“ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கையில் என்னையும், உங்களையும் அல்லாஹ் வாழ வைத்துக் கொண்டிருப்பதற்காக நாமனைவரும் அவனைப் புகழ்வதற்கும், நன்றி சொல்வதற்கும் கடமைப்பட்டவர்கள் என்பதை நாம் மறந்து விடாமல் செயல்படுவோம். அல்ஹம்து லில்லாஹ்.
“அஸ்ஸலாதுன் நாரிய்யஹ்” என்ற பெயரில் ஒரு “ஸலவாத்” உண்டு. இந்த “ஸலவாத்” தேவைகள் நிறைவேறுவதற்காகவும், கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை கனவிலும், விழிப்பிலும் காண்பதற்காகவும் உலகில் வாழ்கின்ற “ஸுன்னத் ஜமாஅத்” கொள்கைவாதிகள் ஓதி வருகின்றனர்.
இந்த “ஸலவாத்” அல் இமாமுல் ஜலீல் அஹ்மத் கபீர் அர் ரிபாஈ றழியல்லாஹு அன்ஹு அவர்களால் இயற்றப்பட்டதென்று சில குறிப்புக்கள் கூறுகின்றன.
இது தொடர்பாக இலங்கையிலும், இந்தியாவிலும், மற்றும் நான் சென்ற அறபு நாடுகளிலும் சந்தித்த மார்க்க மேதைகளிற் பலரிடம் கேட்டிருக்கிறேன். அவர்களிற் சிலர் எழுதியவர் யாரென்று திட்டமாகத் தெரியாதென்று சொன்னார்கள். இன்னும் பலர் நான் மேலே குறிப்பிட்டது போல் ரிபாஇய்யா தரீகாவின் தாபகரும், “கறாமாத்” அற்புதக் கடலும், பிரசித்தி பெற்ற நான்கு “குத்பு”மார்களில் ஒருவருமான சங்கைக்குரிய அஹ்மத் கபீர் ரிபாஈ நாயகம் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் இயற்றியதென்றும் கூறினார்கள்.
யாரால் இயற்றப்பட்டதாயிருந்தாலும் இதை ஓதலாமா என்ற கேள்விக்கு “ஸுன்னத் ஜமாஅத்” உலமாஉகளில் கல்வி ஞானம் உள்ளவர்கள் ஆம் ஓதலாம் என்றே பதில் கூறுவார்கள். விபரங்கள், விளக்கங்கள் தெரியாத, வஹ்ஹாபிகளுடனும், அவர்கள் போன்ற வழிகேடான கொள்கையுடையோருடனும் தொடர்புள்ள, பெற்றிக்கும், மெயினுக்கும் பாடுபவர்கள் கேள்வி கேட்பவர்களின் பொருளாதார நிலைக் கேற்றவாறு பதில் கூறுவர். ஏனெனில் உலமாஉகளில் 75 வீதமானோர் “மிஸ்கீன்”கள் அல்லது “புகறாஉ”களேயாவர்.
இலங்கை நாட்டில் இவ்வழக்கம் தென் மாகாணத்திலும், மேல் மாகாணத்திலுமே நூறு வீதம் இருந்து வந்தது. எனினும் வஹ்ஹாபிகளின் காற்றை சுவாசித்தவர்கள், வஹ்ஹாபிஸக் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பாதைசாரிகளின் செருப்பான பின் 25 வீதம் இவ்வழக்கம் குறைந்துவிட்டது.
இந்த “ஸலவாத்” ஒரு தரம் ஓதினாற் கூட அதற்கான நன்மை கிடைக்கும். ஆயினும் ஒரு “ஹாஜத்” தேவையை “நிய்யத்” மனதிற் கொண்டு ஓதுவதாயின் இதை இயற்றிய மகான் சொன்னது போல் 4444 தரம் ஓத வேண்டும்.
இதை ஓதத் தொடங்கினால் முடிவதற்குள் ஓதுபவர் எவருடனும் பேசுவதோ, உண்பதோ, குடிப்பதோ கூடாது. தேவையேற்படின் நீர் மட்டும் அருந்தலாம். சர்பத், பாலூதா போன்ற “ஜூஸ்” பானங்கள் நீரில் சேரும். சிகரட் மன்னன் யாராவது ஓதுவாராயின் அவர் அதை தவிர்த்துக் கொள்வது கடமையாகும்.
ஒருவர் மட்டும் ஓதுவது சாத்தியக் குறைவாக இருந்தால் பலர் பங்கிட்டு ஓதவும் முடியும். எனினும் ஓதுகின்றவர்கள் அறபு எழுத்துக்களை உரிய முறைப்படி மொழியக் கூடியவர்களாயிருத்தல் கடமை. இதேபோல் ஓதுபவர்கள் மார்க்கப் பற்றுள்ளவர்களாகவும் இருத்தல் வேண்டும். காலையில் ஸுன்னீயாகவும், மாலையில் வஹ்ஹாபீயாகவும் நடிப்பவர்கள் ஓதுவது கூடாது.
தேவை நிறைவேற அல்லது நேர்ச்சையை நிறைவேற்ற ஓதுவதாயின் 4444 தரமும், கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களைக் காண்பதற்காக ஓதுவதாயின் குறைந்தது 100 தரமாவது ஓதுதல் வேண்டும்.
ஓதுமுன் “வுழூ” வெளிச் சுத்தம் செய்து கொள்வதும், “இஸ்திகாறா” “நிய்யத்” நாட்டத்துடன் இரண்டு “றக்அத் – ஸுன்னத்” தொழுவதும் விரும்பத்தக்கது. ஓதுகின்ற ஒருவர் ஓதி முடிப்பதற்குள் மல, சலம் கழிக்க வேண்டிய அவசியமேற்பட்டால் அதற்கு சலுகை உண்டு. முடிந்த பின் தொடர்ந்து ஓதலாம். ஓதியதை மீண்டும் ஓதத் தேவையில்லை.
இதை ஓதுவதற்கு ஒரு பெரிய மனிதனின் அனுமதி அவசியமில்லை. ஆயினும் பெற்றுக் கொள்வது சிறந்ததே. எனினும் சிலரைப் பொறுத்த மட்டில் அனுமதியின்றி ஓதுவதால் சில தாக்கம் ஏற்படவும் சாத்தியம் உண்டு.
வெலிகாமத்தைச் சேர்ந்த எனது நண்பர் மர்ஹூம் மௌலவீ HM உத்மான் பஹ்ஜீ அவர்கள் அனுமதியின்றி ஓதி வந்ததாகவும், அதைத் தொடர்ந்து அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும், பல வைத்தியர்களிடம் வைத்தியம் செய்தும் சுகம் கிடைக்காமற் போனதாகவும், இறுதியில் இந்தியாவிலிருந்து வந்த ஒரு மகானிடம் இது பற்றிக் கேட்டதாகவும், அவர் “ஸலாதுன் நாரிய்யஹ்” ஓதும் வழக்கம் உண்டா என்று அவரிடம் கேட்டதாகவும், ஆம் என்று சொன்ன பின் அதை விட்டு விடுமாறு பணித்ததாகவும், அதைத் தொடர்ந்து சுகம் கிடைத்ததாகவும் அவர் என்னிடம் கூறினார்.
வஹ்ஹாபிகளுக்கு “அஸ்ஸலாதுல் இப்றாஹீமிய்யஹ்” தவிர வேறு எந்த ஒரு “ஸலவாத்”தும் பிடிக்காது. அவ்லியாஉகள், “மஷாயிகு”மார்கள் எழுதிய “ஸலவாத்” ஒன்றும் பிடிக்காது. மலத்திலிருந்து நறு மணத்தை எதிர் பார்க்க முடியாதல்லவா? அவர்கள் சரிகண்ட “ஸலவாத் இப்றாஹீமிய்யா”வைக் கூட அவர்கள் ஓதமாட்டார்கள். அவர்கள் இயல்பாகவே வணக்க வழிபாட்டில் விருப்பம் குறைந்தவர்கள் என்பதை வஹ்ஹாபிஸ நெருப்பிலிருந்து மதம் மாறி ஸுன்னிஸ நீருக்கு வந்தவர்கள் மூலம் அறிய முடிந்தது.
இந்த “ஸலவாத்”, “நாரிய்யஹ்” நெருப்பைச் சார்ந்தது என்ற பொருள் கொண்டதாகும். இவ்வாறு இதற்குப் பெயர் வந்ததற்கான காரணம் அது “பித்னா” குழப்பம் என்ற நெருப்பை அணைத்து விடுவதினால்தான்.
கூலி பேசி ஓதலாமா?
யாராவது ஓதுமாறு சொன்னால் அவரிடம் கூலி பேசாமல் ஓதி அவர் கொடுக்கும் அன்பளிப்பை பெற்றுக் கொள்ளவும் முடியும். கூலி பேசி ஓதவும் முடியும். கூலி போசாமல் ஓதிவிட்டு அவர் கொடுக்கும் அன்பளிப்பு அவருக்குத் திருப்தியில்லாமல் போனால் அதை அவர் பிறரிடம் குறையாக சொல்லிக் காட்டுவதால் அவர்தான் பாவியாகிவிடுவார். “ஸலவாத்” ஆயினும், திருக்குர்ஆன் ஆயினும் கூலி பேசி ஓதுவதற்கு “புகாரீ ஹதீது” ஆதாரமாக உள்ளது. (ஹதீது இல: )
‘ஸலாவாத்’தின் பொருள்.
யா அல்லாஹ்! எங்களின் தலைவர் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மீது பூரணமான, குறையில்லாத ஸலவாத், ஸலாம் சொல்வாயாக! அவர்களின் பொருட்டால்தான் முடிச்சுகள் அவிழ்ந்து விடுகின்றன. கஷ்டங்கள் நீங்குகின்றன. தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. ஆசை வைக்கப்பட்டவை கிடைக்கின்றன. நல்ல முடிவுகளும் கிடைக்கின்றன. அவர்களின் சங்கைமிகு திரு முகத்தின் – தாத் – தின் பொருட்டு கொண்டே மேகம் மழை பொழிகின்றது. இன்னும் அவர்களின் தோழர்கள், கிளையார் மீதும் “ஸலவாத்” “ஸலாம்” சொல்வாயாக! ஒவ்வொரு நொடியினதும், ஒவ்வொரு சுவாசத்தினதும் எண்ணிக்கைப் படியும், நீ எத்தனை வஸ்த்துக்களை அறிந்துள்ளாயோ அத்தனை வஸ்த்துக்களின் எண்ணிக்கையின் படியும் “ஸலவாத் ஸலாம்” சொல்வாயாக!
“ஸலவாத்”தில் வந்துள்ள نفس என்ற சொல்லில் உள்ள ف – பேF என்ற எழுத்துக்கு “பத்ஹ்” குறியிட்டு نَفَسٍ என்றும், “ஸுகூன்” குறியிட்டு نَفْسٍ என்றும் சொல்ல முடியும். முந்தினதின்படி சுவாசம் என்றும், இரண்டாவதின்படி ஆன்மா என்றும் பொருள் வரும். ஒரு நாளில் ஒரு மனிதன் இறை ஞானிகளின் கணிப்பின் படி 21600 தரம் சுவாசிக்கிறான். முந்தினதின் படி மொழிதல் மிக நல்லது.
اللهم صَلِّ صَلَاةً كَامِلَةً وَسَلِّمْ سَلَامًا تَامًّاعَلَى سَيِّدِنَا مُحَمَّدِ نِ الَّذِيْ تَنْحَلُّ بِهِ الْعُقَدُ وَتَنْفَرِجُ بِهِ الْكُرَبُ وَتُقْضَى بِهِ الْحَوَائِجُ وَتُنَالُ بِهِ الرَّغَائِبُ وَحُسْنُ الْخَوَاتِمِ وَيُسْتَسْقَى الْغَمَامُ بِوَجْهِهِ الْكَرِيْمِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ فِيْ كُلِّ لَمْحَةٍ وَنَفَسٍ بِعَدَدِ كُلِّ مَعْلُوْمٍ لَكَ.
குறிப்பு: ஆன்மிகத்தோடும், இறை ஞான அகமியங்களோடும் தொடர்புள்ள சொற்களைப் பயன்படுத்தி அவ்லியாஉகளால் இயற்றப்பட்ட “ஸலவாத்”துகள் எம்மிடமுள்ளன. இன்ஷா அல்லாஹ் வெளிவரும்.