பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்.
மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்
தலைவர் – காதிரிய்யஹ் திருச்சபை,
விரிவுரையாளர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்.
றபீஉனில் ஆகிர் மாதம் நினைவு கூறப்படக்கூடிய மகான்களில் அஷ்ஷெய்ஹுல் அக்பர், அல் கிப்ரீதுல் அஹ்மர், அல் மிஸ்குல் அத்பர், அந் நூறுல் அப்ஹர் முஹ்யித்தீன் இப்னு அறபீ கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ் அன்னவர்கள் மிக விஷேடமானவர்கள்.
இவர்களின் இயற்பெயர் முஹம்மத் இப்னு அலீ என்பதாகும். பின்வருவன அவர்களின் பட்டப் பெயர்களாகும்.
- அஷ் ஷெய்ஹுல் அக்பர் – மிகப் பெரிய ஷெய்ஹ்
- அல் மிஸ்குல் அத்பர் – அதிக மணம் நிறைந்த கஸ்தூரி
- அல் கிப்ரீதுல் அஹ்மர் – சிவப்புக் கெந்தகம் அல்லது தங்கம்.
- அந்நூறுல் அப்ஹர் – பிரகாசம் நிறைந்த ஒளி
- முஹ்யில் மில்லதி வத்தீன் – மார்க்கத்தை உயிர்ப்பித்தவர்
- சுல்தானுல் ஆரிபீன் – இறைஞானிகளின் அரசர்
- காதிமுல் அவ்லியா – வலீமார்களின் முத்திரை
இன்னும் பல பட்டப் பெயர்களால் இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள். அபூபக்கர் என்பது இவர்களின் புனைப்பெயராகும். இவர்கள் ஹிஜ்ரீ 560ம் ஆண்டு றமழான் பிறை 17 திங்கட்கிழமை ஸ்பெய்னிலுள்ள “முர்ஸியா” என்ற நகரில் பிறந்தார்கள். பனூ உமய்யாக்களுடைய காலத்தில் முஸ்லிம்களால் உறுவாக்கப்பட்ட நகரம்தான் இந்த முர்ஸியா என்ற நகரம்.
இவர்களின் தந்தை அலீ இப்னு முஹம்மத் (றழி) அவர்கள் பிக்ஹ், ஹதீஸ், ஸூபிஸம் போன்ற கலைகளில் சிறந்து விளங்கினார்கள். அரச சபையில் ஓர் அமைச்சராகவும் திகழ்ந்தார்கள். இவர்களின் பாட்டன் ஸ்பெயினுள்ள நீதிவான்களில் ஒருவராகவும், பிரசித்தி பெற்ற மார்க்க அறிஞர்களில் ஒருவராகவும் விளங்கினார்கள். இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்களுக்கு பல பதவிகள் வந்தும் அவர்கள் அதை விரும்பவில்லை.
இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் “தையிஃ” என்ற உயர் வம்சத்தைச் சேர்ந்தவர்களாக விளங்கினார்கள். இந்த வம்சம் கல்வியிலும், மார்க்க ஞானத்திலும் அக்காலத்தில் சிறந்து விளங்கிய ஓர் வம்சமாகும்.
இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் தங்களின் ஏழு வயதில் அல்குர்ஆனை முழுமையாக கற்று முடித்தார்கள். இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் எட்டு வயதை அடைந்த போது அவர்களின் தந்தை அலீ இப்னு முஹம்மத் அவர்கள் “இஷ்பீலியா” என்ற நகரை வந்தடைந்தார்கள். அந்த நேரத்தில் சுல்தான் இப்னு முஹம்மத் சஃத் என்பவர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். ஸ்பெயினுள்ள நகரங்களில் “ஸ்பீலியா” அறிவின் தலைநகராக விளங்கியது. இன்னும் அழகிய, மணம் நிறைந்த பூங்காக்கள், இயற்கைக் காட்சிகள் நிறைந்த ஓர் அழகான நகராகவும் விளங்கியது.
தங்களின் பத்து வயதை அடைந்த போது இப்னு அறபீ அன்னவர்களில் இருந்து தத்துவம் நிறைந்த கருத்துக்கள் வெளியாகின. ஆன்மீக உயர் தத்துவங்களை இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அவர்கள் வெளிப்படுத்தினார்கள். இவை இல்ஹாம் – இறை உதிப்பின் மூலம் வெளியான கருத்துக்களாக காணப்பட்டன. எந்த ஒரு கிரந்தத்திலும் காணப்படாத கருத்துக்களாக காணப்பட்டன.
உலகில் தோன்றிய ஸூபிகளில் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்களுக்கு நிகரானவர்கள் யாரும் கிடையாது. அவர்களைப் போன்ற ஸூபி உலகில் இது வரை தோன்றவுமில்லை. தோன்றப் போவதுமில்லை. இறைஞானத் தத்துவங்களை எவருக்கும் அஞ்ஞாமல் பகிரங்கமாகக் கூறினார்கள். ஸூபிஸ வழியின் எதார்த்தங்களை தெளிவாகக் கூறினார்கள்.
சிறந்த ஓர் கவிஞராக விளங்கினார்கள். இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் அரச சபையில் பல பரிசில்களைப் பெற்றிருக்கிறார்கள். “தீவானுஷ் ஷிஃர்” “துர்ஜுமானுல் அஷ்வாக்” போன்ற கிரந்தங்கள் இதற்குச் சான்றாகும்.
இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் அனைத்துக் கலைகளிலும் சிறந்து விளங்கினார்கள். ஹதீஸ், பிக்ஹ், தப்ஸீர், ஸூபிஸம் மற்றும் பல கலைகளில் கிரந்தங்களை இயற்றினார்கள். தத்துவங்கள் அவர்களில் இருந்து ஊற்றெடுத்தன. இவர்களின் தத்துவங்களை புரிந்து கொள்ள, விளங்கிக் கொள்ள முடியாத வெளிரங்க உலமாக்கள் இவர்களைக் காபிர் என்றும், ஸிந்தீக் என்றும் கூறினர். நஊதுபில்லாஹி மின்ஹா. இவர்களை கடுமையாக எதிர்த்த எத்தனையோ உலமாக்கள் இவர்களின் காலடியில் சரணடைந்தனர். அவர்களின் கருத்துக்கள் உண்மையானது என்பதை ஏற்றுக் கொண்டனர். அவர்களைப் புகழ்ந்து எத்தனையோ இமாம்கள், ஆரீபீன்கள் கருத்துக்களை வெளியிட்டனர்.
இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்களைப் புகழ்ந்து கூறிய சிலர்
01. அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்ஹ் மஜ்துத்தீன் அல் பைறூஸாபாதீ (றழி) இவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
“ஷரீஆ, தரீகா ஆகிய கலைகளில் அஷ் ஷெய்ஹ் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் அடைந்த அந்தஸ்தை யாரும் அடைந்ததாக நாம் அறியவில்லை. அவர்கள் சரியான கொள்ளையைக் கொண்டிருந்தார்கள்.”
02. அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்ஹ் ஸிறாஜுத்தீன் அல் மக்ஸுமி (றழி) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
“அஸ்ஸெய்ஹ் முஹ்யித்தீன் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்களின் கருத்துக்களில் ஒன்றையேனும் மறுப்பதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கின்றேன். வலீமார்களின் இறைச்சிகள் நஞ்சூட்டப்பட்டவைகளாகும். அவர்களை கோபிக்கச் செய்பவனுடைய மார்க்கம் அழிந்து விடுவது உறுதியாகும். அவர்களை கோபிக்கச் செய்பவன் “நஸ்றானீ”யாகவே மரணிப்பான். எவன் அவர்களை தன் நாவு கொண்டு ஏசுகின்றானோ, அவருடைய உள்ளத்தை மரணிக்கச் செய்வதன் மூலம் அல்லாஹுத்தஆலா அவர்களைச் சோதிப்பான்.
03. அஸ்ஸெய்யிதுஸ் ஷெய்ஹ் கமாலுத்தீன் அஸ்ஸமல் கானீ (றழி) அவர்கள்.
“இவர்கள் சிரியாவைச் சேர்ந்த மார்க்க அறிஞர்களில் மிக உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவர்களாகும். இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்களை முழுமைமயாக விசுவாசம் கொண்டார்கள்.
04. அஸ்ஸெய்யிதுஸ் ஷெய்ஹ் குத்புத்தீன் அல் ஹமவீ (றழி) அவர்கள். இவர்கள் சிரியாவுக்குச் சென்று திரும்பிய வேளை இவர்களிடம் அஸ்ஸெய்ஹ் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்களை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் பின்வருமாறு பதில் கூறினார்கள் “கல்வியிலும், துறவறத்திலும், இறை ஞானத்திலும் கரை இல்லாத கடலாக நான் அவர்களைப் பெற்றுக் கொண்டேன்.”
05. அஸ்ஸெய்யிதுஸ் ஷெய்ஹ் ஸலாஹுத்தீன் அஸ்ஸப்தீ (றழி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். “இறை உதிப்பின் கிடைக்கக்கூடிய இறை ஞானத் தத்துவமுடையோரின் கிரந்தங்களைப் பார்வையிட நீங்கள் விரும்பினால் அஷ்ஷெய்ஹ் முஹ்யித்தீன் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்களின் கிரந்தங்களைப் பார்வையிட்டுக் கொள்ளுங்கள்.
06. அல் ஹாபிழ் அபூ அப்தில்லாஹ் (றழி) அவர்கள், இவர்களிடம் புஸூஸுல் ஹிகம் என்ற நூலில் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் கூறுகின்ற கருத்துக்களைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் நபீ (ஸல்- அம்) அவர்களின் அனுமதியைக் கொண்டுதான் அந்தக் கிரந்தத்தை அவர்கள் இயற்றினார்கள். இவர்கள் போன்றவர்கள் ஒரு பொழுதும் பொய் சொல்வார்கள் என்று நான் கருதவில்லை என்று சொன்னார்கள்.
07. அஸ்ஸெய்யிதுஸ் ஷெய்ஹ் குத்குத்தீன் அஷ்ஷீறாஸீ (றழி) அவர்கள், இவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
“அஷ்ஷெய்ஹ் முஹ்யித்தீன் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் ஷரீஅத், ஹகீகத் ஆகிய கலைகளில் சம்பூரணமானவர்களாக ஆகிவிட்டார்கள். அவர்களின் பேச்சை விளங்காதவனும், அவர்களை நம்பாதவனுமே அவர்களில் குறை கூறுவான்.”
08. அஸ்ஸெய்யிதுஸ் ஷெய்ஹ் பக்றுத்தீன் அர்றாஸீ (றழி) அவர்கள் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்களைப் பற்றிக் கூறும் போது “அஸ்ஸெய்ஹ் இப்னு அறபீ (றழி) அவர்கள் கண்ணியம் நிறைந்த ஓர் வலீயாக ஆகிவிட்டார்கள்” என்று கூறுகின்றார்கள்.
09. அஸ்ஸெய்யிதுஸ் ஷெய்ஹ் முஹ்யித்தீன் அந்நவவீ (றழி) அவர்கள் இவர்களிடம் முஹ்யித்தீன் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்களைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் “இப்னு அறபீ அவர்கள் சென்ற ஓர் சமுதாயம் வலீமார்கள் மீது தீய எண்ணம் கொள்வது ஒவ்வொரு புத்தியுள்ளவன் மீதும் ஹறாமாகும். அவர்களின் அந்தஸ்தை அடையாத ஒருவன் அவர்களின் சொற்கள், செயல்களுக்கு வலிந்துரை கொடுப்பது அவசியம்.” என்று கூறினார்கள்.
10. அஸ்ஸெய்யிதுஸ் ஷெய்ஹ் முஹம்மத் அல் மக்ரிபீ அஷ் ஷாதுலீ (றழி) அவர்கள் ஜலாலுத்தீன் அஸ்ஸுயூதி (றழி) அவர்களின் ஞான குருவாகும். இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் பற்றி இவர்கள் கூறும் போது “ஜுனைதுல் பக்தாதீ (றழி) அவர்கள் முரீதீன்களை வளர்ப்பவர்களாக இருப்பது போன்று முஹ்யித்தீன் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் இறைஞானிகளை வளர்க்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.” என்று கூறினார்கள்.
இவ்வாறு இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்களப் புகழ்ந்து கூறிய இமாம்கள், ஆரீபீன்கள், வலீமார்கள் அதிகப் பேருள்ளனர். அவர்களில் ஒரு சிலரை மாத்திரம் இங்கே குறிப்பிட்டோம். அஸ்ஸெய்ஹுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள் 400 க்கும் அதிகமான கிரந்தங்களை இயற்றி இருக்கின்றார்கள். இவற்றில் அனைத்துக் கலைகளையும் சேர்ந்த கிரந்தங்கள் உள்ளடங்கும்.
தப்ஸீருடைய கலையில் இவர்கள் இயற்றிய அத்தப்ஸீருல் கபீர் எனும் தப்ஸீர் 95 வால்யூம்களைக் கொண்டதாகும். அதே போல அத்தப்ஸீருல் ஸயீர் என்பது 08 வால்யூம்களைக் கொண்டதாகும்.
ஸுபிஸக் கலையில் இவர்கள் இயற்றிய கிரந்தம்தான் “அல் புதூஹாதுல் மக்கிய்யஹ்” என்ற கிரந்தமாகும். ஸூபிகளிடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கிரந்தத்தை மக்கா முகர்ரமஹ்வில் வைத்து இயற்றினார்கள். மக்கா முகர்ரமஹ்வுக்கு ஹிஜ்ரி 598ல் வந்தார்கள் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அன்னவர்கள்.
இது பற்றி அஷ்ஷெய்ஹ் மஜ்துத்தீன் அல்பைறூஸாபாதீ (றழி) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். “அஷ் ஷெய்ஹ் முஹ்யித்தீன் இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அவர்கள் இறைஞான தத்துவங்களில் கரையில்லாக் கடலாக ஆகிவிட்டார்கள். மக்கஹ் முகர்றமஹ்வுக்கு அவர்கள் வந்த போது அந்த நேரத்தில் உலமாக்கள், ஹதீஸ்கலை மேதைகள் அனைவரும் இவர்களின் சபைக்கு விரைந்தார்கள். அவர்கள் முன்னே அமர்வதை பறக்கத்தாகக் கருதினார்கள்.
இப்னு அறபீ குத்திஸ ஸிர்ருஹூ அவர்கள் இயற்றிய பெரும்பாலான கிரந்தங்கள் மக்காவிலுள்ள களஞ்சியங்களில் காணப்பட்டன. இவர்கள் மக்காஹ்வில் வைத்து இயற்றிய கிரந்தங்களில் மிகப் பிரசித்தி பெற்றது அல் புதூஹாதுல் மக்கிய்யஹ் என்ற கிரந்தமாகும். இது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கிரந்தம் என்பதற்கு பின்வரும் சம்பவம் சான்றாகும். அல்புதூஹாதுல் மக்கிய்யஹ் என்ற கிரந்தம் இவர்களின் மாணவர் பத்ர் அல் ஹபஷீ என்பவர் கேட்ட கேள்விக்குரிய பதிலாகும்.
அஸ்ஸெய்ஹுல் அக்பர் அன்னவர்கள் இதை எழுதி முடித்தவுடன் ஒவ்வொரு பேப்பராக கஃபாவின் மேல் வைத்தார்கள். சுமார் ஒரு வருட காலம் இந்தக் கிரந்தம் கஃபாவின் மேல் இருந்தது. இக்காலப் பகுதியில் மக்கஹ்வில் கடுமையான காற்று வீசியது. கடும் மழை பெய்தது. ஆனால் இக்கிரந்தத்தில் ஒரு பேப்பர் கூட நனையவில்லை. பழுதடையவில்லை. இது இறைவனால் இக்கிரந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதற்கு தெளிவான ஆதாரமாகும்.
இறுதியாக டமஸ்கஸ் நகரில் தனது இறுதி மூச்சு வரை இறைஞானப் பணியில் ஈடுபட்டார்கள். அதிகமான தத்துவ நூல்களை இயற்றினார்கள். மக்களுக்கு இறைவன் சமூகம் செல்லும் வழிகளைத் தெளிவு படுத்தினார்கள்.
ஹிஜ்ரீ 638 றபீஉனில் ஆகிர் மாதம் பிறை 22ல் வபாத்தானதாகவும், பிறை 28ல் வபாத்தானதாகவும் இரண்டு கருத்துக்கள் கூறப்படுகின்றன.
இவர்களின் ஜனாஸா நல்லடக்கத்தில் பல்லாயிரம் தலைவர்கள், அமைச்சர்கள், உலமாக்கள் கலந்து கொண்டனர். டமஸ்கஸ்ஸில் வாழ்ந்த அனைத்து மக்களும் இவர்களின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டனர். வியாபாரிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் தங்களின் கடைகளை மூடி தங்களின் துக்கத்தை வெளிப்படுத்தினர்.
இறுதியாக டமஸ்கஸ்ஸிலுள்ள காஸியூன் மலையடி வாரத்திலுள்ள அஸ்ஸாலிஹிய்யஹ் என்ற இடத்திலுள்ள ஓர் பள்ளிவாயலில் இவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
இவர்களின் றவ்ழஹ் ஷரீபஹ்வின் மேல் பாரிய கட்டிடம் கட்டப்பட்டது. இன்று வரை அவர்களின் றவ்ழஹ் ஸரீபஹ் மக்களால் ஸியாறத் செய்யப்படுகின்றது. அவர்களின் றவ்ழஹ்வை நாடி வரக் கூடிய மக்கள் தங்களின் தேவைகளை முன்வைத்து, அவர்களைக் கொண்டு இறைவனிடம் உதவி தேடுகின்றார்கள்.
அல்லாஹு ஸுப்ஹானஹுவ்வதஆலா ஷெய்ஹுல் அக்பர் நாயகத்தின் பொருட்டைக் கொண்டு எங்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பானாக!
ஆமீன்!
குறிப்பு : இக்கட்டுரையில் கூறப்பட்ட விடயங்கள் அனைத்தும் “அல்யவாகீத் அல் ஜவாஹிர், மனாகிபுப்னி அறபீ, துர்ஜுமானுல் அஷ்வாக்” போன்ற கிரந்தங்களில் இருந்து திரட்டப்பட்டவையாகும்.
அஷ்ஷெய்ஹுல் அக்பர், வல் மிஸ்குல் அத்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ் அன்னவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.