தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
அல்லாஹ் ஒருவனுக்குச் செய்யும் அருளை அவன் மற்றவர்களிடம் சொல்ல வேண்டுமா? மறைக்க வேண்டுமா? என்பது தொடர்பான சிறிய ஆய்வு.
அல்லாஹ் ஒருவனுக்கு ஏதாவதொரு வகையில் நிஃமத் – றஹ்மத் அருள் செய்தால் அதை அவன் பிறருக்குச் சொல்லிக் காட்டுவதே சிறந்தது.
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
நபீயே! உங்களுக்கு உங்கள் இரட்சகன் செய்த “நிஃமத்” அருளை சொல்லுங்கள் – சொல்லிக் காட்டுங்கள் என்று கூறியுள்ளான். (93-11)
அருள் செய்யப்பட்ட ஒருவன் அவ் அருளைப் பிறருக்குச் சொல்லிக் காட்டுவதால் பல நன்மைகள் ஏற்பட அது வழியாக அமையும். சொல்லிக்காட்டாமல் விடுவதால் பல தீமைகள் ஏற்பட அது வழியாக அமையலாம்.
“நிஃமத்” என்ற சொல் – அருள் என்பது பொருளாதாரத்தை மட்டும் குறிக்காது. மாறாக உடலாரோக்கியம், அறிவு, மன நிம்மதி, ஆன்மிக முன்னேற்றம், குழந்தைச் செல்வம் என்பவற்றையும் குறிக்கும்.
என்னைப் பொறுத்தவரை ஒரு மனிதனுக்கு அல்லாஹ் செய்யும் அருட்களில் விலை மதிக்க முடியாத, நிகரற்ற அருள் அவனுக்குத் தன்னைப் பற்றிய அறிவு ஞானத்தை வழங்கி அவனை தனது “முஹிப்பு” அன்புக்குரியவனாக ஆக்கி வைத்தலாகும். இதைவிடப் பெரிய அருள் வேறொன்றுமே இல்லை.
அல்லாஹ் ஒருவனுக்கு சிறிய “நிஃமத்” செய்தாலும் அதை தனக்கு விருப்பமானவர்களிடம் சொல்வது நற் காரியங்களையே சேரும். இவ்வாறுதான் நல்ல கனவுமாகும்.
மேற்கண்ட திருவசனத்தின் படி நபீ பெருமானார் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய “நிஃமத்” அருளை சொல்லிக் காட்டினார்களேயன்றி மறைக்கவில்லை. அவர்களின் தூய வழியில் பயணிக்கும் நாமும் அவர்கள் போல் வாழ வேண்டும்.
நபீ பெருமானுக்கு அல்லாஹ் செய்த பேரருட்களில் பலதை அவர்கள் மக்களுக்கு சொல்லிக் காட்டினார்களேயன்றி மறைக்கவில்லை.
அருட்களில் சில.
01.
قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ: «أَنَا أَفْصَحُ مَنْ نَطَقَ بِالضَّادِ»
“ “ழாத்” என்ற எழுத்தை மொழிந்தவர்களில் மிக நாகரீகமாக மொழிந்தவன் நானே” என்று அருளினார்கள்.
(தப்ஸீருர் றாஸீ – மபாதீஹுல் ஙைப்)
02.
أَوَّلُ مَنْ يَنْشَقُّ عَنْهُ الْقَبْرُ
மறுமையில் “கப்ர்” அடக்கத் தலம் பிளந்து வெளிவரும் முதல் மனிதன் நானே! என்று அருளினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்)
03.
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‘ أُوتِيتُ جَوَامِعَ الْكَلِمِ،
பல அர்த்தங்களை ஒரு சொல்லில் உள்வாங்கிப் பேசும் ஆற்றல் வழங்கப்பட்டவன் நானே என்று அருளினார்கள். (முஸ்னத் அஹ்மத்)
04.
نُصِرْتُ بِالرُّعْبِ، فَيُرْعَبُ مِنِّي الْعَدُوُّ عَنْ مَسِيرَةِ شَهْرٍ،
ஒரு மாத தொலைவில் உள்ள ஒருவன் (எதிரி) பயப்படும் வகையில் நான் உதவி செய்யப்பட்டுள்ளேன் என்று அருளினார்கள். (முஸ்னத் அஹ்மத்)
இன்னும் இவை போன்ற பல நபீ மொழிகள் உள்ளன. ஆதாரத்திற்கு இவை போதும்.
இந்த நபீ மொழிகள் மூலம் அல்லாஹ் ஒருவனுக்குச் செய்த “நிஃமத்” அருளைப் பிறருக்குச் சொல்லிக் காட்ட வேண்டுமென்று அல்லாஹ் விரும்புவதால் அவன் விருப்பத்திற்கேற்ப அடியான் செயல்பட வேண்டும். அவன் தனக்கு வழங்கிய அருட்களை சொல்லிக் காட்ட வேண்டும். அதன் மூலம் அவனின் அன்பை பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு வெளிப்படுத்தும் போது அவன் செய்த அருட்களைச் சொல்லிக் காட்டும் நோக்கம் மட்டுமே அவன் நெஞ்சில் இருக்க வேண்டும். “புகழ்” என்ற நஞ்சில் ஒரு சொட்டேனும் அதோடு கலந்தானாயின் அது ஒரு கப் நீரில் ஒரு துளி விஷம் கலந்தது போலாகிவிடும்.
மேலே எழுதிக்காட்டிய نُصِرْتُ بِالرُّعْبِ، فَيُرْعَبُ مِنِّي الْعَدُوُّ عَنْ مَسِيرَةِ شَهْرٍ، என்ற நபீ மொழியின் சுருக்கம்.
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து சுமார் ஒரு மாத காலம் ஒருவன் சாதாரண நடையாக நடந்தால் எவ்வளவு தூரம் செல்வானோ அந்த அளவு தூரத்திலுள்ள ஒருவன் (எதிரி) பெருமானாரை நினைத்தால் அவனுக்குப் பயம் வரும் என்பதையே மேற்கண்ட வசனம் குறிக்கின்றது. இதை வாசிக்கும் சகோதர சகோதரிகள் மொத்தம் எத்தனை கிலோ மீற்றர் வருமென்று கணக்கிட்டுக் கொள்வார்களாக!
உலகில் அறபு மொழி பேசியவர்களிலும், இன்று பேசிக் கொண்டிருப்பவர்களிலும் “ழாத்” என்ற எழுத்தை மிக அழகாக மொழிந்தவர்கள் கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மட்டுமேயாவர்.
இவ்வாறு நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சொன்னது பெருமையில் சொன்னதாகாது. எதார்த்தம் எதுவோ அதைச் சொல்வது பெருமையாகாது.
மறுமை நாளில் முதலில் “கப்ர்” மண்ணறையிலிருந்து வெளியாகும் சிறப்பு கண்மணி நாயகம் அவர்களுக்கு மட்டும் உரியதேயாகும்.
நபீ பெருமான் “ஜவாமிஉல் கலிம்” கொடுக்கப்பட்டவர்களாவர். இப்படியொரு விஷேடம் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கே உண்டு. அதாவது பல கருத்துக்களை ஒரு சிறிய சொல்லில் கூறும் திறமை – விஷேடமாகும். இந்த விஷேடம் கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம் இருந்தது.
இவை போன்று இன்னும் பல விஷேடங்கள் உள்ளன. அவற்றில் “மிஃறாஜ்” என்ற விண்ணுலகப் பயணமும் அடங்கும். உடலோடும், உயிரோடும் – “ஜஸத்” என்ற உடலோடும், “றூஹ்” என்ற உயிரோடும் கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மட்டுமே சென்றுள்ளார்கள். வேறு எவரும் இவ்வாறு செல்லவில்லை. செல்லவும் முடியாது. எனினும் வலீமார்களால் உடலோடின்றி அவர்களின் உயிர் மட்டும் செல்ல முடியும். அந்த உயிர் எல்லா ஆலங்களுக்கும் பயணிக்கும்.
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய “நிஃமத்” அருளை அவர்கள் பிறருக்குச் சொல்லிக் காட்டியது போல் நமக்கு அல்லாஹ் வழங்கும் அருளையும் நாம் சொல்லிக் காட்ட வேண்டும்.
ஆண்களிலும், பெண்களிலும் சிலர் உள்ளனர். அவர்கள் பெருமைக்காகவும், புகழுக்காகவும், தம்மை “விலாயத்” ஒலித்தனம் உள்ளவர்கள் என்று பிறர் நம்ப வேண்டுமென்பதற்காகவும் கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களையும், வலீமார்களையும் கனவு கண்டதாகச் சொல்வார்கள். இவர்களை இனங்கண்டு உண்மையாளர்களாக இருந்தால் மட்டுமே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். உண்மையாக இருந்தால் மட்டுமே அவர்களும் பிறரிடம் சொல்ல வேண்டும். றஸூலுல்லாஹ்வை, அல்லது வலீமாரைக் கனவில் கண்டதாக பொய் சொல்வது பெருங்குற்றமாகும்.
وَإِنْ تَعُدُّوا نِعْمَتَ اللَّهِ لَا تُحْصُوهَا
அல்லாஹ் செய்த அருள்களை எண்ணிக் கணக்கெடுக்க எவராலும் முடியாது என்பது இறைவாக்கு.
ஒரு மனிதன் சுவாசிக்கின்ற ஒவ்வொரு சுவாசமும் ஒவ்வோர் உயிர் போன்றதேயாகும். ஒரு சுவாசத்தை வீணாக்கியவன் ஒரு கொலை செய்கிறான் என்று ஆன்மிக வழி செல்வோர் சொல்வார்கள்.
ஸூபீகளினதும், இறைஞானிகளினதும் கணிப்பின் படி ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 21,600 தடவைகள் சுவாசிக்கின்றான். அவன் ஒவ்வொரு சுவாசத்தையும் பயனுள்ளதாக சுவாசிக்க வேண்டும். ஒவ்வொரு சுவாசமும் உயிருள்ளதாக ஆக்கப்பட வேண்டும். ஒரு நாள் முழுவதும் சுவாசத்தை வீணாக்கியவன் ஒரே நாளில் 21,600 கொலைகள் செய்தவன் போலாகிவிடுவான்.
மனிதன் தனது ஒவ்வொரு சுவாசத்தையும் வணக்கமாக்குவதற்கு “ஷரீஆ”வில் வழி கூறப்படாவிட்டாலும் இதற்கான வழி ஸூபிஸக் கலையிலும், “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்திலும் உள்ளது. இவ்வழியை தெரிந்து கொண்ட ஒருவன் 24 மணி நேரமும் வணக்கத்திலிருப்பதற்கான வழியை கண்டு கொண்டவனாகிறான்.
குணங்குடியார் பின்வருமாறு பாடுகின்றார்கள்.
கைக்குள் வெண்ணெயை வைத்து நெய்க்கழுத பாவிகலை
கற்றுமறிவற்ற பாவி
கற்பக விருட்ஷத்தினடியிலே காஞ்சிரங்
காய் தேடி நின்ற பாவி
கொக்குப் பிடிக்க நாய்க்குத் தெரியுமோவென்ற
கொள்கை குடி கொண்ட பாவி
குருடர்கள் யானையைக் கண்ட கதை போல சற்
குருவையறியாத பாவி
சர்க்கரை கரும்பு கற்கண்டமுதிருக்க
கசங்குடிக்கின்ற பாவி
தலை கெட்ட பாவியடியேனுமுமை நம்பினேன்
தயவு வைத்தாளுதற்கே
மக்க நகருக்கு மணமுள்ள நீர் பின்தொடர
வள்ளலிறஸூல் வருகவே
வளருமருனிறை குணங்குடி வாழுமென்னிரு கண்
மணியே முஹ்யித்தீனே!
அல்லாஹ் செய்த அருட்களைச் சொல்லிக்காட்டுவது நல்ல காரியமாயினும் ஒரு மனிதனுக்கு முடிய வேண்டிய ஒரு தேவை இருக்குமாயின் அதை எவரிடமும் சொல்லாமல் விஷயம் முடியும் வரை மறைத்து விடுவது சிறந்ததாகும். சொல்லத்தான் வேண்டுமென்றிருந்தால் உள்ளத்தில் பொறாமை, வஞ்சகம் இல்லாத நல்ல மனிதனை இனங்கண்டு சொல்வதால் பாதகமெதுவும் ஏற்படமாட்டாது.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَعِينُوا عَلَى قَضَاءِ الْحَوَائِجِ بِالْكِتْمَانِ، فَإِنَّ كُلَّ ذِي نِعْمَةٍ مَحْسُودٌ»(مسند الروياني)
உங்களின் தேவைகள் நிறைவேற வேண்டுமாயின் அதை பிறரிடம் கூறாமல் மறைத்து விடுவதன் மூலம் உதவி தேடுங்கள். “நிஃமத்” அருள் செய்யப்பட்ட ஒவ்வொருவர் மீதும் பொறாமை ஏற்படும் என்று நபீ மணி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள்.
இந்த நபீ மொழியை ஆதாரமாகக் கொண்டு ஒருவனுக்கு முக்கிய தேவையிருந்தால் அது தொடர்பாக எவரிடமும் சொல்லாமல் அவன் முயற்சிக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது.
اَلسِّرُّ إِنْ جَاوَزَ الْإِثْنَيْنِ جَهْرٌ
ஒரு இரகசியம் இரண்டு பேர்களுக்கிடையிலேயே இருக்கும். இருவரைத் தாண்டினால் அது பகிரங்கமேயாகும். இரகசியமாகாது