தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
எம் பெருமான் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மூலம் அல்லாஹ் வழங்கியுள்ள புனித மிகு இஸ்லாம் மார்க்கம் சுத்தம், சுகாதாரம், தத்துவம், அகமியம் அனைத்தையும் உள்வாங்கிய ஒரு மார்க்கமாகும்.
இத்தகைய இஸ்லாம் ஒரு மனிதன் எவ்வாறு சுத்தமாகவும், சுகாதாரமாகவும், தத்துவத்தையும், அகமியத்தையும் விளங்கி வாழ வேண்டுமென்பதை தெளிவாக கூறுகின்றது.
ஆணோ, பெண்ணோ சலம் கழிக்கும் போது அவர்கள் பேண வேண்டிய வழிமுறைகளையும், ஒழுக்கங்களையும் தெளிவாக விளக்கியுள்ளது.
ஆணாயினும், பெண்ணாயினும் சலம் கழிக்கும் போது அவர்கள் குந்திய வண்ணமே கழிக்க வேண்டும். நின்ற வண்ணம் கழிக்கக் கூடாதென்று வழிகாட்டியுள்ளது. குந்திய வண்ணம் சலம் கழிப்பதால் சில நண்மைகளும், நின்ற வண்ணம் கழிப்பதால் பல தீமைகளும் ஏற்படுகின்றன.
குந்திய வண்ணம் சலம் கழிப்பதற்குக் கூட ஒரு முறை உண்டு. அந்த முறை பேணி சலம் கழிப்பதால் சலத்தில் ஒரு சொட்டுக் கூட சலக் குடலில் தேங்கி நிற்காமல் எல்லாச் சலமும் வெளியேறிவிடும்.
குந்திக் கொண்டிருக்கும் போது இடது காலுக்கு அவனின் உடலுடைய முழுப்பாரத்தையும் கொடுத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் சலக்குடல் அல்லது பை நசுக்கப்பட்டு ஒரு சொட்டு சலம் கூட தேங்காமல் வெளியேறிவிடுகிறது. சலம் வெளியாகி முடிந்தவுடன் கழுவிச் சுத்தம் செய்து விடாமல் ஆண்களாயின் தமது ஆண்குறியை இடக் கை பெருவிரல், சுட்டு விரல் இரண்டைக் கொண்டும் மூன்று தரத்திற்கு மேற்படாமல் “தகர்” ஆண்குறியை இழுத்து விட வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலமும் முழுச்சலமும் வெளியேறிவிடும். அத்துடன் சத்தம் குறைத்து இரண்டொரு தரம் கனைத்துக் கொள்ள வேண்டும். பெண்களாயின் ஆண்கள் போல் செய்யாமல் வயிற்றின் அடிப்பகுதியை கையால் மூன்று தரம் சற்று அழுத்தி வயிற்றைக் கசக்குவது நல்லது. ஆண்களுக்கு அந்த வழியும் ,பெண்களுக்கு இந்த வழியும் பொருத்தமானதாகும். இவ்வாறு செய்வதாலும் சலம் ஒரு சொட்டும் தேங்கி விடாமல் வெளியேறிவிடுகிறது. இவையாவும் “ஸுன்னத்”ஆன நடைமுறையாகும். நபி வழியாகும்.
இவை முடிந்த பின் கழுவிச் சுத்தம் செய்தல் வேண்டும். இதற்கு முன் தேவையானோர் “டேலா” கட்டிக் கல் பிடித்துக் கொள்ளவும் முடியும். இது நல்ல வழிமுறைதான். இதை இக்காலத்தில் அதிகமாக முதியவர்களே அமுல் படுத்துகின்றனர்.
இங்கு சிரிக்கவும், சிந்திக்கவும் வேண்டிய ஒரு நிகழ்வை எழுதுகிறேன். இந்த நிகழ்வு எனக்கு பல இடங்களில் நடந்துள்ளன. எனினும் ஒன்றை மட்டும் எழுதுகிறேன்.
ஒரு நாட்காலை சுமார் 10 மணியளவில் அம்பாரை வழியால் பயணித்துக் கொண்டிருந்த நான் “ழுஹா” தொழுவதற்காக ஒரு பள்ளிவாயலுக்குச் சென்றேன். பள்ளிவாயல் காலியாக இருந்தது. உடல் பெருத்த, தாடி வைத்த, கரண்டை வரை “ஜுப்பா” அணிந்த ஒருவர் மட்டும் நின்றிருந்தார். நான் “ழுஹா” தொழுது கொண்டிருந்த நேரம் தேங்காய் விழுந்தது போல் மூன்று சத்தம் கேட்டது. அந்த தாடிக்கார மனிதன் காலால் தரையில் வேகமாக அடித்துக் கொண்டிருந்தார். ஒரு சிறிய கல்லை எடுத்து அதை சுவரில் மூன்று தரம் தட்டி விட்டு கட்டிக்கல் பிடித்துக் கொண்டார்.
நான் அவரை அழைத்து எதற்காக காலால் தரையில் அடித்தீர்கள் என்று கேட்டேன். அவ்வாறு செய்தால் சலம் தேங்கி நின்று விடாது என்று சொன்னார். கட்டிக்கல்லை எதற்காக சுவரில் அடித்தீர்கள் என்று கேட்டேன். கல் மட்டுமன்றி எல்லா வஸ்துக்களும் அல்லாஹ்வை “தஸ்பீஹ்” செய்கின்றன. துதிக்கின்றன. அல்லாஹ்வைத் துதிக்கும் கல்லை ஆண்குறியில் வைப்பது நல்லதல்ல. ஆகையால் அதை சுவரில் தட்டினால் அது தஸ்பீஹ் செய்வதை நிறுத்தி விடும் என்பதற்காக நான் செய்தேன். உங்களுக்கு இவ்வாறு சொல்லித்தந்தது யாரென்று கேட்டேன். ஜமாஅத்தில் போன நேரம் “அமீர்” சொல்லித் தந்தார் என்றார். நான் அவரிடம், கல் மட்டும் தஸ்பீஹ் செய்யவில்லை எல்லாப் படைப்பும் தஸ்பீஹ் செய்வதாகச் சொன்னீர்கள். அவ்வாறாயின் ஆண்குறியும் தஸ்பீஹ் செய்யுமல்லவா? அதுவும் ஒரு படைப்புத்தானே என்று கேட்டேன் அவர் ஒன்றுமே பேசவில்லை. பிறகு அவருக்கு சில விபரங்கள் சொல்லி விட்டு வந்தேன்.
நின்ற வண்ணம் சலம் கழிப்பதற்கு ஆகுமான சில இடங்கள் உள்ளன. அவற்றை இங்கு எழுதுகிறேன்.
يَنْبَغِي للإنسان أن يبُولَ قاعداً ،ويُكره قائماً لِغَيْرِ عُذْرٍ، ويَحرم إذا تَيقَّن أنّ البَولَ يُصِيْبُ بَدَنَه بسبب ذلك، فعَنْ عائشة رضي الله عنها أنها قالت: مَنْ حَدَّثَكم أنّ رسول الله صلى الله عليه وسلّم بَالَ قائماً فلا تصدقوه، ما كان يبول إلّا جالساً. رواه الخمسةُ إلّا أبا داود، وقال الترمذيّ: هو أحسنُ شيءٍ في هذا الباب وأصحُّ. ودليلُ الجواز حديث حُذيفة رضي الله عنه: أنّ النّبي صلى الله عليه وسلم انْتَهَى إلى سُباطَةِ قومٍ، فبال قائماً. رواه الجماعة. (والسباطة: ملقى التراب والقمامة)
(சுருக்கம்)
மனிதன் குந்திய வண்ணம் சலம் கழிக்க வேண்டும். காரணமின்றி நின்ற வண்ணம் சலம் கழிப்பது “மக்றூஹ்” வெறுக்கத்தக்க விடயமாகும். “ஹறாம்” அல்ல. ஆயினும் நின்ற வண்ணம் சலம் கழிப்பதால் அவனின் உடலில் சலம் படும் என்று திட்டமாக அவன் அறிந்தால் அவனுக்கு “ஹறாம்” ஆகும். ஏனெனில் சுத்தமே முக்கியம்.
ஆயிஷா நாயகி றழியல்லாஹு அன்ஹா அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். “நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் நின்ற வண்ணம் சலம் கழித்தார்கள் என்று யாராவது சொன்னால் அவனை உண்மைப் படுத்தி விடாதீர்கள். அவர்கள் உட்கார்ந்த வண்ணமேயன்றி சலம் கழிக்க வில்லை என்று கூறினார்கள்.
இந்த ஹதீது அபூ தாவூத் தவிர ஏனைய ஐவராலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் இந்த ஹதீதின் படி செயல் படுவதே சிறந்தது என்று இமாம் துர்முதீ அவர்கள் கூறியுள்ளார்கள்.
நபீ பெருமான் அவர்கள் நின்ற வண்ணம் சலம் கழித்துள்ளார்கள். என்ற ஹதீது நபீ தோழர் ஹுதைபா றழியல்லாஹு அன்ஹு அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் குப்பைகள் கொட்டப்படுகின்ற இடத்துக்கு வந்த போது நின்ற வண்ணம் சலம் கழித்தார்கள். (பலரின் அறிவிப்பு)
இவ்விரு ஹதீதுகளையும் ஏற்றுச் செயல்படுவது எவ்வாறு? அது எவ்வாறெனில் அறபு மக்களிடம் ஒரு வழக்கம் இருந்தது. அவர்களுக்கு முதுகிலுள்ள நடு முள்ளில் வலி ஏற்பட்டால் ஒரு தரமாவது நின்று சலம் கழித்தால் அது சுகமாகி விடும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் அவர்கள் நின்ற வண்ணம் சலம் கழித்தார்கள். என்றும் கருத்துக் கொள்ளலாம்.
இரண்டாவது – நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் முழங்காலின் கீழ் பக்கம் ஒரு காயம் இருந்ததால் அவர்களுக்கு உட்கார முடியாமலிருந்தது. அதனால் அவர்கள் நின்று சலம் கழித்தார்கள். என்றும் கொள்ளலாம்.
மூன்றாவது – குப்பை மேட்டில் பலவகையான குப்பைகளும், அசுத்தங்களும் இருக்கும். நபீகள் நாயகம் அங்கு வந்த போது குந்திய வண்ணம் சலம் கழிக்க அவர்களால் முடியாமற் போனதால் நின்ற வண்ணம் சலம் கழித்தார்கள். இவ்வாறான கட்டங்களில் மட்டும் நாமும் நின்ற வண்ணம் சலம் கழிக்கலாம். குற்றமாகாது.
றவ்ஸர்” காற்சட்டை உடுத்திருப்பவர்கள் நின்ற வண்ணம் சலம் கழிப்பது ஆகுமானதாயினும் உடலிலோ, உடையிலோ சலம் படாத வகையில் கவனமாக சலம் கழிக்க வேண்டும்.
மல சலம் கழித்து சுத்தம் செய்யும் விடயத்தில் ஆண்களை விட பெண்கள் மிகக் கவனமாகவும், பேணுதலாகவும் நடந்து கொள்ளுதல் அவசியம்.
மலசல கூடத்தில் பிரவேசித்தது முதல் வெளியே வரும் வரை எவருடனும் பேசுவதும் கூடாது, தனியே பேசுவதும், பாட்டுப் படிப்பதும் கூடாது. சட்டம் ஓர் இருட்டறை என்ற அடிப்படையில் இதில் ஓர் நுட்பம் உண்டு. அதாவது மலவாயால் மலம் வந்து கொண்டிருக்கும் நேரம் மட்டும் தான் தடையேயன்று உள்ளே நின்றாலும் கூட மற்ற நேரம் பேசுவது தடையல்ல. இரவில் உறங்கும் வேளை பாவிக்கும் சாறம், அல்லது ஷேட்டுகளை அசுத்தம் இல்லாது போனாலும் அதை தொழுகைக்கு பயன் படுத்துவது சிறந்ததல்ல என்பது எனது கருத்தாகும். சலம் கழித்து மறுகணமே கழுவி விடாமல் ஒரு நிமிட நேரமாவது தாமதித்து கழுவுவதே சிறந்தது. மலசல கூடத்தில் நீண்ட நேரம் தங்கியிருப்பது மூல நோய்க்கு காரணமாகும்.