தொகுப்பு: ஞானபிதா, ஷெய்குனா மௌலானா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
“ஷரீஆ”வின் பின்னணி ஸூபிஸம் என்பதையும், ஆன்மிகம் என்பதையும் அனைத்து முஸ்லிம்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். ஸூபிஸம் – ஆன்மிகம் கற்றும், விளங்கியும் செயல்பட வேண்டும்.
ஒரு நாட்டில் வாழ்கின்ற எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயினும் அவர்களிடம் ஸூபிஸம் – ஆன்மிகம் செயல்பட்டால் அவர்கள் நிம்மதியாக வாழ முடியும்.
கோடு கச்சேரியும் தேவையில்லை, முப்படைகளும் தேவையில்லை. ஸூபிஸம் – ஆன்மிகம் ஒன்று மட்டும்தான் மனிதனை மனிதனாக, மனச் சாட்சிக்கு மாற்றமின்றி வாழ வைக்கும் ஓர் அரும் மருந்தாகும்.
ஒரு நட்டின் அரசனும், அந்நாட்டு மக்களும் இறை பக்தியோடும், மனச் சாட்சிக்கு மாற்றமின்றியும் செயல்பட்டார்களாயின் நாட்டில் நிம்மதி நிலவும். இறையருள் இறங்கும். தொல்லைகள் தொலையும். அநீதிகள் அடங்கும். இன்று உலகில் வாழ்பவர்களில் அநேகர் கொம்பும், வாலும் இல்லாத உயிர்ப் பிராணியாகவே உள்ளார்கள்.
இதனால்தான் ஒரு கவிஞன் “வானத்தைப் பார்த்தேன், பூமியைப் பார்த்தேன், மனிதனை எங்கும் காணல்லையே” என்று பாடியுள்ளான் போலும்.
உர்துக் கவிஞர் அல்லாமா இக்பால் “ஸூறத்மே இன்ஸான்ஹே, ஸீறத் நெஹீஹே, ஸீறத்மே ஹயவான்ஹே, மகர்தும் நெஹீஹே” உருவத்திலேதான் மனிதன் இருக்கிறான். அவனிடம் மனிதாபிமானம் கிடையாது. அவன் மிருகங்கள் போல்தான் வாழ்கிறான். வால் மட்டும் இல்லாததே ஒரு குறை. அதுவும் இருந்தால் மிருகம் என்று துணிந்து சொல்லலாம் என்று பாடினார்கள்.
“தஸவ்வுப்” என்ற ஸூபிஸ ஞானம் மறுக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வந்ததால் பொது மக்கள் “ஷரீஆ”வை அறிந்துள்ள அளவு இறைஞானத்தை அறிந்து கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு இல்லாமற் போயிற்று.
“ஷரீஆ”வின் அறிவு பேசப்படுவது போல் இறையியலும் பேசப்பட்டால் அதிகமான மக்கள் ஓரளவேனும் இறையியலைக் கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
قَالَ الشَّيْخُ اِبْنُ عَطَاءِ الله السِّكَّنْدَرِيْ رَحِمَهُ الله مَنْ تَشَرَّعَ وَلَمْ يَتَحَقَّقْ فَقَدْ تَفَسَّقْ، وَمَنْ تَحَقَّقَ وَلَمْ يَتَشَرَّعْ فَقَدْ تَزَنْدَقْ،
(ஒருவன் “ஷரீஆ”வின் அறிவுகளைக் கற்று “ஹகீகா” என்று சொல்லப்படுகின்ற ஸூபிஸ ஞானம் கற்றுக் கொள்ளவில்லையானால் அவன் “பாஸிக்” ஆகிவிட்டான். ஒருவன் ஸூபிஸ ஞானம் கற்று “ஷரீஆ”வின் அறிவைக் கற்றுக் கொள்ளவில்லையானால் அவன் “சிந்தீக்” ஆகிவிட்டான்) என்று இமாமும், ஸூபிஸ ஞானியுமான “ஹிகம்” என்ற ஸூபிஸ நூலை எழுதிய தாஜுத்தீன் இப்னு அதாஇல்லாஹ் சிக்கந்தரீ றஹிமஹுல்லாஹ் குறித்த தனது நூலில் கூறியுள்ளார்கள். “சிந்தீக்” என்பவன் ஈமானை வெளியில் காட்டி “குப்ர்”ஐ மறைத்தவனாவான். இது பாரசீக மொழிச் சொல்.
இந்த நூல் பற்றி ஸூபிஸ வட்டத்தைச் சேர்ந்த இறை ஞானிகளிற் பலர் كاد الحكم أن يكون قرآنا “ஹிகம்” எனும் நூல் திருக்குர்ஆனுக்கு நெருங்கிவிட்டது என்று கூறியுள்ளனர்.
இந்த மகான் பல்லாண்டுகளுக்கு முன் இவ்வாறு சொல்லியிருந்தாலும் கூட அவர்களின் கருத்து இக்காலத்திலுள்ளவர்களுக்கு சொல்லப்பட்டது போல் உள்ளது.
சுமார் ஆறு அல்லது ஏழு வருடங்கள் அறபுக் கல்லூரிகளில் கல்வி கற்று மௌலவீ பட்டம் பெற்று வருகின்ற மௌலவீமார் நஹ்வு – மொழியிலக்கணம், “ஸர்பு” சொல்லிலக்கணம், “பிக்ஹ்” சட்டம், “தப்ஸீர்” திருக்குர்ஆன் விளக்கம், ஹதீது – நபீ மொழிகள் போன்ற கலைகளைக் கற்று அவற்றில் திறமை உள்ளவர்களாக இருப்பது பாராட்டப்பட வேண்டிய விடயமேயாகும்.
ஆயினும் இவர்கள் ஸூபிஸக் கலையில் வெறும் “ஸீறோ”வாகவே உள்ளனர். இதற்கு இவர்கள்தான் காரணம் என்று சொல்ல முடியாது.
ஏனெனில் இலங்கை நாட்டிலுள்ள அறபுக் கல்லூரிகளில் சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் இருந்த பாடத்திட்டத்திற்கும், தற்போதுள்ள பாடத்திட்டத்திற்கும் வித்தியாசமுண்டு. ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் “தஸவ்வுப்” ஸூபிஸக் கலையுடன் தொடர்புள்ள நூல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு அவை கற்றுக் கொடுக்கப்பட்டன. குறிப்பாக “ஹிகம்” என்ற நூலும், இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “இஹ்யா உலூமித்தீன்” என்ற நூலும் பாடத்திட்டத்தில் இருந்தன. கற்றும் கொடுக்கப்பட்டன. கற்றுக் கொடுக்கும் திறமை உள்ளவர்களும் இருந்தார்கள். ஆயினும் இன்று பாடத்திட்டத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஸூபிஸக் கலை தூக்கி வீசப்பட்டுள்ளது. ஸூபிஸம் கற்றுக் கொடுப்பதற்கு தகுதி பெற்றவர்களை தேடியும் காண முடியாதுள்ளது. ஒரு சிலர் இருந்தாலும் கூட அவர்களாலும் ஜீரணிக்க முடியாhத தத்துவங்கள் வருமிடங்களில் அவர்கள் அவற்றுக்கான விளக்கத்தை தெளிவாகக் கூற முடியாத நிலையில் அரையும், குறையுமாக சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இங்கு ஒரு விடயத்தை என்னால் சொல்லாமலிருக்க முடியவில்லை. சொல்லவும் விரும்பவில்லை. சொல்வதினால் பலனுண்டு என்பதற்காக எழுதுகிறேன்.
நான் தமிழ் நாடு நீடூர் நெய்வாசல் மிஸ்பாஹுல் ஹுதா அறபுக் கல்லூரியில் இறுதியாண்டுக்குரிய வகுப்பில் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் உஸ்தாதுமார்களில் ஒருவர் என்னை அழைத்து சிலோன் ஸாஹிப்! “இன்ஸான் காமில்” என்று ஞான நூலொன்று உள்ளது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். கேள்விப்பட்டிருக்கிறேன் பார்த்ததில்லை என்று கூறினேன்.
அதற்கவர்கள் நானும் அவ்வாறுதான் உள்ளேன். நான் அதை உங்களுக்கு ஓதித்தரவா? என்று கேட்டார்கள். நல்லது என்றேன். லீவு நாளான ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையிலும் வாருங்கள் என்றார்கள். முதல் வாரம் சென்றேன். என்னுடன் இலங்கை நண்பர் ஒருவரும், இந்திய நண்பர் ஒருவரும் இணைந்து கொண்டனர்.
ஹழ்றத் அவர்கள் முதலாம் வரியை முடித்து இரண்டாம் வரிக்கு வந்த போது, சிலோன் பாய் என்று என்னை விழித்து சமைக்கத் தெரியாதவர்கள் சமைப்பது உருப்படியாகாது. இன்ஸான் காமிலும் வேண்டாம், இன்ஸான் நாகிஸும் வேண்டாம் إنسان كامل – إنسان ناقص எதுவும் வேண்டாம். விடயம் தெரிந்த ஒருவரிடம் கற்றுக் கொள்வோம் என்றார்கள். ஏன் என்று கேட்டேன்.
இதோ பாருங்கள் இரண்டாம் வரியை فهو الحامد والحمد والمحمود புகழ்கின்றவனும், புகழும், புகழப்படுபவனும் அல்லாஹ்தான் என்கிறார். இதை நாம் எவ்வாறு விளங்குவது? நான் எவ்வாறு உங்களுக்கு விளங்கப்படுத்துவது? நிறுத்துவோம் என்றார்கள்.
இந்த வரலாறை ஏன் எழுதினேன் என்றால் ஸூபிஸ ஞானம் கற்றவர்கள் மிகவும் குறைவு. ஒரு சிலர் இருந்தாலும் கூட அவர்கள் எதிர்ப்பவர்களின் எதிர்ப்பை எவ்வாறு சமாளிப்பது? என்று பயந்து பின்வாங்கிவிடுகிறார்கள்.
இதனால்தான் அறபுக் கல்லூரிகளில் கூட ஸூபிஸ ஞானம் கற்றுக் கொடுப்பது முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது. அல்லது குழி தோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது.
ஸூபிஸம் இன்றேல் இஸ்லாம் இல்லை.
ஸூபிஸ ஞானம் இஸ்லாம் மார்க்கத்தின் “றூஹ்” என்பதை விளங்காதவர்கள் இருக்கும் வரை இஸ்லாம் அர்த்தமற்ற, தத்துவமற்ற, உயிரற்ற மார்க்கமாகவே கணிக்கப்படும்.
قال الشيخ ابن عطاء الله فى الحكم، الأعمال صور قائمة، وأرواحها وجود سر الإخلاص فيها،
(மனிதர்கள் செய்கின்ற தொழுகை, மற்றும் வணக்கங்கள் யாவும் உயிரற்ற வெறும் பொம்மைகளும், தோற்றங்களுமேயாகும். அவற்றின் உயிர்கள் அவ்வணக்கங்களில் “:இக்லாஸ்” என்ற இரகசியம் இருப்பதேயாகும்) என்று கூறியுள்ளார்கள்.
அதாவது துணிக்கடைகளில் “ஷோ றூம்கள்” இருப்பதை நாம் காண்கிறோம். அவற்றில் ஆண், பெண் உருவத்தில் பொம்மைகளுக்கு கவர்ச்சியாக உடை உடுத்து வைத்திருப்பார்கள். அவற்றைக் காணும் சிறுவர்கள் உயிருள்ள மனிதர்களாக நம்பிவிடுவார்கள். அவை உயிரற்ற வெறும் பொம்மைகள் என்பது சிறுவர்களுக்குத் தெரியாது. வயது வந்தவர்கள் உண்மையைப் புரிந்து கொள்வார்கள்.
இவ்வாறுதான் ஸூபிஸ இறைஞானம் தெரியாதவர்கள் செய்கின்ற வணக்கங்களும், அமல்களும் உயிரற்ற வெறும் பொம்மைகளேயாகும். அந்த வணக்கங்களின் உயிர்கள் “இக்லாஸ்” என்ற இரகசியமாகும்.
ஸூபிஸ ஞானம் தெரியாதவர்களின் வணக்கங்கள், அமல்கள் யாவும் கூழ் முட்டைகள் போலும், யானை சாப்பிட்ட விளாங்கனி போன்றவையுமாகும். கூழ் முட்டையும், யானை சாப்பிட்ட விளாம் பழமும் கண் பார்வைக்கு நல்லவையாகவே தோற்றும். அவற்றை உடைத்தால்தான் அவை பொய் தோற்றம் மட்டுமே என்பதைப் புரிய முடியும்.
உலக முடிவின் பின் முதல் மனிதன் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதல் இறுதியாகப் படைக்கப்பட்ட அனைத்து மக்களும் ஓர் இடத்தில் ஒன்று கூட்டப்படுவார்கள். அந்த இடம் “மஹ்ஷர் மைதானம்” என்று சொல்லப்படும்.
“செக் பொய்ன்ட்” சோதனைச் சாவடிகள் போகுமிடமெல்லாம் இருக்கும். மலக்குகள் ஒவ்வொருவரையும் “செக்” பண்ணுவார்கள். அவர்கள் சுமந்து செல்கின்ற அமல்களையும் “செக்” பண்ணுவார்கள். ஸூபிஸ ஞானமின்றித் தொழுதவர்களின் தொழுகைகளும், மற்றும் வணக்கங்களும் கூழ் முட்டைகள் போலும், யானை சாப்பிட்ட விளாம் பழம் போன்றும் இருக்கும். அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு நரகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
எனவே, நாம் செய்யக் கூடிய சிறிய வணக்கமாயினும், பெரிய வணக்கமாயினும் அது உயிரோட்டமுள்ளதாக இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். ஸூபிஸ வழி வாழ்ந்து நிம்மதி பெறுவோம்.
குறிப்பு: எமது அடுத்த தலைப்பு: ஹக்கு வேறு, கல்கு வேறு என்று நம்புகின்ற முஸ்தபாவும், முனியாண்டியும் கொள்கையில் ஒன்று பட்டவர்களே! என்பதாகும்.