தொகுப்பு: ஷெய்குனா மிஸ்பாஹீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
தொழுகைக்காக “தக்பீர்” கட்டித் தொடங்கியதிலிருந்து அதை நிறைவு செய்து முடிக்கும் வரை எந்த ஒரு படைப்பை முன்னோக்கி எந்த மொழியில் அதோடு பேசினாலும் தொழுகை வீணாகிவிடும்.
إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ فِي صَلاَتِهِ، فَإِنَّمَا يُنَاجِي رَبَّهُ فَإِنَّ رَبَّهُ بَيْنَهُ وَبَيْنَ قِبْلَتِهِ،
“நிச்சயமாக உங்களில் யாராவது தொழத் தொடங்கினால் அவன் அது முடியும் வரை அல்லாஹ் உடனேயே பேசுகிறான். ஏனெனில் அவனின் ”றப்பு” அவனுக்கும், “கிப்லா”வுக்கும் இடையில் இருக்கின்றான்” என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
இந்த நபீ மொழி மூலம் தொழத் தொடங்கிய ஒருவன் அதை நிறைவு செய்யும் வரை அல்லாஹ்வுடன் பேசுகிறான் என்ற உண்மை தெளிவாகின்றது.
எனவே, தொழுபவன் அல்லாஹ்வுடன் பேசுகிறவனாதலால் அவன் பேசி முடியம் வரை ஒரு படைப்பை முன்னிலைப்படுத்திப் பேசுவது அவனோடுள்ள உரையாடலைத் துண்டிப்பதாகிவிடும். இது பெரும்பாவமாகும்.
ஆயினும் ஒருவன் ஒரு படைப்போடு உரையாடிக் கொண்டிருக்கும் வேளை அதை இடைநிறுத்திவிட்டு இன்னொரு படைப்போடு உரையாடுவது குற்றமாகாது. எனினும் இது கூட முறையற்ற செயல்தான். அவ்வாறு அவன் உரையாட விரும்பினால் உரையாடிக் கொண்டிருந்தவனிடம் “தயவு செய்து ஒரு நிமிடம் தாருங்கள்” என்று சொல்லிவிட்டு மற்றவனுடன் பேசுவது முறையற்ற செயலாகாது.
ஒருவன் மார்க்கப் பெரியார் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது இன்னொருவர் குறுக்கிட்டு அவர்களின் உரையாடலைத் துண்டிப்பதும் பொருத்தமற்ற ஒன்றேதான்.
தொழுகின்றவன் அல்லாஹ்வுடன் உரையாடுகின்றான் என்று கூறிய ஏந்தல் எம்பிரான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அதற்கு காரணம் கூறும் பாணியில் அதையடுத்து “அவனின் “றப்பு” அவனுக்கும், “கிப்லா”வுக்குமிடையில் உள்ளான்” என்று கூறினார்கள்.
فَإِنَّ رَبَّهُ بَيْنَهُ وَبَيْنَ قِبْلَتِهِ،
இந்த வசனம் தருகின்ற வெளிப்படையான கருத்தின்படி தொழுகின்றவனுக்கும், “கிப்லா”வுக்குமிடையில் அல்லாஹ் இருக்கின்றான் என்று விளங்குகின்றது.
அல்லாஹ்வுக்கு இடம், தலம், திசை, மேல், கீழ் என்பன கிடையாத நிலையில் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் இந்த வசனம் அவனுக்கு ஓர் இடமும், திசையும் இருப்பது போல் காட்டுகிறது.
நேருக்கு நேராயிருந்து இருவர் உரையாடுவதே உரையாடலுக்குப் பொருத்தமானதாகும். அடியான் இறைவனுடன் உரையாடும் போதும் அவன் நேருக்கு நேராயிருந்து (பேஸ் டு பேஸ்) உரையாடுவதே சரியான உரையாடல். ஒருவன் ஒன்றைக் காண்பதாயினும், உரையாடுவதாயினும் காணப்பட்ட பொருளும், உரையாடப்பட்டவரும் مُخَاطَبْ முகத்திற்கு முன்னால்தான் இருக்க வேண்டும். இதுவே நடைமுறை. இதைக் கருத்திற் கொண்டே நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அவ்வாறு சொல்லியிருக்க வேண்டுமென்றே நான் கருதுகிறேன். தவிர எல்லாமாயுமுள்ள ஏகன் தொழுகின்றவனுக்கும், கிப்லாவுக்குமிடையில் மட்டும் உள்ளான் என்ற கருத்தில் நபீ பெருமான் சொல்லியிருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. الله أعلم بمراده بذلك
ஏனெனில் அல்லாஹ் இடம், திசை, கட்டுப்பாடு என்பவற்றை விட்டும் துய்யவன் என்பதை எம்மை விட முழுமையாக அறிந்தவர்களும், நம்பினவர்களும் பெருமானார் அவர்களேயாவர். ஆகையால் அவர்கள் ஒரு போதும் அல்லாஹ்வுக்கு இடம், திசை உண்டு என்று சொல்லியிருக்கவும் முடியாது. நம்பியிருக்கவும் முடியாது. அவர்களின் பேச்சில் எந்த இடத்திலாவது அல்லாஹ்வுக்கு இடம், திசை உண்டு என்று நாம் சந்தேகப்படும் வகையில் ஒரு சொல்லோ, ஒரு வசனமோ காணப்பட்டால் அதற்குப் பொருத்தமான வலிந்துரை வைத்து விளங்க வேண்டியது எமது கடமையாகும். வஹ்ஹாபீகள் போல் அவனுக்கு இடத்தை தரிபடுத்துவது கூடாது. ஏனெனில் இடமாயும், திசையாயும், மற்றும் எல்லாமாயும் அவனேதான் உள்ளான்.
தொழுகையில் ஸலவாத், ஸலாம்.
“பர்ழ்” கடமையான தொழுகையாயினும், ஸுன்னத் ஆன தொழுகையாயினும் அதில் “அத்தஹிய்யாத்” ஓதும் போது நபீ அவர்கள் மீது ஸலாம் சொல்வது கடமையாகும். சொல்லாது போனால் தொழுகை நிறைவேறமாட்டாது. தொழுகையில் அவர்கள் மீது ஸலாம் சொல்வது “அத்தஹிய்யாத்” ஓதலில் மட்டுமே இடம் பெறும்.
இதில் இன்னொரு விஷேடம் என்னவெனில் ஸலாம் சொல்லும் போது அவர்களை முன்னிலைப்படுத்திச் சொல்ல வேண்டுமேயன்றி படர்க்கையில் சொல்லக் கூடாது. அவ்வாறு சொன்னால் தொழுகை நிறைவேறாது.
உதாரணமாக اَلسَّلَامُ عَلَيْكَ என்று சொல்லாமல் اَلسَّلَامُ عَلَيْهِ என்று சொல்வது போன்று. عَلَيْكَ என்றால் உங்கள் மீது என்றும், عَلَيْهِ என்றால் அவர்கள் மீது என்றும் பொருள் வரும். எவ்வாறு சொன்னாலும் அது பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களையே குறிக்கும். ஆயினும் அவர்களை முன்னிலைப்படுத்துவதில் ஓர் இரகசியம் உண்டு. அதென்னவெனில் اَلسَّلَامُ عَلَيْكَ நபீயே உங்கள் மீது ஸலாம் என்று சொல்லும் போது அவர்களின் தோற்றத்தை – உருவத்தை மனக் கண்ணாடியில் பார்க்க வேண்டும். அவர்களை முன்னிலைப்படுத்திச் சொல்லும் போதுதான் அவர்களின் தோற்றத்தைப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படும். அவர்களை முன்னிலைப்படுத்துவதின் பிரதான நோக்கம் அவர்களைக் காண வேண்டுமென்பதேயாகும்.
ஐங்காலத் தொழுகைகளையும் தவறாமல் தொழுது வருபவன் அவர்கள் மீது தினமும் குறைந்தபட்சம் ஐந்து முறை ஸலாம் சொல்கின்றான். அவன் தொடர்ந்து அவ்வாறு சொல்லி வரும்போது கண்மணி நாயகம் அவர்களின் பொருட்டாலும், அவர்களின் “துஆ”வினாலும் அவன் அவர்களைக் கனவிலோ, நேரிலோ காணும் வாய்ப்பினை பெற்றுக் கொள்வான் என்பது எனது நம்பிக்கையாகும். அவர்கள் உலக மக்களின் அருட் கொடை. அவர்களின் “உம்மத்” கஷ்டப்படுவதை தங்களின் கஷ்டமாக உணர்பவர்கள்.
لَنْ يَدْخُلَ رِجْلَ أَحَدِكُمْ شَوْكَةٌ إِلَّا وَقَدْ وَجَدْتُ اَلَمَهُ
உங்களின் எவரின் காலில் ஒரு முள் குத்தினாலும் அதன் வலியை நான் உணர்கிறேன் என்று தங்களுக்கு தங்கள் “உம்மத்” மீதுள்ள அன்பை வெளிப்படுத்திய றஹீமுன், றஊபுன் ஆனவர்கள். கேளுங்கள் தரப்படும் என்று தினமும் அணையா ஆசை கொண்டவர்கள்.
“பிக்ஹ்” என்ற சட்ட நூல்களில் பின்வருமாறு ஒரு வசனத்தை, அல்லது அவ்வசனத்தையொத்த கருத்துள்ள வேறு வசனத்தைக் காணலாம்.
تَبْطُلُ الصَّلَاةُ بِخِطَابٍ لِمَخْلُوْقٍ غَيْرِ النَّبِـيِّ
தொழுகையில் நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தவிர வேறு எந்த ஒரு படைப்பை முன்னோக்கி உரையாடினாலும் தொழுகை வீணாகிவிடும்.
இவ்வாறு சட்டம் கூறப்பட்டிருப்பது, நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் படைப்பில்லை என்ற கருத்து மறைமுகமாக விளங்கப்படுகிறது – சூசகமாக சொல்லப்பட்டிருப்பது ஒரு தத்துவித்திற்கான “சிக்னல்” என்பதைப் புரிந்து கொண்டவன் புவனத்தரசனாகிவிட்டான்.
தொழுகையில் “அத்தஹிய்யாத்” ஓதும்போது மட்டுமன்றி அதில் எக்கட்டத்திலும் பெருமானாரை முன்னிலைப்படுத்த முடியும். தொழுகை வீணாகாது.
“ஜமாஅத்” கூட்டாகத் தொழும் போது பக்கத்திலுள்ள ஒருவன் தும்மி விட்டு “அல்ஹம்துலில்லாஹ்” என்று சொன்னதைச் செவியேற்றவன் அவனுக்கு பதில் சொல்வதாயின் يَرْحَمُهُ الله என்று படர்க்கை வசனத்தில் மட்டுமே பதில் கூற வேண்டும். يَرْحَمُكَ الله என்று முன்னிலை வசனத்தில் பதில் சொன்னால் தொழுகை வீணாகிவிடும். ஆயினும் நபீ பெருமான் அவர்கள் தொழும்போது தும்மிவிட்டு அல்ஹம்துலில்லாஹ் என்று அவர்கள் சொன்னதைச் செவியேற்றவன் يَرْحَمُكَ الله என்று முன்னிலை வசனத்தில் பதில் சொல்லலாம். தொழுகை வீணாகாது. எனினும் இவ்வாறு நபீயவர்களின் காலத்தில் ஒரு நிகழ்வு நடந்ததற்கு நான் ஆதாரத்தை காணவில்லை. ஆதாரம் இல்லாவிட்டாற் கூட இது “கியாஸ்” அடிப்படையில் ஆகுமானதே!
அன்பிற்குரிய சகோதரர்களே!
தொழுகையில் கூட பெருமானார் அவர்களுக்கு ஒரு சட்டமும், மற்றவர்களுக்கு இன்னொரு சட்டமும் இஸ்லாம் கூறியுள்ளதென்றால் இதன் மூலம் பெருமானார் அவர்களின் அகமியம் குன்றின் மேல் தீபம் போல் விளங்குகிறதல்லவா? தொழுகையில் அவர்கள் மீது ஸலாம் சொல்லாதவனின் தொழுகையே வீணானதென்று இஸ்லாமிய சட்டம் கூறுகிறதல்லவா? எதார்த்தமும், உண்மையும் இவ்வாறிருக்கும் நிலையில் பாங்கு சொல்லுமுன்னும், பின்னும் அவர்கள் மீது ஸலவாத் சொல்வது கூடாதென்று கூச்சலிடும் வஹ்ஹாபிகளினதும், அவர்களின் கூச்சலுக்கு செவிசாய்த்து செயல்படுவர்களினதும் மறுமை வாழ்வு எவ்வாறிருக்குமென்று சொல்லவும் வேண்டுமா?