத்தல்கள் குடித்து வெறியாட்டத்தோடு வீட்டுக்கு வந்தான். மனைவியையும், மூன்று மக்களையும் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான்.
வறுமை இவ்வாறெல்லாம் செய்யுமென்பதை அறிந்ததினால்தான் பிறருக்கு பாடம் கற்றுக் கொடுப்பதற்காக اَللهم إِنِّـيْ أَعُوْذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ இறைவா! “குப்ர்” மத மாற்றத்தை விட்டும், வறுமையை விட்டும் உன்னைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகின்றேன் என்று “துஆ” கேட்டார்கள் பெருமானார் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
மேலே எழுதியுள்ள நபீ மொழியில் “பொறாமை விதியை முந்துவதற்கு நெருங்கிவிட்டது” என்றும் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
வறுமை கொலை வரை ஒருவனை இழுத்துச் செல்வது போல் பொறாமையும் அவ்வாறே செய்யுமாதலால் எவரும் எவர் மீதும் பொறாமை கொள்வது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
உலகில் வாழும் பல இலட்சம் ஸூபீகளையும், அவ்லியாஉகளையும் “புத்வா” என்ற வாளால் வெட்டிக் கொன்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எதனால் இவ்வாறான படுகொலைகளைச் செய்தது என்று ஓர் திறமையுள்ள ஆய்வாளன் ஆய்வு செய்தால் அவர்களின் பொறாமையினால்தான் அவ்வாறு செய்தார்கள் என்று நிச்சயமாகக் கூறுவான். உலமாஉகளின் ஊடுருவல் “புத்வா” ஆளுக்கு கொடுத்த “புத்வா”வேயன்றி கருத்துக்கு கொடுத்த “புத்வா” அல்ல. இவர்கள் ஆளுக்கு “புத்வா” கொடுப்பவர்களேயன்றி கருத்துக்கும், செயலுக்கும் “புத்வா” கொடுப்பவர்களல்ல என்பதற்கு வெசக் தினம் விகாரையில் விளக்கேந்தி நின்ற ரிஸ்விக்கு “புத்வா” கொடுக்காமலிருப்பதே ஆதாரமாகும்.