Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மரணிக்கு முன் மரணியுங்கள்!

மரணிக்கு முன் மரணியுங்கள்!

مُوْتُوا قَبْلَ أَنْ تَمُوْتُوا
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
 
“மவ்த்” என்றால் மரணம் இதில் இருவகை உண்டு. ஒன்று – “அல் மவ்துல் ஹகீகிய்யு” எதார்த்த மரணம். அதாவது இயற்கை மரணம். இரண்டு – “அல் மவ்துல் மஜாஸிய்யு” ஆன்மீக மரணம். அல்லது செயற்கை மரணம்.
 
முதலாம் வகை மரணம் உயிரனங்கள் அனைத்திற்கும் உண்டு. இந்த மரணத்திலிருந்து எவரும் விடுபட முடியாது. كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ- உயிரனம் அனைத்தும் இயற்கை மரணத்தை அனுபவிக்க வேண்டுமென்பதில் இரண்டாம் கருத்துக்கோ, ஆய்வுக்கோ இடமில்லை. இது திருக்குர்ஆன்.

أَيْنَمَا تَكُونُوا يُدْرِكْكُمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ
நிங்கள் எங்கிருந்தாலும் உங்களை மரணம் அடைந்து கொள்ளும். நீங்கள் பலமான இரும்புக் கோட்டைக்குள் இருந்தாலும் சரியே!
திருக்குர்ஆன் – (3 – 78)
 
முதலாம் வகை மரணம் அல்லாஹ்வின் படைப்பினங்களில் உயிரனங்கள் அனைத்திற்கும் உண்டு. நபீமார், றஸுல்மார், வலீமார் அனைவருக்கும் இயற்கை மரணம் நிச்சயமாக உண்டு.
 
இரண்டாம் வகை மரணம் “அல்மவ்துல் மஜாஸிய்யு” எனப்படும். இது இயற்கை மரணமல்ல. இந்த வகை மரணம் மனிதனுக்கு மட்டுமே உண்டு. ஏனைய உயிரினங்களுக்கு இந்த வகை மரணம் இல்லை. ஆறாம் அறிவான பகுத்தறிவுள்ள மனிதனுக்கு மட்டுமே இந்த மரணம் உண்டு. மனிதர்களிலும் ஆன்மீக வழி செல்பவர்களால் மட்டுமே இந்த வகை மரணம் சாத்தியமாகும்.
 
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
قال النبي صلى الله عليه وسلّم مُوْتُوا قَبْلَ أَنْ تَمُوْتُوا
“நீங்கள் மரணிக்கு முன் மரணித்துக் கொள்ளுங்கள்” என்ற நபீ மொழி இரண்டாம் வகை மரணத்தையே வலியுறுத்துகிறது. இயற்கை மரணமென்பது தானாக வருவதேயன்றி நாம் ஏற்படுத்துகிற ஒன்றல்ல. நம்மால் ஏற்படுத்தவும் முடியாது.
 
ஆயினும் இரண்டாம் வகை மரணம் என்பது ஒருவன் தனது ஆன்மீகப் பயணத்தின் போது தானாக ஏற்படுத்திற் கொள்கின்ற மரணமாகும். இது தற்கொலையாகாது. இதன் விபரத்தை அறிந்து கொண்டால் இது தற்கொலையல்ல என்பது தெளிவாகும்.
 
( அல் மவ்துல் மஜாஸிய்யு) இரண்டாம் வகை மரணம் பற்றிய சுருக்கமான விளக்கம்.
 
இந்த வகை மரணம் موتٌ اِخْتِيَارِيٌّ என்று ஸூபீ மகான்களால் சொல்லப்படும்.
 
அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்காக தன்னுடைய ஏழு தன்மைகளை அவனுக்கு இரவலாக வழங்கியுள்ளான். இவற்றை அவன் வழங்கியது மனிதனின் நல் வாழ்வுக்காகவேயாகும்.
 
அவை “குத்றத்” – சக்தி, “இறாதத்” – நாட்டம், “ஸம்உ” – கேள்வி, “பஸர்” – பார்வை, “கலாம்” – போச்சு, “இல்ம்” – அறிவு, “ஹயாத்” – உயிர், என்பனவாகும்.
 
இவ் ஏழு தன்மைகளில் இறுதியாகச் சொல்லப்பட்ட தன்மையான “ஹயாத்” உயிர் இல்லையானால் ஏனைய ஆறு தன்மைகளில் ஒன்றுமே இயங்காது. இது மட்டும் இல்லையெனில் ஏனைய தன்மைகள் இருந்தும் பயனில்லை. அவன் உயிரற்ற வெறும் உடல் மட்டும்தான்.
 
குறித்த ஏழு தன்மைகளும் அல்லாஹ்வால் மனிதனுக்கு இரவலாக வழங்கப்பட்டவையாகும். தவிர அவனுக்கு சொந்தமாக்கப் பட்டவையல்ல. எனினும் மனிதன் இதை உணராமல் எனது சக்தி, எனது நாட்டம், எனது கேள்வி, எனது பார்வை, எனது அறிவு, எனது பேச்சு, எனது உயிர் என்று மருட்சியால் மயங்கிச் சொல்லிக் கொண்டிருக்கின்றான். உண்மையில் அவை அல்லாஹ்வால் தனக்கு இரவலாக வழங்கப்பட்டவை என்பதை உணர்ந்தானாயின் இரவல் பொருளை மரணிப்பதற்கு முன்னர் கொடுத்து விட வேண்டும் மென்று முடிவுக்கு வருவான்.
 
(இரவல் பொருளை கொடுப்பது எவ்வாறு?)
 
ஸூபீ மகான்கள் இரவலாகப் பெற்ற ஏழு தன்மைகளையும் அதற்குரியவனிடம் எவ்வாறு திரும்பக் கொடுப்பது என்பதற்கு வழி சொல்லித் தந்துள்ளார்கள்.
 
இறை ஞான வழி நடக்கின்ற ஒருவன் ஏழு தன்மைகளையும் இரவல் தந்த இறைவனிடம் நன்றியுணர்வோடு ஒப்படைத்து விட வேண்டும். இரவல் தந்தவன் கேட்பதற்கு முன் அதைப் பெற்றவன் கொடுத்து விடுவதே சிறந்தது. அவன் கேட்டும் கொடுக்க வில்லையானால் கேட்டவனுக்கு எடுக்கத் தெரியும். அவன் எடுத்துக் கொள்வான். இரவல் தந்தவன் கேட்கின்றான். இல்லை யென்றால் அவன் விடுவானா?
 
ஆகையால் கேட்பதற்கு முன்னே கொடுத்து விடுவோம். ஏழு தன்மைகளையும் ஏழு “திக்ர்”கள் மூலம் ஒப்படைத்து விடுவோம்.
 
இரவலாகப் பெற்ற சக்தியை لَا قَادِرَ إِلَّا الله – சக்தியுள்ளவன் அல்லாஹ் தவிர வேறுயாருமில்லை என்ற “திக்ர்” மூலமும், அதேபோல் இரவலாகப் பெற்ற நாட்டத்தை لَا مُرِيْدَ إِلَّا اللهُ – நாட்டமுள்ளவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை என்ற திக்ர் மூலமும், அதேபோல் கேல்வியை لَا سَمِيْعَ إِلَّا الله – கேள்வியுடையவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை என்ற திக்ர் மூலமும், அதேபோல் பார்வையை لَا بَصِيْرَ إِلَّا الله – பார்வையுடையவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை என்ற திக்ர் மூலமும், அதேபோல் அறிவை لَاعَلِيْمَ إِلَّا الله – அறிவுள்ளவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை என்ற திக்ர் மூலமும், அதேபோல் பேச்சு என்பதை لَا مُتَكَلِّمَ إِلَّا الله – பேசுகின்றவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை என்ற திக்ர் மூலமும், உயிரை لَا حَيَّ اِلَّا الله – உயிருள்ளவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை என்ற திக்ர் மூலமும் அவனிடம் ஒப்படைத்து அடியான் எது வுமில்லாத வெறும் “மையித்” பிரேதமாக ஆகிவிட வேண்டும்.
 
ஒருவன் இரவில் உறக்கத்திற்குச் சென்று, அமைதியான ஒரு சூழலை உருவாக்கி, பக்திப் பரவசத்தோடு மேற்கண்டவாறு “திக்ர்” செய்து வந்தால் நாளடைவில் அவனின் “கல்பு” – உள்ளம் ஒளி மயமாக ஆகிவிடும். பார்வையுள்ளதாகவும் ஆகிவிடும்.
 
மேற்கண்ட முறையில் ஏழு தன்மைகளையும் சொன்ன முறைப்படி அல்லாஹ்விடம் ஒப்படைத்து வரும் போது கருணையுள்ள அல்லாஹ் அவனைப் பொருந்திக் கொண்டானாயின் அவன் “இஸ்முல் அஃளம்” கிடைத்த பெரும் பாக்கியவானாகிவிடுவான். ஆன்மீக உலகையாளும் அரசர்களுடன் இனைந்து கொள்வான். அவன் மக்களின் பார்வையில் உயிருள்ளவனாக நடமாடினாலும் அவன் உயிர் துறந்த “மையித்” பிரேதமேதான்.
 
நாலாவது கலீபா ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியது போல் مَنْ مَاتَ فَقَدْ قَامَتْ قِيَامَتُهُ. எவன் இந்த அடிப்படையில் மரணிக்கின்றானோ அவனுக்கு மறுமை உண்டாகிவிடும். அவன் ஆன்மீக அடிப்படையில் உயிர் போன “மையித்” ஆகவும், மக்களின் பார்வையில் உயிருள்ள “ஹையுன்” ஆகவும் இருப்பான்.
 
ஒருவனுக்கு இயற்கை மரணம் ஏற்பட்டாலும் அவனுக்கு “கியாமத்” நாள் ஆரம்பமாகி விடுவது போல் ஆன்மீக அடிப்படையில் மரணித்தவனுக்கும் மறுமை உண்டாகிவிடும்.
 
அவன் எதார்த்தத்தில் அல்லாஹ்வுடனும், சமூக மக்களின் பார்வையில் அவர்களோடும் இருப்பான். திருமணம் செய்வான், குழந்தைகளைப் பெற்றெடுப்பான், வியாபாரம் செய்வான், நண்பர்களுடன் விளையாடுவான். பாவமான காரியங்கள் தவிர சமூகத்தோடு சேர்ந்து எல்லா வேலைகளும் செய்வான். ஆயினும் தான் செய்வதென்று அவனுக்குத் தெரியாத தாகவே இருக்கும்.
 
قال وَلِيٌّ من أَوْلِيَاءِ اللهِ إِنِّيْ اَتَكَلَّمُ مَعَ اللهِ مُنْذُ أَرْبَعِيْنَ عَامًا وَالنَّاسُ يَظُنُّوْنَ أَنِّيْ اَتَكَلَّمُ مَعَهُمْ .
வலீமாரில் ஒருவர் பின்வருமாறு சொன்னார்கள். “நான் நாற்பதாண்டுகளாக அல்லாஹ்வுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் ஊர் மக்களுடன் பேசிக் கொண்டிருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்” என்று.
 
இயற்கை மரணம் வருமுன் நாமாக மரணித்து உயிர்வாழ்வோம்.
இந்த ரகசியம் எவருக்கும் தெரியாமல் இருக்கட்டும்.
 
இத்தலைப்பில் தொடர் ஒன்றில் இதற்கான விபரத்தை எழுதினேன். الموت الحقيقيّ – எனும் இயற்கை மரணம் அனைத்து உயிரினங்களுக்கும் உண்டு என்றும் اَلْمَوْتُ الْمَجَازِيُّ – ஆன்மீக மரணம் உயிரினங்களில் மனிதனுக்கு மட்டும் உண்டு என்றும் எழுதியிருந்தேன்.
 
இயற்கை மரணம் தொடர்பாக எதுவும் எழுதத் தேவையில்லை என்பதால் அதை எழுதாமல் விட்டேன். எனினும் இரண்டாம் வகை மரணம் பற்றி “மவ்துல் மஜாஸ்” பற்றி ஓரளவு எழுதினேன். இந்த மவ்திற்கு مَوْتٌ اِخْتِيَارِيٌّ என்றும் ஒரு பெயர் உண்டு. இதன் பொருள் என்னவெனில் ஒருவன் தானாக விரும்பி ஆன்மீக அடிப்படையில் மரணிப்பதாகும்.
 
அதாவது அல்லாஹ் ஒரு மனிதனுக்கு இரவலாக வழங்கியுள்ள அவனின் ஏழு “ஸிபாத்” தன்மைகளையும் ஏழு வகையான “திக்ர்”கள் மூலம் அவனிடம் ஒப்படைத்து விட்டு தன்னை மரணித்தவனாக கருதிக் கொள்வதாகும்.
இவ்வாறு அவன் மரணித்தால் அவன் அல்லாஹ்விடம் மரணித்தவனாகவே கணிக்கப்படுவான். எனினும் இவ்வுலகில் மக்களின் பார்வையில் உயிரோடுள்ளவனாகவே இருப்பான்.
 
لَمْ يَلِجَ مَلَكُوْتَ السَّمَاوَاتِ مَنْ لَمْ يُوْلَدْ مَرَّتَيْنِ.
“எவன் இரண்டு தரம் பிறக்கவில்லையோ அவன் வானங்களின் ஆட்சிக்குள் பிரவேசிக்க முடியாது”
 
ஒரு மனிதனுக்கு பிறப்பும், இறப்பும் ஒரு தரம்தான். இரண்டு தரம் எவரும் பிறப்பதுமில்லை. இறப்பதுமில்லை. இதுவே எதார்த்தம். இவ்வாறிருக்கும் நிலையில் இரண்டு தரம் பிறக்காதவன் வானங்களின் ஆட்சிக்குள் பிரவேசிக்க முடியாது என்ற அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் தத்துவம் சிந்தனைக்கும், ஆய்வுக்கும் உட்படுத்தப்பட வேண்டியதாகும்.
 
ஒரு குழந்தை தாயின் வயிற்றிலிருந்து இவ்வுலகில் பிறப்பது ஒரு பிறப்பு. இத்தகைய பிறப்பு உயிரினங்கள் அனைத்திற்கும் உண்டு.
இவ்வாறு பிறக்கும் ஒரு குழந்தை சுமார் இரண்டு வருடங்கள் வரை “றூஹ்” உடைய தன்மை மிகைத்ததாகவும், மேலோங்கியதாகவுமே இருக்கும். குறித்த இரண்டு வருடங்களும் இக்குழந்தை பாவமறியாப் பாலகனாகவே இருக்கும். சுருக்கமாக சொல்வதாயின் مَقام الرُّوح – “றூஹ்” உடைய தன்மை மிகைத்த படித்தரத்தில் இருக்கும். இதை விடவும் தெளிவாகச் சொல்வதாயின் மலக்குகளின் படித்தரத்தில் அக்குழந்தை இருக்கும் எனலாம்.
 
அக்குழந்தை மலக்குகளுடன் உரையாடும். உறவாடவும் செய்யும். மலக்குகள் அக்குழந்தையிடம் வந்து போவார்கள். அது மட்டுமல்ல அக்குழந்தையுடன் செல்லமாக விளையாடவும் செய்வார்கள். கையில் மலர்களை எடுத்து வந்து அக்குழந்தைக்கு கொடுப்பது போல் பாவனை செய்வார்கள். குழந்தை மலர்ச் செண்டைப் பற்றுவதற்காக முனையும் வேளை அதைக் கொடுக்காமல் மறைத்து விடுவார்கள்.
 
இந்த வேளையில்தான் குழந்தை அழுவதும், சிரிப்பதுமாகும். பிறந்த நாளிலிருந்து சுமார் இரண்டு வடுடங்கள் வரை மலக்குகள் வந்து போவார்கள். “ஸுர்யானீ” சிரியன் மொழியில் மலக்குகள் குழந்தைகளுடன் பேசுவார்கள். பால் அருந்தும் காலத்தில் குழந்தை சிரித்ததைத் தொடர்ந்து அழுவதற்கான காரணம் இதுவேயாகும்.
 
எனினும் இதற்கான காரணத்தை இன்னும் முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவுமில்லை. ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள், மற்றும் சிறுவர்களுக்கான விஷேட மருத்துவர்களும் கூட அறிந்து கொள்வுமில்லை. இந்த எதார்த்த ரகசியத்தை அறிந்தவர்கள் நபீமார்களும், வலீமார்களுமேயாவர். நாம் வலீமார்கள் அல்லர் ஆயினும் அவர்கள் சொன்னதைச் சொல்கிறோம்.
 
இரண்டு வருடம் முடிந்த பின் மலக்குகளின் தொடர்பு நின்று விடும். சுமார் ஏழு வயது வரை அதாவது ஏழு வயது முடியும் வரை சுமார் ஐந்து வருடங்கள் வரை குழந்தை “றூஹ்” உடைய “மர்தபா” தரத்திலிருந்து இறங்கி சாதாரண நிலைக்கு வந்து விடும்.
 
ஏழு வயதென்பது ஒரு குழந்தையின் வயதில் ஏவல், விலக்கலுக்கு அத்திவாரமிடும் ஒரு கட்டமாகும். ஏழு வயதிலிருந்து 15 வயது வரை ஏவல், விலக்கலுக்கான பயிற்சிக் காலமுமாகும். இடைப்பட்ட சுமார் எட்டு வருடங்களும் 15 வயதில் கடமையாகவுள்ள ஏவல் விலக்கலுக்கான பாடங்களையும், சட்டதிட்டங்களையும் முன் கூட்டியே கற்றுக் கொள்ளும் காலமுமாகும்.
இதனால்தான் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்
مُرُوا صِبْيَانَكُمْ بِالصَّلَاةِ لِسَبْعٍ، وَاضْرِبُوهُمْ عَلَيْهَا لِعَشْرٍ
உங்களின் பிள்ளைகளுக்கு ஏழு வயதின் தொடக்கத்தில் தொழுகையைக் கொண்டு ஏவுங்கள் என்றும், பத்து வயதானால் அதற்காக – அதை விட்டதற்காக – அடியுங்கள் என்றும் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள். பிள்ளகைள் ஏழு வயதை அடைந்தால் தொழுமாறு சொல்ல வேண்டும். பத்து வயதை அடைந்தால் அதற்காக – தொழுகையை விட்டதற்காக அடிக்க வேண்டும் என்பது இஸ்லாமிய சட்டமாகும்.
 
பெற்றோர் அடிப்பதாயினும், அல்லது பாதுகாவலர்கள் அடிப்பதாயினும் மனச்சாட்சிக்கு முரணில்லாமல் அடிக்க வேண்டும். அவனைக் கட்டி வைத்து தோல் உரியும் வரை அடிப்பது தண்டனைக் குரிய குற்றமாகும்.
 
15 வயதை அடைந்தால் ஏவல், விலக்கல் கடமையாகி விடும். ஏவலை எடுத்து நடப்பதும், விலக்கலை தவிர்ந்து நடப்பதும் கடமையாகும்.
 
ஒருவன் 15 வயதைக் கடந்து செல்லும் போது அவன் செய்கின்ற நற்காரியத்துக்கு நன்மையும், கெட்ட காரியங்களுக்கு தண்டனையும் உண்டு. இத்தகைய ஒரு கட்டத்தை அடைந்தவன் மீண்டும் ஒரு முறை பிறந்து தன்னை முழுமையாக மாற்றிக் கொள்ள வேண்டும். அவன் இரண்டாம் முறை பிறந்த நாளில் இருந்தே தனது வயதையும் அவன் கணித்துக் கொள்ள வேண்டும். மீண்டும் இரண்டாவதாக அவன் பிறப்பதாயின் அவன் தனக்கு அல்லாஹ் இரவலாக தந்த ஏழு தன்மைகளையும் இரவல் தந்தவனிடம் ஒப்படைத்து விட்டு தானுமில்லை, தனக்கென்று ஒன்றுமில்லை என்ற நிலைக்கு வரவேண்டும்.
 
இந்த நிலைக்கு அவன் வருவதே அவன் இரண்டாம் முறை பிறப்பதென்பதாகும். இது தவிர தாயின் வயிற்றிலிருந்து இரண்டாம் முறை பிறப்ப தென்பது கருத்தல்ல.
 
எனவே, அனைத்து முஸ்லிம்களினதும் தாரகை மந்திரமென்று சொல்லப்படுகின்ற திருக்கலிமா “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்துக்கு ஸூபீ மகான்கள் கூறியுள்ள கருத்து அல்லாஹ் தவிர எந்த ஒரு வஸ்தும் இல்லை என்பதாகும். இதுவே இஸ்லாமின் ஆணிவேரும், அத்திவாரமுமாகும்.
 
ஸூபீ மகான்களும், ஆரிபீன்களான இறைஞானிகளும், அவ்லியாஉகளும், தரீகாவுடைய ஷெய்குமார்களும் பேசியும், எழுதியும் வந்துள்ள இறைஞான தத்துவங்களை மறைத்தவர்களும், மறுத்தவர்களும் அந்தக் கருத்துக்கள் இந்து மத தத்துவம், கிரேக்க தத்துவம் என்று சொன்னவர்களும், நாதாக்களின் தத்துவத்தைப் பேசியவர்களுக்கும், அதைச் சரிகண்ட பல இலட்சம் மக்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று பத்வா தீர்ப்பு வழங்கியவர்களும், ஸூபிஸ கருத்துக்களை பேசியவர்களை கொலை செய்ய வேண்டுமென்று எழுத்து மூலம் நாட்டு மக்களுக்கு அறிவித்து அவர்களை கொன்றொழிக்க காடயர்களைத் தூண்டியவர்களும் அ – இ – ஜ – உலமாவின் அதிமேதகு தலைவர் சாம்பல் முப்தி ரிஸ்வி என்பவரேயாவார். அவர் மட்டுமல்ல. அவருக்கு வால் பிடிக்கும் ஆன்மீக எதிரிகளான வஹ்ஹாபிகளுமேயாவர்.
 
பணத்துக்காகவும், பட்டத்திற்காகவும் தலைப்பாகையை மாற்றி மாற்றிக் கட்டும் போலி உலமாஉகளும், இரு முகமுள்ள உலமாக்களும் இதன் பிறகாவது நல்வழி நடக்க வேண்டும். நீதிக்காகவும், ஆன்மீக அறிவை வளர்ப்பதற்காகவும் அயராது பாடு பட வேண்டும்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments