Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்படித்த பண்டிதர்களுக்கும், பதவியிலுள்ளவர்களுக்கும் இறை ஞானம் தலைக் கேறாமல் இருப்பதேன்? நக்கு' தின்பதற்கும் 'நஸீப்' வேண்டும்!

படித்த பண்டிதர்களுக்கும், பதவியிலுள்ளவர்களுக்கும் இறை ஞானம் தலைக் கேறாமல் இருப்பதேன்? நக்கு’ தின்பதற்கும் ‘நஸீப்’ வேண்டும்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
 
இதற்கான காரணம் தொடர்பாக நான் – இந்த அடிமை – ஆய்வு செய்த வகையில் அல்லாஹ் இவர்களுக்கு “ஸஆதத்” நற் பாக்கியத்தை நாடவில்லை என்ற முடிவே எனக்கு கிடைத்தது.
 
ஏனெனில் பொதுவாகப் படிப்பறிவும், விவேகமும் அறவே இல்லாத அன்றாடம் கூலித் தொழில் செய்பவர்களுக்கும், சந்தைகளிலும், சந்திகளிலும், மனிதர்களின் நடை பாதைகளிலும் தேங்காய், மாங்காய் வியாபாரம் செய்யும் ஏழைகளுக்கும் இறைஞானம், மற்றும் ஸூபிஸ தத்துவங்களும் விளங்கும் நிலையில் படித்த பண்டிதர்கள் பலருக்கும், பட்டம் பதவியிலுள்ள பலருக்கும் இறைஞானம் தலைக்கு ஏறாமல் இருப்பதேன்?

இப்படியொரு கேள்வி நீண்ட காலமாக என் தலையை துளைத்துக் கொண்டிருந்தது. இதற்கு விடை கிடைத்தாலும் கூட இது சரியான விடைதானா என்ற இன்னொரு கேள்வியும் என் தலையில் ஊர்ந்து கொண்டுதானிருக்கிறது.
 
இன்று (22.12.2020) அதிகாலை ஸுப்ஹ் தொழுகைக்கு சற்று முன் யாரோ ஒருவர் என் தலையில் மோதிர விரலால் குட்டி விடை சரிதான், இதைப் பிறருக்கும் விளக்கமாகச் சொல்லிவிடு என்று சொன்னது போலிருந்தது. எழுந்து “ஸுப்ஹ்” தொழுதுவிட்டு எழுதுகோலை எடுத்தேன்.
 
மேட்டு நிலம் நோக்கி வெள்ளம் ஏறாது!
 
மேட்டு நிலம் என்பது கர்வம், மமதை, ஆணவம், புறப் பெருமை, அகப் பெருமை முதலான அசூசிகள் படிந்த “கல்பு” என்ற உள்ளத்தையே குறிக்கும்.
 
ஆன்மிகக் கவிஞர்களில் ஒருவர் பின்வருமாறு கூறியுள்ளார்.
 
اَلْعِلْمُ حَرْبٌ لِلْفَتَى الْمُتَعَالِيْ – كَالسَّيْلِ حَرْبٌ لِلْمَكَانِ الْعَالِيْ
மேட்டு நிலம் நோக்கி வெள்ளம் ஏறாதது போல் கர்வம், பெருமை, மமதை, அகங்காரம், ஆணவம், பதவி மோகம் போன்ற அசூசிகள் குடி கொண்டுள்ள உள்ளத்தை நோக்கி அறிவு ஞானம் என்ற வெள்ளமும் ஏறாது. இக்கவிஞர் தாயிடம் பால் குடித்துள்ளார் போலும். وَللهِ دَرُّ الشَّاعِرِ கவிஞரின் தத்துவம் நூறு வீதம் சரியானதே! அன்று அவர் சொன்ன தத்துவம் இன்று நிதர்சனமானது.
 
قال الله تعالى فى الحديث القدسيّ ‘اَلْعَظَمَةُ إِزَارِيْ وَالْكِبْرِيَاءُ رِدَائِيْ فَمَنْ نَازَعَنِيْ فِيْهِمَا قَصَمْتُهُ فِى النَّارِ فَلَا أُبَالِيْ ‘
“பெருமை என்பது எனது “யூனிபோம்” – எனது வேஷ்டி – சாறம் -. வலுப்பம் என்பது எனது சால்வை. எவனாவது இவ்விரண்டும் தன்னுடையதென்று என்னுடன் தர்க்கம் செய்து கொண்டானாயின் அவனை நான் நரகில் எறிந்து விடுவேன். அதைப் பொருட்படுத்த மாட்டேன்” என்பது இறை வாக்கு. “ஹதீதுக் குத்ஸீ” இறைவனின் இவ்வாக்கு மாறாது. எவராலும் மாற்றவும் முடியாது. பெருமை, மமதை, ஆணவம், அகங்காரம், பதவி மோகம் என்பவை யாவும் எனக்குரியவையாகும். எவனாவதொருவன் இவை தனக்குரியவை என்று அடம் பிடித்தானாயின் நான் அவனை நரகில் எறிந்து விடுவேன். எனதடியானை நரகில் எறிந்து விட்டேனே! என்று கவலைப்பட மாட்டேன். எனது “யூனிபோம்” எனக்கு மட்டும் உரியதேயாகும். அதை இன்னொருவன் தன்னுடையதென்று அடம் பிடித்தானாயின் அவனை நரகில் எறிந்து விட்டு நிம்மதி பெறுவது தவிர வேறு எனக்கு வழியில்லை.
 
நானே مَالِكُ الْمُلْكِ அரசர்களின் அரசன், நானே அனைத்திற்கும் சொந்தக் காரன். வானம், பூமி, மலை, கடல், நதி போன்றவை மட்டும்தான் எனக்குச் சொந்தமானவை என்று எண் சான் உடலைக் கொண்ட இந்த “இன்ஸான்” மனிதன் கனவு காண்கின்றான். நிச்சயமாக அவன் கடும் மடையானாகவும், அநீதியாளனாகவும் உள்ளான். إِنَّهُ كَانَ ظَلُوْمًا جَهُوْلًا இது இறை ஆணை.
 
இந்த மனிதன் மட்டும் எனக்குச் சொந்தமானவனல்ல. அவனும், அவன் மனைவி மக்களும், அவன் தன்னுடைமை என்று கூறும் யாவும் எனக்குச் சொந்தமானவையே. நான் அவனுக்கு அன்பளிப்பாக கொடுத்தவையே! அவன் எனது நிலத்திற்கு கள்ள உறுதி முடித்து வைத்துக் கொண்டு தன்னுடையதென்று சொல்கிறான். இதனால் தான் அவன் – மனிதன் – மடையனென்றும், அநீதியாளன் என்றும் நான் கூறினேன். இத்தகைய ஒருவனை நான் சும்மா விட்டு வைக்க மாட்டேன். மறுமை என்று ஒரு நாள் வரும். அன்று அனைத்து மக்களையும், மகுடாதிபதிகளையும், மன்னர்களையும், சனாதிபதிகளையும், மந்திரிகளையும், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், சகல துறை சார்ந்த அதிகாரிகளையும் அடக்கியாள்பவன் நானே! என்னையன்றி வேறெவருக்கும் ஆட்சியதிகாரம் இன்றுமில்லை, அன்றுமில்லை. அன்று நான் அனைத்து ஆட்சியாளர்களையும் “மஹ்ஷர்” மைதானத்தில் அணியாய் நிறுத்தி لِمَنِ الْمُلْكُ الْيَوْمَ இன்று ஆட்சி யார் கையில் என்று கர்ஜிப்பேன்? அனைவரும் ஒரே குரலில் للهِ الْوَاحِدِ الْقَهَّارِ அடக்கியாளும் வல்ல அல்லாஹ்வுக்கே என்று சொல்வார்கள். என்னை அசைக்கவும் முடியாது. உசுப்பவும் முடியாதென்று மார்தட்டி வாழ்ந்த அனைவரும் என் காலடியில் மண்டியிட்டு கிடப்பார்கள்.
 
ஆகையால், இவ்வுலகில் ஆணவம், அகங்காரம், பெருமை, மமதை, பதவி மோகம் போன்ற அசுத்தங்களைத் தலைமேல் சுமந்து வாழும் எவருக்கும் என்னைக் காட்டவுமாட்டேன். என்னைப் பற்றிய ஞானத்தை வழங்கவுமாட்டேன் என்றதினால்தான் பண முதலைகளும், பதவிப் பேய் பிடித்தவர்களும் இறை ஞானம் தலைக்கேறாமல் மிருகமாய் வாழ்கிறார்கள்.
 
ஏழைகளோ, இன, மத, மொழி வெறி இல்லாதவர்களோ பெருமை, மமதை, அகங்காரம், ஆணவம் எதுவுமின்றி வாழ்வதினால்தான் இறை ஞானம் பெற்று நிம்மதியாக வாழ்கிறார்கள். இவைதான் அடிப்படைக் காரணங்களாகும்.
 
இதயங்களை சுத்திகரிப்போம்.
இறை ஞானம் பெற்று இறையடிமைகளாய் வாழ்வோம்.
 
எஜமானே! குணங்குடி மஸ்தானே! உண்மை நிலை இவ்வாறிருக்கும் போது, எவருடைமையையும் எடுத்து தம்முடைமை என்பவர்க்கு கப்றில் வரும் துணையே கண்ணே றஹ்மானே! என்று கள்ள உறுதி முடித்தவர்களுக்கு ஆதரவாகப் பாடியுள்ளீர்களே! ஏன்?
 
இவ்வாறு கேட்டதற்காக என்னை மன்னியுங்கள். நான் “ஜலாலில்” இருந்து எழுதிவிட்டேன். நீங்களோ “ஜமாலில்” இருந்து பாடிவிட்டீர்கள்! இரண்டும் சரிதான். இல்லையா?
 
فِرَّ مِنَ الشَّرَفِ يَتْبَعُكَ الشَّرَفُ
கௌரவத்தைக் கண்டு ஓடு
கௌரவம் உன்னைத் தேடி வரும்.
 
குறிப்பு: “நக்கு” நாக்கினால் தடவுதல். பாசத்தால் பசு தன் கன்றை நக்கியது. சாப்பிட்ட பின் விரல்களை நக்குதல் இஸ்லாமிய உயர் பண்பு. இச் சொல் இலங்கையில் சில பகுதிகளில் விருந்துக்கு அழைக்கப்படாமல் விருந்து வீட்டுக்குச் சென்று உண்பதைக் குறிக்கும். “நக்குத் தின்னும் நாயே” என்று சொல்வதுண்டு.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments