Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“அபுல் ஹஸன் அல்அஷ்அரீ, அபூ மன்ஸூர் அல்மாதுரீதீ”

“அபுல் ஹஸன் அல்அஷ்அரீ, அபூ மன்ஸூர் அல்மாதுரீதீ”

أبو الحسن الأَشْعَرِيّ وأبُو منصور المَاتُرِيْدِي
”لِكُلِّ فَنٍّ رِجَالٌ”
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ.
 
“அபுல் ஹஸன் அல்அஷ்அரீ, அபூ மன்ஸூர் அல்மாதுரீதீ”
 
ஒவ்வொரு கலையிலும் திறமை உள்ளவர்கள் பலர் உள்ளனர்.
 
இத் தலைப்பில் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கையின் இமாம்களான அபுல் ஹஸன் அல் அஷ்அரீ, அபூ மன்ஸூர் அல்மாதுரீதீ “றஹிமஹுமல்லாஹ்” ஆகிய இருவர் பற்றியும் எழுதுகிறேன்.
 
எந்த ஒரு கலையாயினும் அதற்கு ஒரு தாபகர் இருப்பார். அதாவது அதை ஒரு கலையாக அமைத்தவர் இருப்பார். அதே போல் அக்கலையில் விஷேட திறமை பெற்றவர்களும் சிலர் இருப்பர்.

“தீன்” மார்க்கம் தொடர்பான சரியான விளக்கமும், விடையும் பெற வேண்டுமாயின் முதலில் அவ்விடயம் எக்கலையோடு தொடர்புடைய தென்று அறிந்து அக்கலையில் திறமையுள்ளவர்களிடமே அதற்கான விளக்கத்தையும், விடையையும் பெற வேண்டும்.
 
உதாரணமாக கண் பார்வையில் குறையுள்ள ஒருவன் கண் வைத்திய நிபுணர் ஒருவரிடமே செல்ல வேண்டும். மூல வியாதியால் பாதிக்கப்பட்ட ஒருவன் அதற்குரிய வைத்தியனிடமே செல்ல வேண்டும். இதற்கு மாறாகச் செயல்படுவது பொருத்தமற்றதாகும். அது தீய விளைவையும் ஏற்படுத்தி விடும்.
 
இவ்வாறு தான் “தீன்” மார்க்க விடயத்திலும் நடந்து கொள்ள வேண்டும். “பிக்ஹ்” சட்டக்கலையோடு தொடர்புள்ள விடயமாயின் அக்கலையில் திறமை பெற்றவரிடமே அதற்கான விளக்கமும், கொள்கை -“அகீதா” தொடர்பான விடயமாயின் அதோடு தொடர்புள்ள ஒருவரிடமே அதற்கான விளக்கமும் பெற வேண்டும். இதுவே சரியான நடைமுறையாகும்.
 
இவ்வாறுதான் “ஸூபிஸம்” தொடர்பான, அல்லது “தவ்ஹீத்” ஏகத்துவம் தொடர்பான விடயங்களுக்கு விளக்கம் பெறுவதுமாகும்.
 
“ஸூபிஸம்” தொடர்பான விடயங்களுக்கு விளக்கம் பெற வேண்டுமாயின் ஸூபீ மகான்கள், ஆரிபீன்கள், தரீகாவின் ஷெய்குமார்களிடமே பெறவேண்டும்.
 
இவ்வாறுதான் “அகீதா” கொள்கையோடு தொடர்புள்ள விடயங்களுக்கு தலைப்பில் பெயர் குறிப்பிட்டவர்களின் கருத்துக்களுக்கே முதலிடம் கொடுக்க வேண்டும்.
 
(தலைப்பிற்குரிய இமாம்கள்)
 
ஒருவர் அஷ் ஷெய்கு இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள், மற்றவர் அஷ் ஷெய்குல் இமாம் அபூ மன்ஸூர் அல்மாதுரீதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்,
 
இவ்விரு மகான்களின் கொள்கை வழி செல்பவர்கள் மட்டுமே ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை வாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இப்னு தைமிய்யா, இப்னு அப்தில் வஹ்ஹாப் இருவரும் ஸுன்னத் வல் ஜமாஅத் இமாம்களல்லர்.
 
உலகில் தோன்றிய அவ்லியாஉகள், அக்தாபுகள், மற்றும் ஸூபீ மகான்கள், தரீக்காக்களை தாபித்த மஷாயிகுமார்கள் யாவரும் ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கை வழி சென்றவர்களேயாவர்.
 
இதற்கு மாறாக இப்னு தைமிய்யா, இப்று அப்தில் வஹ்ஹாப் ஆகியோரின் கொள்கை வழி வாழ்ந்த, வாழ்ந்து வருகின்ற அனைவரும், மற்றும் மத்ஹபுகளைப் பின்பற்றி வணக்க வழிபாடுகள் செய்யாதவர்களும் வழி தவறியவர்களேயாவர்.
 
மேலே நான் பெயர் குறித்த இமாம்கள் இருவரும் உலகில் வாழ்கின்ற ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை வாதிகள் பின்பற்றுகின்ற இமாம்களேயாவர். இவ்விரு இமாம்களில் இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் கொள்கையை பின்பற்றி வாழ்பவர்களே உலகில் அதிகம் உள்ளனர்.
 
உதாரணமாக குறாஸான், இறாக், சிரியா, மிஸ்ர், மலைபார் போன்று.
 
இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் மேற்கண்ட நாடுகளிலும், இன்னும் இவையல்லாத பல நாடுகளிலும் இமாம் மாதுரீதீ றஹிமஹுல்லாஹ் அவர்களை விடப் பிரசித்தி பெற்றவர்களாவர்.
 
இவர்கள் இஸ்லாமிய நாடுகளில் அதிகம் பிரசித்தி பெற்றவர்களாக இருப்பதினால்தான் ஓர் அறிஞனின் கொள்கை தொடர்பாக பேசும் போது
اِنَّ فُلَانًا عَقِيْدَتَهُ صَحِيْحَةٌ اَشْعَرِيَّةٌ
இன்னார் சரியான அஷ்அரிய்யா கொள்கையுடையவர் என்று சொல்கிறார்கள். இவ்வாறு சொல்வதால் அபூ மன்ஸூர் அல் மாதுரீதீ அவர்களின் கொள்கை பிழையான தென்று எவரும் புரிந்து கொள்ளக் கூடாது. இவர்களும் ஸுன்னத் வல் ஜமாஅத் மக்கள் ஏற்றுக் கொண்ட ஓர் இமாம்தான்.
 
இவ்விபரம் شرح المقاصد – “ஷர்ஹுல் மகாஸித்” என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
 
இவ்விருவருக்கும் “அகீதா” கொள்கையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு எதுவுமில்லை. இவ்விருவரில் எவரையும் பின்பற்றலாம். எனினும் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ அவர்களைப் பின்பற்றியவர்களே அதிகம் உள்ளனர்.
 
இமாம் ஸுப்யான் அத் தவ்ரீ – سفيان الثوري அவர்கள், (எவன் சத்திய வழியில் இருக்கின்றானோ அவன்தான் “ஸுன்னத் வல் ஜமாஅத்”கொள்கை உள்ளவன் என்றும், அவன் ஒருவனாயினும் சரியே) என்று கூறியுள்ளார்கள்.
 
கொள்கைவாதிகளான இமாம்கள் اَلسَّوَادُالْاَعْظَمُ – “அஸ்ஸவாதுல் அஃளம்” என்ற வசனத்தை “ஸுன்னத் வல் ஜமாஅத்” என்ற கருத்திற்கு பயன்படுத்துவார்கள்.
ஆதாரம் – அல்யவாகீத்
பாகம் – 01
பக்கம் – 03
 
மேலே குறிப்பிட்ட “அஸ்ஸவாதுல் அஃளம்” என்ற வசனத்திற்கு பெரும் கூட்டம் என்று பொருள் வரும். நபீ மொழிகளில் عليكم بالسواد الأعظم என்ற வசனம் வந்துள்ளது. இதன் பொருள் பெருங் கூட்டத்தைப் பற்றிப் பிடியுங்கள் என்பதாகும்.
 
பெருமானார் இவ்வாறு சொல்லியுள்ளதால் வழிகேட்டில் இருக்கின்ற பெருங் கூட்டம் பெருங்கூட்டமாகாது. அது சிறு கூட்டமாகவே கணிக்கப்படும்.
 
இன்று உலகில் மத ரீதியில் பெருங் கூட்டமாயிருப்பது கிறுத்துவர்களேயாவர். அதிக சனத் தொகையைக் கொண்ட ஒரு மதம் கிறுத்துவமேயாகும். பெருங் கூட்டத்தைப் பற்றிக் கொள்ளுங்கள் என்ற நபீ போதனையின் படி அனைவரும் கிறித்துவ மதத்தை பின்பற்ற வேண்டும் என்று கருத்து வராது.
 
சத்தியக் கொள்கையில் ஒருவர் இருந்தாலும் கூட திருக்குர்ஆனின் ஆதாரப்படி அவர் பெருங் கூட்டமாகவே கணிக்கப்படுவார்.
إِنَّ إِبْرَاهِيمَ كَانَ أُمَّةً قَانِتًا لِلَّهِ حَنِيفًا நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் ஒரு சமூகம் என்று கூறியிருப்பது இதற்கு ஆதாரமாகும். ஒருவரை மட்டும் ஒரு சமூகம் என்று சொல்வதாயின் அவர் சரியான வழியில் இருக்க வேண்டும்.
வஹ்ஹாபிகள் உலகில் நாங்களே பெருங் கூட்டம் என்பார்கள். தப்லீக் ஜமாஅத்தினர் நாங்களே பெறுங் கூட்டம் என்பார்கள். ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைவாதிகள் நாங்களே பெறுங் கூட்டம் என்பார்கள். இவர்களில் எக் கூட்டமும் பெறுங் கூட்டமல்ல. ஓர் அறிஞன் நடு நிலையிலிருந்து ஆய்வு செய்தானாயின் அவன் பெருங் கூட்டமென்று ஸுபிகளையே சொல்வான். நானும் இதையே சொல்வேன். எதார்த்தமும் இதற்கே கை உயர்த்தும்.
 
“ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கைவாதிகளை பெருங் கூட்டம் என்று நான் ஏற்றுக் கொள்ளாததற்கு காரணம் அவர்களில் அநேகர் “தஸவ்வுப்” என்ற ஸுபிஸ ஞானத்தை மறுப்பதேயாகும். ஸுபிஸத்தை மறுப்பவன் சூட்சுமம் தெரியாதவனேயாவான்.
 
இமாம் அபுல் ஹஸன் அல்அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹிஜ்ரீ 260 – கி.பி 874ல் இறாக் நாட்டின் “பஸறா” நகரில் பிறந்தார்கள்.
 
“பஸறா”வில் பிறந்த இவர்கள் முதலில் ஆரம்பக் கல்வியை அங்கேயே கற்று உயர் கல்வியை தலைநகர் “பக்தாத்” இல் கற்றார்கள். மரணிக்கும் வரை அங்கேயே வாழ்ந்தார்கள். ஹிஜ்ரீ 324ல் “வபாத்” ஆனார்கள்.
 
வழி கெட்ட கொள்கையில் ஒன்றான “முஃதஸிலா” கொள்கையின் தாபகர் “அபூ அலீ அல் ஜுபாஈ” என்பவரிடம் தொடராக நாற்பதாண்டுகள் அவரின் கொள்கையிலேயே இருந்தார்கள்.
 
பின்னர் ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கையை சரி கண்டு மரணிக்கும் வரை அக் கொள்கையிலேயே இருந்தார்கள். கொள்கை மாறிய பிறகு ஸுன்னத் ஜமாஅத் அறிஞர்களிடம் கல்வி கற்றார்கள்.
 
இவர்களின் கொள்கைதான் “அல்அஷ்அரிய்யா” கொள்கை என்று சொல்லப்படுகிறது. இன்று ஸுன்னல் வல் ஜமாஅத் கொள்கையுள்ளவர்கள் இவரையே பின்பற்றுகிறார்கள்.
 
இவர்களின் பெயர் அலீ. புனைப் பெயர் அபுல் ஹஸன். பட்டம் நாஸிறுத்தீன்.
 
இவர்களின் பரம்பரை நபீ தோழர் அபூ மூஸல் அஷ்அரீ றழியல்லாஹு அன்ஹு அவர்களில் போய் முடிகிறது. இவர்கள் மூத்த நபீ தோழர்களில் ஒருவர். இவர்களையும், இவர்களின் கூட்டத்தவர்களையும் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பல பொன் மொழிகளில் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.
 
قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الأَشْعَرِيِّينَ إِذَا أَرْمَلُوا فِي الغَزْوِ، أَوْ قَلَّ طَعَامُ عِيَالِهِمْ بِالْمَدِينَةِ جَمَعُوا مَا كَانَ عِنْدَهُمْ فِي ثَوْبٍ وَاحِدٍ، ثُمَّ اقْتَسَمُوهُ بَيْنَهُمْ فِي إِنَاءٍ وَاحِدٍ بِالسَّوِيَّةِ، فَهُمْ مِنِّي وَأَنَا مِنْهُمْ»
(நபீ தோழர் அபூ மூஸல் அஷ்அரீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் குடும்பத்தில் யாராவதொருவர் புனிதப் போரின் போது மரணித்து ஒரு பெண் விதவையானால், அல்லது திரு மதீனா நகரில் அவர்களின் குடும்பத்தில் வறுமை தலை தூக்கினால் – உணவுக்கு வழியில்லாமல் போனால் அவர்களின் குடும்பத்தவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு துணியில் தம்மிடமுள்ளவற்றை ஒன்று சேர்ப்பார்கள். பின்னர் அவர்களுக்கிடையில் சேர்ந்த பொருட்களைச் சமமாக பங்கு வைத்துக் கொள்வார்கள்.
அவர்கள் என்னில் நின்றுமுள்ளவர்கள், நான் அவர்களில் நின்றுமுள்ளவன்) என்று கூறினார்கள்.
ஆதாரம்: புகாரீ – 2486
அறிவிப்பு : அபூ புர்தா, அபூ மூஸா
 
சுருக்கம்:
இந்த நபீ மொழியின் சுருக்கம் என்னவெனில் நபீ தோழர் அபூ மூஸல் அஷ்அரீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் புனிதப் போரில் மரணித்து அவரின் மனைவி விதவையானால், அவர்களின் குடும்பத்தில் வறுமையேற்பட்டு உணவுக்கு வழியில்லாமற் போனால் அவர்களின் குடும்பத்தவர்கள் சேர்ந்து தம்மால் கொடுக்க முடிந்ததைக் கொடுத்து அந்தக் குடும்பத்தவர்களுக்கு உதவி செய்வார்கள்.
 
இவ்வாறு செய்வதற்கு அவர்கள் தமக்கிடையே ஒரு நடைமுறை வைத்திருந்தார்கள்.
 
அதாவது பள்ளிவாயலில் அல்லது மக்கள் கூட்டமாக ஒன்று கூடுமிடத்தில் ஒரு துணியை விரித்து வைத்து ஏதோ ஒரு வகையில் பொது மக்களுக்கு அறிவித்து அவர்களால் சேரும் பொருட்களைச் சமமாகப் பிரித்து கொடுப்பார்கள்.
 
இவ்வாறான ஒரு நடைமுறை பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் தோழர்கள் நடைமுறையில் இருந்து வந்துள்ளது.
 
இந்த நடைமுறையை நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் வெகுவாகப் பாராட்டி உள்ளார்கள். நல்ல காரியமாகக் கண்டுள்ளார்கள்.
 
இவ்வாறான நடைமுறை நபீ பெருமானார் அவர்களின் காலத்திலும் இருந்தது. அவர்களுக்குப் பின் வந்த தாபியீன்கள், அவர்களைத் தொடர்ந்த தபஉத் தாபியீன்களின் காலத்திலும் இருந்து வந்தது. இப்போதும் சில இடங்களில் நடைபெறுவதை நாம் காண்கிறோம்.
 
பள்ளிவாயலிலோ, பொது இடங்களிலோ வெள்ளை விரித்து வறுமைப் பட்டோர்களுக்கு நிதியுதவி கோரும் வழக்கம் இப்போது குறைந்து போனாலும் இந்த நவீன காலத்தில் காலத்திற்கேற்ற பாணியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி செய்து வருவதை நாம் காண்கிறோம்.
 
எனினும் வறுமையால் சூழப்பட்டு மூன்று நேர உணவுக்குக் கூட வழியில்லாமல் தவிக்கும் ஏழைகளும், தமது பிள்ளைகளுக்கு கல்வியைக் கொடுக்க பண வசதியற்றவர்களும், தமது குழந்தைகளுக்கு பால்மா வாங்குவதங்குக் கூட வசதியற்றவர்களும், தமது குடும்பத்தில் நோயால் பாதிக்கப்பட்டு அல்லல் படுபவர்களுக்கு மருந்து வாங்குவதற்குக் கூட வசதியற்ற ஏழைகளும் வாழும் இக்காலத்தில் பணச் செல்வமுள்ளவர்கள் இவர்களை இனங்கண்டு இவர்களுக்கு உதவ முன்வர வேண்டும்.
 
குறிப்பாக ஏழைக்கும், படிப்பைத் தொடரப் பண வசதியற்ற, தொடர்ந்து படிப்பை மேற்கொண்டு பொறியியலாளராக, கலாநிதியாக, வழக்கறிஞராக வரத் திறமையுள்ள, தகுதியுள்ள, விருப்பமுள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கும் அனைத்து வசதிகளும் செய்து அவர்களை முன்னேற்றுவதற்கு செல்வந்தர்கள் முன்வர வேண்டும். அதோடு அறிவுரை மூலம் பணம் படைத்தவர்களைத் தூண்விடக் கூடிய உலமாஉகளும் முன்வர வேண்டும்.
 
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களையும், நபீ தோழர்களையும் பின்பற்றி கல்விக்காக வாழ்ந்து அதற்காகத் தமது பொருளாதாரத்தை அள்ளி வழங்கியவர்களில் நாமும் இணைந்து கொள்ள முயற்சிப்போம்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments