தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
இது தத்ததுவ ஞானி ஒருவரின் தத்துவம். இது, ஞானி தனது கண்களை மூடிக் கொண்டு சொன்னதல்ல. அவற்றை அகல விரித்து நடுப்பகலில் ஒளிமயமான இடத்திலிருந்து திருக்குர்ஆனையும், நபீ மொழிகளையும், இறையியல் மேதைகளின் கருத்துக்களையும் தெளிவாக ஆய்வு செய்து வடித்து எடுத்த தத்துவமாகும்.
அன – “நான்” என்ற சொல் இரு பொருளுக்குச் சாத்தியமான சொல். ஒன்று ஒருவனிலுள்ள “நான்” என்ற தன்னுணர்வை குறிக்கும். இது அறபு மொழியில் اَنِّيَّةٌ – “அன்னிய்யத்” என்று சொல்லப்படும்.
இரண்டு ஒருவனிலுள்ள “நான்” என்ற மமதை, அகங்காரம் போன்ற தீக்குணத்தை குறிக்கும். இது அறபு மொழியில் اَنَانِيَّةٌ – “அனானிய்யத்” எனப்படும்.
இவ்விரு ஷெய்தான் – சாத்தான்களும் மனிதனில் இருந்து கொண்டு அவனை ஆன்மீகத்தில் முன்னேற விடமாட்டாது. ஒருவன் ஆன்மீகத்தில் வளர வேண்டுமாயின் இவ்விரு திரைகளும் அகல வேண்டும்.
இன்னுமொரு திரை உண்டு. அது அறபு மொழியில் غَيْرِيَّةٌ “ஙெய்ரிய்யத்” என்று சொல்லப்படும். இதன் சொல்லர்த்தம் “வேறு”, “வேற்றுமை” என்பதாகும். இதன் சுருக்கம் இறைவன் வேறு, படைப்பு வேறு என்ற கோட்பாடாகும்.
ஒரு மனிதனின் மனதிலிருந்து இம் மூன்றும் – அதாவது “அன்னிய்யத்” நானெனும் உணர்வும், “அனானிய்யத்” எனும் கர்வமும், “ஙெய்ரிய்யத்” இறைவன் வேறு, படைப்பு வேறு என்ற கொள்கையும் அகன்றால் மட்டுமே “கல்பு” மனம் சுத்தமாகும். இம் மூன்றும் அல்லது இம் மூன்றில் ஒன்றேனும் இருக்கும் வரை இறைஞான மென்ற அருள் உள்ளத்தில் இறங்காது. ஒளிராது.
இம் மூன்று நச்சு மரங்களையும் வேருடன் பிடிங்கியெறிந்தால் தான் عَيْنِيَّةٌ இறைவனும், படைப்பும் ஒன்றுதான் என்ற தத்துவம் வெளிச்சமாகும்.
இம் மூன்று உணர்வுகளையும் – அல்லது ஷெய்தான்களையும் – மனதிலிருந்து வெளியேற்றுதல் வணக்கங்களில் முதன்மையான வணக்கமாகும்.
ஒரு மனிதன் இம் மூன்று வகை நச்சு மரங்களையும் அகற்றி மனதை சுத்தம் செய்தால் மட்டுமே அவன் மனிதனாகலாம்.
இம் மூன்று வகை நச்சு மரங்களில் “அனானிய்யத்” எனும் மமதை, அல்லது கர்வம் என்ற நச்சு மரத்தை வெட்டி வீழ்த்தலாம். தினமும் செய்கின்ற ஆன்மீகப் பயிற்சிகள் மூலமும், அறிவு வளர்ச்சியின் மூலமும் இந்த ஷெய்தானை வெல்ல முடியும். இது கூட மிக எளிதில் அகன்று விடாது. “நப்ஸ்” என்ற கொடிய மிருகத்தோடு கடும் போர் செய்ய வேண்டும். இதுவே مجاهدة النفس மனவெழுச்சியுடன் செய்கின்ற போராகும். ஆயினும் மற்ற இரண்டு நச்சு மரங்களையும் வெட்டி வீழ்த்துவது கடினமே கடினம். பெரும் போருக்கு மத்தியிலும், பயிற்சிக்கு மத்தியிலுமே வெட்டி வீழ்த்த வேண்டும்.
ஒரு சமயம் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தோழர்களுடன் சேர்ந்து ஒரு யுத்தம் செய்தார்கள். அதை முடித்து விட்டு வந்த சமயம் தோழர்களிடம்
رَجَعْنَا مِنَ الْجِهَادِ الْأَصْغَرِ إَلَى الْجِهَادِ الْأَكْبَرِ
சிறிய போரை முடித்து விட்டு பெரிய போருக்கு வந்துள்ளோம் என்றார்கள். அப்போது தோழர்கள்
وَمَا الْجِهَادُ الْأَكْبَرْ يَارَسُوْلَ الله
அல்லாஹ்வின் திருத்தூதே! அண்ணலெம்பிரானே! நாம் செய்து முடித்து விட்டு வந்த போர்தானே பெரிய போர், தாங்கள் பெரிய போருக்கு வந்துள்ளோம் என்று சொன்னீர்களே! அது என்ன போர் என்று அவர்கள் கேட்ட போது اَلْجِهَادُ مَعَ النَّفْسِ “நப்ஸ்” என்ற மனவெழுச்சியுடன் செய்யும் போர்தான் பெரிய போர் என்றார்கள்.
இதன் மூலம் திருக்கலிமாவை – இஸ்லாம் மார்க்கத்தை நிலை பெறச் செய்வதற்காகச் செய்யும் போர் சிறிய போரென்றும், “நப்ஸ்” என்ற “காபிர்” உடன் செய்யும் போர் பெரிய போரென்றும் அறிய முடிகிறது.
ஆதாரம் – நூல் – பைஹகீ
தொடரும்