Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளமை உண்டு.

அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளமை உண்டு.

اَللهُ مَوْجُوْدٌ، وَمَا سِوَاهُ مَفْقُوْدٌ
‘اَلْكَوْنُ كُلُّهُ ظُلْمَةٌ، وَإِنَّمَا أَنَارَهُ وُجُوْدُ الْحَقِّ فِيْهِ’ أَيْ فِي صُوْرَتِهِ،
وَالْعَارِفُوْنَ بِـرَبِّهِمْ لَمْ يَشْهَدُوْا – شَيْئًا سِوَى الْمُتَكَبِّرِ الْمُتَعَالِـيْ
وَرَأَوْا سِوَاهُ عَلَى الْحَقِيْقَةِ هَالِكًا – فِى الْحَالِ وَالْمَاضِيْ وَالْإِسْتِقْبَالِ
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
 
உலகில் தோன்றி மறைந்த வலீமார் அனைவரும் “வஹ்ததுல் வுஜூத்” “மெய்ப் பொருள் ஒன்று” என்ற இறை தத்துவம் பேசியவர்களேயாவர். வலீமாரில் இத் தத்துவம் பிழையென்று பேசியவர் ஒருவருமில்லை.
 
உலகில் தோன்றி மறைந்த இறை ஞானிகளில் – ஸூபீ மகான்களில் நால்வர் மட்டுமே “குத்புல் அக்தாப்” எனும் அதியுயர் குத்பிய்யத்தில் இருந்தவர்கள் என்பது ஸூபிஸ மகான்களின் கருத்தாகும்.

அவர்கள், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ, ஸுல்தானுல் ஆரிபீன் ஸெய்யித் அஹ்மத் கபீர் அர் ரிபாயீ, அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு ஷெய்குல் அறப் அஹ்மத் அல் பதவீ, அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு இப்றாஹீம் அத்தஸூகீ றழியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களாவர். இவர்கள் நால்வரும் الأقطاب الأربعة – நான்கு குத்புமார்கள் என்று பிரசித்தி பெற்றவர்களாவர்.
 
ஸூபீ மகான்கள் அனைவரும் ஒன்றுபட்டு இந் நால்வர் மட்டுமே குத்புகள் வேறெவரும் குத்புகள் அல்ல என்று சொல்லிவிட்டார்கள் என்று நாம் விளங்கிக் கொள்ளக் கூடாது. ஸூபீ மகான்களில் அநேகர் இந் நால்வர்களை மட்டும் “குத்புகள்” என்று ஏன் சொன்னார்கள் என்பதற்கான காரணம் என்னவென்று நான் இன்னும் எந்த நூலிலும் காணவில்லை.
 
அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ, அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ அஷ் ஷாதுலீ, அஷ் ஷெய்குஸ் ஸெய்யித் ஷுஐப் அபூ மத்யன் அல்மக்ரிபீ, அல்குத்புஷ்ஷஹீத் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் இவர்களும், இவர்கள் போன்ற இன்னும் பலரும் பெரும் குத்புகளாயிருந்தும் கூட இவர்கள் குறித்த நால்வரில் சேர்க்கப்படாதற்கான காரணம் எனக்குப் புரியவில்லை. வலீமார் விடயத்தில் எனது சிற்றறிவைப் பயன்படுத்தி எதுவும் சொல்ல என்னால் முடியாது. நான் உலகில் “விலாயத்” என்ற அரச கிரீடம் அணிந்த அனைவரின் காற்பாதங்களையும் என் தலை மேல் வைத்து வாழும் “காதிம்” அவர்களின் பணியாளனாகவே இருக்கிறேன். மரணிக்கும் வரை அவ்வாறிருக்கவே விரும்புகிறேன்.
 
நான் அறிந்தவரை العلوم الوهبيّة، العلوم الكشفية போன்ற அறிவுகளில் ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ போன்ற எவரையும் நான் அறியவில்லை. இவர்கள் கூறிய ஒரு பாடல் மூலம் இவர்கள் போல் “வஹ்பிய்யா”வான அறிவு வழங்கப்பட்டவர்கள் எவருமில்லை என்றே விளங்க முடிகிறது. சிரியாவின் தலைநகரான டமஸ்கஸ் நகரிலுள்ள இவர்களின் “தர்ஹா” சமாதியின் முன்வாயலில் பின்வருமாறு ஒரு பாடல் எழுதப்பட்டுள்ளதை என் கண்களால் நான் கண்டுள்ளேன். அந்தப் பாடல் வரிகள் இதோ,
 
خُصِّصْتُ بِعِلْمٍ لَمْ يُخَصَّ بِمِثْلِهِ – سِوَايَ مِنَ الرَّحْمَنِ ذِي الْعَرْشِ وَالْكُرْسِيْ
நான் ஓர் அறிவு கொண்டு சொந்தமாக்கப்பட்டுள்ளேன். அத்தகைய அறிவு கொண்டு என்னைத் தவிர வேறெவரும் சொந்தமாக்கப்படவில்லை. அர்ஷ், குர்ஸீயுடைய றஹ்மான் எனக்கு அதைச் சொந்தமாக்கியுள்ளான் என்பதாகும்.
 
நான் தலைப்பில் ஒரு வசனம் எழுதியுள்ளேன். அதே வசனத்தை ஆரிபீன்களான இறைஞானிகளிற் பலர் கூறியுள்ளார்கள். அந்த வசனம் இதோ,
اَللهُ مَوْجُوْدٌ، وَمَا سِوَاهُ مَفْقُوْدٌ
அல்லாஹ் என்று ஒருவன் உள்ளான். அவன் தவிர வேறு ஒன்றுமே இல்லை. இதன் கருத்து என்னவெனில் அல்லாஹ்வுக்கு மட்டுமே وجود حقيقي எதார்த்தமான, சுயமான “வுஜூத்” உள்ளமை உண்டு. படைப்பு என்பது عدم محض அறவே இல்லை. இதன் கருத்து என்னவெனில் படைப்புக்கு எதார்த்தமான, சுயமான “வுஜூத்” உள்ளமை கிடையவே கிடையாது என்பதாகும்.
 
அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளமை உண்டு. படைப்புக்கு அது இல்லை என்றால் படைப்பு என்று ஒன்றில்லை என்பதே இதன் சுருக்கமாகும். படைப்பு இல்லையென்றால் நமது கண்களுக்கு படைப்பாகத் தோற்றுவது அல்லாஹ்வின் உள்ளமையேயன்றி படைப்பு அல்ல. நாம் அதைப் படைப்பென்று எண்ணிக் கொண்டிருப்பது எமது “வஹ்ம்” பேதமையேயாகும்.
 
இது எது போலென்றால் நெல் வயல்களிலும், மற்றும் தோட்டங்களிலும் துணியால் அல்லது வேறொன்றால் மனித உருவம் செய்து, கையில் ஒரு துப்பாக்கி உருவத்தில் ஏதோ ஒன்றையும் கொடுத்து நிறுத்தி வைப்பது வழக்கம். இவ்வாறு செய்வது மிருகங்கள் வயலுள் அல்லது தோட்டத்துள் வந்து பயிர்களை நாசப்படுத்தாமல் இருப்பதற்கேயாகும்.
 
மிருகங்கள் பகுத்தறிவில்லாத உயிர்ப்பிராணிகளாகும். மனிதன் அவற்றுக்கு மாறானவனாவான். பகுத்தறிவில்லாத மிருகங்கள் அவ்வாறு செய்து வைக்கப்பட்ட போலி மனித தோற்றத்தைக் கண்டு உண்மையான மனிதன்தான் நிற்கிறான் என்று ஏமாந்து அந்தப் பக்கமே செல்லாமல் போய்விடுகின்றன. ஆயினும் பகுத்தறிவு வழங்கப்பட்ட மனிதன் ஒரு போதும் ஏமாந்து போக மாட்டான்.
 
பகுத்தறிவற்ற மிருகங்கள் போலி மனிதனைக் கண்டு ஏமாந்து விடுவதுபோல் பகுத்தறிவுள்ள மனிதன் அந்த மிருகங்கள் போல் படைப்புகளைக் கண்டு ஏமாந்து அவை படைப்புகள் என்றும், அல்லாஹ்வுக்கும் அந்தப் படைப்புக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று நம்பியும், சொல்லியும் விடுகின்றான். அதாவது “ஹக்கு” வேறு, “கல்கு” வேறு என்று “ஙெய்ரிய்யத்” வேறு என்ற சேறில் விழுந்து தன்னைத்தானே அசுத்தப்படுத்திக் கொள்கின்றான்.
 
மிருகங்கள் பேதமையால் ஏமாந்து போகின்றன. மனிதனின் பகுத்தறிவு அது பொய்த்தோற்றமென்று அவனுக்கு எதார்த்தத்தை காட்டிக் கொடுக்கிறது.
 
தலைப்பில் எழுதிய இரண்டாம் வசனத்தை கவனித்துப் பார்க்க வேண்டும். இவ்வசனமும் இறைஞானிகளால் கூறப்பட்ட வசனமேயாகும். இதன் பொருள் பின்வருமாறு.
 
“அல்கவ்ன்” என்றால் உலகம் அல்லது படைப்பு என்று பொருள் வரும். படைப்பு அல்லது உலகம் ظلمة இருள் என்கிறார் ஞானி. இருள் என்றால் நாம் நினைக்கின்ற இருளல்ல. இருள் என்ற சொல்லின் சரியான பொருள் عَدَمٌ – “அதமுன்” இன்மை என்பதாகும். அதாவது எதார்த்தத்தில் இருள் என்று ஒன்று கிடையாது. இருள் என்பது எவ்வாறு இல்லாததோ அதேபோல் படைப்பு என்பதும் அல்லது உலகம் என்பதும் இல்லாததேயாகும். மனிதன் இல்லாத ஒன்றை இருப்பதாக நினைப்பது அவனின் பேதமைதான்.
 
பேதமை என்றால் எதையும் பகுத்தறிந்து பார்க்க முடியாத தன்மை. மடமை, அறியாமை எனும் பொருள்களைத் தரும் சொல்லாகும்.
உலகம் இன்மை என்றும், இருள் என்றும் சொன்ன ஞான மகான் பின்னால் என்ன சொல்கிறார் என்று கவனிக்க வேண்டும். وإنما أناره وجود الحق فيه இல்லாத, இன்மையான உலகை ஒளிரச் செய்தது அதன் உருவத்தில் இறைவன் இருப்பதேயாகும்.
 
படைப்பு அல்லது உலகம் இல்லையென்று சொன்ன ஞான மகான் அந்தப் படைப்பின் அல்லது உலகத்தின் உருவத்தில் இறைவன் இருப்பதுதான் அதை ஒளிரச் செய்கிறது என்று கூறுகின்றார்.
 
மேற்கண்ட இந்த வசனத்தில் فِيْهِ “பீஹி” என்று ஒரு சொல் வந்துள்ளது. இதற்கு விரிவுரை எழுதிய மகான் அவர்கள் فيه “பீஹி” அதிலே என்றால் في صورته அதன் உருவத்திலே – படைப்பின் உருவத்தில் அல்லது ஆலம் – உலகத்தின் உருவத்தில் அல்லாஹ் இருப்பதேயாகும்.
தலைப்பில் மூன்றாவதாக எழுதிய பாடல் இப்னு அறபீ நாயகம் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆசிரியர்களில் ஒருவரான அஸ்ஸெய்யித், அல்குத்பு ஷுஐப் அபூ மத்யன் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பாடலாகும்.
 
“ஆரிபீன்” – இறை ஞானிகள் என்போர் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் காணவில்லை.,
 
அல்லாஹ் தவிர யாவும் எதார்த்தத்தில் முக்காலத்திலும் இல்லாதவையாகும் என்று கூறியுள்ளார்கள்.
 
இப்பாடலின் விளக்கம் என்னவெனில் “ஆரிபீன்” இறைஞானிகள் என்போர் அல்லாஹ்வைத் தவிர எதையும் காணமாட்டார்கள். படைப்புகளைக் காணமாட்டார்கள் என்பதாகும். அவர்கள் நீருள் வாழும் மீன்கள் போன்றவர்களாவர். நீரில் வாழும் மீன் நீரைத்தவிர வேறொன்றையம் காண்பதில்லை. இதேபோல் இறைஞானிகளுமாவர். அவர்கள் படைப்பை காணமாட்டார்கள். கண்டாலும் கூட அதை இறைவனாகவே பார்ப்பார்கள்.
 
அல்லாஹ் தவிர யாவும் – அதாவது படைப்பு என்பது முக்காலமான (மாழீ, ஹால், முஸ்தக்பில்) சென்ற காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய முக்காலத்திலும் இல்லாதது என்று திட்டமாக கூறியுள்ளார்கள் ஞானிகள்.
 
தலைப்பில் எழுதப்பட்ட மூன்று அறபு வசனங்களின் விளக்கத்தையும் ஓரளவு எழுதியுள்ளேன்.
 
அன்புக்குரியவர்களே! சகோதர, சகோதரிகளே! அண்ணன் தம்பிமார்களே!
 
உலகில் தோன்றி மறைந்த இறைஞானிகளும், தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்ற இறை ஞானிகளும் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் பேசியவர்களேயாவர். இதன் பிறகு பிறந்து வருகின்ற ஞான மகான்களும் இதே தத்துவத்தையே பேசுவார்கள். பேசத்தான் போகின்றார்கள்.
 
இத் தத்துவம்தான் திருக்குர்ஆன் கூறும் தத்துவமும், திரு நபீயின் அருள் மொழிகள் கூறும் தத்துவமும், இறையியல் மேதைகள் கூறிய, கூறிக் கொண்டிருக்கின்ற, இதன் பிறகு கூறப்போகின்ற தத்துவமுமாகும்.
 
இத் தத்துவத்தை சொன்னவனும், சரி கண்டவர்களும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” வழங்கினார்களே முல்லாக்கள் இவர்கள் “பத்வா” வழங்கிய மறு நிமிடமே “முர்தத்” மதம் மாறிவிட்டார்கள். இவர்கள் அனைவரும் தமது தவறை ஏற்றுக் கொண்டு மீண்டும் திருக்கலிமாவை உரிய முறைப்படி மொழிந்து மீண்டும் இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்து கொள்ள வேண்டும்.
 
சாம்பல் ரிஸ்விக்கு வால் பிடிக்கும் யாரோ ஒரு மௌலவீ றஊப் மௌலவீக்கு “பத்வா” வழங்கியவர்கள் இப்போது ஜம்இய்யதுல் உலமாவில் இல்லை. இந்த “பத்வா”வுக்கும், ரிஸ்விக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லையாதலால் றஊப் மௌலவீ ரிஸ்வீ முப்தீ அவர்களை எழுத்து மூலமும், பேச்சு மூலமும் சாடுவதை நிறுத்த வேண்டும் என்று பேசினாராம். இவ்வாறு பேசியவர் விஷயம் தெரியாத சரக்கில்லாத ஓட்டைக் கப்பல் போன்றவராவார். இவ்வாறு கூறி ரிஸ்வீயை காப்பாற்ற நினைக்கும் இந்த ஓட்டைக் கப்பல் யார் கொடுத்த பத்வாவாயினும் அதை தற்போது அமுல்படுத்திக் கொண்டிருப்பவர் ரிஸ்வீதான் என்பதை புரிந்து மௌனியாக வேண்டும்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments