தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“ஸூபீ” என்ற சொல்லைக் கூட தமது வாழ்நாளில் வாயால் மொழியாத வஹ்ஹாபிகளிற் பலர் இப்போது ஸூபிஸ வழிக்கு வருவதேனோ? அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹு அக்பர்.
இராணுவம் இலங்கை முழுவதும் வீடு வீடாக சோதனையிட்ட கால கட்டத்தில் ஸுன்னிஸத்திற்கும், ஸூபிஸத்திற்கும் எதிராக கொடி கட்டிப் பறந்த வஹ்ஹாபிகளிற் பலர் தமது வீடுகளில் எனது போட்டோக்களையும், நான் எழுதிய புத்தகங்களையும் வைத்து பாதுகாப்பு பெற்றுக் கொண்ட விடயம் பகிரங்க சந்தைக்கும், சந்திக்கும் வந்த பழைய கதையே!
வஹ்ஹாபிகாள்! அரசாங்கத்தைப் பயந்து நீங்கள் ஸூபீகளாகவும், ஸுன்னீகளாகவும் மாறாமல் “இக்லாஸ்” அடிப்படையில் அல்லாஹ்வுக்காகச் செயல்படுங்கள்.
நீங்கள் நெருப்பிலிருந்து நீருக்கு வருவதும், காட்டிலிருந்து நாட்டுக்கு வருவதும் நல்ல காரியமே! உங்களை மாலையிட்டும், மணம் பூசியும், மலர் தூவியும் வரவேற்கிறோம்.
நல்லதைச் செய்யுங்கள். நல்லெண்ணத்தோடும் செய்யுங்கள். உங்கள் தலைமையில் கந்தூரி கொடுங்கள். கத்தம், பாதிஹா, மௌலிது ஓதுங்கள். வஹ்ஹாபிஸ இருளால் சூழ்ந்த நமதூரையும், நமது நாட்டையும் ஒளிரச் செய்ய எம்மோடு இணைந்து இயங்குங்கள். ஸூபிஸம் பேசுங்கள். அதுவே இஸ்லாம் என்ற உண்மையை பகிரங்கமாக எடுத்தோதுங்கள். வலீமார் சென்ற வழியே சரியான, இஸ்லாமிய வழி என்பதை செயலில் காட்டுங்கள்.
நீங்கள் ஸூபீகள் என்றால் எட்டை இருபதாக்குங்கள். அரசாங்கம் வஹ்ஹாபீகளை இனங்கண்டு கொள்ள எதிர்வரும் புனித றமழானை ஓர் இலக்காக கொள்ளும் சாத்தியம் உண்டு.
புனித றமழானில் ஸலவாத் சொல்வதன் மூலம் பள்ளிவாயல்களை ஒளிமயமாக்குங்கள். நோன்புக்கும், பெருநாளுக்கும் சர்வதேச பிறையை ஆதாரமாகக் கொண்டு முஸ்லிம்களுக்கிடையில் பிளவையும், கருத்து வேறுபாடுகளையும் ஏற்படுத்தாதீர்கள். இந் நாட்டில் வஹ்ஹாபிஸத்திற்கு இப்படியொரு அவலநிலை ஏற்படுமென்று நீங்கள் நினைத்திருக்கமாட்டீர்கள். ஆயினும் அல்லாஹ்வின் அருளாலும், வலீமாரின் பொருட்டாலும் ஒரு வருடத்திற்கு முன்னேயே இதை நாங்கள் அறிந்திருந்தோம். “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” வந்த பின் வஹ்ஹாபிஸம் செயலிழந்து விடுமென்று ஒரு வருடத்திற்கு முன்னேயே நாம் பகிரங்கமாகப் பேசியிருந்தோம்.
வஹ்ஹாபிஸத்திற்கு இந்த அவல நிலை இலங்கையில் மட்டும்தான் என்று நீங்கள் பகற் கனவு காணாதீர்கள். வஹ்ஹாபிஸம் பிறந்த நாடான ஸஊதி நாடே ஸுன்னீ நாடாக மாறும் காலம் நெருங்கிவிட்டதென்ற உண்மையை நம்புங்கள்.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،: «إِنَّ الإِيمَانَ لَيَأْرِزُ إِلَى المَدِينَةِ كَمَا تَأْرِزُ الحَيَّةُ إِلَى جُحْرِهَا»
நிச்சயமாக “ஈமான்” விசுவாசம் பாம்பு தனது பொந்தில் நுழைவது போல் திரு மதீனாவில் நுழையும் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள். (புகாரீ – அறிவிப்பு: அபூஹுறைறா)
நபீ பெருந்தகை அவர்களின் மேற்கண்ட அருள் மொழியின் படி ஒரு காலத்தில் உண்மையான “ஈமான்” என்பது மதீனா நகரில் நுழையுமென்ற அருள் மொழி மூலம் அங்கு தற்போது “ஈமான்” இல்லையென்பது விளங்குகின்றது. அதேநேரம் உலகின் வேறு இடங்களில் ஈமான் உள்ளது என்பதும் விளங்கப்படுகின்றது.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «عَلَى أَنْقَابِ المَدِينَةِ مَلاَئِكَةٌ لاَ يَدْخُلُهَا الطَّاعُونُ، وَلاَ الدَّجَّالُ»
திரு மதீனா மலை வழியெங்கும் மலக்குகள் இருப்பர். அங்கு பயங்கர நோய் ஒன்றுமே நுழையாது. தஜ்ஜாலும் நுழையான் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள்.
திரு மதீனா நகருள் “தாஊன்” “வபா” வயிற்றோட்டம், காலறா முதலான எந்தவொரு பயங்கர நோயும் நுழையாது. அதேபோல் அதனால் மரணமும் நிகழாது. இறுதி காலத்தில் தோன்றவுள்ள “தஜ்ஜால்” என்ற கொடியவனும் அங்கு நுழையான். (ஆதாரம்: புகாரீ)
நான் அறிந்தவரை உலகிலுள்ள இஸ்லாமிய நாடுகளில் எந்த ஒரு நாட்டிலும் எதார்த்தமான, சரியான “ஈமான்” விசுவாசம் பரவலாக இல்லை. எனினும் எங்கெல்லாம் ஸூபீகள் உள்ளார்களோ அங்கு அவர்களிடம் மட்டுமே எதார்த்தமான “ஈமான்” விசுவாசம் உள்ளது.
உலகிலுள்ள நாடுகளில் ஓரளவேனும் எதார்த்தமான விசுவாசம் எதுவென்று அறிந்தவர்கள் உள்ள நாடும், தீவும் இந்தியாவும், இலங்கையுமேயாகும். அல்லாஹ் நம்மை இலங்கையில் பிறக்கச் செய்தது அவன் எமக்கு வழங்கிய மிகப் பெரும் பாக்கியமாகும். அல்ஹம்துலில்லாஹ்.