தொகுப்பு: ஞானபிதா, ஷெய்குனா மௌலானா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அல்லாஹ்வும், அவன் படைப்பும் வேறா?
நீயென்று வேறா? நான் என்று வேறா? வேறென்று யார் சொல்லுவார்?
———–
அல்லாஹ் வேறு, அவன் படைப்பு வேறு என்று நம்புதல் எதார்த்தத்தில் “ஷிர்க்” இணையேதான்.
———–
கைக்கு அதன் விரல்கள் வேறானவையல்ல. ஆயினும் ஒரு விரல் மறு விரலுக்கு வேறானதே! சின்ன விரல் பெருவிரலுக்கு வேறானதே!
———–
ஒரு தோட்டத்திலுள்ள மரங்கள் அதற்கு வேறானவையல்ல. ஆயினும் அதிலுள்ள ஒரு மரம் இன்னொரு மரத்திற்கு வேறானதே! மா மரம் பலா மரத்திற்கு வேறானதே!
———–
மனிதனுக்கு அவனின் உறுப்புக்கள் வேறானவையல்ல. ஆயினும் ஓர் உறுப்பு இன்னோர் உறுப்புக்கு வேறானதே! மூக்கு நாக்குக்கு வேறானதே!
———–
ஒரு வாகனத்திற்கு அதன் உதிரிப் பாகங்கள் வேறானவையல்ல. ஆயினும் ஓர் உதிரிப் பாகம் இன்னோர் உதிரிப் பாகத்திற்கு வேறானதே! இருக்கை ஜன்னலுக்கு வேறானதே!
———–
அன்புக்குரிய முஸ்லிம் சகோதர சகோதரிகளே!
படைத்தவன் வேறு அவன் படைப்பு வேறு, றப்பு வேறு அப்து வேறு, “காலிக்” வேறு “மக்லூக்” வேறென்றும் நாம் பால் சுவைக்கும் பருவத்தில் பெற்றோர்கள் இந்த உணர்வை பாலுடன் சேர்த்து ஊட்டிவிட்ட காரணத்தால் அந்த உணர்வு நமது உடல் என்ற மரத்தின் அனைத்துப் பாகங்களிலும் பரவிவிட்டது. தொட்டில் பழக்கம் சுடு காடு வரை என்று சொல்வது போல் நாமும் அதே உணர்வோடு வயது வந்த பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நாம் பால் சுவைத்த காலம் முதல் இன்று வரை பெற்றோரும், மற்றோரும் அல்லாஹ் பற்றிப் பேசும் போதெல்லாம் வானத்தைப் பார்த்தும், அதன் பக்கம் கை உயர்த்தியும் வந்ததால் நாமும் இன்று அவ்வாறே செய்து வருகிறோம்.
நாம் நம்பியிருந்ததும், செய்ததும் பிழையென்று நாம் புரியாமலேயே நமது காலங்கள் வீணாகிவிட்டன. அன்று பெற்றோரும், மற்றோரும் சொல்லித் தந்த பாடங்கள் – படைத்தவன் வேறு படைப்பு வேறென்ற உணர்வுகள் இன்று வரை எம்மை ஆள்கின்றன.
மாதா பிதாவும் வருந்தி வருத்தி வைத்த
போதனையைப் பார்க்கில் பிழை காண் நிராமயமே!
நாம் சிறுவர்களாயிருந்த காலத்தில் நமக்கு நடை பயிற்றுவிப்பதற்காக மரத்தால் நடை கரத்தை செய்து தந்தார்கள் பெற்றோர்கள். நாமும் அதை அங்கிங்கெல்லாம் “தத்தக்கா பித்தக்கா” என்று சொல்லிக் கொண்டு தள்ளித் திரிந்தோம். அது அந்த வயதுக்குச் சரிதான். பொருத்தமானதுதான். அதற்காக ஐம்பது வயதை அடைந்தும் திருமணமும் செய்து குழந்தைகளையும் பெற்றெடுத்த பின்னும் அதே நடை கரத்தையை றஸ்மினோ, அப்துர் றாஸிக்கோ கொழும்பு காலி வீதியில் தள்ளித் திரிந்தால் அவர்களை சமூகம் என்னவென்று சொல்லும்? பொலிஸ் கண்டால் என்ன செய்வார்கள்? அங்கோடை செல்லும் பேரூந்து வண்டியில் ஏற்றி அனுப்பமாட்டார்களா?
நாம் இரண்டு வயதுச் சிறுவர்களாயிருந்த காலத்தில் சிறு பிள்ளைத் தனத்தால் அடிக்கடி ஆண்குறியைப் பிடித்துக் கொண்டிருந்தோம். இதைக் கண்ட பெற்றோர்கள் நாம் இவ்வாறு பழகிவிடுவோம், தொட்டில் பழக்கம் சுடு காடு வரை என்பதை உணர்ந்து வெள்ளியால் ஆண்குறி செய்து நாடாவில் கோர்த்துப் போட்டு “குஞ்சி பிடி மாங்கா” என்று பெயரும் வைத்தார்களே! அதேபோல் பெண் குழந்தைகளுக்கும் வெள்ளியால் செய்து போட்டு அதற்கு “அலமடி” – அரை மூடி என்றும் பெயர் வைத்தார்களே! நினைவிருக்கிறதல்லவா? அது அந்த வயதுக்குப் பொருத்தமானதே! ஆயினும் ஐம்பது வயதைக் கடந்து திருமணம் செய்து பிள்ளைகளையும் பெற்றெடுத்த பின் ஆதமும், ஆயிஷாவும் அவ்வாறு செய்யலாமா? அதெல்லாம் ஒரு வயதுக்கு மட்டும் பொருத்தமானவைதான்.
இன்று உலகில் வாழ்கின்ற முஸ்லிம்களில் அநேகர் அல்லாஹ் வேறு, படைப்பு வேறு என்று சொல்லியும், அல்லாஹ் பற்றிப் பேசும் போது வானத்தின் பக்கம் கையை உயர்த்தியும் வருவதால் அவர்கள் வஹ்ஹாபிகள் போலாகிவிட்டார்கள்.
வஹ்ஹாபிகள் பல வருடங்களாக அல்லாஹ் அர்ஷில்தான் இருக்கின்றான் என்று ஆணித்தரமாகச் சொல்லி வந்தார்கள். எம் போன்ற ஸூன்னீ உலமாஉகள் அவர்களின் கூற்றை மறுத்து பேசி வந்ததால் பதில் கொடுக்க முடியாமல் அவனுக்கு இடத்தை மாற்றி அவன் அர்ஷில் இல்லை. ஆயினும் அதற்கு மேலே உள்ளான் என்று சொன்னார்கள். அவ்வாறு சொல்வதும் பிழைதான். “மேலே” என்பது கூட ஓர் இடத்தைக் குறிக்கிறதென்று ஸுன்னீகள் பிரச்சாரம் செய்ததால் இப்போது என்ன சொல்வதென்று யோசிக்கிறார்கள் வஹ்ஹாபிகள். அவர்களும் எம்போன்று எல்லாம் அவன்தான் என்று சொல்லிவிட்டார்களாயின் அவன் இடம் தலமற்றவன் என்ற முடிவுக்கு வந்து இடமாயும், தலமாயும் அவனே உள்ளான் என்ற ஏகத்துவத்திற்கு வந்துவிடுவார்கள்.
அல்லாஹ் “அர்ஷில்” உள்ளான் என்று வஹ்ஹாபிகள் சொன்னது போன்றே 1979ம் ஆண்டுக்கு முன் எல்லா உலமாஉகளும், மற்றவர்களும் இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று சொல்லி வந்தார்கள். ஸூபீகளான நாங்கள் இவ்வாறு சொல்லுதல் “ஹுலூல்” “இத்திஹாத்” கொள்கை என்று பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்து வந்ததால் அவர்களும் அவ்வாறு சொல்வதை நிறுத்திக் கொண்டார்கள்.
இவை மட்டுமல்ல. இன்னும் சொல்கிறேன்.
1979ம் ஆண்டு “வஹ்ததுல் வுஜூத்” சொல்லப்படுவதற்கு முன் இலங்கை நாட்டில் எங்கெல்லாம் தரீகாவாதிகள் இருந்தார்களோ அவர்கள் அனைவரும் இமாம் ஹத்தாத் றஹிமஹுல்லாஹ் அவர்களால் இயற்றப் பெற்ற “ஹத்தாத் றாதிப்” ஐ தமது பள்ளிவாயல்களிலும், வீடுகளிலும், மற்றும் கடைகளிலும் ஓதியே வந்துள்ளார்கள்.
எனதூரான காத்த நகரில் வாழ்ந்த உலமாஉகளில் ஒருவர் கூட விடுபடாமல் அனைவரும் இதை ஓதியே வந்துள்ளார்கள். இப்போது ரியாலுக்கு அடிமையாகிக் கிடப்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் அதை ஓதி வந்தவர்கள்தான்.
அந்த றாதிபின் ஓர் இடத்தில் பின்வரும் பாடலை அழகாக ஓதுவார்கள். அவர்களில் எவரும் இதை மறுக்கமாட்டார்கள். காத்தான்குடி உலமாஉகள் மட்டுமல்ல. கொழும்பு, கண்டி, காலி போன்ற ஊர்களிலுள்ள உலமாஉகளும் ஓதியே வந்தார்கள்.
பாடல் தரும் ஞானத்தைப் பாருங்கள்.
إِلَهِي الْخَلْقُ مِثْلُ حَبَابْ – عَلَا مَاءً لَدَى الْأَحْبَابْ
فَـمَـاءٌ فِـى الْفَنَاءِ حَبَابْ – وَحَـالَ بَـقَـاهُ يَــا اَلله
فَـأَيْــنَ أَنَـا إِذَا أَنْـتَـا – بِـذَاتِــيْ دَائِـمًـا كُـنْـتَـا
فَـمَا بِـنْـتُ وَلَا بِـنْـتَـا – وَلَا تَـا بَــيْــنَــنَــا اَلله
இதன் பொருள் சுருக்கமாக.
இறைவா! படைப்பு என்பது நீரின் மேல் எழும் குமிழிகள் போன்றன. குமிழியாக இருக்கும் போதும் அது நீர்தான். குமிழியின் தோற்றம் மாறிய பின்னும் அது நீர்தான். இறைவா! இதுவே உனக்கும், உனது படைப்புக்கும் உதாரணமாகும்.
இறைவா! நீயே என்னாக உள்ளாய். இவ்வாறிருக்கும் நிலையில் உன்னை விட்டும் நான் பிரிவது எவ்வாறு? என்னை விட்டும் நீ பிரிவது எவ்வாறு? அன்த – أنت என்ற சொல்லிலுள்ள “தே”யை எடுத்தால் நீ என்பது போய் நான் என்பதே இருக்கும்.
அன்புக்குரிய பொது மக்களே!
இந்தப் பாடலில் கூறப்பட்ட கருத்து நூறு வீதம் “வஹ்ததுல் வுஜூத்” கருத்துக்களேயாகும். இவ்வாறு ஆடியாடிப் பாடிய உலமாஉகள்தான் இன்று என்னைக் காபிர் என்றும், முர்தத் என்றும் சொல்கிறார்கள். பத்வாவும் வழங்கிவிட்டு பஞ்சணையில் தூங்குகிறார்கள். நீதி மன்றில் விளக்கம் சொல்ல இவ்வாறு பாடிய உலமாஉகள் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக மௌலானா மௌலவீ ரிஸ்வீ முப்தீ அவர்கள் ரெடியாக இருக்க வேண்டும்.
இந்த றாதிப் ஓதியவர்கள் அனைவரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் “பத்வா”வின் படி முர்தத்துகளே! இவர்கள் எப்போது எங்கே கலிமாச் சொல்லி இஸ்லாமில் இணைந்தார்கள்? பதில் பறந்து வரட்டும்.
சாம்பல் பத்வா சாம்பலாகட்டும். மிக விரைவில் “பத்வா”வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை எதிர் பாருங்கள். (தொடரும்)
வேறில்லை வேறில்லை
ஹக்கும் கல்கும் வேறில்லை
வேறில்லை வேறில்லை
ஹக்கும் கல்கும் வேறில்லை.
ஹக்குக்கு கல்கு வேறில்லை
கல்காய் தெரிவது கல்கில்லை
கல்காய் வந்தது ஹக்கேதான்
இதுவே உண்மை. பிழையில்லை.
ஹக்கே கல்காய் வந்தானென்பது
ஹக்கேதான். அது பொய்யில்லை.
ஹக்கை கல்கில் காண்பது மெய்தான்
கவிதையிலொன்றும் தவறில்லை.
அரிசிக்கு சோறு வேறில்லை
சோறாய் தெரிவது சோறில்லை
அரிசிக்கு சோறு வேறில்லை
சோறாய் தெரிவது சோறில்லை
சோறாய் வந்தது அரிசேதான்
இதுவே உண்மை பிழையில்லை.
பொன்னுக்கு நகையும் வேறில்லை
நகையாய் தெரிவது நகையில்லை
நகையாய் வந்தது பொன்னேதான்
இதுவே உண்மை. பிழையில்லை.
பஞ்சுக்கு நூலும் வேறில்லை
நூலாய் தெரிவது நூலில்லை.
பஞ்சுக்கு நூலும் வேறில்லை
நூலாய் தெரிவது நூலில்லை.
நூலாய் வந்தது பஞ்சேதான்
இதுவே உண்மை. பிழையில்லை.
—————————–
01. இறை நினைவில் எனை இழப்பேன்
இறையல்லாதவை மறப்பேன்
இறை இஷ்கில் பனா ஆவேன்
இலாஹீ எனக்கருள் சொரிவாய்
02. உனைக் காணாத கண் எதற்கு
உனைப் புகழாத நா எதற்கு
உனையறியாத கல்பெதற்கு
இலாஹீ எனக்கருள் சொரிவாய்
03. வுஜூத் ஒன்றே இரண்டில்லை
வுஜூத் இன்றேல் படைப்பில்லை
வுஜூதும் தாத்தும் வேறில்லை
இலாஹீ எனக்கருள் சொரிவாய்
04. ஆலம் உந்தன் கண்ணாடி
அதைப் பார்ப்பேன் உனை நாடி
அதுவே என்னுயிர் நாடி
இலாஹீ எனக்கருள் சொரிவாய்
05. நீரின் மேல் எழும் குமிழி
நீரேதான் இதை அறி நீ
நீருக்கு குமிழி வேறில்லை
இலாஹீ எனக்கருள் சொரிவாய்
06. கானல் நீரை நிஜமென்று
காணுதல் பேதமை என்று
காமில்கள் கூறினர் அன்று
இலாஹீ எனக்கருள் சொரிவாய்
07. உன்னைக்காண என்னானாய்
உயிராய் உடலாய் நீ ஆனாய்
ஊராய் உலகாய் நீ ஆனாய்
இலாஹீ எனக்கருள் சொரிவாய்
08. உன்னைக்காணுதல் சொர்க்கம்
உனக்காய் வாழ்வதில் இன்பம்
உன்னாய் ஆவதென் நோக்கம்
இலாஹீ எனக்கருள் சொரிவாய்
09. ஆலம் உந்தன் கோலமென்று
அஹ்மதின் கோலம் நீ என்று
ஆரிப்கள் சொன்னனர் அன்று
இலாஹீ எனக்கருள் சொரிவாய்
10. ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ என்று
ஹூவில் இன்பம் நான் பெற்று
ஹூவில் நான் மறைவதற்கு
இலாஹீ எனக்கருள் சொரிவாய்.