தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
மித மிஞ்சி சாப்பிடுவதாலும், பசியோடிருப்பதாலும் கொட்டாவி ஏற்படச் சாத்தியமுண்டு. இரண்டையும் தவிர்த்தால் கொட்டாவி ஏற்படுவதை தடுக்கலாம். கொட்டாவி விடுவதால் உடல் சத்து குறையும். தும்முவதால் உடல் சத்து அதிகரிக்கும், நோய்களும் நீங்கும்.
قال النّبيّ صلّى الله عليه وسلّم اَلتَّثَاوُبَ مِنَ الشَّيْطَانِ وَالْعُطَاسُ مِنَ الرَّحْمَنْ
கொட்டாவி ஷெய்தானில் நின்று முள்ளது. தும்மல் றஹ்மானில் நின்றுமுள்ளது. (நபீ மொழி)
மனிதன் உரிய நேரத்தில் சாப்பிட வேண்டும். இதனால் அதிகம் – மித மிஞ்சி சாப்பிட வேண்டுமென்பது கருத்தல்ல. ஒவ்வொருவரும் அவரின் ஆன்மீகத் தரத்திற்கேற்றவாறே சாப்பிட வேண்டும். ஆன்மீகம் மிகைத்தவர்கள் ஒரு சில பிடிகள் சாப்பிட்டால் போதும். உடலை வருத்தி வேலை செய்பவர்கள் சற்றுக் கூடுதலாகச் சாப்பிட வேண்டும். எந்த ஒரு வேலையுமின்றி வீட்டில் ஓய்வெடுப்பவர்கள் சாப்பாட்டைக் குறைத்துக் கொள்வது சிறந்தது.
ஆன்மீகம் செயல்படுவதாயின் சாப்பாட்டைக் குறைக்க வேண்டும். இதனால்தான் ஸூபீ மகான்களும், இறை ஞானிகளும் “பசித்திரு, தனித்திரு, விழித்திரு” என்று சொன்னார்கள். இம் மூன்றையும் ஒருவன் கடைப் பிடித்து வந்தால் ஆன்மீகம் அவனைத் தேடி வருமேயன்றி அவன் ஆன்மிகத்தை தேடத் தேவையில்லை.
قال النبي صلى الله عليه وسلم حَسْبُ بْنِ آدَمَ لُقَيْمَاتٌ يُقِمْنَ صُلْبَهُ،
“ஆதம் உடைய மகனுக்கு சில சிறிய பிடிகள் போதும்” என்று நபீ பெருமான் அருளினார்கள். அண்ணலெம் பெருமானின் அமுதவாக்குகள் ஆழ்கடல் போன்றவை. அள்ள அள்ள அகமியங்கள் பெருக்கெடுத்துக் கொண்டே இருக்கும்.
மேலே இப்போது நான் எழுதிய நபீ மொழியை அவதானியுங்கள். அறபு மொழியில் لُقْمَةٌ – “லுக்மதுன்” என்றால் ஒரு பிடி என்று பொருள் வரும். இச்சொல்லை لُقَيْمَةٌ “லுகைமதுன்” என்று மாற்றினால் ஒரு சிறு பிடி என்று பொருள் வரும். لُقْمَةٌ என்ற சொல்லின் பன்மைச் சொல் لُقْمَاتٌ பல பிடிகள் என்று வரும். இதே போல் لُقَيْمَةٌ சிறு பிடி என்ற சொல்லின் பன்மைச் சொல் لُقَيْمَاتٌ சில சிறு பிடிகள் என்று வரும்.
மேற்கண்ட நபீ மொழியில் لُقَيْمَاتٌ சில சிறு பிடிகள் என்ற கருத்தில் சொல்லப்படுள்ளதே தவிர لُقْمَاتٌ சில பிடிகள் என்று வரவில்லை.
மேற்கண்ட இந்த விபரம் மௌலவீமார், மற்றும் அறபு இலக்கணம் கற்பவர்களுக்கு மட்டுமே புரியும். மற்றவர்களும் அவதானித்து நோக்கினால் புரியாமற் போகாது.
இதன் சுருக்கம் என்னவெனில் சாதாரண ஒரு மனிதனுக்கு – அதாவது கடினமாக, உடலை வருத்தி வேலை செய்யாத ஒருவனின் ஒரு வேளை உணவிற்கு சில பிடிகள் போதும் என்பதேயாகும்.
உண்மையும், எதார்த்தமும் இவ்வாறிருக்கும் நிலையில் ஒருவன் அளவுக்கதிகமாக, மித மிஞ்சி உண்பானாயின் ஆன்மிகம் அவனை அணுகவுமாட்டாது. அதன் ருசியை அவன் உணரவுமாட்டான். அவன் மனித உருவிலுள்ள மிருகமேயாவான். வால் மட்டும் இருந்தால் மிருகம் என்றே சொல்லிவிடலாம்.
சோம்பல் ஏற்படுவதும், கொட்டாவி ஏற்படுவதும், அதிக தூக்கம் ஏற்படுவதும், ஆன்மிகம் அணுகாமலிருப்பதும், ஆய்வாற்றல், சிந்தனையாற்றல் இல்லாமற் போவதும், மந்த புத்தி ஏற்படுவதும் மித மிஞ்சி உண்பதாலும், மித மிஞ்சி இடைச்சாப்பாடுகள் சாப்பிடுவதினாலுமேயாகும்.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் வழிகாட்டலின் படி வாழ்பவன் மட்டுமே வெற்றி பெறுவான்.
மூளை வளர்ச்சிக்கும், உடல் நலத்திற்கும், உடலில் சத்து ஏற்படுவதற்கும் உணவு அவசியம்தான். அதற்காக ஒரு பானைச் சோறையும், ஒரு பானைக் கறியையும் முழுமையாக உண்பது கெடுதியை ஏற்படுத்துமே தவிர உடல் நலத்திற்கு உதவாது.
வயிறு புடைக்கச் சாப்பிட்டும், சோறு சாப்பிட்டும் சத்தைத் தேடுவது தவறு. கீரை வகைகள், மரக்கறி வகைகளில் எதையும் தவிர்க்காமல் அதிகமாக உண்பதும், முட்டை, பால் போன்றவற்றையும், பழ வகைகளில் எதையும் தவிர்க்காமல் சாப்பிடுவதும், ஒரு நாளைக்கு குறைந்தது எந்த இன வாழைப்பழமேனும் ஒரு பழமாவது சாப்பிடுவதும், அப்பிள் ஒரு பழமாவது சாப்பிடுவதும், பேரீத்தம் பழம் காலையில் மூன்றும், மாலையில் மூன்றும், இரவில் ஒன்றும் சாப்பிடுவதும் மிக விஷேடமானதாகும். இவற்றை உட் கொள்வதால் வயிறு புடைக்காது போனாலும், நிரம்பாது போனாலும் உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் இவற்றில் உள்ளன.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் அல்லது தேனீர் குடித்தபின் ஒரு தேக்கரண்டியளவு சுத்தமான தேன் சாப்பிட்டு வருவது ஞாபக சக்திக்கு – நினைவாற்றலுக்கு பெரிதும் உதவும். ஒரு கை பிடியளவு மல்லிகை துளிர் எடுத்து அதை முட்டையின் வெள்ளைக் கருவுடன் அம்மியில் வைத்து நன்றாக அரைத்து ஞாயிற்றுக் கிழமை காலை சுமார் ஏழு மணியளவில் தலையில் தப்பி ஒரு மணி நேரத்தின் பின் அதை எடுத்துவிட்டு குளித்து வந்தால் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
இவை தவிர உடலாரோக்கியத்திற்கும், ஆன்மிக வளர்ச்சிக்கும், மற்றும் மனிதனுக்கு தேவையான நன்மைகளுக்கும் ஆன்மிக மருந்துகளும் உண்டு. அவை “அவ்றாத்” எனப்படும். அவற்றைக் காலையிலும், மாலையிலும் ஓதி வருவதன் மூலம் எண்ணிலடங்காத நன்மைகள் ஏற்படும்.
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சொல்லித் தந்த ஆன்மீக மருந்துகளான பின்வரும் ஓதல்களை காலையிலும், மாலையிலும் ஓதி வந்தால் வாழ்க்கையில் எந்த ஒரு கவலையும் அணுகாது.
اَللهم إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنْ، وَأَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلْ، وَأَعُوْذُ بِكَ مِنَ الْجُبُنِ وَالْبُخْلْ، وَأَعُوْذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ،
اَللهم عَافِنِيْ فِى بَدَنِيْ، اَللهم عَافِنِيْ فِى سَمْعِيْ، اَللهم عَافِنِيْ فِى بَصَـرِيْ، اَللهم إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ، اَللهم إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، لَا إلهَ إِلَّا أًنْتَ،
بِسْمِ اللهِ الَّذِيْ لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْئٌ فِى الْأَرْضِ وَلَا فِى السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمِ،
இவை தவிர இன்னும் பல ஆன்மிக மருந்துகள் – ஓதல்கள் உள்ளன. அவை தொழில் செய்யாமல் வீட்டில் இருப்பவர்களாலேயே செய்ய முடியும். தேவையானோர் எம்முடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
தினமும் காலையில் கருஞ்சீரக எண்ணெய் அரைத் தேக்கரண்டியுடன் ஒரு கரண்டி தேன் சாப்பிட்டு வருதல் அனைத்து நோய்களுக்கும் மருந்தாகும். இது நபீகள் சொன்னது. இதில் நன்மையுள்ளது.