பாங்கு துஆ ஓர் ஆய்வு.
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
பாங்கு சொன்ன பின் சொன்னவரும், அதைச் செவியேற்றவர்களும் “துஆ” ஓதுவது “ஸுன்னத்” ஆகும். இந்த “துஆ” ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஸூபீ மகான்கள் கூறியுள்ளனர்.
நாம் சிறுவர்களாக “குர்ஆன்” பாடசாலைகளில் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் பாடமாக்கிய “துஆ”வுக்கும், இப்போது – வஹ்ஹாபிகள் வந்த பின் கற்றுக்கொடுக்கின்ற “துஆ”வுக்கும் வித்தியாசமுண்டு. அன்று ஓதப்பட்டது ஸுன்னீ “துஆ”. இன்று ஓதப்படுவது வஹ்ஹாபீ “துஆ”. அன்று துஆக்கள் “அர்ஷ்” வரை ஏறின. இன்று “துஆ” அயல் வீட்டுக்கும் தெரியாமல் மறைந்து விடுகிறது.
வஹ்ஹாபிகள் தலை நீட்டு முன் காத்தான்குடியில் மட்டுமன்றி இலங்கை முழுவதும் கற்றுக்கொடுத்த பாங்கு “துஆ”விலுள்ள சில வசனங்கள் வஹ்ஹாபி கற்றுக் கொடுக்கும் பாங்கு துஆவில் இல்லை. அவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.
பாங்கு “துஆ”வில் அவர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டவை பின்வருமாறு.
وَارْزُقْنَا شَفَاعَتَهْ وَأَوْرِدْنَا حَوْضَهُ.
سَيِّدِنَا .
اَلْوَسِيْلَةَ.
இவையும், இவை போன்று இன்னும் சில வசனங்கள். முதலாம் வசனத்தின் பொருள், “எங்களுக்கு கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் “ஷபாஅத்” பரிந்துரை – மன்றாட்டத்தையும், அவர்களுக்குச் சொந்தமான “ஹவ்ழுல் கவ்தர்” நதியில் குழித்தும், குடித்தும் சுகம் பெரும் பாக்கியத்தையும் தருவாயாக!” என்பதாகும்.
இரண்டாவது – سَيِّدِنَا என்ற சொல். இதன் பொருள் “எங்கள் தலைவர்” என்பதாகும்.
மூன்றாவது – اَلْوَسِيْلَةَ என்ற சொல் இதன் பொருள் “உதவி” என்பதாகும்.
இந்நான்கும் தமக்குத் தேவையில்லை என்று வஹ்ஹாபிகள் விட்டு விட்டார்கள். மறுமையில் நபீ பெருமான் தங்களின் “உம்மத்” சமூகத்திற்காக மன்றாடுவார்கள் அவர்களைத் தேடியலைந்து அடியார்கள் மன்றாட்டம் கேட்பார்கள். வஹ்ஹாபிகளோ இவர் யார் எங்களுக்கு மன்றாடுவதற்கென்று பெருமானாரின் மன்றாட்டத்தை எறிந்து விட்டார்கள். இதன் சுருக்கம் என்வெனின் பெருமானாருக்கு பிறருக்காக “ஷபாஅத்” பரிந்துரைக்கும் அதிகாரம் இல்லையென்று அவர்கள் நம்புகிறார்கள்.
ஸுப்ஹானல்லாஹ்! உலகிலுள்ள எந்த ஒரு முஸ்லிமாவது கண்மணி நாயகம் அவர்களின் “ஷபாஅத்” மன்றாட்டம் தேவையில்லையென்று சொல்வானா? அவ்வாறு சொல்பவன் யாராக இருப்பான் என்று நீங்களே சொல்லுங்கள். முடிவெடுங்கள்.
மறுமையில் “ஹவ்ழுல் கவ்தர்” என்ற நதி ஓடிக்கொண்டிருக்கும். அது அல்லாஹ் பெருமானாருக்கு அன்பளிப்பாக வழங்கிய அவர்களுக்குச் சொந்தமான நதி. அந்த நதியில் குளிக்கும் பாக்கியமும், குடிக்கும் பாக்கியமும் எல்லோருக்கும் கிடைக்காது. அதற்கு பெருமானாரின் அனுமதி வேண்டும். மறுமையில் மக்கள் கூட்டம் கூட்டமாக பெருமானாரைத் தேடியலைந்து அந்த நதியில் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் அனுமதி கேட்பார்கள். வஹ்ஹாபிகளோ யாரிவர் எங்களுக்கு அனுமதி வழங்குவதற்கென்று இறுமாப்புடன் அலைவார்கள்.
மஹ்ஷர் மைதானம் மக்கள் வெள்ளத்தால் கொதிக்கும். நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள முதல் உலகில் இறுதியாக மரணித்தவன் உள்ளிட்ட அனைத்து கல்குகளும் – மக்களும் அலை திரண்டு நிற்பார்கள். சூரியன் அவர்களின் தலைக்கு மேல் மிக நெருக்கமாக கொண்டு வந்து வைக்கப்படும். அனைவரும் வியர்வை வெள்ளத்தில் மூச்சித்திணறினவர்களாக அங்குமிங்கும் ஓடியலைவார்கள். சிலர் தந்தை நபீ ஆதம் அலை அவர்களிடம் சென்று அவர்களிடம் “வஸீலா” கேட்பார்கள். அவர்களோ நப்ஸீ நப்ஸீ என்னிலைமை என்னாகுமோ என்று நான் ஏங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் என்னால் ஒன்றும் செய்ய முடியாதென்று சொல்லி விடுவார்கள்.
கண்ணீரும், கம்பலையுடனும் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் இருக்கும் இடம் தேடி ஓடுவார்கள். அவர்களைக் கண்டு கஷ்ட நிலமைகளைக் கூறி “வஸீலா” தேடுவார்கள். அவர்களும் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் சொன்னது போல் நப்ஸீ நப்ஸீ என்றே சொல்லிக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு பல நபிமார்களைச் சந்தித்தும் பயனற்றுப் போனதால் இறுதியாக ஈருலக இரட்சகர், இரக்கத்தின் இருப்பிடம், நற்குணத்தின் நாயகம் எம் பெருமான் அவர்கள் இருக்குமிடம் தேடி ஓடி அலைந்து கண்டு கொள்வார்கள். அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் மாலை மாலையாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் மட்டும் நப்ஸீ நப்ஸீ என்னைக் கார் என்று சொல்லாமல் “உம்மதீ உம்மதீ” என் சமூகம் கார் என்று கரமேந்துவார்கள். அப்போது கஷ்டங்கள் தீரும். வேதனைகள் அகலும். அண்ணலெம் பெருமான் குடை நிழலில் உம்மத் அனைவரும் அணிதிரள்வர்.
மறுமையில் பெருமானார் அன்னவர்களுக்கு “ஷபாஅத்” பாவிகளுக்காக பரிந்துரை செய்யும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு என்பதற்கும், “ஹவ்ழுல் கவ்தர்” உண்டு என்பதற்கும், வஸீலா உண்டு என்பதற்கும் தெளிவான, மறுக்க முடியாத ஆதாரங்கள் இருக்கும் நிலையில் இவையெல்லம் எமக்குத் தேவையுமில்லை, முஹம்மத் அவர்களால் அல்லாஹ்வை மீறி ஒன்றுமே செய்ய முடியாதென்றும் கூறும் வஹ்ஹாபிகள் என்ன செய்வார்களோ! அப்போது தான் وَاحَسْرَتَا عَلَى مَا فَرَّطْتُ فِيْ جَنْبِ اللهِ அல்லாஹ்வின் விஷயத்தில் நான் சரியாக நடக்காமல் இருந்து விட்டேனே என்று கைசேதப் படுவார்கள்.
பொதுவாக வஹ்ஹாபிகளின் கொள்கை என்னவெனில் மறுமையில் முஹம்மத் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. எதையும் சாதிக்க முடியாது என்பதாகும். இது காத்தான்குடி வஹ்ஹாபிகளின் கொள்கை மட்டுமல்ல அகில உலக வஹ்ஹாபிஸம் இவ்வாறே சொல்கிறது.
வஹ்ஹாபிஸத் தலைவர்களில் யாரோ ஒருவன் தனது கையிலிருந்த “அஸா” – கைக் கோலைக் காட்டி இந்தக் கோல் செய்கின்ற உதவி கூட முஹம்மதால் செய்ய முடியாது என்றானாம். இந்தக் கோலைக் கொண்டு ஊன்றி நடப்பதற்கு இது உதவுகிறது. ஆடுகளுக்கு இலைகளை மரத்திலிருந்து தட்டிக் கொடுப்பதற்கு உதவுகிறது. பூராண், பூச்சி வந்தால் அடித்துக் கொல்ல உதவுகிறது. ஆனால் முஹம்மதால் எதையும் செய்ய முடியாது என்றானாம்.
இவன்தான் “தான் மடையன் என்பதையும் அறியாத மடையன்” رَجُلٌ لَا يَدْرِيْ اَنَّهُ لَا يَدْرِيْ என்று இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “இஹ்யா” என்ற நூலில் கூறியுள்ளார்கள்.
ஏனெனில் அல்லாஹ்விடம்தான் உதவி தேட வேண்டும். வேறு யாரிடமும் உதவி தேடலாகாதென்று கூறிய அவன் கோல் எடுத்தது எதற்கு? அதைக் கொண்டு உதவி தேடுவதற்காகவா இல்லையா? அவ்வாறாயின் கோலும் அல்லாஹ் என்று சொல்லி எம்முடன் இணையப் போகிறாரா? இதனால்தான் “தான் மடையன் என்று அறியாத மடையன்” என்று இமாம் ஙஸ்ஸாலீ சொன்னார்கள் போலும்.
பாங்கு “துஆ”வில் வஹ்ஹாபிகள் சில வசனங்களையும், சொற்களையும் விட்டு விடுகிறார்கள் என்று எழுதியதற்கு அவர்கள் ஒரு நொண்டி சாட்டு கூறுவார்கள். அதாவது ஸஹீஹான ஹதீதுகளில் அந்த வசனங்களும், சொற்களும் வரவில்லை என்பார்கள். இதற்கு பதிலடி கொடுக்க எம்மால் முடியும்.
பாங்கு “துஆ”வில் வஹ்ஹாபிகள் ஓதாமல் விடுகின்ற வசனங்கள் பற்றி கடந்த பதிவில் நான் குறிப்பிட்டிருந்தேன்.
வஹ்ஹாபிகள் அவற்றை ஓதாமல் விடுவதற்கு சில நொண்டிச் சாட்டுகள் கூறுவர். எவையென்று அவர்கள் சொல்லாமலேயே எம்மால் சொல்ல முடியும்.
அவர்கள் கூறுகின்ற நொண்டிச் சாட்டுகளில் ஒன்று. அந்த வசனங்கள் “ஸஹீஹ்” பலமான ஹதீதுகளில் வரவில்லை என்பதாகும்.
ஹதீதுக் கலை மேதைகள் “ழயீப்” பலம் குறைந்த ஹதீதை ஆதாரமாகக் கொண்டு “பர்ழ்”அல்லாத அமல்கள் செய்ய முடியுமென்று கூறியுள்ளார்கள் என்ற விபரத்தை நாங்கள் வஹ்ஹாபிகளுக்கு கூறுவோம். குறிப்பாக இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ள விடயத்தை சொல்வோம்.
வஹ்ஹாபிகள் தமக்கு, தமது கொள்கைக்கு எதிரான கருத்துள்ள ஹதீதுகளை “ழயீப்” பலம் குறைந்ததென்று கூறி தப்பிக் கொள்ளும் தந்திரிகளாவர். இவர்கள் வீசும் இந்த வலையில் நாங்கள் மாட்டிக் கொள்ள மாட்டோம். ஆயினும் பொது மக்களை இந்த மந்திரம் சொல்லி மாற்றமுடியும். முருங்கை மரம்தான் அசையும், முதிரை மரம் அசையாது.
“ழயீப்” பலம் குறைந்த ஹதீது என்று சொன்னதும் அது ஹதீதே இல்லையென்றும், யாரோ சொன்ன கதையென்றும் பொது மக்கள் விளங்கிக் கொள்கிறார்கள். உண்மை இதுவல்ல. மாறாக அது ஹதீதுதான். பெருமானார் பெருமகான் சொன்னது தான். எனினும் அதை அறிவித்தவர்களில் சிலர் ஹதீதுக் கலை மேதைகளின் நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டவர்களாயிருந்தால் அவர்கள் அதை “ழயீப்” என்று சொல்லி விடுவார்கள். இதனால்தான் அது “ழயீப்” என்று கூறப்படுகிறதே தவிர அது நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களால் சொல்லப்படாததென்று எவராலும் ஆதாரபூர்வமாக நிறுவ முடியாது. இமாம்கள் “ழயீப்”ஆன ஹதீதை ஆதாரமாகக் கொண்டு அமல் செய்யலாம் என்பதற்கு அவர்கள் அவ்வாறு சொன்னதே ஆதாரம்தான். ஆதாரங்கள் மூலம் அது ழயீப் என்று நிறுவப்பட்டிருந்தால் அது கொண்டு எந்த ஓர் அமலும் செய்ய முடியாதென்றே ஹதீத் கலை மேதைகள் கூறியிருப்பார்கள்.
வஹ்ஹாபிகள் தமது கொள்கைக்கு முரணான ஹதீதுகளை “ழயீப்” என்று சொல்லிச் சொல்லி இறுதியில் முழு ஹதீதையும் ழயீப் என்று சொல்லிவிடுவார்கள். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் ஆளைக் கடிக்கும் கதையும் இவ்வாறுதான்.
பாங்கு “துஆ”வில் நான் கூறிய வசனங்களை வஹ்ஹாபிகள் விட்டதற்கு காரணம் அந்த வசனங்களை உள்வாங்கி வந்துள்ள ஹதீதுகள் ழயீப் பலம் குறைந்த ஹதீது என்று அவர்கள் கூறியதற்கு நாங்கள் மறுப்புக் கொடுத்துள்ளோம்.
நான் கூறிய வசனங்களை உள்வாங்கியதாக ஒரு ஹதீதும் வரவில்லையென்றே வைத்துக் கொள்வோம். அவ்வாறிருந்தாலும் ஹதீதில் வந்த வசனங்களோடு நாமும் சில வசனங்களை சேர்த்துச் சொல்வது குற்றமாகாது. ஆயினும் நாம் சேர்த்த வசனங்கள் ஹதீதிலுள்ள வசனங்கள் என்று எவரிடமும் சொல்லி விடக்கூடாது.
ஏனெனில் ஸஹீஹான ஹதீதுகளில், அல்லது ழயீப் ஆன ஹதீதுகளிலோ இடம் பெறாத பல வசனங்கள் தொழுகையில் இடம் பெற்றுள்ளதை நாம் காண முடியும். அது கூட இல்லையென்று வைத்துக் கொண்டாலும் தொழுகையில் – ஸூஜூதில் தனக்கு விரும்பிய ஒன்றை தனது சொந்த வசனத்தில் கேட்பது குற்றமாகவும் மாட்டாது, தொழுகையும் வீணாகி விடாது.
ஆகையால் எது சரியோ அதை ஏற்றுக் கொள்வதே மனிதாபிமானம் என்பதை புரிந்து நடந்தால் வஹ்ஹாபிகளால் நாட்டில் ஏற்படுகின்ற குழப்பங்களில் 90 வீதமான குழப்பங்கள் குறைந்து விடும்.
ஆகையால் பாங்கு சொன்ன பின் “ஸுன்னி துஆ” ஓதுவதால் நன்மைதான் கிடைக்குமே யன்றி பாவம் கிடைக்காதென்பதை விளங்கிச் செயல் படுவதே சிறந்தது.
பாங்கு சொல்லும் போது பதில் சொல்ல வேண்டுமென்றுதான் இஸ்லாம் கூறுகிறதேயன்றி செய்து கொண்டிருக்கின்ற வேலையை நிறுத்துமாறு சொல்லவில்லை. பதில் சொல்வது வாயால்தான். ஆகையால் வாயால் செய்கின்ற வேலையை மட்டுமே நிறுத்த வேண்டும். ஓதுதல், வாசித்தல், கற்றுக் கொடுத்தல் போன்று. வேறு வேலைகளை நிறுத்தத் தேவையில்லை.
சில ஊர்களைப் பொறுத்த வரை தொடர்ந்து 15 நிமிடங்கள் வரை பல பள்ளிவாயல்களில் பாங்கு ஒன்றன் பின் ஒன்றாக சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும். ஒருவர் தான் செய்கின்ற வேலையை ஒரு நேர பாங்கிற்கு மட்டும் 15 நிமிடங்கள் நிறுத்த வேண்டிவரும். ஸுப்ஹுடைய பாங்கு தவிர மற்ற நான்கு பாங்கிற்கும் சுமார் ஒரு மணி நேரம் வேலையை நிறுத்த வேண்டியேற்படும். இது வேலையாட்களுக்கு நட்டத்தை ஏற்படுத்துமாயின் ஒரு பாங்கிற்கு மட்டும் பதில் கூறி “துஆ” ஓதினால் போதும். குற்றமில்லை. இது எனது கருத்து. இது பிழையாயின் சட்டம் தெரிந்தோர் அறிவித்தால் திருத்திக் கொள்ள முடியும்.
பாங்கு சொல்லும் வேளை தலை மறைத்தல் தொடர்பாக நான் வாசித்த சட்ட நூல்களில் அது “ஸுன்னத்” என்பதற்கான எந்த ஓர் ஆதாரத்தையும் நான் காணவில்லை. எனினும் நான் என் வாழ்கையில் நேரில் கண்ட பல அறிஞர்கள் பேணுதலுள்ள உலமாக்கள் பாங்கு சொல்லும் போது தலை மறைத்திருந்ததை நான் நேரில் பார்த்துள்ளேன்.
ஓர் ஊரில் பல வருடங்களாக இருந்து வருகின்ற ஒரு வழக்கம் மார்க்கத்தில் “ஸுன்னத்” இல்லாததாயிருந்தாலும் அது நல்ல வழமையென்று கருதப்பட்டு பல வருடங்களாக மக்களால் செய்யப்பட்டு வந்ததாயின் அதைப் பேணி நடப்பதே சிறந்தது.
பாங்கு சொல்லும் போது தலை மறைத்தல் நமது பெற்றோர், பெற்றோர்களின் பெற்றோர் காலத்தில் கடமை போல் பேணப்பட்டு வந்தது. தலை மறைக்க ஒன்றுமில்லாது போனால் ஒரு கடதாசி துண்டையாவது காதின் மேற் புறத்தில் வைத்துக் கொள்ளும் வழமை இருந்து வந்தது. தெருவால் நடந்து செல்பவர்கள் கூட பிறர் வேலியிலுள்ள கம்புக் குச்சியை எடுத்து காதில் வைக்கும் வழக்கம் இருந்தது. பிறர் வேலியிலுள்ள குச்சை அவர்களின் அனுமதியின்றி எடுப்பது சட்ட விரோத மென்பது அவர்களுக்குத் தெரியாமல் செய்திருக்கலாம். அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் பாங்கு சொல்லும் போது தலை மறைப்பதில் மிகப் பேணுதலுள்ளவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை இக்கால மக்கள் உணர வேண்டுமென்பதற்காக இதை எழுதினேன்.