தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
சுத்தம், சுகாதாரம் இரண்டிற்கும் இஸ்லாம் வழிகாட்டியுள்ளது போல் வேறெந்த மதமும் வழி காட்டியுள்ளதாக நான் அறியவில்லை.
ذكرالإمام النووي رحمه الله أنّ المُستَحَبَّ منه أن يَبْدَأَ باليدين قبل الرجلين، فيَبْتَدِأُ بِمُسَبِّحَةِ يدِه اليُمنَى ثم الوُسطَى ثم الْبِنْصَرِ ثم الْخِنْصَرِ ثم الإبهامِ، ثم يَعودُ إلى الْيُسرَى، فيَبْدَأُ بِخِنْصَرِها ثم بِبِنْصَرِها إلى آخرها، ثم يعود إلى الرجل اليُمنَى، فَيَبْدَأُ بِخِنْصَرِها ويَخْتِمُ بِخِنْصَرِ الرجل اليُسْرَى، (روح البيان. ص٢٢٣)
ஒரு மனிதன் உடல் சுத்தமானவனாயும், உளம் சுத்தமானவனாயும் இருக்க வேண்டுமென்று இஸ்லாம் விரும்புகிறது. இவ்விரு சுத்தங்களுக்கும் அது வழி காட்டுகிறது.
இஸ்லாம் மார்க்கத்தைக் கொண்டு வந்த எம்பெருமானார் ஏந்தல் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் இவ்விரு சுத்தங்கள் தொடர்பாக எந்த ஒரு சமயத்திலும் சொல்லப்படாத, ஆனால் மக்களின் இகபர இரு வாழ்வுக்கும் தேவையான அனைத்தையும் சொல்லிச் சென்று விட்டார்கள். எடுத்துக் காட்டுக்காக சில விடயங்களைக் கூறுகின்றேன்.
மனிதன் தனது கை, கால்களில் உள்ள நகங்களை அளவுக்கு அதிகமாக வளர விடாமல் வெட்டிக் கொள்ள வேண்டும். இது இஸ்லாம் விரும்புகின்ற ஒரு விடயம் மட்டுமன்றி சுகாதாரமும் இதை வலியுறுத்துகிறது. எனினும் இஸ்லாம் தவிர வேறெந்த ஒரு சமயத்திலும் இவ்வாறுதான் நகம் வெட்ட வேண்டுமென்று ஒரு விதி கூறப்பட்டிருப்பதாக நான் அறிந்ததில்லை. ஆயினும் இஸ்லாம் இதற்கும் ஒரு விதி முறையை கூறியிருப்பது மெச்சத்தக்கதாகும்.
எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் எவ்வாறு நகம் வெட்டினார்கள் என்பதை நேரில் கண்ட நபீ தோழர்கள் சொன்ன தகவல்களை ஆதாரங்களாகக் கொண்டு இமாம் நவவீயும், ஏனைய சட்ட வல்லுனர்களும் தெளிவு படுத்தி சட்டமாக்கியுள்ளார்கள்.
“ஷாபிஈ மத்ஹப்” சட்டக்கலை மேதை இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
அறபுப் பகுதியின் சாரம்.
நகம் வெட்டும் போது கால்களுக்கு முன்னர் இரு கைகளிலும் வெட்ட வேண்டும். இது “ஸுன்னத்” நபீ வழியாகும். முதலில் வலது கை சுட்டு விரல் – ஆள் காட்டி விரலில் இருந்து தொடங்கி நடுவிரல், அதையடுத்த விரல், அதையடுத்த சின்ன விரல், அதையடுத்து பெரு விரல் நகங்களை வெட்டி முடித்தபின் இடது கை சின்ன விரல், அதையடுத்து மோதிர விரல், தொடராக பெரு விரல் உள்ளிட்ட நகங்களை வெட்டி முடித்த பின் வலது கால் சின்ன விரலில் இருந்து தொடராக இடது கால் சின்ன விரல் வரை நகங்களை வெட்டி முடிக்க வேண்டும்.
வெட்டி முடிந்த பின் அனைத்து நகங்களையும் மண்ணில் புதைக்க வேண்டும். மண் இல்லாத இடமாயின் ஒரு தாளில் மறைத்து எங்காவது மறைத்து விட வேண்டும். அதன் பின் இரு கைகளையும், கால்களையும் கழுவிக் கொள்ள வேண்டும்.
பற்களால் நகம் கடிக்கும் வழக்கம் பலரிடம் உண்டு. சிலர் கை நகங்களை கடிப்பது போல் காலைத் தூக்கி வாயில் வைத்துக் கொண்டு கால் நகங்களையும் கடிப்பர். சிறு பிள்ளைகள் இவ்வாறு செய்தல் வியப்பானதல்ல. எனினும் சுமார் எழுபது வயதைக் கடந்த ஒரு ஹழ்றத் அவர் கால் நகத்தை பற்களால் கடிப்பது கண்டு நான் வியப்படைந்திருக்கிறேன். அவரும் என்னைக் கண்டு வெட்கித் தலை குனிந்துள்ளார். இதேபோல் ஐம்பது வயதைக் கடந்தவர்கள் பலர் செய்ததையும் நான் கண்டுள்ளேன். இவ்வாறு செய்தல் ஷெய்தானின் – தீயவனின் வழக்கமென்று மகான்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
ஒரு ஞான குரு, அல்லது “கறாமத்”| அற்புதமுள்ள வலிய்யுல்லாஹ் ஒருவர் நகம் வெட்டிக் கொண்டிருப்பதை ஒருவர் கண்டு அருள் பெறும் நோக்கத்தோடு அதில் ஒன்றை அல்லது சிலதை கேட்டால் கொடுப்பது நபீ வழியைச் சேர்ந்ததாகும். இவ்வாறு தலை முடி, தாடி முடிகள் கொடுப்பதுமாகும்.
ஒரு சமயம் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் தலை முடியை முற்றாகக் களைந்து தோழர் அபூ தல்ஹா றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொடுத்து இதை தோழர்களுக்கிடையில் பங்கு வைத்து விடுமாறு அவரைப் பணித்ததாகவும், அவர் அவ்வாறே செய்ததாகவும் ஹதீது நூல்களில் ஆதாரங்கள் உள்ளன.
முடியையோ, நகத்தையோ ஒரு “ஷெய்கு” ஞான குருவிடம், அல்லது ஒரு பெரிய மனிதனிடம் மட்டும்தான் எடுக்க வேண்டுமென்பது கருத்தல்ல. அருள் பெறாவிட்டாலும்கூட ஒருவர் தனக்கு அன்புக்குரிய ஒருவரிடம் நினைவுச் சின்னமாக வைத்திருக்க எடுப்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன. இது தொடர்பாக “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” என்ற நூலில் விபரமாக அறிந்து கொள்ளலாம்.
சிலர் நாகரீகம் என்று கருதி கை விரல் நகங்களை நீளமாக வளர்க்கிறார்கள். இவ்வாறு செய்தல் சில சமயம் “வுழூ” நிறைவேறாமல் போவதற்கும் வழியாகிவிடும். “வுழூ” நிறைவேறாவிட்டால் தொழுகையும் நிறைவேறாது. இவ்வழக்கம் இளம் பெண்களிடம் அதிகம் உண்டு. அவர்கள் இதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் அழகைக் கருத்திற் கொண்டு கை, கால் நகங்களுக்கு அழகு சாதனம் பாவிப்பது நீர் உடலைச் சென்றடையாமல் தடுக்குமாயின் அவர்களின் “வுழூ”வும், கடமையான குளிப்பும் நிறைவேறாது. தொழுகையும் நிறைவேறாமற் போய்விடும். அழகைக் கருத்திற் கொண்டு பெண்கள் தமது உதடுகளுக்கு சாயம் பூசுவதும் இவ்வாறுதான். எனினும் மருதோன்றிச் சாயம் நீரைத் தடுக்காது.
நின்ற நிலையில் சலம் கழித்தல்.
ஆண்களோ, பெண்களோ நின்று கொண்டு சலம் கழிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். குறிப்பாக பெண்கள் தவிர்க்க வேண்டும். “றவ்சர்” காற்சட்டை அணியும் வழக்கமுள்ளவர்கள் பாதுகாப்புக் கருதி நின்று கொண்டு சலம் கழிபப்பதற்கு அனுமதி இருந்தாலும் கூட அதனால் உடலிலோ, உடமையிலோ சலம் ஒரு சொட்டேனும் படாமல் பாதுகாப்பது கடமையாகும்.
சுத்தம், சுகாதாரம் பேணுவதைக் கருத்திற் கொண்டு நகம் வெட்டுதல் போன்றதே கமுக்கட்டு முடி, அப முடி களைவதுமாகும்.
(தொடரும்)