தொகுப்பு: ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
இறைவனை “திக்ர்” செய்தல் – நினைத்தல் உள்ளங்களுக்கு சாந்தியை ஏற்படுத்தும்.(திருமறை 13-28 )
இந்தச் செய்தியைச் சொன்ன அல்லாஹ் இவ்வசனத்தின் முன்னால் “அலா” என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்திக் கூறியிருப்பதில் ஒரு தத்துவம் உண்டு.
அதென்னவெனில் இந்தக் கருத்து ஓர் ஆன்மீகக் கருத்தாகும். ஆன்மீகத்தோடு சம்பந்தப்பட்ட எந்த ஒரு கருத்தாயினும் அதை மறுப்பது வஹ்ஹாபிகளின் இரத்தத்தோடு கலந்த அவர்களின் பிறவிக் குணம். ஆகையால் அவர்கள் இக்கருத்தை மறுப்பார்கள் என்பதை அறிந்த அல்லாஹ் இக்கருத்தை வலியுறுத்துவதற்காகவே எச்சரிக்கை செய்யும் பாணியில் “அலா” என்ற சொல்லை முதலில் கூறி விடயத்தை சொல்லியுள்ளான்.
அறபு மொழி இலக்கணத்தில் “அலா” என்ற சொல் تَنْبِيْهٌ எச்சரிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற சொல் என்பது பொது மக்களுக்குத் தெரியாது போனாலும் உலமாஉகளுக்கு தெளிவாகத் தெரியும்.
அல்லாஹ்வை நினைப்பதால் உள்ளங்கள் சாந்தி பெறும், அமைதி பெறுமென்றால் மனிதனின் உள்ளத்திலுள்ள கவலை, துக்கம், கஷ்டம், தொல்லை யாவும் நீங்கி உள்ளம் நிம்மதி பெறும். சாந்தி அடையும்.
இது இறை வாக்காயிருப்பதால் இதில் எவரும் சந்தேகம் கொள்ளக் கூடாது. “ஈமான்” நம்பிக்கையை பாதிக்கும்.
இத்திரு வாக்கை ஆதாரமாகக் கொண்டு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் மட்டும் இறைவனை நினைப்பதாலோ, அல்லது குறித்த ஓர் எண்ணிக்கையில் அவனை நினைப்பதாலோ தேவை நிறைவேறவோ, மனச் சாந்தி ஏற்படவோ மாட்டாது. இதற்கு கால எல்லையோ, எண்ணிக்கை எல்லையோ கிடையாது. இது ஒருவனின் மனத்தூய்மையையும், ஆன்மீகத் தரத்தையும், முயற்சியையும் பொறுத்ததாகும். இவற்றுக்கு மேலாக அல்லாஹ்வின் விருப்பமும் அவசியம்.
சிலருக்கு ஒரு நாளிலேயே நிறைவேறும், இன்னும் சிலருக்கு ஒரு மாதத்திலும் நிறைவேறும், இன்னும் சிலருக்கு ஒரு வருடத்திலும் நிறைவேறும். இன்னும் சிலருக்கு அவர்களின் மறைவுக்கு முன்னாலேனும் நிறைவேறும்.
“திக்ர்” செய்தலின் வகைகள்.
“திக்ர்” செய்தல் மூன்று வகைப்படும். ஒன்று – ஒரே நேரத்தில் நாவாலும், மனதாலும் செய்தல். இரண்டு- மனதால் மட்டும் செய்தல். மூன்று – நாவால் மட்டும் செய்தல். இம் மூன்றில் முந்தினது மிகச் சிறந்தது. இரண்டாவது சிறந்தது. அதாவது இரண்டாமிடம். மூன்றாவது தரத்திலும் மூன்றாவதே!
“திக்ர்” செய்யும் எவரும் எண்ணிக்கையின் படி செய்தல் கூடாது. எண்ணிக்கை குறித்திருந்தாலே ஒழிய. செய்கின்றவனின் மனம் போதுமென்று சொல்லும் வரை செய்தல் வேண்டும்.
“திக்ர்” செய்பவன் “வுழூ” என்ற சுத்தம் செய்து கொள்வது விரும்பத் தக்கது. அவசியமில்லை. “திக்ர்” செய்பவர் இருந்து கொண்டும், நின்று கொண்டும், நடந்து கொண்டும், சாய்ந்து கொண்டும் செய்யலாம். எனினும் மடிகாலில் அமர்ந்து செய்தல் மிகச் சிறந்தது.
“திக்ர்” செய்பவன் சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனித்து சத்தத்தை உயர்த்தியும், தாழ்த்தியும் செய்ய வேண்டும். ஓரளவு உடலைக் குலுக்கிச் செய்வதும் விரும்பத்தக்கதாகும். அமைதியான சூழலில் செய்வது மிகச் சிறந்தது.
ஒரு குருவிடம் “பைஅத்” பெற்றவர் அவர் சொல்லித் தந்த “திக்ர்”ஐ, அவர் சொல்லித் தந்தவாறு செய்து கொள்ள வேண்டும். மற்றவர் தனக்கு விரும்பிய “திக்ர்”களைச் செய்து கொள்ளுதல் வேண்டும். பொதுவாக எவரும் “லா இலாஹ இல்லல்லாஹ்”, “இல்லல்லாஹ்”, “அல்லாஹ்” முதலான “திக்ர்” செய்து கொள்ளலாம்.
“திக்ர்” செய்யும்போது “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்தின் சரியான பொருளான (அல்லாஹ் தவிர வேறு தெய்வம் இல்லை என்றோ, அல்லது அல்லாஹ் தவிர வேறு எதுவும் இல்லையென்றோ மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். இந்த நினைவை அல்லது உணர்வை மனதில் இருத்திக் கொண்டு வேறெந்த எண்ணமும் வராமல் தடுத்துவிட வேண்டும். அதோடு நானுமில்லை, எனக்கென்று ஒன்றுமில்லை, உலகமும் இல்லை, உலகிலுள்ள எதுவுமே இல்லை, எல்லாப் படைப்பாகவும் அல்லாஹ்வே “தஜல்லீ” வெளியாகி உள்ளான் என்ற கருத்தை மனதின் அடித்தளத்தில் பதித்து ஆடாமலும், அசையாமலும் இருத்திக் கொண்டு “திக்ர்” செய்ய வேண்டும். சுருங்கச் சொன்னால் “திக்ர்” செய்கின்றவன் தன்னையும், படைப்புகளையும் முற்றாக மறந்து அல்லாஹ் மட்டுமே உள்ளான் என்ற உணர்வோடு செய்ய வேண்டும்.
இதற்கு ஆதாரமாக பின்வரும் திருவசனத்தைக் கொள்ளலாம்.
وَاذْكُرْ رَبَّكَ إِذَا نَسِيتَ
நீ மறந்தால் உனது இரட்சகனை நினைத்துக் கொள். (திருக்குர்ஆன்: 18:24)
இத்திரு வசனத்தில் ஒரு நுட்பம் உண்டு. அந்த நுட்பத்தை அதிகமானோர் விளங்கிக் கொள்ளாமலேயே திரு வசனத்திற்கு விளக்கம் சொல்கிறார்கள்.
அதாவது إِذَا نَسِيْتَ என்ற சொல்லுக்குப் பின்னால் ஒரு சொல் வர வேண்டும். அவ்வாறு வரும் சொல்லை نَسِيْتَ என்ற இச் சொல்லுக்கு مَفْعُولْ செயற்படு பொருளாக அமைக்க வேண்டும். அந்தச் சொல் எது என்பதில் வெளிரங்க உலமாஉகளுக்கும், உள்ரங்க உலமாஉகளுக்கும் கருத்து வேறுபாடு உண்டு.
வெளிரங்க உலமாஉகள் அது رَبَّكَ என்ற சொல்லாயிருக்க வேண்டுமென்று கூறுகின்றார்கள். இவர்களின் கூற்றின் படி இவ்வசனத்தின் பொருள் “நீ உனது இரட்சகனை மறந்தால் நீ உனது இரட்சகனை நினைத்துக் கொள்” என்று பொருள் வரும்.
சிந்தனையாளர்களும், ஆய்வுத் திறமையுள்ளவர்களும் வெளிரங்க உலமாஉகளின் இக்கருத்தை ஆய்வுக்கு எடுத்துப்பார்க்க வேண்டும். ஆய்வுக்கு எடுத்தால் இக்கூற்று அர்த்தமற்ற கூற்று என்று தெளிவாகும்.
اَلْمَنْسِيُّ مَنْسِيٌّ لَا يَتَصَوَّرُ ذِكْرُهُ
மறந்த ஒன்று மறந்த ஒன்றுதான். மறந்த ஒன்றை நினைப்பது சாத்தியமே இல்லை. நினைவில் இருக்கின்ற ஒன்றைத்தான் நினைக்கலாமே தவிர மறந்த ஒன்றை நினைக்க முடியாது.
ஒருவனிடம் ஒரு சம்பவத்தை நினைத்துப் பார் என்று சொல்லும் போது அவன் அதை நான் மறந்து விட்டேன் என்றும், மறந்ததை என்னால் எவ்வாறு நினைக்க முடியும்? என்றும் சொன்னானாயின் அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிதேயாகும். ஆகையால் உனது இரட்சகனை நீ மறந்தால் அவனை நினைத்துக் கொள் என்று சொல்வது பொருத்தமற்றதாகும்.
எனவே, نَسِيْتَ நீ மறந்தால் என்ற சொல்லின் பின்னால் அதற்கு مفعول செயப்படு பொருள் رَبَّكَ உனது இறைவனை என்று கொள்ளாமல் உன்னை என்ற பொருளுக்குரிய نَفْسَكَ என்ற சொல்லை செயப்படு பொருளாக வைத்தால் “நீ உன்னை மறந்தால் உனது இரட்சகனை நினைத்துக் கொள்” என்று பொருள் வரும். இவ்வாறுதான் குறித்த திரு வசனத்திற்கு ஸூபீ மகான்கள் விளக்கம் கூறுகிறார்கள்.
ஏனெனில் “நான்” என்ற உணர்வு திரையாகும். அத்திரை அகன்றால்தான் “றப்பு” என்ற இரட்சகனை நினைக்க முடியும். இக்கருத்தையே ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
إِنْ تَغَيَّبْتُ بَدَا – وَإِنْ بَدَا غَيَّبَنِيْ
“நான் மறைந்தால் அவன் வெளியாவான். அவன் வெளியானால் நான் மறைந்து விடுவேன்” அதாவது நான் என்ற உணர்விருக்கும் வரை அவன் வரமாட்டான் என்பதே அதன் விளக்கமாகும்.
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
அல்லாஹ்வை நினைப்பதால் உள்ளங்கள் சாந்தி பெறும் என்ற இறை வாக்கை நம்பிய ஒருவன் தனது கடன் தொல்லை அகன்று மன நிம்மதி பெற வேண்டுமென்று விரும்பி இராப்பகலாக “அல்லாஹ் வேறு, தான் அவனுக்கு வேறானவன்” என்ற உணர்வோடு “திக்ர்” செய்தாலும் கூட அவனின் கவலை அகலாது. ஆயினும் “நான் அல்லாஹ்வுக்கு வேறானவனில்லை, அவனேதான் என்னாயும், எல்லாமாயுமுள்ளான்” என்ற உணர்வோடு மட்டும் ஒரு சில நாளாவது “திக்ர்” செய்தானாயின் அவனின் காரியம் கைகூடுமென்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு நினைத்தால் மட்டுமே மேற்கண்ட திரு வசனத்தில் கூறப்பட்ட தத்துவம் (அல்லாஹ்வை நினைப்பதால் மனங்கள் சாந்தி பெறும்) உண்மை என்பதை உணர்ந்து கொள்வான். இதுவே ஸூபிஸம். நானே இல்லை என்ற முடிவுக்கு ஒருவன் வரும்போது அவனுக்கு கவலை வர வாய்ப்பில்லை. அவனே இல்லையென்றால் எங்கனம் கவலை வரும்?
இது தவிர கிழிந்த, அழுக்கான உடைகளுடன், தலைவிரிக் கோலத்தில் நடமாடுவதும், உண்ணாமலும், உறங்காமலும் இருப்பதும், குளிக்காமல் சுத்தம், சுகாதாரம் பேணாமல் இருப்பதும், தன் நினைவை மனதில் வைத்துக் கொண்டு அதை இழந்தவன் போல் நடிப்பதும், தொழாமலும், மற்றும் “ஷரீஆ”வைப் பேணாமல் வாழ்வதும் ஸூபிஸம் அல்ல.
ஒருவன் இவ்வாறு வாழ்கிறானென்றால் அவன் ஸூபீயுமல்ல. அவனைக் குருவாக ஏற்றுச் செயல்படுவதும் கூடாது. ஸூபிஸம் உள்ளத்தில் உள்ளதேயன்றி உதட்டிலும், உடையிலும் உள்ளதல்ல.
لَيْسَ التَّصَوُّفُ لُبْسَ الصُّوْفِ وَالْخَلِقِ
بَلِ التَّصَوُّفُ حُسْنُ الصَّمْتِ وَالْخُلُـقِ
கிழிந்த ஆடை, கம்பளியாடை உடுப்பது ஸூபிஸம் அல்ல. அழகிய மௌனமும், நற்குணமுமே ஸூபிஸமாகும்.
தேவையேற்படின் தொடரும். தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு ஞான வாசல் திறக்கும்.
ஸூபிம் இன்றேல் இஸ்லாம் இல்லை. ஸூபிஸம் ஒன்றே சுவர்க்கத்தின் திறவுகோல்.
فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ
நீங்கள் என்னை நினையுங்கள். நான் உங்களை நினைப்பேன். (திருமறை 2-152)
وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا
அல்லாஹ்வை அதிகம் “திக்ர்” செய்யும் – நினைக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பாவமன்னிப்பையும், வலுப்பமிகு கூலியையும் அல்லாஹ் ஆயித்தம் செய்து வைத்துள்ளான். (திருக்குர்ஆன் 33-35)
بِـذِكْـرِ اللهِ تَـزْدَادُ الــذُّنُــوْبُ
وَتَنْمَحِـقُ الْـبَـصَـائِرُ وَالْقُلُوْبُ
فَتَـرْكُ الذِّكْرِ أَفْضَلُ كُلِّ شَـيْـئٍ
وَشَمْسُ الذَّاتِ لَيْسَ لَهَا غُرُوْبُ
அல்லாஹ்வை “திக்ர்” செய்வதால் நினைப்பதால் பாவங்கள் அதிகமாகின்றன. மனக் கண்களும், உள்ளங்களும் பார்வைப் புலன்களை இழந்து விடுகின்றன. ஆகையால் “திக்ர்” செய்தலை விட்டு விடுவது – இறை நினைவை நிறுத்துவது சாலச் சிறந்ததாகும். ஏனெனில் “தாத்” என்ற – மெய்ப் பொருள் என்ற ஆதவன் அஸ்த்தமிக்கவில்லை. (ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ)
ஏகன் வழி வாழ்ந்து ஏகமும் அவனே என்னும் ஆழ் கடலில் மூழ்கி அக்கடலின் அடியிலுள்ள முத்துக்களை எடுத்து முக்தி நிலை பெற விரும்பும் சோதரீர்!
எனக்கும், உங்களுக்கும் மனக்கண் குருடர்கள் வழங்கிய “தக்வா” இல்லாத “முர்தத்” “புத்வா”வை தள்ளி வைத்துவிட்டு நான் எழுதியுள்ள நூல்களையும், பேசியுள்ள பேச்சுக்களையும் வாசித்தும், செவியேற்றும் பயன் பெறுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.
இத்தலைப்புத் தொடர்பாக நான் பதிவிட்டவற்றை நுகரத் தவறியவர்கள் தேடியலைந்தேனும் அவற்றைப் பெற்று நுகருமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.
தேடிப் படிக்க வேண்டிய ஞானம் ஸூபிஸமேயாகும். “ஷரீஆ”வின் அறிவு தேடிப் படிக்க வேண்டியதாயினும் இக்காலத்தைப் பொறுத்த வரை அது கண்ட இடமெல்லாம் கிடைக்கும் கைமலிந்த பொருளாய் ஆயிற்று. அல்லது ஆக்கப்பட்டுவிட்டது. “ஷரீஆ”வின் அறிவை சந்தையிலும் பெறலாம். சந்தியிலும் பெறலாம். இறை ஞானமே இன்று கிடைத்தற்கரிய பொருளாக மாறிவிட்டது.
يُرْفَعُ الْعِلْمُ
ஒரு காலத்தில் அறிவு உயர்த்தப்படுமென்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் குறிப்பிட்டது இறை ஞானமே என்று ஸூபீ மகான்களிற் பலர் கூறியுள்ளனர்.
விளக்கம்:
மேலே எழுதிக்காட்டிய திரு வசனங்கள் இரண்டிற்கும், ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பாடலுக்கும் சுருக்கமாக விளக்கம் எழுதுகிறேன். இறையியல் தொடர்பான நிறைவான விளக்கத்திற்கு இன்னும் சில மாதங்களில் வெளியிடவுள்ள எனது “அல்கிப்ரீதுல் அஹ்மர்” என்ற ஞான நூலை எதிர்பாருங்கள்.
நீங்கள் என்னை நினைத்தால் நான் உங்களை நினைப்பேன். “நான் உங்களை நினைப்பேன்” என்று அல்லாஹ் சொல்லும் இவ்வசனத்தின் பெறுமதியை சற்று ஆய்வு செய்தால் அவனை நினைப்பவர்களை அவன் எந்தளவு நேசிக்கிறான் என்று விளங்க முடியும்.
ஒருவன் இன்னொருவனை நினைப்பதாயின் நினைப்பவனுக்கு மற்றவன் மீது முதலில் “மஹப்பத்” அன்பு இருக்க வேண்டும். இது நிபந்தனையாகும். அன்பு இல்லையாயின் அன்புடன் கலந்த நினைவு வருவதற்குச் சாத்தியமில்லை.
எனவே, அடியான் அல்லாஹ்வை நினைக்கும் போது அல்லாஹ் அடியானை நினைப்பது அரசன் தன்னடிமையை நினைப்பது போன்ற பெருந்தன்மை கலந்த நினைவாகும். அல்லாஹ் அடியானை நினைப்பது அடியானுக்கு கிடைத்தற்கரிய ஒரு பாக்கியமாகும். ஒருவன் தனது எதிரியை நினைப்பதும் உண்டு. அது “மஹப்பத்” உடன் கலந்த நினைவல்ல.
அல்லாஹ்வை நினைத்தல் “திக்ர்” செய்தல் என்பது மூன்று வகைப்படும் என்று கடந்த தொடரில் நான் குறிப்பிட்டிருந்தேன். ஆகையால் அது தொடர்பாக விளக்கம் கூறத்தேவையில்லை. கடந்த தொடரை பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நான் அறிந்த வகையில் “திக்ர்” செய்தல் தொடர்பான விடயம் தெரிந்த, இறைஞானம் புரிந்த, அவ்வழியில் அனுபவமுள்ள, தகுதியான ஒரு ஞானகுரு – ஆன்மீக வழிகாட்டி ஒருவரின் ஆலோசனைப்படி செயல்படுதல் நல்லது.
அதிகம் “திக்ர்” செய்தல்.
இரண்டாம் திரு வசனத்தின் விளக்கத்தை கவனிப்போம்.
“அல்லாஹ்வை அதிகம் “திக்ர்” செய்யும் – நினைக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பாவ மன்னிப்பையும், வலுப்பமிகு கூலியையும் அல்லாஹ் ஆயித்தம் செய்து வைத்துள்ளான்” (திருக்குர்ஆன் 33-35)
இத்திரு வசனம் நீண்ட வசனத்தின் ஒரு பகுதியாகும். தலைப்புக்கு பொருத்தமானதை மட்டும் நான் எடுத்துள்ளேன்.
மேற்கண்ட இவ்வசனத்தில் كَثِيْرًا – கதீறன் என்று ஒரு சொல் வந்துள்ளது. இதற்கு அதிகம் என்று பொருள் வரும். பொதுவாக அல்லாஹ்வை “திக்ர்” செய்பவர்களுக்கு நன்மையுண்டு என்பதில் மாற்றமில்லை. எனினும் அதிகம் “திக்ர்” செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாக நன்மை கிடைப்பதுடன் அதோடு விஷேடமாக இரண்டு அம்சங்களும் கிடைக்கின்றன. ஒன்று பாவ மன்னிப்பு, மற்றது வலுப்பமிகு கூலி. இவ்விரு விஷேடமும் அதிகம் “திக்ர்” செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன.
அதிகம் என்பது எண்ணிக்கையில் எத்தனையை குறிக்கும் என்பதை அறிந்து கொண்டால்தான் அதன்படி செயல்பட முடியும்.
அதிகம் என்பது அறபு மொழியில் نِسَبِيٌّ என்று சொல்லப்படும். அதாவது அதிகம், கொஞ்சம் என்பது ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிடுவதன் மூலம் அறிய வேண்டியதாகும்.
உதாரணமாக நூறு என்ற எண்ணிக்கை அதிகமா? கொஞ்சமா? என்ற கேள்விக்கு கொஞ்சம் என்றோ, அதிகம் என்றோ பொதுவாக பதில் சொல்ல முடியாது. ஏனெனில் அது இன்னொரு எண்ணிக்கையோடு ஒப்பிடுவதன் மூலமே அதிகம் அல்லது கொஞ்சம் என்று சொல்ல முடியும்.
நூறு என்ற எண்ணிக்கை ஐம்பதென்ற எண்ணிக்கையோடு ஒப்பிட்டு அதிகம் எனலாம். அதேநேரம் இரு நூறு என்ற எண்ணிக்கையோடு ஒப்பிட்டு கொஞ்சம் எனலாம்.
ஆகையால் அதிகம் “திக்ர்” செய்தல் என்பது பொதுவாக இத்தனை தரமென்று சொல்ல முடியாதுள்ளதால் அதிகம் கொஞ்சம் என்பதை வேறொரு வகையில்தான் கணிக்க வேண்டியுள்ளது.
அதாவது ஒரு நாள் இரவு பகலுடன் 24 மணி நேரம் என்ற வகையில் இதன் பாதி நேரமான 12 மணி நேரத்தை விட குறைந்த நேரம் “திக்ர்” செய்தவனும், சரியாக 12 மணி நேரம் “திக்ர்” செய்தவனும் அதிகம் “திக்ர்” செய்தவனாகமாட்டான். 12 மணி நேரத்தைவிடக் கூடுதலாக “திக்ர்” செய்தவன் மட்டுமே அதிகம் “திக்ர்” செய்தவன் என்று கணிக்கப்படுவான்.
இவ்வடிப்படையிலேயே அதிகம், கொஞ்சம் என்பதைக் கணித்து செயல்பட வேண்டும். இவ் உதாரணத்தில் 12 மணி நேரத்தை விட அதிக நேரம் “திக்ர்” செய்தவன் அதிகம் “திக்ர்” செய்தவனாகிவிடுவான்.
நபீ மொழிகளில் அல்லது வலீமாரின் பேச்சுக்களில் எண்ணிக்கை குறிக்கப்பட்டு சொல்லப்பட்ட “திக்ர்”களை அவ்வாறே செய்ய வேண்டும்.
வலீமாருக்கு “இல்ஹாம்” மூலம் கிடைத்த தகவலின் படி அவர்கள் எண்ணிக்கை குறித்துச் சொல்லியுள்ள “திக்ர்”களை மாற்றம் செய்யாமல் அவ்வாறே சொல்ல வேண்டும்.
இதுவரை மேலே கூறிய இரண்டு திரு வசனங்களுக்குமான விளக்கத்தில் சிறிதளவு எழுதினேன்.
இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்.
“திக்ர்” செய்வதால் நன்மையுண்டு என்று திருக்குர்ஆன் வசனங்களும், நபீகளாரின் அருள் மொழிகளும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அதைப் பாவமென்று கூறியிருப்பது திருக்குர்ஆனுக்கும், ஹதீதுகளுக்கும் முரணானதாக உள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது. இதனால் இப்னு அறபீ அவர்கள் காபிர், முர்தத் என்று “பத்வா” வழங்கிவிடாமல் எந்த அடிப்படையில் அவர்கள் அவ்வாறு சொன்னார்கள் என்று ஆய்வு செய்வோம்.
நான் கண்ட காத்தான்குடி ஞானி!
காத்தான்குடி மௌலானா கப்றடி மைதானத்தில் 1984ம் ஆண்டு மா பெரும் மீலாத் விழாவொன்று நடைபெற்றது. அவ்விழாவில் பல அறிஞர்கள் பேசினார்கள். நானும் ஒரு பேச்சாளனாக அழைக்கப்பட்டு அங்கு சென்றிருந்தேன். ஓர் இரவு மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பமான அவ்விழா அன்றிரவு 12.30 வரை நடைபெற்றது. 10.30 மணிவரை பேச்சாளர்களில் மூவர் பேசி முடித்தனர். நான் 10.30 முதல் 12.15 வரை பேசினேன்.
மீலாத் விழாவை ஒழுங்கு செய்த இளைஞர்களில் ஒருவரின் வீட்டில் இராவிருந்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. சாப்பாடு முடிந்த பின் என்னையும், இன்னும் சிலரையும் ஏற்றிச் செல்வதற்காக வாகனம் வந்தது. அதில் நான் ஏறாமல் எனது நண்பர்களிடம்
إِذَا تَعَشَّيْتَ تَمَشَّيْتَ
وَإِذَا تَغَدَّيْتَ تَمَدَّيْتَ
நீ இரவில் சாப்பிட்டால் நட. பகலில் சாப்பிட்டால் கால் நீட்டிப் படு என்ற பழ மொழியை பகடியாக கூறிக் கொண்டு நடந்து வந்தேன். என்னுடன் சுமார் 15 நபர்கள் நடந்து வந்தனர்.
பாதையில் சுமார் 15 மீற்றர் தூரத்தில் ஒரு வயோதிபர் நின்றிருந்தார். என்னுடன் வந்து கொண்டிருந்தவர்களில் ஒருவர் என்னிடம் அதோ தெரிகின்ற அந்த மனிதர் ஓர் இறை ஞானி என்றார். அவரை மக்கள் “குடை மஸ்த்தான்” என்று அழைப்பார்கள் என்றும், அவருக்கு யாராவது ஸலாம் சொன்னால் அவர் வணக்கம் என்று மட்டும் பதில் சொல்வார் என்றும் என்னிடம் சொன்னார்.
இறைஞானிகளை எனது உயிரினும் மேலாக மதிக்கின்ற நான் அவரை நெருங்கியதும் அவருக்கு ஸலாம் சொன்னேன். அவர் மௌனியாக நின்றாரேயன்றி வணக்கம் என்று பதில் கூறவில்லை.
ஓர் இறைஞானியை யாராவதொருவர் சந்தித்தால் சந்தித்தவர் தனது உள்ளத்தை பேணிக் கொள்ள வேண்டும், சாதாரண அறிஞனைக் கண்டால் கண்டவன் தனது நாவைப் பேணிக் கொள்ள வேண்டும் என்ற முன்னோர் சொன்ன அறிவுரையை நினைத்தவனாக நான் சுமார் இரண்டு நிமிடம் மௌனியாய் நின்றேன். அவரும் அவ்வாறே நின்றார்.
நான் அவரிடமிருந்து விடை பெற மனதில் நினைத்தேன். அவ்வளவுதான் அவர் பின்வரும் பாடலொன்றை சற்று உணர்ச்சி வசப்பட்ட நிலையில்
بِـذِكْـرِ اللهِ تَـزْدَادُ الــذُّنُــوْبُ
وَتَنْمَحِـقُ الْـبَـصَـائِرُ وَالْقُلُوْبُ
فَتَـرْكُ الذِّكْرِ أَفْضَلُ كُلِّ شَـيْـئٍ
وَشَمْسُ الذَّاتِ لَيْسَ لَهَا غُرُوْبُ
மிக அழகாகவும், திருத்தமாகவும் பாடி முடித்தார். திறமையுள்ள ஒரு மௌலவீ ஓதுவதைவிட மிக அழகாகவும், தெளிவாகவும் அவர் பாடியதைச் செவியேற்ற நான் ஒரு நிமிடம் என்னை மறந்து நின்றேன். மௌன நிலையில் அவரைப் பிரிந்தேன்.
நான் எனது வாழ்வில் அதிக காலத்தையும், நேரத்தையும் இறையியல் துறையிலும், ஸூபிஸ வழியிலும் கழிப்பவனாக இருந்தும் கூட அவர் பாடிய பாடலை நான் அறிந்திருக்காமற் போனது எனது உள்ளத்தை இன்று வரை கீறிக் கிழித்துக் கொண்டே இருக்கிறது.
இந்தப் பாடலுக்குரிய மகான் உலகப் பிரசித்தி பெற்ற இறைஞானி அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களாவர்.
அவர்கள் பற்றிச் சில வரிகளை எழுதிய பின் பாடலுக்குரிய விளக்கத்தை எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்.
குத்புமார், வலீமார் வரிசையில் அஷ் ஷெய்குல் அக்பர், அல்மிஸ்குல் அத்பர், அல்கீப்ரீதுல் அஹ்மர், அந்நூறுல் அப்ஹர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் போன்ற இறையியற் பேரறிஞர் ஒருவரை நான் அறிந்ததில்லை.
சிரியாவின் தலை நகரான டமஸ்கஸ் – திமஷ்க்கில் துயிலும் இவர்கள் போல் அதிக நூல்கள் எழுதியவர்கள் எவருமில்லை என்றால் அது மிகையாகாது. சுமார் 900 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார்கள்.
“ஆரிபீன்” இறைஞானிகள் பலரின் நூல்களை நான் வாசித்திருக்கிறேன். இவர்கள் போல் சில வசனங்கள் எழுதிய எவரின் நூல்களையும் நான் பார்த்ததில்லை. சில வசனங்களை இங்கு எழுதிக் காட்டுகிறேன்.
قال فى الباب السّادس والستّين وثلاثمأة من الفتوحات المكيّة (جميع ما أتكلّم به فى مجالسي وتآليفي إنّما هو من حضـرة القرآن الكريم، فإنّي اُعطيتُ مفاتيحَ العلم فيه، فلا استَمِدُّ قطّ فى علم من العلوم، إلّا منه، كلّ ذلك حتّى لا اَخْرُجَ عن مجالسة الحقّ تعالى فى مناجاته بكلامه، أو بما تَضَمَّنَهُ كلامُه)
அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் அல்புதூஹாதுல் மக்கிய்யா எனும் நூல் 366ம் பாடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(எனது சபைகளிலும், எனது நூல்களிலும் நான் பேசுகின்றவையும், எழுதுகின்றவையும் திருக்குர்ஆனில் உள்ளவையாகும். திருக்குர்ஆன் கூறும் அறிவின் திறவுகோல் நான் வழங்கப்பட்டுள்ளேன். அறிவுகளில் திருக்குர்ஆனில் உள்ள அறிவுகள் தவிர வேறெந்த அறிவையும் நான் எடுத்துப் பேசமாட்டேன். இவையெல்லாம் நான் அல்லாஹ்வுடனான எனது தொடர்புகளிலிருந்து விடுபடாமலிருப்பதினாலாகும்)
وقال أيضا فى الكلام على الأذان من الفتوحات اعْلَمْ أنِّيْ لَمْ اُقَرِّرْ بحمد الله تعالى فى كتابي هذا ولا غَيْرِه قَطُّ، اَمْرًا غَيْرَ مَشْرُوْعٍ وما خرجتُ عن الكتاب والسنّة فى شيئٍ من تَصَانِيْفِيْ،
(இன்னும் அவர்கள் அதே நூல் “அதான்” தொடர்பாக எழுதும் போது அல்லாஹ்வின் அருளால் எனது நூலான இந்நூலிலும், நான் எழுதிய வேறு எந்த ஒரு நூல்களிலும் “ஷரீஆ”வுக்கு முரணான எந்த ஒரு விடயமும் நான் எழுதவில்லை. அதேபோல் எனது நூல்கள் எதிலும் குர்ஆன், ஹதீதுக்கு முரணான எந்த ஒரு விடயமும் நான் எழுதவில்லை)
மேற்கண்டவாறு கூறிய மகான் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நான் மேலே எழுதியுள்ள பாடலில் “ஷரீஆ”வுக்கு முரணான எந்தக் கருத்தையும் கூறியிருக்கமாட்டார்கள்.
அவர்கள் அறிவின் ஆழ்கடல். இறைஞானத்தின் இமயம். நான் சிரியா நாடு சென்று அதன் தலைநகரான டமஸ்கஸ்ஸில் சமாதி கொண்டுள்ள அவர்களின் தரிசனத்திற்காகச் சென்றேன். அவர்கள் துயிலும் மாளிகை வாசலில் பின்வரும் பாடல் எழுதப்பட்டிருந்தது.
خُصِّصْتُ بِعِلْمٍ لَمْ يُخَصَّ بِمِثْلِهِ – سِوَايَ مِنَ الرَّحْمَنِ ذِي الْعَرْشِ وَالْكُرْسِيْ
அர்ஷ், குர்ஸீ உடைய அல்லாஹ்வினால் நான் இறைஞானம் வழங்கப்பட்டுள்ளேன். இந்த ஞானம் எனக்கு மட்டும் அல்லாஹ் வழங்கிய ஞானமாகும். என்னைத் தவிர வேறு எவருக்கும் இந்த அறிவு வழங்கப்படவில்லை.
இத்தகைய ஞான மேதைதான் தலைப்பில் நான் எழுதியுள்ள பாடலைப் பாடியவர்களாவர்.
கடந்த பதிவின் போது மேற்கண்ட பாடலின் பொருளை நான் எழுதியிருந்தேன். அது கிடைக்காதவர்களுக்காக மீண்டும் எழுதுகிறேன்.
(அல்லாஹ்வை “திக்ர்” செய்வதால் – நினைப்பதால் பாவங்கள் அதிகமாகும். அகப்பார்வைகளும், கல்புகளும் குருடாகி பார்வைப் புலனை இழந்துவிடும்.
ஆகையால் “திக்ர்” செய்யாமல் – அல்லாஹ்வை நினைக்காமல் விடுவதே சிறந்ததாகும். ஏனெனில் “தாத்” உள்ளமை என்ற சூரியன் மறைவதில்லை)
இப்னு அறபீ நாயகம் அவர்களின் இந்தப் பாடல் திருக்குர்ஆனுக்கும், நபீ மொழிகளுக்கும் முரணானதுபோல் வெளிப்பார்வைக்கு விளங்குகிறது. உண்மையில் இந்தப் பாடல் மார்க்கத்திற்கு முரணானதே அல்ல.
بِـذِكْـرِ اللهِ تَـزْدَادُ الــذُّنُــوْبُ
وَتَنْمَحِـقُ الْـبَـصَـائِرُ وَالْقُلُوْبُ
فَتَـرْكُ الذِّكْرِ أَفْضَلُ كُلِّ شَـيْـئٍ
وَشَمْسُ الذَّاتِ لَيْسَ لَهَا غُرُوْبُ
அல்லாஹ்வை “திக்ர்” செய்வதால் நினைப்பதால் பாவங்கள் அதிகமாகின்றன. மனக் கண்களும், உள்ளங்களும் பார்வைப் புலன்களை இழந்து விடுகின்றன. ஆகையால் “திக்ர்” செய்தலை விட்டு விடுவது – இறை நினைவை நிறுத்துவது சாலச் சிறந்ததாகும். ஏனெனில் “தாத்” என்ற – மெய்ப் பொருள் என்ற ஆதவன் அஸ்த்தமிக்கவில்லை. (ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ)
ஏனெனில் அல்லாஹ் என்பவன் “அர்ஷ்” என்ற இடத்திலோ, குர்ஸீ என்ற இடத்திலோ, அல்லது வேறெங்கேயோ இருக்கின்றான் என்று நம்பிக் கொண்டு காலமெல்லாம் அல்லாஹ் அல்லாஹ் என்று சொல்லிக் கொண்டிருப்பதால் பாவமேயன்றி எந்த ஒரு பயனும் கிடைக்காது.
ஏதோ ஒன்றை நினைப்பதாயின் அது கண் பார்வையை விட்டும் மறைந்ததாகவே இருக்க வேண்டும். அவ்வாறான ஒன்றையே நினைக்க முடியும். கண் பார்வைக்கு தெரிகின்ற ஒன்றை நினைக்க முடியாது. அதைப் பார்க்கத்தான் முடியும்.
ஒருவனை நினைப்பதென்றால் அவன் மறைந்திருந்தால் மட்டுமே நினைக்க முடியும். ஒரு பொருளை நினைப்பதற்கான நிபந்தனை அப்பொருள் கண் பார்வைக்குத் தெரியாமல் மறைந்திருக்க வேண்டும்.
அல்லாஹ் திருக்குர்ஆனில்
هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ
முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, வெளியானவனும் அவனே, உள்ளானவனும் அவனே என்று கூறியுள்ளான். (திருக்குர்ஆன் 57-3)
இது அல்லாஹ்வின் பேச்சு. அவனின் பேச்சு நூறு வீதம் உண்மையானதும், எதார்த்தத்திற்கு ஏற்புடையதுமாகும்.
அல்லாஹ்வின் இத்திரு வசனத்தின்படி எதெல்லாம் முந்தினதோ அதெல்லாம் அவனேதான் என்றும், எதெல்லாம் பிந்தினதோ அதெல்லாம் அவனேதான் என்றும், எதெல்லாம் வெளியானதோ அதெல்லாம் அவனேதான் என்றும், எதெல்லாம் உள்ளானதோ அதெல்லாம் அவனேதான் என்றும் அறிந்து கொள்வதும், நம்புவதும் அவசியமாகும்.
முன்னோர்கள் அப்பம் என்றால் புட்டுக் காட்ட வேண்டுமா என்று சொல்வார்கள். ஆனால் அல்லாஹ்வோ அப்பத்தைப் புட்டுக் காட்டியும் கூட உலமாஉகளில் சிலர் இவ் உண்மையை, எதார்த்த தத்துவத்தை, அல்லாஹ்வின் பேச்சை நம்பாமல் அதற்கு எங்கேயோ போகின்ற பொருள் வைத்துக் கொண்டு இத் தத்துவத்தை மறுப்பது ஏனோ தெரியவில்லை.
முந்தினவன் அவன், பிந்தினவன் அவன், வெளியானவன் அவன், உள்ளானவன் அவன் என்று தமிழ் மொழியில் சொல்வதற்கும், முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, உள்ளானவனும் அவனே, வெளியானவனும் அவனே என்று அதே மொழியில் சொல்வதற்கும் வித்தியாசமுண்டு.
மேற்கண்ட இரு வகைப் பொருளிலும் பிந்தின பொருள் முந்தின பொருளை விட சொன்ன விடயத்தை உறுதி செய்யும் பாணியில் அமைந்துள்ளது.
இத்திரு வசனம் மூலம் ஒரு வஸ்த்தில் எதிரும், புதிரும் ஒரே நேரம் ஒன்று சேர்ந்துள்ளதென்று அறிய முடிகிறது. அதாவது அல்லாஹ் முந்தினவனாயிருப்பது போல் அதேநேரம் அவன் பிந்தினவனாயுமுள்ளான் என்றும், இதேபோல் அல்லாஹ் வெளியானவனாயிருப்பது போல் உள்ளானவனாயும் உள்ளான் என்றும் கூறுகிறது.
அதாவது ஒரே பொருளில் ஒன்றுக்கு மற்றது எதிரான இரண்டு அம்சங்கள் ஒன்று சேர்கின்றன. இது அசாத்தியமானதாகும். ஒன்றோ இது பகல் என்று சொல்ல வேண்டும். அல்லது இரவு என்று சொல்ல வேண்டும். பகலும்தான், இரவும்தான் என்று சொல்ல முடியாது. ஏனெனில் ஒன்றுக்கு மற்றது எதிரானது ஒன்று சேராது.
மேற்கண்ட இத்தத்துவத்தை “வஹ்ததுல் வுஜூத்” எனும் ஞானக் கோடரி உடைத்தெரிகிறது.
இவ்வாறு ஒன்றுக்கு மற்றது எதிரான இரண்டு அம்சங்கள் ஒன்று சேராதென்ற அடிப்படையில் இந்த ஞானம் – இத் தத்துவம் பிழையென்று சொல்பவர்களும் உள்ளனர். இவர்கள் சொல்லும் இத் தத்துவத்தை ஏற்றுக் கொள்கிறோம். அதோடு இவர்களுக்கு இன்னுமொரு தத்துவத்தையும் சொல்லிக் காட்ட விரும்புகின்றோம்.
ضِدَّانِ لَا يَجْتَمِعَانِ إِلَّا فِى ذَاتِ اللهِ تَعَالَى،
ஒன்றுக்கு மற்றது எதிரான இரண்டு விடயங்கள் ஒன்று சேர்வது அசாத்தியமாயினும் அது அல்லாஹ்வின் விடயத்தில் சாத்தியமானதென்று ஸூபீகள் கூறுகிறார்கள்.
“வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தின் முன்னால் ضدان لا يجتمعان எதிரான இரண்டு ஒரே வஸ்த்தில் ஒன்று சேராதென்று “அக்ல்” புத்தி சொல்வதை தூக்கியெறிந்து விட்டு “வஹ்ததுல் வுஜூத்” பாணியிலேயே பயணிக்க வேண்டும். எல்லா இடத்திலும், எல்லாக் கட்டத்திலும், எல்லா விடயத்திலும் “அக்ல்” என்ற புத்தியின் பின்னால் செல்லக் கூடாது. அதை வென்று ஞான வழி செல்ல வேண்டும். பெண்புத்தி பின் புத்தி என்பது போல் “அக்ல்” சொல்வதும் பெண் புத்தி சொல்வது போன்றதே!
எனவே, கண்ணுக்கு முன்னால் பட்டப்பகலில் காட்சி தருகின்ற இறைவனை காணதவன் போல் அவனை நினைப்பது பாவமேயன்றி வேறென்ன?
சூரியன் உதித்து உலகெல்லாம் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதைச் சூரியன் என்று காணாமல் அதை மறைந்ததென்று எண்ணிக் கொண்டு நினைப்பதால் திருக்குர்ஆனின் மேற்கண்ட “அள்ளாஹிர்” வெளியானவனும் அவனே என்ற தத்துவத்தை “திக்ர்” நினைப்பவன் எதிர்க்கின்றான். இது பாவம் மட்டுமல்ல. “குப்ர்” எனும் நிராகரிப்புக்கும் வழி வகுத்துவிடும். உலகில் ஒருவன் எதைப் பார்த்தாலும் அவன் இறைவனின் “தஜல்லீ” காட்சியையே பார்க்கிறான். ஆயினும் அதை அவன் காட்சியாகப் பார்க்காமல் அவனுக்கு வேறான ஒன்றென்று பார்க்கிறான். அவன் தனது “அக்ல்” புத்தியைக் கட்ட வேண்டிய இடத்தில் கட்டி வைத்து விட்டும் பயணித்தால் பயன் கிட்டும்.
அல்லாஹ் என்ற சூரியன் மறைவதேயில்லை, அது “ளாஹிர்” வெளியாகியே உள்ளது. இதுவே சத்தியம். தேவையேற்படின் தொடர்வோம்.