وما هو السِرُّ لِوَضع سبعة أعضاء في السجود
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
தொழுகின்ற ஒருவன் “ஸுஜூத்” உடைய நிலையில் தனது ஏழு உறுப்புகளை தரையில் படச்செய்வது “பர்ழ்” கடமையாகும். ஏழில் ஒன்றாவது படாது போனால் தொழுகை நிறை வேறமாட்டாது.
قال النبي صلى الله عليه وسلم ” اُمِرْتُ اَنْ اَسْجُدَ عَلَى سَبْعَةِ اَعْضَاءٍ”
ஏழு உறுப்புகள் மீது “ஸுஜூத்” செய்யுமாறு நான் ஏவப்பட்டுள்ளேன் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்லாம் அவர்கள் அருளினார்கள்.
ஏழு உறுப்புகள் – இரண்டு உள்ளங் கைகள், இரண்டு முழங்கால்கள், நெற்றி, இரண்டு கால் விரல்களின் உட்பகுதி.
“ஸுஜூத்” செய்யும் போது இவற்றில் ஒன்றாவது தரையில் பட வில்லையாயின் தொழுகை நிறைவேறாது. இது “பர்ழ்” கடமை. “ஸுன்னத்” ஆன காரியமன்று.
ஏழு உறுப்புகள் தரையில் படுதல் என்றால் மண்ணிலும் படலாம், சீமந்து தரையிலும் படலாம், மாபிள், பாய், மெத்தை போன்றவற்றிலும் படலாம். எதில் பட்டாலும் ஏழு உறுப்புக்களும் படுகின்ற இடங்கள் ஏழும் மலசலம் போன்ற, தொழுகையை முறிக்கும் அசுத்தங்கள் இல்லாத இடங்களாக இருத்தல் அவசியம். மூக்கு தரையில் பட வேண்டுமென்பது கட்டாய விதியல்ல. அது “ஸுன்னத்” ஆனதாகும். படாது போனாலும் தொழுகை நிறைவேறும். இவ் ஏழு உறுப்புகளிலும் நெற்றி மட்டும் திரையின்றி தரையில் பட வேண்டும். இது அவசியம்.
சிலர் நெற்றியில் தொப்பி பாவிக்கின்றனர். இவர்கள் “ஸுஜூத்” செய்யும் வேளையில் நெற்றி திரையோடுதான் தரையில் படும். இது தொழுகையை வீணாக்கி விடும். கைலேஞ்சு கட்டித் தொழுபவர்களுக்கும், தொப்பி அணிந்து தொழுபவர்களுக்கும் சட்டம் ஒன்றுதான். கைக்கும், காலுக்கும் உறை “சொக்ஸ்” போட்டுத் தொழும் போது இவ் விதி பேணத் தேவையில்லை. ஏழு உறுப்புகளில் இரு கால் விரல்களும் தரையில் பட வேண்டுமென்பது உட்பகுதியை குறிக்கும். பத்து விரல்களும் படும் வகையில் வைக்க முடிந்தால் அவ்வாறு வைக்கவே வேண்டும். முடியாதவர்கள் இரு கால் விரல்களிலும் ஒரு சில விரல்களின் உட்பகுதி படும் வகையில் வைத்துக் கொண்டாலும் போதும். தொழுகை நிறைவேறும். முழங்கால் திரையோடு தரையில் படுவதால் குற்றமில்லை. தொழுகையில் முழங்கால் வெளியே தெரியுமாயின் தொழுகை நிறைவேறாது. ஏனெனில் தொழுபவன் தொப்புள், முழங்காலுக்கு இடைப்பட்ட பகுதியை மறைக்காது தொழுதால் தொழுகை நிறைவேறாது. “கட்டைக் களிஸன்” அரைக்கால் சட்டை போடுவோர் தொழும் போது முழங்கால் வெளியே தெரியாமல் பாதுகாக்க வேண்டும்.
தொழுகைக்கும், ஏழு உறுப்புக்களை தரையில் பட வைப்பதற்குமுள்ள ரகசியம் என்னவென்று அறிந்து கொண்டால் ஸூஜூதில் ஷுஹூத் கிடைக்கும் என்பர் இறை ஞானிகள்.
قال النبي صلى الله عليه وسلم ” أَقْرَبُ مَا يَكُوْنُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ”
ஓர் அடியான் தனது இறைவனுக்கு அதிகம் நெருங்கிய கட்டம் அவன் “ஸூஜூத்” நிலையில் இருக்கும் கட்டமாகும் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள்.
“ஸூஜூத்” எனும் நிலைதான் அடியான் என்ற காதலன் அல்லாஹ் என்ற காதலியை மிக மிக நெருங்கிய நிலையாகும். இந்த நிலையில் காதலன் கேட்பதையெல்லாம் காதலி மறுக்காமலும், தாமதிக்காமலும் கொடுப்பது போல் இறைவனும் கொடுத்து விடுவான்.
எனதடியான் என் பக்கம் ஓர் அங்குலம் நெருங்கி வந்தால் நான் அவன் பக்கம் ஒரு முழம் நெருங்கிச் செல்வேன் என்றும், அடியான் என் பக்கம் ஒரு முழம் நெருங்கினால் நான் அவன் பக்கம் ஒரு பாகம் நெருங்குவேன் என்றும், அடியான் என் பக்கம் நடந்து வந்தால் நான் அவன் பக்கம் ஓடிச் செல்வேன் என்றும் அடியான் மீது தனக்குள்ள அன்பை இந்தப் பாணியில் சொல்லிக் காட்டிய இறைவன் அடியான் தொழுகையில் தனது ஏழு உறுப்புகள் என்ற அவனுக்கு இறைவன் இரவலாக
வழங்கிய குத்றத் – சக்தி, இறாதத் – நாட்டம், ஸம்உன் – கேள்வி, பஸறுன் – பார்வை, இல்ம் – அறிவு, கலாம் – பேச்சு, ஹயாத் – உயிர் என்பவற்றை இரவல் தந்தவனுக்கு அவற்றை ஒப்படைத்து விட்டு தானொரு மையித்தாக இருக்கும் நிலைதான் “ஸுஜூத்” உடைய நிலையாகும். இந்த நிலையில் அவனிடம் எதைக் கேட்டாலும் அவன் கொடுப்பான் என்பதில் எவருக்கும் இரு மனம் தேவையில்லை.
இதனால்தான் இறை காதலின் உச்சியில் நின்ற மஸ்தான் குணங்குடியார் பின்வருமாறு பாடினார்கள் போலும்.
முட்டை பொரிப்பேன் முழுக் கோழியும் போரிப்பேன் தட்டைப் பீங்கானில் வைத்து தருவேன் என்று. “முட்டை” என்ற சொல்லின் கடைசியில் “ப்” என்ற எழுத்தைச் சேர்த்து மொழிந்தால் முழங்கால் என்று பொருள் வரும். முழுக்கோழி என்பது ஸூஜூதில் இருப்பவரின் முழு உடலையும் குறிக்கும்.
இவ்வாறு படித்தால் தொழுகின்றவன் தன்னைக் காதலிக்கு முழுமையாக ஒப்படைக்கிறான் என்று கருத்து வரும். “ப்” என்ற எழுத்தை விட்டு “முட்டை” என்று படித்தால் கோழி முட்டை என்ற கருத்து வரும். முழுக்கோழி என்பது முழுக்கோழியையும் குறிக்கும். முட்டைப் பொரியலும், முழுக்கோழிக் கறியும் காதலிக்கு காணிக்கையாக்கினால் அவள் என்ன செய்வாள், எதைக் கொடுப்பாள். சொல்லித்தானா தெரிய வேண்டும்.?!
எனவே,ஸுஜூத்” உடைய நிலை “ஷுஹூத்” காட்சி கிடைக்கும் நிலை என்பதை கருத்திற் கொண்டு ஏழு உறுப்புகளையும் – அதாவது தன்னிலுள்ள ஏழு “ஸிபாத்” தன்மைகளையும் இரவல் தந்தவனிடம் ஒப்படைக்கும் உணர்வோடு “ஸுஜூத்” செய்ய வேண்டும். ْمَنْ سَجَدَ سَهَا نَفْسَه وَغَيْرَه ஸுஜூத் செய்தவன் தன்னையும், மற்றவைகளையும் மறந்தவனாவான்.