தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
கூட்டு “துஆ” கூடாதென்று ஒரு கூட்டம் கூறுகிறது. இவர்களில் மௌலவீமார்களும் உள்ளனர். மௌலானாமார்களும் உள்ளனர். பொது சனங்களும் உள்ளனர். இன்னொரு கூட்டம் அது கூடுமென்று கூறுகிறது. இவர்களிலும் மேலே எழுதியது போல் மௌலவீமார், மௌலானாமார், பொது மக்கள் எல்லோரும் உள்ளனர்.
“கூட்டு துஆ” ஓதக் கூடாதென்று கூறுபவர்களின் உருக்குத் துரும்பு போன்ற ஆதாரம் என்னவெனில் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கூட்டு துஆ ஓதவில்லையாதலால் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் செய்யாத ஒன்றை நாம் செய்வது “பித்அத்” ஆகும். “பித்அத்” எல்லாமே வழிகேடாகும். வழிகேடெல்லாம் நரகம் செல்லும் என்பதாகும்.
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “கூட்டு துஆ” ஓதவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். இதில் மாற்றமில்லை. நபீ பெருமான் செய்யாத ஒன்றைச் செய்வது “பித்அத்” என்பதையும் நாம் ஏற்றுக் கொள்கின்றோம். இதிலும் எந்த ஒரு மாற்றமும் இல்லை.
ஆயினும் இங்கு இரண்டு விடயங்களை கவனத்திற் கொள்ள வேண்டும்.
ஒன்று – நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் செய்யாத, செய்யுமாறு சொல்லாத பல விடயங்களை நபீ தோழர்கள் செய்துள்ளார்கள் என்பதற்கு “ஸஹீஹ்” பலமான ஹதீதுகள் ஆதாரமாக உள்ளன.
அதேபோல் நான்கு கலீபாக்களும் செய்துள்ளார்கள் என்பதற்கும் பலமான ஆதாரங்கள் நிறைய உள்ளன. அவையாவையும் இங்கு எழுதி நேரத்தையும், தாளையும், மையையும் வீணாக்க நான் விரும்பவில்லை. இந்த விபரம் முழு ஆதாரங்களுடனும் நான் எழுதி வெளியிட்ட “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. தேவையானோர் அந்நூலை வாசித்தறிந்து கொள்ளட்டும். நூல் கிடைக்காதவர்கள் எமக்கு அறிவித்தால் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
கவனத்திற் கொள்ள வேண்டிய இரண்டாவது விடயம் என்னவெனில் கூட்டு துஆவுக்கு ஆதாரமான ஹதீதுகள் அதை மறுப்பவர்களின் கண்களுக்குத் தெரியாமல் போனதாகும். தெரியாமற் போனதென்று சொல்வதை விட அவற்றை அல்லாஹ் அவர்களின் கண்களை விட்டும் மறைத்து விட்டான் என்று சொல்வதே சிறந்ததாகும். ஏனெனில் அவர்கள் சுவர்க்கம் செல்வதை அல்லாஹ் விரும்பவில்லை போலும். நக்குத் தின்பதற்கும் “நஸீப்” வேணுமல்லவா?
கூட்டு துஆவை மறுப்பவர்களுக்கு சுவர்க்கத்தின் வழியை காட்டிக் கொடுப்பது எமது நோக்கமல்ல. எனினும் அதை ஆதரிப்பவர்கள் தடம் புரண்டுவிடாமல் இருப்பதற்காகவே எழுதுகிறோம்.
ஏனெனில் اَلنَّصِيْبُ لَا يُصِيْبُ وَلَوْ كَانَ بَيْنَ شَفَتَيْنِ ஒருவனுக்கு ஒன்று கிடைக்காதென்று அவனின் விதியில் இருந்தால் அந்த ஒன்று அவனின் இரு உதடுகளுக்கிடையில் இருந்தாலும் கிடைக்காது.
ஹதீது:
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَعِدَ الْمِنْبَرَ، فَقَالَ: «آمِينَ آمِينَ آمِينَ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ حِينَ صَعِدْتَ الْمِنْبَرَ قُلْتَ: آمِينَ آمِينَ آمِينَ، قَالَ: «إِنَّ جِبْرِيلَ أَتَانِي، فَقَالَ: مَنْ أَدْرَكَ شَهْرَ رَمَضَانَ وَلَمْ يُغْفَرْ لَهُ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِينَ، فَقُلْتُ: آمِينَ، وَمَنْ أَدْرَكَ أَبَوَيْهِ أَوْ أَحَدَهُمَا فَلَمْ يَبَرَّهُمَا، فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِينَ، فَقُلْتُ: آمِينَ، وَمَنْ ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِينَ، فَقُلْتُ: آمِينَ، رواه ابن خزيمة – 1888، وابن حبّان – 907، الترغيب والترهيب – 339)
எம்பெருமான் ஏந்தல் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் “மின்பர்” பிரசங்க மேடையில் ஏறியதும் “ஆமீன்” என்று மூன்று தரம் சொன்னார்கள். அவ்வேளை அல்லாஹ்வின் திருத் தூதரே! நீங்கள் மேடையில் ஏறி மூன்று தரம் “ஆமீன்” என்று சொன்னீர்கள். அது ஏன்? என்று கேட்கப்பட்டது. நான் மேடையில் ஏறியதும் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் என்னிடம் வந்து, (ஒருவன் புனித றமழான் மாதத்தை அடைந்து அவன் பாவம் மன்னிக்கப்படாமல் நரகம் சென்றான். அல்லாஹ் அவனைத் தூருப்படுத்துவானாக! என்று சொல்லியபின் “ஆமீன்” என்று சொல்லுங்கள் என்று எனக்குச் சொன்னார்கள். நான் ஆமீன் என்று சொன்னேன்.
அதையடுத்து ஒருவன் தனது பெற்றோர் இருவரையும், அல்லது அவர்களில் ஒருவரை அடைந்து அவர்களுக்கு நல்லது செய்யாமல் மரணித்து நரகம் சென்றான். அல்லாஹ் அவனைத் தூரப்படுத்துவானாக! என்று கூறியபின் “ஆமீன்” என்று சொல்லுங்கள் என்று எனக்குச் சொன்னார்கள். நான் “ஆமீன்” என்று சொன்னேன்.
அதையடுத்து ஒருவனிடம் உங்கள் பெயர் சொல்லப்பட்டு அவன் உங்கள் மீது “ஸலவாத்” சொல்லாமல் மரணித்து நரகம் சென்று விட்டான். அல்லாஹ் அவனைத் தூரப்படுத்துவானாக! என்று கூறிவிட்டு “ஆமீன்” என்று சொல்லுங்கள் என்று என்னிடம் சொன்னார்கள். நான் “ஆமீன்” சொன்னேன் என்று கூறினார்கள்.)
ஆதராம்: இப்னு குஸைமா – 1888, இப்னு ஹிப்பான் – 907, அத்தர்ஙீபு வத்தர்ஹீப் – 339,
அறிவிப்பு – அபூ ஹூறைறா
இந்த “ஹதீது” கூட்டு “துஆ” ஆகும் என்பதற்கான ஆதாரமாகும். இந்த ஹதீதில் மூன்று அம்சங்கள் கூறப்பட்டிருப்பது தலையுள்ளவர்களுக்கு மறைவானதல்ல. விபரம் கூறத் தேவையில்லை.
அறப்படித்த – அறையில் குறைவாகப் படித்த – தற்கால நவீன ஆய்வாளர்களிடம் இந்த ஹதீதை கூட்டு துஆவுக்கு ஆதாரமாகச் சொன்னால் ஏற்றுக் கொள்ளவும் முடியாத, மறுக்கவும் முடியாத ஆப்பிளுத்த குரங்கு போல் மாட்டிக் கொண்ட மகான்கள் (“துஆ” கேட்டது ஜிப்ரீல் தானே! நபீயல்லவே! கூட்டு துஆ கூடாதென்றுதானே நாங்கள் சொல்கின்றோம். “ஆமீன்” சொல்லக் கூடாதென்று நாம் சொல்லவில்லையே!) என்று கூறுவார்கள் என்று நான் நினைக்கிறேன்.
“கூட்டு துஆ” “பித்அத்” என்றால் அதற்கு ஆமீன் சொல்வதும் “பித்அத்” என்றுதானே சொல்ல வேண்டும். “துஆ” கேட்ட பின் “ஆமீன்” என்று சொல்லச் சொன்னவர் யார்? ஜிப்ரீல் அல்லவா? அப்படியாயின் ஜிப்ரீல் அவர்கள் தானும் “பித்அத்” செய்துவிட்டு நபீயவர்களையும் “பித்அத்” செய்யுமாறு சொல்லியுள்ளார்களே! “மலக்” என்பவர் பாவம் செய்யவுமாட்டார். பாவம் செய்யுமாறு மற்றவர்களைத் தூண்டவுமாட்டார் என்பதுதானே இஸ்லாமிய கொள்கை. மகான்களின் தடி முருங்கைத் தடிதான். முதிரைத் தடியல்ல. அது மண்ணெண்ணை “பொம்”தான். பெற்றோல் “பொம்” அல்ல. சின்னக் காயம் தான் வரும். சீவன் போகாது. அது போதும்.
ஆனாவும் தெரியாமல், அலிபும் தெரியாமலிருந்து கொண்டும், முழுக்கிறுப்பதற்கான “நிய்யத்” எப்படியென்று தெரியாமலிருந்து கொண்டும் “பித்அத்”துக்கு விளக்கம் கொடுக்க முன்வருகின்ற ஆயிஷாவையும், ஆதம் காக்காவையும் நினைத்து சிரிப்பதா? அழுவதா? நமது பெற்றோர் பலாய் – முஸீபத்துகளில் மாட்டிக் கொள்ளாமல் மரணித்துவிட்டார்களே! அது போதும். அல்ஹம்துலில்லாஹ்!