தொகுப்பு: மௌலவி அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا- سورة الأحزاب
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْبَخِيلُ مَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ» مسند البزار-
அல்லாஹ்வும், அவனின் மலக்குகளும் நபீ அவர்கள் மீது “ஸலவாத்” சொல்கிறார்கள். விசுவாசிகளே நீங்களும் அவர்கள் மீது “ஸலவாத்”தும், “ஸலாமும்” சொல்வீர்களாக! (திருக்குர்ஆன் – 33-56)
“பகீல்” உலோபி – கஞ்சன் என்பவன் என் பெயர் கேட்டு “ஸலவாத்” சொல்லாதவனேயாவான். (முஸ்னதுல் பஸ்ஸார்)
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மீது “ஸலவாத்” சொல்வதும், “ஸலாம்” சொல்வதும் நிகரற்ற வணக்கமாகும். இது நிகரில்லா வணக்கம் என்பதற்கான காரணம் அல்லாஹ்வும் அவர்கள் மீது “ஸலவாத்” சொல்வதேயாகும்.
அல்லாஹ் அடியார்களை தொழுமாறு சொல்லியுள்ளான். ஆனால் அவன் தொழுவதில்லை. நோன்பு நோற்குமாறு சொல்லியுள்ளான். ஆனால் அவன் நோற்பதில்லை. இவைபோல் பல்வேறு நல்லமல்கள் கொண்டு மக்களைப் பணித்துள்ளானேயன்றி அவன் எந்த அமலும் செய்வதில்லை. அவன் “அமல்” வணக்கம் என்று செய்வது “ஸலவாத்” சொல்வது மட்டுமேயாகும்.
இத்திரு வசனம் வியக்கத்தக்க சில உண்மைகளையும், அகமியங்களையும் உள்வாங்கியதாகும். அவற்றை எழுத வேண்டிய நேரத்தில் எழுதுவோம். சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வோம். இன்ஷா அல்லாஹ்.
தெளிவாக சொல்லாமல் ஜாடையாக சொல்வதாயின்
عَلَى الْمِيْمِ فَرْقٌ بَيْنَ أَحَدٍ وَأَحْـمَدِ
وَإِلَّا فَكَيْفَ الْحَقُّ يُعْرَفُ وَيُقْصَدُ
“அஹத்” என்னும் சொல்லுக்கும், “அஹ்மத்” என்ற சொல்லுக்கும் பிரிவைக் காட்டுவது “மீம்” ஒன்று மட்டுமே! இன்றேல் எவ்வாறு இறைவனை அறியவும், நாடவும் முடியும்?
(இந்தப் பாடல் சங்கைமிகு அஸ்ஸெய்யித் மர்ஹூம் மௌலானா அப்துர் றஷீத் கோயா தங்கள் வாப்பா றஹிமஹுல்லாஹ் அவர்கள் “றாதிப்” நடத்தும் நேரம் பாடும் பாடல் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது)
இன்னும் ஒரு நபீ மொழியை மட்டும் எழுதுகிறேன். இதன் விபரம் தேவையேற்படின் எழுதுவோம்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ أَبِي شَيْبَةَ، ثنا يَحْيَى بْنُ الْحَسَنِ بْنِ فُرَاتٍ الْقَزَّازُ، ثنا مُحَمَّدُ بْنُ أَبِي حَفْصٍ الْعَطَّارُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي حَفْصٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: لَمَّا كَانَ يَوْمُ غَزْوَةِ الطَّائِفِ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ مَلِيًّا مِنَ النَّهَارِ، فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: يَا رَسُولَ اللهِ لَقَدْ طَالَتْ مُنَاجَاتُكَ عَلِيًّا مُنْذُ الْيَوْمِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَنَا انْتَجَيْتُهُ وَلَكِنَّ اللهُ انْتَجَاهُ»
“தாயிப்” யுத்த நாளன்று நபீ பெருமான் அவர்கள் அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் எழுந்து சென்று பகல் பொழுதில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். இதை அவதானித்துக் கொண்டிருந்த கலீபா ஸெய்யிதுனா அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பெருமானாரை அணுகி அல்லாஹ்வின் றஸூலே! இன்று நாளெல்லாம் நீண்ட நேரம் அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் உரையாடியுள்ளீர்களே! என்று சொன்னார்கள். அதற்கு நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் நான் அவருடன் உரையாடவில்லை. எனினும் அல்லாஹ்தான் அவரோடு உரையாடினான் என்று பதிலளித்தார்கள்.
ஆதாரம்: ஸுனனுத்துர்முதீ – 3726, பாடம்: பாபு மனாகிபி அலிய்யின் றழியல்லாஹு அன்ஹு, பாகம்: 06, பக்கம்:85,
அல்முஃஜமுல் கபீர் – 1756, பாடம்: வமின் ஙராயிபி ஹதீதி ஜாபிர் இப்னி அப்தில்லாஹ், பாகம்: 2, பக்கம்: 186.
இந்த நபீ மொழி மூலம் ஸூபிஸத்தின் உச்ச கட்ட தத்துவம் வெளிச்சமாகிறது. இது தொடர்பான விளக்கம் மிக விரைவில் வெளிவரவுள்ள “அல்கிப்ரீதுல் அஹ்மர்” எனும் நூலில் இடம் பெற்றுள்ளது.
‘ஸலவாத்’ சொல்வதே நோக்கம். வசனம் நோக்கமல்ல.
கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மீது “ஸலவாத்” சொல்வதுதான் குறிக்கோளேயன்றி வசனம் குறிக்கோள் அல்ல. எனினும் “அஸ்ஸலவாதுல் இப்றாஹீமிய்யா” எனும் தொழுகையில் “அத்தஹிய்யாத்” ஓதலில் வருகின்ற “ஸலவாத்” மிக விஷேடமானதாகும். இதனால் வேறு “ஸலவாத்” ஓதுவது கூடாதென்று கருத்து வராது. “ஸலவாத்” வசனங்கள் எவ்வாறிருந்தாலும் இமாம்கள், வலீமார், மற்றும் இறை ஞானிகளால் கோர்க்கப்பட்ட எந்த “ஸலவாத்” ஆயினும் சொல்ல முடியும். குற்றமில்லை. தொழுகையில் இப்றாஹீமிய்யா மட்டுமே ஓத வேண்டும்.
எனினும் வஹ்ஹாபிஸ வழி செல்வோர் “இப்றாஹீமிய்யா” தவிர வேறு “ஸலவாத்” ஓதுவது பிழை என்று சொல்வர். அவ்லியாஉகளால் கோர்த்த “ஸலவாத்” அவர்களின் கண்களில் கூட காட்ட முடியாது.
இதற்கு பிரதான காரணம் வலீமார்களாலும், ஞான மகான்களாலும் தொகுக்கப்பட்ட “ஸலவாத்” ஸூபிஸ, இறைஞான தத்துவங்கள் கொண்டதாக இருப்பதேயாகும். ஏனெனில் வஹ்ஹாபிகள் ஸூபிஸ ஞானத்திற்கு எப்போதும் எதிரானவர்களே! கிணற்றுள் வாழும் தவளைகளுக்கு வெளியுலகம் தெரியாதல்லவா?
ஒரு ஷெய்கு ஞான குருவிடம் “பைஅத்” பெற்றவர்கள் தொழுகையில் மட்டும் “இப்றாஹீமிய்யா”வை ஓதுவதும், ஏனைய நேரங்களில் வலீமார் கோர்த்தவற்றை ஓதுவதும் சிறப்பானதாகும்.
“ஸலவாத்” இன்றி ஹஜ் வணக்கம் நிறைவேறும், நோன்பு வணக்கமும் நிறைவேறும், ஸகாத் வணக்கமும் நிறைவேறும். எனினும் “ஸலவாத்” இன்றி தொழுகை நிறைவேறாது. தொழுகைக்கு உயிர் கொடுப்பது “ஸலவாத்” மட்டுமேதான். “ஸலவாத்” இன்றி தொழுகை இல்லை. مَنْ لَمْ يُصَلِّ عَلَيْكُمْ لَا صَلَاةَ لَهُ, தொழுகை தடை செய்யப்பட்ட நேரம் உண்டு. ஆனால் “ஸலவாத்” தடை செய்யப்பட்ட நேரம் இல்லை. தொழுகை “பாதில்” வீணாய்ப் போவதற்கு காரணம் உண்டு. “ஸலவாத்” வீணாய்ப் போவதற்கு காரணம் கிடையாது. தொழுகை நிறைவேற வெளிச்சுத்தம் அவசியம். “ஸலவாத்” சொல்வதற்கு “வுழூ” அவசியமில்லை. பானம் குடித்துக் கொண்டு “ஸலவாத்” சொல்ல முடியும். ஆனால் தொழ முடியாது. தொழுகை நிறைவேற “கிப்லா”வை முன்னோக்க வேண்டும். எத்திசை நோக்கியும் “ஸலவாத்” சொல்ல முடியும். இடையிடையே பேசிக் கொண்டு “ஸலவாத்” சொல்ல முடியும். ஆயினும் தொழ முடியாது. “ஸலவாத்” சொல்ல “நிய்யத்” அவசியமில்லை. தொழுகைக்கு “நிய்யத்” அவசியம். “ஸலவாத்” சொல்லும் போது கை, கால்களை விரும்பிய மாதிரி அசைக்கலாம். தொழுகையில் தொடரான மூன்று அசைவுக்கு மேல் அசைத்தால் தொழுகை வீணாகிவிடும். தொழுகை நிறைவேற தொழுபவனின் உடலும், உடையும், தொழுமிடமும் சுத்தமாயிருக்க வேண்டும். “ஸலவாத்” சொல்வதற்கு குறித்த மூன்றும் சுத்தமாயிருக்க வேண்டுமென்பது கடமையல்ல.
தொழும்;போது பக்கத்திலுள்ளவன் தும்மி “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொன்னதைக் கேட்பவன் “யர்ஹமுகல்லாஹ்” என்று முன்னிலைப்படுத்தி பதில் சொன்னால் தொழுகை வீணாகிவிடும். தொழுகையில் சொல்வதானால் முன்னிலைப்படுத்தாமல் படர்க்கையாக “யர்ஹமுஹுல்லாஹ்” என்று சொல்ல வேண்டும். இந்த விதி – நடைமுறை “ஸலவாத்” சொல்வதற்கு இல்லை.
“ஸலவாத்” சொல்வதற்கு மேற்கண்ட சலுகைகள் வழங்கப்பட்டதற்கான காரணம் எல்லா நேரமும் “ஸலவாத்” சொல்ல வேண்டும், அதிகமாகவும் சொல்ல வேண்டும் என்பதற்கேயாகும். விதிகள் அதிகமான வணக்கத்தை நிறைவேற்றுவதும், அதிகமாக செய்வதும் கடினம். ஆயினும் விதிகள் குறைந்த வணக்கத்தை இலகுவாக நிறைவேற்றவும் முடியும், அதிகமாகச் செய்யவும் முடியும்.
ஸலவாத் சொல்லி ஸஆதத் பெறுவோம்.