لَا تَرْحَلَنَّ بِلَا عُدَّةٍ – فَإِنَّ الطَّرِيْقَ مَخُوْفٌ مَخُوْفٌ
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ
ஒருவன் பிறந்ததிலிருந்து இவ்வுலகப் பயணத்தை மேற்கொள்கின்றான். அவன் பிறக்கும் போது எதையும் கொண்டு வரவில்லை. மானத்தை மறைப்பதற்கு கூட ஒரு சிறு துணித் துண்டைக் கூட கொண்டு வரவில்லை. ஆயினும் பிறக்கும் போது மானத்தை மறைத்த நிலையில் பிறந்த ஒருவர் அஜ்மீர் அரசர் கரீப் நவாஸ் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மட்டுமேயாவர்.
இவ்வாறு பிறந்த ஒருவன் தனது இவ்வுலகப் பயணத்தின் போது அல்லாஹ் தனக்கு வழங்கிய உதவியுபகாரம், பணச் செல்வம், மற்றும் அருள்களையெல்லாம் அவன் வழங்கியதாக உணராமலும், அறியாமலும் தனது திறமையினால் பெற்றவை என்று மார்தட்டி இறுமாப்புடன் வாழ்கிறான்.
“துன்யா” என்ற கீழ்த்தரமான பயணத்தை தனது மரணத்தோடு முடித்துக் கொள்கின்றான். மறுகணமே “ஆகிறா” மறுவுலகப் பயணத்தில் கால் வைக்கிறான். அவனுக்கு ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு அறிவுரை வழங்குகிறார்கள்.
நீ செல்லும் பாதை பயங்கரமானது. ஆகையால் எந்த ஓர் ஆயுதமுமின்றி நீ பயணிக்காதே என்று கூறியுள்ளார்கள்.
அதாவது ஒருவன் மரணித்து மறுமை வழி செல்லும் போது அவன் பல தரிப்பு நிலையங்களையும், பல சோதனைச் சாவடிகளையும் சந்திக்க நேரிடும். அந்த நிலையங்களிலும், சாவடிகளிலும் பல பரிசோதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான விடை சொன்னவன் மாத்திரமே தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவான். இன்றேல் அவன் அந்த எல்லையுடன் நிறுத்தப்பட்டு எங்கு அனுப்பப்பட வேண்டுமோ அங்கு அனுப்பப்படுவான்.
அவன் முதலில் சந்திக்கும் சோதனைச் சாவடி “கப்ர்” ஆகும். இது குறித்து பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கூறுகையில்,
إِنَّ الْقَبْرَ أَوَّلُ مَنْزِلٍ مِنْ مَنَازِلِ الْآخِرَةِ،
“கப்ர்” என்பது மறுமைக்குச் செல்வதற்கான முதற் சுங்கச் சாவடியாகும்.
இங்கு உயர் மட்ட பரிசோதக உத்தியோகத்தர்களில் இருவர் வருவார்கள். ஒருவர் “முன்கர்” என்றும், மற்றவர் “நகீர்” என்றும் அழைக்கப்படுவார்கள்.
“முன்கர்” என்ற சொல்லுக்கும், “நகீர்” என்ற சொல்லுக்கும் வெறுக்கப்பட்டவர் என்று பொருள் வரும். இவர்கள் இருவரும் மரணித்த ஒருவனை அடக்கம் செய்து ஒரு சில நொடிகளிலேயே அவனிடம் வந்துவிடுவார்கள்.
ஒரு சில நொடிகளில் வருவார்கள் என்று நான் குறிப்பிடுவதால் கணவன் மீது வெறுப்புள்ள மனைவிக்கு அவனின் கை பட்டாலும் கோபம்தான், கால் பட்டாலும் கோபம்தான் என்று சொல்வது போல் மௌலவீமார்களிற் சிலர் ஒரு சில நொடிகளில் அவ்விருவரும் வந்து விடுவார்கள் என்று எந்த நபீ மொழியில் உள்ளது? என்று கேட்க நினைப்பார்கள். إِنَّ الْعَبْدَ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ وَتَوَلَّى عَنْهُ أَصْحَابُهُ، إِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ، فَيَأْتِيهِ مَلَكَانِ، فَيَقُولَانِ
என்ற ஹதீது இதை உணர்த்தும்.
இந்த ஹதீதில் மரணித்து அடக்கம் செய்துவிட்டுப் போகின்றவர்களின் பாதணியின் சத்தம் கப்றில் இருப்பவனுக்கு கேட்கும் என்று ஒரு வசனம் வந்துள்ளது. இந்த வசனத்தை தெளிவான நிலையில் இருந்து வாசித்தார்களாயின் ஒரு சில விநாடிகளில் மலக்குகள் வந்துவிடுவார்கள் என்று நான் சொன்னது சரியான தகவல் என்பதை விளங்கிக் கொள்வார்கள்.
مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ
அல்லாஹ் ஒருவருக்கு “கைர்” நல்லதை நாடினால் அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை கொடுப்பான் என்று திரு நபியின் அருள் வாக்கு கூறுகிறது.
கப்றுக்குள் வந்த இரு மலக்குகளும் அவனிடம் கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்வார்கள். எவன் அவர்களின் கேள்விகளுக்கு சரியான விடை சொல்கிறானோ அவன் அவர்களால் வாழ்த்தப்பட்டு அடுத்த சுங்கச் சாவடிக்கு அனுப்பி வைக்கப்படுவான். சரியான விடை சொல்லாதவனை எச்சரித்து இதோடு உன்கதை முடிகிறது. நீ நரகமே என்று சொல்லிவிட்டு சரியான பதில் கூறியவனிடம் نَمْ نَوْمَةَ الْعَرُوْسِ மணமகன் தூங்குவதுபோல் நிம்மதியாக தூங்குவாயாக என்று வாழ்த்துக் கூறிவிட்டுச் செல்வார்கள்.
அந்தக் கப்றிலுள்ளவனிடம் கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் திருவுருவம் காட்டப்பட்டு
مَا هَذَا الرَّجُلُ الَّذِي بُعِثَ فِيكُمْ؟
உங்களில் அனுப்பி வைக்கப்பட்ட இந்த மனிதனின் விடயத்தில் நீ என்ன சொல்வாய்? என்று வினவப்படும். அவன் நல்லவனாயின் இவர்கள் எங்களின் நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் என்று கூறி தப்பித்துக் கொள்வான். அவன் பாவியாக இருந்தால் இவர் யாரோ நான் அறியேன் என்று சொல்வான் என்பதை நபீ பெருமான் பின்வருமாறு சொல்லிக் காட்டினார்கள். அதாவது هَاهْ هَاهْ لَا أَدْرِي “ஹாஹா லா அத்ரீ” எனக்குத் தெரியாது என்று சொல்வான்.
எவன் இவ்வுலகில் வாழும் போது அண்ணலெம்பிரான் அவர்கள் யார் என்று அறிந்து அவர்களை நேசித்தும், அவர்களைப் பின்பற்றியும், அவர்கள் மீது ஸலவாத், ஸலாம் சொல்லியும் வாழ்ந்தானோ அவன்தான் சரியான பதில் கூறி சுவர்க்கம் ஏகுவான்.
வஹ்ஹாபிகள் போல் எவன் அவர்களைத் தரக் குறைவாகப் பேசியும், எழுதியும் வந்தானோ அவனும், அவர்கள் நம் போன்ற சாதாரண மனிதனென்று நம்பினானோ அவனும், பாங்கு சொல்லு முன்னும், அதன் பின்னும் ஸலவாத், ஸலாம் சொல்வது நபீ வழிக்கு மாற்றமென்று சொன்னானோ அவனும், சரியான பதில் கூற முடியாமல் நரகம் செல்ல நேரிடும்.
வஹ்ஹாபிஸ வழிகேடு இலங்கையில் தலை நீட்டுமுன் இலங்கை முஸ்லிம்களில் நூறு வீதமானோர் கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை தமது பெற்றோர், மனைவி மக்கள், உற்றார் உறவினர் அனைவரையும் விட அதிகம் நேசித்தவர்களாகவே இருந்து வந்துள்ளார்கள். எந்த ஒரு கெட்டவன் கூட அவர்களைத் தரக் குறைவாக பேசியதற்கோ, எழுதியதற்கோ வரலாறில்லை.
இதேபோல் அவ்லியாஉகள், ஷெய்குமார்கள், அஹ்லு பைத்துகள், “இமாம்”கள் மஷாயிகுமார்களில் எவரையும் கண்ணியக் குறைவாகப் பேசியதற்கோ, எழுதியதற்கோ எந்த ஒரு வரலாறும் கிடையாது.
வஹ்ஹாபிகள் தலை நீட்டுமுன் முஸ்லிம்களில் எவரும் தலை மறைக்காமல் தொழுததற்கோ, மார்க்க சம்பந்தமான ஒரு சபையில் கலந்து கொண்டதற்கோ எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.
எனவே, நாம் வஹ்ஹாபிஸ வழி நடந்து நாயை விடக் கேவலமாகி விடாமலும், இருக்கின்ற ஒன்றே ஒன்றை – அதாவது அல்லாஹ்வின் “வுஜூத்” என்ற உள்ளமையை – ஒன்றென்றே நம்பியும், படைப்பின் தோற்றத்தில் தோற்றுவது அல்லாஹ்வின் வுஜூத் என்ற உள்ளமைதான் என்பதை ஈமான் கொண்டும், எம்பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை நமது பெற்றோர், மற்றோர், மனைவி மக்கள் அனைவரை விடவும் அதிகம் நேசித்தும், அவர்கள் மீது அதிகம் ஸலவாத், ஸலாம் சொல்லியும் எமது மறுமைப் பயணத்துக்கு ஆயித்தமாவோம்.