عَرَفْتُ رَبِّيْ بِرَبِّيْ
எனது ‘றப்பு’ இரட்சகனை எனது ‘றப்பு’ இரட்சகன் மூலமே அறிந்தேன்
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
இவ்வாறு இறை ஞானி ஒருவர் உரைத்துள்ளார்கள். இவ்வசனம் ஸூபீ மகான்களின் நூல்களில் பதிவாகியுள்ளது.
இவ்வசனத்தின் வெளித் தோற்றம் மூலம் இது தருகின்ற கருத்தைப் புரிந்து கொள்வது கடினம்.
“றப்பு” என்ற சொல் இறைவனைக் குறிக்கும். பெற்றோரையும் குறிக்கும். “பைஅத்”வழங்கிய ஞான குருவையும் குறிக்கும். இச்சொல் வருகின்ற இடத்தையும், அதன் முன் பின் தொடரையும் கருத்திற் கொண்டே பொருள் சொல்லவும் வேண்டும். விளக்கம் சொல்லவும் வேண்டும்.
உதாரணமாக ஒருவன் “யா றப்பீ யா அல்லாஹ்” எனது இரட்சகனே! அல்லாஹ்வே! என்று சொன்னால் இவ்விடத்தில் “றப்பு” என்ற சொல் இரட்சகன் என்ற பொருளில் இறைவனுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒருவன் பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தை ஓதினால் ஒரே வசனத்திலேயே ஓர் இடத்தில் “றப்பு” என்ற சொல் இறைவன் என்ற பொருளிலும், இன்னோர் இடத்தில் அதே சொல் பெற்றோர் என்ற பொருளிலும் பயன் படுத்தப்பட்டுள்ளது விளங்கும். உதாரணமாக
رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِيْ صَغِيْرًا
இத்திருவசனத்தில் முதலில் வந்துள்ள றப்பி” என்ற சொல் இறைவன் என்ற பொருளுக்கும், “கமாறப்பயானீ” என்ற வசனத்தில் வந்துள்ள “றப்பயா” என்ற சொல் பெற்றோர் என்னை வளர்த்தார்கள் என்ற பொருளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் காயல்பட்டணத்தில் வாழ்ந்து அங்கேயே அடக்கம் பெற்றுள்ள மகான் ஸெய்யிதுனா உமர் வலீ நாயகம் தங்களின் பாடல் ஒன்றில்
رُبَّ رَبٍّ رَبَّهُ لَمْ يَعْرِفَنْ وَلَمْ يَرُبْ
என்று கூறினார்கள் رُبَّ رَبٍّ எத்தனையோ றப்புகள் – அதாவது எத்தனையோ குருமார்கள் என்ற பொருளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தலைப்பில் நான் எழுதியுள்ள عَرَفْتُ رَبِّيْ بِرَبِّيْ எனது “றப்பு”வை எனது “றப்பு” கொண்டு அறிந்தேன் என்ற வசனத்தில் முதலில் வந்துள்ள “றப்பீ” என்ற சொல்லுக்கு அல்லாஹ் என்றும், இறண்டாவதாக வந்துள்ள “றப்பீ” என்ற சொல்லுக்கு எனது குரு என்றுமே பொருள் கொள்ள வேண்டும்.
எனது “றப்பு” இரட்சனை எனது குருவைக் கொண்டு அறிந்தேன் என்றால் அவர் இவருக்கு சொல்லிக் கொடுத்த இறை ஞான விளக்கம் மூலம் இவர் இறைவனை அறிந்து கொண்டார் என்பதாகும்.
இவ்விடத்தில் இன்னுமொரு கருத்து விளங்கப்படுகிறது. அதாவது عَرَفْتُ رَبِّيْ بِرَبِّيْ என்றால் عَرَفْتُ الله بِالله அல்லாஹ்வைக் கொண்டு அல்லாஹ்வை அறிந்தேன் என்பதாகும். இதன் சுருக்கம் என்னவெனில் ஒருவன் அல்லாஹ்வை அறிவதாயின் அவன் அல்லாஹ்வில் “பனா” முழுமையாக தன்னை அர்ப்பணித்து இவன் அவனாகினால் இவன் அவனை அறிந்தவனாகி விடுகிறான் என்பதாகும்.
ஒவ்வொரு மனிதனும் அவனுடைய முயற்சி மூலம் அல்லாஹ்வை அறிய முற்படும் போது, (எனதடியான் என் பக்கம் ஒரு சாண் நெருங்கி வந்தானாயின் நான் அவன் பக்கம் ஒரு முழம் நெருங்குவேன் என்றும், அவன் என் பக்கம் ஒரு முழம் நெருங்கி வந்தானாயின் நான் அவன் பக்கம் ஒரு பாகம் நெருங்குவேன் என்றும், அவன் என் பக்கம் நடந்து வந்தானாயின் நான் அவன் பக்கம் ஓடிச் செல்வேன்) என்றும் ஹதீதுக் குத்ஸி கூறுகிறது.
இதன் சுருக்கம் என்னவெனில் அடியான், அல்லாஹ்வைக் கண்டு மகிழ எந்த அளவு அவன் பக்கம் நெருங்குகிறானோ அதை விட வேகமாக அல்லாஹ் அடியான் பக்கம் நெருங்குகிறான் என்பதாகும்.
எவ்வாறேனும் அடியானின் இலட்சியம் அல்லாஹ்வை அறிவதும், அவனை நெருங்குவதும், அவனை அடைவதுமேயாகும்.