தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
1944ல் பிறந்த நான் 1960ம் ஆண்டுவரை – 15 ஆண்டுகள் காத்தான்குடி 06 பிரதான வீதியில் அமைந்துள்ள இரும்புத் தைக்கா என்று அக்காலத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய பள்ளிவாயலோடு தொடர்புள்ளவனாகவே இருந்தேன். என் தந்தை மர்ஹூம் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அவர்களும் அப்பள்ளிவாயலோடு மேற்குறித்த 60ம் ஆண்டு வரை தொடர்புள்ளவர்களாகவே இருந்தார்கள். எனது தொடர்புக்கு எத்தனையாண்டுகளுக்கு முன் குறித்த பள்ளிவாயலோடு தொடர்புள்ளவர்களாக இருந்தார்கள் என்பதை என்னால் திட்டமாகக் கூற முடியவில்லை.
1908ம் ஆண்டு இரும்புத் தைக்கா “மஹல்லா”வில் பிறந்த என் தந்தை தங்களின் ஏழு வயது முதல் அதாவது 1915 முதல் 1960ம் ஆண்டு வரை சுமார் 45 ஆண்டுகள் இரும்புத் தைக்காவோடு தொடர்புள்ளவர்களாகவே இருந்தார்கள். அங்கேயே தொழுவார்கள். சில சமயம் அங்கேயே நீண்ட நேரமெடுத்து “முறாகபா” “முஷாஹதா” முதலான இறை தியானத்தில் இருப்பார்கள்.
1960ம் ஆண்டு பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயல் ஆரம்பித்தது முதல் அவர்களின் மறைவு (1978) வரை அங்கேயே தங்களின் சகல தொடர்புகளையும் வைத்துக் கொண்டார்கள்.
சுமார் 45 ஆண்டுகள் இரும்புத் தைக்காவுடன் தொடர்புள்ளவர்களாக இருந்த காலத்தில் அவர்கள் அப்பள்ளிவாயல் நிர்வாகத்தில் ஓர் அங்கத்தவராக இருக்கவில்லை. ஏனெனில் அக்காலத்தில் நிர்வாகம் செய்தவர்களின் நடவடிக்கைகள் அவர்களுக்கு பிடிக்காமற் போனதேயாகும்.
ஆயினும் நிர்வாகம் மார்க்கத்திற்கு முரணான முடிவுகள் எடுப்பதை அறிந்தால் உரியவர்களுடன் தொடர்பு கொண்டு அதை நிறுத்திவிடுவார்கள்.
ஒரு சமயம் பள்ளிவாயல் நிர்வாகம் ஜாமிஉள்ளாபிரீன் பள்ளிவாயலில் நடைபெறுகின்ற புகாரீ ஓதும் நிகழ்விற்கு எதிராக இரும்புத் தைக்காவிலும் புகாரீ ஆரம்பித்து ஓத வேண்டுமென்று முடிவு செய்து புகாரீ கிதாபுகளும் வாங்கிய பின் எனது தந்தையிடம் வந்து புகாரீ சபைக்கு தலைமை தாங்கி முப்பது நாட்களும் தொடராக நடத்த வரவேண்டுமென்று கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டு அதற்கான காரணத்தையும் அவர்களுக்கு விளக்கி வைத்தார்கள். அதாவது “புகாரீ ஓதுவதென்பது ஒரு வணக்கம். வணக்கம் என்பது நன்மை கருதி அல்லாஹ்வுக்காக செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். நீங்கள் மீரா பள்ளிவாயலுக்கு எதிராக ஓத வேண்டுமென்ற நோக்கத்தில் ஆரம்பிக்கின்றீர்கள். அதற்கு நான் அனுசரணை வழங்கத் தயாராக இல்லை” என்று கூறினார்கள். அதோடு நிர்வாகம் அந்த முயற்சியை கைவிட்டது. புகாரீ ஓதுவதற்காக நிர்வாகம் வாங்கிய புகாரீ கிதாபுகளில் ஒன்று இதுவரை என்னிடம் உள்ளது. என் தந்தைக்கு நிர்வாகம் கொடுத்தது தனயனுக்கு வந்து சேர்ந்துள்ளது. இந்த நிகழ்வு என் தந்தையின் “இக்லாஸ்” தூய்மையான எண்ணத்தை எடுத்துக் காட்டுகிறது.
அவர்கள் பள்ளிவாயலுடன் தொடர்பாக இருந்த கால கட்டத்தில் ஒரு நாள் காலை சுமார் 10 மணியளவில் பள்ளிவாயலுக்குச் சென்றுள்ளார்கள். அவர்கள் சில நாட்களில் சுமார் 10 மணியளவில் அங்கு சென்று வெளிப்பள்ளியில் ஒரு பக்கம் “ளுஹ்ர்” நேரம் வரை தனிமையாக இருப்பது அவர்களின் வழக்கமாக இருந்தது. சில நாட்களில் அவர்களிடமிருந்து ஞான அறிவைப் பெற்று வந்த அவர்களின் வயதையொத்த சிலரும் அந்நேரம் அங்கு சென்று அவர்களிடம் ஞான அறிவைப் பெறுவதும் வழக்கம்.
அவர்களில் “ஷேகுவரா” ஷரீப் என்று நமதூரில் அறிமுகமான எனது நண்பர் முஹம்மது ஷரீப் அவர்களின் தந்தை அசனார் (ஹஸனார்) என்பவரும், மர்ஹூம் “பிஸ்கத் மஃறூப்” என்றழைக்கப்பட்ட தம்பி லெவ்வை ஓடாவியார் என்பவரும், வேலி கட்டும் முஹம்மத் தம்பி மாமா என்பவரும் அடங்குவர்.
ஒரு நாள் அவர்களுடன் இறை ஞானம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்த தந்தை சலம் கழிப்பதற்காக வெளியே வந்த போது காத்தான்குடி 6ம் குறிச்சியைச் சேர்ந்த “இப்றாஞ்சாப்பிள்ளை” என்பவர் பள்ளிவாயல் பாயொன்றை எடுத்து மண்ணில் விரித்து அதன் மேல் நின்றவராக பள்ளிவாயல் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். கிணற்றுக்குப் பக்கத்திலேதான் தந்தையின் தந்தை அலியார் ஆலிமின் அடக்கத்தலமும் இருந்தது.
இதைக் கண்ட என் தந்தைக்கு கோபம் வந்து “அடே இபுறாஞ்சாப்பிள்ளே! இது பள்ளிவாயலல்லவா? உனது சுகத்துக்காக நீ இவ்வாறு செய்வது நியாயமா?” என்று கேட்டார்கள். அதாவது சீறினார்கள். இப்றாஞ்சாப்பிள்ளைக்கு ஆத்திரமேற்பட்டு குளித்துக் கொண்டிருந்தவர் தந்தையை நெருங்கி அடிப்பவர் போல் பள்ளிப்பாய் உன்னுடையதா நீ கேட்பதற்கு? என்று அவரும் சீறினார். தந்தை மௌனியாகிப் போய்விட்டார்கள்.
இந்த நிகழ்வு நடந்து சில நாட்களில் இபுறாஞ்சாப்பிள்ளை நோயாளியானார். அவரின் நோய் மாடு கத்துவது போல் எந்நேரமும் கத்துவதுதான். சாப்பிடவோ, குடிக்கவோ முடியாத நிலையில் பல நாட்கள் இருந்து மரணித்துவிட்டார்.
அவர் மாடு கத்துவது போல் கத்துவதை நேரில் பார்ப்பதற்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வருவார்கள். நான் அக்காலத்தில் சுமார் 7 வயதுச் சிறுவனாயிருந்தேன். ஒரு நாள் நானும் அவரைப் பார்ப்பதற்கென்று சென்ற போது அவரின் வீட்டிற்கு முன்னால் பெரும் சனக்கூட்டம் நின்றதால் அவரை நேரில் பார்க்க முடியாமல் போயிற்று. அவரின் வீட்டு வாயலில் பொரிய ஆல மரம் போன்ற புளிய மரமொன்று நின்றது. அதில் ஏறியும் சிலர் பார்த்தார்கள். சில நாட்களில் அவர் மரணித்துவிட்டார். அவருடைய சந்ததிகளிற் சிலர் இப்போதும் உயிருடன் உள்ளார்கள். அவர்களில் ஒருவர் என்னுடைய வயதையொத்த எனது நண்பர் ஆவார். இவர் அக்காலத்தில் இங்கிலீஸ் மஜீத் என்று அழைக்கப்பட்டார். பாலமுனையில் வாழ்ந்து மரணித்துவிட்டார்.
பள்ளிவாயல் சொத்துக்களைத் தமது சுய நலத்திற்காக பயன்படுத்துவோருக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டுமென்பதற்காக இதை எழுதினேன்.
பள்ளிவாயல் வக்பு
தனி நபர் ஒருவர் தனது சொந்தப் பணத்திலோ, அல்லது பலர் சேர்ந்து பங்காளர்களாகவோ ஒரு நிலத்தை – காணியை வாங்கி அதை “மஸ்ஜித்” என்று அல்லாஹ்வுக்காக “வக்பு” செய்தால் அந்த நேரத்திலிருந்து அது “மஸ்ஜித்” பள்ளவாயல் என்ற பெயரால் அழைக்கப்படும். அதோடு அதற்கான மார்க்க சட்டங்களும் வந்து விடும்.
தனி நபரோ, அல்லது பலர் சேர்ந்தோ ஒரு நிலம் வாங்கி அதை “மஸ்ஜித்” என்று “வக்பு” செய்த நேரத்தலிருந்து அது அல்லாஹ்வுக்குச் சொந்தமான இடமாகிவிடும். பணம் செலவிட்டு நிலத்தை வாங்கி “வக்பு” செய்தவர்களுக்கு கூட அதன் பிறகு அதில் எந்த ஓர் உரிமையும் இல்லாமற் போய்விடும். அவர்களில் எவரும் அதில் எந்த உரிமையும் கொண்டாட முடியாது. அதிலுள்ள ஒரு மண் கூட அவர்களில் எவருக்கும் உரிமையற்றதாகிவிடும்.
அந்த இடத்தில் கட்டிடம் கட்டி அதை பள்ளிவாயலாக “வக்பு” செய்தால்தான் அது பள்ளிவாயலாகிவிடுமென்பது கருத்தல்ல. அந்த நிலமே பள்ளிவாயல்தான். அந்த நிலத்திற்கு அதை வக்பு செய்த நேரம் முதல் பள்ளிவாயலுக்குரிய “ஷரீஆ”வின் சட்டம் யாவும் வந்துவிடும். அந்நிலத்தில் உமிழ்வதும் கூட “ஹறாம்”தான்.
அந்த நிலத்தில் மல சலம் கழிப்பதும், அதை ஏனைய நிலங்கள் போல் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதும் கூடாது. அதாவது ஹறாம் ஆகிவிடும். தண்டனைக்குரிய குற்றமாகிவிடும். அந்த நிலத்தில் “இஃதிகாப்” நிய்யத்துடன் இருந்தால் அது நிறைவேறும். அந்த நிலத்தை பொது வேலைக்காக பயன்படுத்துவதும் கூடாது.
உதாரணமாக ஏழை மக்களுக்கு உணவு தயாரித்து வழங்குவதற்காக அவ்விடத்தில் சமையல் செய்வது கூட பாவமாகிவிடும். அங்கு அவ்லியாஉகளின் கந்தூரிக்கு சமைப்பது கூட குற்றமாகிவிடும். மார்க்கம் சம்பந்தமான கூட்டங்கள் தவிர ஏனைய கூட்டங்கள் நடத்துவதும் குற்றமாகிவிடும்.
அந்த நிலத்தில் பள்ளிவாயல் தவிர ஹோட்டல், வீடு, கடை போன்றவை கட்டுவதும் “ஹறாம்” ஆகிவிடும்.
பள்ளியாகவும், பள்ளிக்காகவும் “வக்பு” செய்தல்.
பள்ளிவாயலுக்கு ஒரு நிலத்தை “வக்பு” செய்யும் போது இரண்டு வகையில் செய்யலாம். ஒன்று. பள்ளிவாயலாகச் செய்தல். இரண்டு. பள்ளிவாயலுக்காகச் செய்தல். பள்ளிவாயலாக “வக்பு” செய்யப்பட்ட நிலம் பள்ளியேதான். இதன் விபரம் நான் மேலே எழுதியுள்ளேன்.
ஒருவன் பள்ளிவாயலுக்காக ஒரு நிலத்தை அல்லது தோட்டம், கடை, வீடு போன்றவற்றை “வக்பு” செய்தாலும் செய்பவனின் “நிய்யத்” நோக்கத்தின்படி அவ்விடம் செயல்படுத்தப்பட வேண்டும்.
ஒருவன் ஒரு தோட்டத்தை “வக்பு” செய்தால் அத்தோட்டத்தால் கிடைக்கின்ற வருமானம் அவன் “வக்பு” செய்த பள்ளிவாயலுக்குச் சொந்தமானது. அதில் நிர்வாகிகள் கையாடல் செய்வதும், ஊழல் செய்வதும் “ஹறாம்”. இவ்வாறுதான் ஒருவன் கடை, வீடு போன்றவற்றை பள்ளிவாயலுக்கு அல்லது பொது தாபனங்களுக்கு “வக்பு” செய்வதுமாகும்.
ஒரு பள்ளிவாயலுக்கு ஏக போக – அதிக சொத்துக்கள் இருந்தால் அதை நிர்வகிக்க ஆட்கள் தேடத் தேவையில்லை. தாமாகவே வந்து குவிந்துவிடுவார்கள். காரணம் கூறத் தேவையில்லை. அவர்களையும் சேர்த்துக் கொண்டால் “அல்லாட காவல்” பள்ளிவாயலின் பணப் பற்றாக்குறைக்கு பஞ்சமில்லாமற் போய்விடும். ஹவ்ழில் வாழும் மீன்கள் கூட நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகும். அதேபோல் பள்ளிக் களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஊது பத்தி, மின் குமிழ்கள் போன்றவை மாயமாய் மறைந்து விடும். புதிய நிர்வாகிகளின் “பறகத்” அருளால் அவற்றுக்கு கால் முளைத்துவிடும். அதிகாலை சுலைமானி – “பிளேன்டீ” குடிப்பதற்குக் கூட வழியில்லாதிருந்து நிர்வாகத்தில் இணைந்து கொண்டவர்களிற் சிலர் திரு மக்கா நகர் சென்று ஹாஜிகளாகிவிடுவதும் உண்டு.
அன்று காத்தான்குடி 06 இரும்புத்தைக்கா என்றும், தற்போது “மஸ்ஜிதுல் ஹஸனாத்” என்றும் அழைக்கப்படுகின்ற பள்ளிவாயலின் மேற்குத் திசையிலுள்ள ஜாமிஉள்ளாபிரீன் வீதியில் எவரும், எங்கும் கண்டிராத மா பெரும் ஆலை மரமொன்று நின்றது. அதன் அடிப்பகுதியின் சுற்றளவு 22 அடி என்று மக்கள் சொல்வார்கள். நான் பிறந்த வீடு அவ் ஆலை மரத்திற்கு சுமார் 15 மீற்றர் தூரத்திலேயே இருந்தது. நான் கூறும் நிகழ்வு நான் பிறந்த 1944ம் ஆண்டிற்கு முந்தியது. அவ் ஆலை மரம் “உப்புக்கட்டியவர் ஆலை” என்று காத்தான்குடி மக்களால் சொல்லப்பட்டது.
இதற்கான காரணம் அவ் ஆலை மரத்திற்கு அண்மையில் வாழ்ந்து வந்த ஒருவர்தான் இரும்புத் தைக்காவில் “முஅத்தின்” ஐங்காலம் பாங்கு செல்லும் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
இரும்புத் தைக்காவில் வருடாந்தம் றபீஉனில் அவ்வல் மாதம் 12 நாட்கள் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் “ஸுப்ஹான மவ்லித்” ஓதப்பட்டு இறுதி நாள் கந்தூரி வழங்கும் வழக்கம் இருந்தது. கந்தூரி அன்று உப்பு மூடை ஒன்று நேர்ச்சைப் பொருளாக வந்தது. அது அன்றிரவு ஏலத்தில் விற்கப்பட்டது. பணம் செலுத்தி அதை வாங்கியவர் நாளை எடுத்துக் கொள்கின்றேன் என்று நிர்வாகிகளிடம் சொல்லிவிட்டு போய்விட்டார். அந்த உப்பு மூடை முஅத்தின் அறையில் வைக்கப்பட்டது.
அதை வாங்கியவர் காலையில் அதை எடுப்பதற்காக வந்த போது அதைக் காணவில்லை. சில நிமிடங்களிலேயே ஊர் மக்கள் அங்கு குவிந்துவிட்டனர். முஅத்தின் மட்டும் அங்கு வரவில்லை. அவரைத் தேடி அவரின் வீடு சென்ற போது உப்பு மூடை – உப்புச் சாக்கு அங்குதான் இருந்தது. அவர் இருக்கவில்லை. அவரைத் தேடிய போது அவர் தனது வீட்டின் பின்புறத்திலிருந்த – அக்காலத்தில் கோடி என்றும், புளக்கடை என்றும் அழைக்கப்பட்டு வந்த வீட்டின் பின் பக்கம் ஒழிந்து கொண்டிருந்தார். அவரின் உடல் முழுவதும் மூடையிலிருந்த உப்புக் கடிட்கள் ஒட்டிக் கொண்டிருந்தன. அவற்றை உடலை விட்டும் பிரித்தெடுக்க முடியாத வகையில் அக்கட்டிகள் தோலினுள்ளே நுழைந்து பதிந்திருந்தது.
அக்காலத்தில் ஆரையம்பதி ஆஸ்பத்திரியிலிருந்த டொக்டர் ஒருவர் வந்து பார்த்து விட்டு இக்கட்டிகளைப் பிரித்தெடுப்பதாயின் இவரை வெட்டி அரித்துதான் எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டார். மறு நாள் காலை அவர் மரணித்துவிட்டார். அன்று முதல் அவரின் நினைவாக அவ் ஆலை மரம் “உப்புக் கட்டியவர் ஆலை” என்று அழைக்கப்படலாயிற்று.
இந்நிகழ்வு நான் பிறந்த 1944ம் ஆண்டிற்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முந்தியது எனலாம். எனது கணிப்பின் படி 110 ஆண்டுகளுக்கு முந்தினது எனலாம்.
அன்று இரும்புத் தைக்கா என்றும், இன்று ஹஸனாத் என்றும் அழைக்கப்படுகின்ற பள்ளிவாயல் அதிசயங்கள் நிகழும் பள்ளிவாயலாக இருந்துள்ளது.
நான் ஐந்து வயதுச் சிறுவனாயிருந்த காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வயதுடையோர் பலர் காத்தான்குடி 6ம் குறிச்சி இரும்புத் தைக்கா பகுதியில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மூலம் நான் அறிந்து கொண்ட கதைதான் “உப்புக் கட்டியர் ஆலை” யின் கதையுமாகும்.
இரும்புத் தைக்கா பள்ளிவாயல் அக்காலத்தில் “கறாமாத்” அற்புதங்கள் வெளியாகும் பள்ளிவாயலாக இருந்ததற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. அவை செவி வழிகள் வந்த ஆதாரங்களேயன்றி ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்களல்ல. அக்கால மக்களில் படித்தவர்கள் அரிதாக இருந்த காரணத்தால் அவை ஆவணப்படுத்தப்படாமற் போயிற்று போலும்.
எனினும் நான் குறிப்பிடும் நிகழ்வுகளிற் சில இன்று என்னுடைய வயதிலுள்ள, அல்லது என் வயதைவிட அதிக வயதுடைய 6ம் குறிச்சி இரும்புத் தைக்காப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் அறிந்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.
நான் சிறுவனாயிருந்த காலப்பகுதியில் சுமார் 1946 – 47 களில் இரும்புத் தைக்காவில் எவரும் பகலாயினும், இரவாயினும் தனிமையாகத் தொழ முடியாது. அவ்வாறு தொழுகையை இடையில் விட்டு விட்டு வெளியேறியதற்கும் ஆதாரம் உண்டு.
சுமார் 1950 -51ம் ஆண்டுகளில் எனக்கு நடந்த நிகழ்வொன்றை அல்லாஹ்வை சாட்சியாக்கி இங்கு எழுதுகின்றேன்.
எங்களின் பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயல் 1960ம் ஆண்டு எனது தகப்பனார் அவர்களால் கட்டப்பட்டது. அதற்கு முன் நானும், எனது தகப்பனார் அவர்களும் எனது தாய் வீட்டுக்குப் பக்கத்திலுள்ள மேலே விபரிக்கப்பட்ட இரும்புத் தைக்காவிலேயே தொழுது வந்தோம்.
இப்பள்ளிவாயல் பிரதான வீதி ஓரமே அப்போதும் இருந்தது. இப்போதும் உள்ளது. இப்போது பழைய பள்ளிவாயல் இல்லை. நான் கூறப் போகும் நிகழ்வு பழைய பள்ளிவாயல் இருந்த காலத்தில் நான் சுமார் பத்து வயதுள்ளவனாக இருந்த வேளை நடந்ததாகும். பழைய பள்ளிவாயலில் நுழைவதற்கு இரண்டு வழிகள் மட்டுமே இருந்தது. முன்பக்கம் இருந்த வழி பாதணிகளுடன் வருவோருக்கும், “ஹவ்ழ்” பக்கம் இருந்த வழியால் பாதணி இல்லாமல் வருவோருக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன. சுமார் 69ம் ஆண்டிலும், அதற்கு முன்னுள்ள காலங்களிலும் பாதணிகள் இன்றி நடமாடுபவர்களே அதிகமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பக்க வழிக்கருகில் கறுத்த கொழும்பான் மா மரமொன்று நின்றது. அது அக்கால கட்டத்தில் என் தந்தையின் தந்தை அலியார் ஆலிம் என்பவரால் நடப்பட்டது. அந்த மரமும் பார்க்க அழகானதுதான். பழமும் சாப்பிட ருசியானதுதான். குடை அமைப்பில் அது தோற்றும். மரத்தில் மாங்காய் இருக்கும் போதே வசதியுள்ளவர்கள் பழத்துக்கு முன் கூட்டியே பதிவு செய்துவிடுவார்கள். அந்த மரத்தின் கீழாலேயே பள்ளிவாயலுக்குப் பின் பக்கமுள்ள குர்ஆன் பாடசாலைக்கு மாணவர்கள் செல்வது வழக்கம்.
ஒரு நாள் வேலை காரணமாக உரிய நேரத்தில் என்னால் அஸ்ர் தொழுகையை நிறைவேற்ற முடியாமற் போனதால் சுமார் ஐந்து மணியளவில் பள்ளிவாயலுக்குள் முன் கதவால் நுழைந்து நிமிர்ந்தேன். உயரமான, அழகிய தோற்றமுள்ள, கரண்டைவரை ஜுப்பா அணிந்த, தலைப்பாகை கட்டிய, அடர்ந்த தாடியுள்ள ஒருவர் நின்றிருந்தார். அவரைக் கண்டதும் என் மேனி சிலிர்த்தது. கையிலுள்ள முடிகள் தானாக எழுந்து நின்றன. அந்த மனிதர் என்னைப் பார்த்து மாமரமிருந்த பக்கம் தனது கை விரலை நீட்டி அதோ அந்தப் பிள்ளையிடமுள்ள குர்ஆனை வாங்கித் தாரும் என்றார்.
நான் மா மரமிருந்த பக்கம் திரும்பிப் பார்த்த போது குர்ஆன் மத்ரஸா கலைந்து மாணவர்கள் குர்ஆனுடன் அவ்வழியால் வெளியேறிக் கொண்டிருந்தனர். ஒரு பையனிடம் குர்ஆனை எடுத்து அவரிடம் கொடுப்பதற்காக நான் திரும்பிய போது அவர் மறைந்து விட்டார். பள்ளியினுள் சென்றிருக்காலாம் என்று எண்ணி அங்கு சென்று பார்த்தேன் அங்கும் அவரைக் காணவில்லை.
அப்போதுதான் எனக்கு பயமேற்பட்டது. அதுவரை நான் பயப்படவில்லை. அஸ்ர் தொழச் சென்ற நான் தொழாமலேயே வீடு திரும்பிவிட்டேன்.
அன்றிரவு என் தந்தை அவர்களிடம் நடந்த நிகழ்வைக் கூறி யார் அவர் என்று கேட்டேன். சற்று நேரம் மௌனியாயிருந்த தந்தை என்ன சொன்னார்கள் என்பது என் நினைவில் இல்லை. நீண்ட கால நிகழ்வாதலால் மறந்துவிட்டேன்.
அவர் எனது தந்தையும், உனது மூத்தவாப்பாவுமான, இங்கு அடக்கம் பெற்றுள்ள அலியார் ஆலிமாயிருக்கலாம் என்று சொன்னார்களா? அல்லது பல்லாண்டுகளுக்கு முன் ஓர் அறபீ இங்கு அடக்கம் பெற்றதாக நான் அறிந்திருக்கிறேன். அவராக இருக்கலாம் என்று சொன்னார்களா? என்பது என் நினைவில் இல்லை.
எவ்வாறு சொல்லியிருந்தாலும் அவர் யாரோ ஒரு மகான் என்பதில் ஐயமில்லை. இதன் மூலம் இரும்புத் தைக்காவில் யாரோ ஒரு மகான் மறைந்து வாழ்கிறார்கள் என்பது உறுதியான விடயமாகும்.
இரும்புத் தைக்காவின் அருகேயுள்ள கிழக்கை நோக்கிச் செல்லும் பாதை அக்காலத்தில் மணல் ஒழுங்கையாக இருந்தது. அதில் “அண்ணாவி அப்பா” என்று ஒருவர் வாழ்ந்து வந்தார். இவரை நான் சிறு வயதில் நேரில் பார்த்திருக்கிறேன். கறுப்பு நிறம். மிக உயரமானவர். தாடியுள்ளவர்.
எனது அப்பா – தந்தையின் தந்தையான அலியார் ஆலிம் என்பவர் (இவர் நாகூரிலிருந்து வந்த மீரான் ஸாஹிப் ஆலிம் என்பவரின் மகன். இவர் துருக்கியிலிருந்து இந்தியாவுக்கு வந்த “அல்லாஹ் பக்ஷ்” என்பவரின் மகன்) மேலே நான் கூறிய அண்ணாவி அப்பாவின் கனவில் தோன்றி இரும்புத் தைக்கா பள்ளிவாயலின் பின் பக்கமாக – கிணற்றுக்கு அருகில் நான் அடக்கம் பெற்றுள்ளேன். இதோ பார் என்று அவருக்கு தனது “கப்ர்” இருந்த இடத்தைச் சுட்டிக் காட்டி இவ்விடம் பாதுகாப்பில்லாதிருப்பதால் இதன் மீது ஆடு, நாய் போன்றவை மிதித்துச் செல்கின்றன. நீங்கள் அவை நுழையாமல் ஓர் எல்லை போடவேண்டுமென்று சொல்லியுள்ளார்கள்.
கனவு கண்ட அன்றுக் காலை அண்ணாவி அப்பா பாலமுனை சென்று பனைமட்டைகள் கொண்டு வந்து எல்லை போட்டு வைத்தார். சில வருடங்கள் அவ் எல்லை இருந்தது. பின்னர் “லங்கா ஹார்ட்வெயார்” உரிமையாளர் மர்ஹூம் இஸ்மாயீல் ஹாஜி அவர்கள் இரும்புத் தைக்காவின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பின் அப்பள்ளிவாயலை உடைத்து புதிய பள்ளிவாயல் கட்டுவதற்காக பொறியியலாளரிடம் அதற்கான படத்தை எடுத்த போது தற்போதுள்ள “ஹவ்ழ்” அத்திவாரம் அப்பா அவர்களின் கப்றுக்கு மேலால் வருவதைக் கண்ட மர்ஹூம் இஸ்மாயீல் ஹாஜியார் அவர்கள் என் தந்தை உயிரோடிருந்த காலம் அவர்களை நேரடியாகக் கண்டு விபரத்தைக் கூறி நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட போது, “என் தந்தை தற்போது அங்கு இல்லை. பள்ளிவாயல் கட்டுவதையறிந்து அவர்கள் வேறு இடத்திற்கு மாறிவிட்டார்கள்” என்று சொன்னார்களாம்.
இத்தகவலை என்னிடம் சொன்னவர் மர்ஹூம் இஸ்மாயீல் ஹாஜியார் அவர்கள்தான். அல்லாஹ் அவருக்கு “றஹ்மத்” செய்வானாக! அவர் எந்த ஒரு கட்டத்திலும் எனக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்கோ, என்னை “முர்தத்” என்று சொன்னதற்கோ எந்த ஓர் ஆதாரமும் எனக்கு கிடைக்கவில்லை. மறுமையிலும் அவர் என்னுடன் இருப்பார். இன்ஷா அல்லாஹ்!
குறிப்பு: நான் இப்பதிவில் குறிப்பிட்ட விடயங்கள் என்னுடைய வயதிலுள்ள ஆறாம் குறிச்சி மக்களுக்குத் தெரியும். அவர்கள் உயிருடன் இருந்தால் கேட்கலாம்.
பரம் பொருளாம் மெய்ப்பொருளின்
தூது வந்தது
மனிதா புரியுதா?
யாரும் இதய சுத்தி பெற்று விட்டால்
எல்லாம் புரியுமே
அமலன் சொன்னது இதில் அர்த்தமுள்ளது.
அல்லாஹ்வின் பள்ளிவாயலை நிர்வகிப்பவர்களுக்கு எத் தன்மைகள் இருக்க வேண்டுமென்பது பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் விபரமாக கூறியுள்ளான்.
“குப்ரின்” மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும், இந்த முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை அவர்களுடைய (நற்)கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்துவிட்டன – அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள்.
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஸகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் – இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.
(ஸூறதுத் தவ்பா – 17, 18)
அல்லாஹ் கூறிய நிபந்தனைகள்:
நிபந்தனை ஒன்று: அவன் அல்லாஹ்வைக் கொண்டு “ஈமான்” விசுவாசம் கொண்டவனாக இருத்தல் வேண்டும்.
“முஃமின்” விசுவாசியாக இருத்தல் வேண்டும்.
நிபந்தனை இரண்டு: இறுதி நாளைக் கொண்டு “ஈமான்” விசுவாசம் கொண்டவனாக இருத்தல் வேண்டும்.
நிபந்தனை மூன்று: ஐங்காலம் தொழுபவனாக இருத்தல் வேண்டும்.
நிபந்தனை நான்கு: “ஸகாத்” கொடுப்பவனாக இருத்தல் வேண்டும்.
நிபந்தனை ஐந்து: அல்லாஹ்வை மட்டும் அஞ்சுபவனாக இருத்தல் வேண்டும்.
பள்ளிவாயல் நிர்வாகியில் இவ் ஐந்து நிபந்தனைகளும் ஒரே நேரத்தில் இருத்தல் வேண்டும்.
பள்ளிவாயல் நிர்வாகிக்குரிய ஐந்து நிபந்தனைகளில் முதல் நிபந்தனை அவன் அல்லாஹ்வைக் கொண்டு “ஈமான்” விசுவாசம் கொண்ட “முஃமின்” விசுவாசியாக இருக்க வேண்டுமென்று அல்லாஹ் கூறியுள்ளான்.
அல்லாஹ்வைக் கொண்டு விசுவாசம் கொள்வதில் இரண்டு வகையுண்டு. ஒன்று அவன் வேறு என்றும், அவன் படைத்த சிருட்டி வேறு என்றும் நம்புதல். மற்றது சிருட்டி என்பது அவன் தானானதேயன்றி அவனுக்கு வேறானதல்ல என்றும், சிருட்டி என்பது அவனின் “தஜல்லீ” வெளிப்பாடு என்றும் நம்புதல்.
இவ்விரு வகை நம்பிக்கையில் முந்தின நம்பிக்கை போலி நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கை பற்றி ஆழமாக ஆய்வு செய்தால் இதில் “குப்ர்” , “ஷிர்க்” என்று சொல்லப்படுகின்ற இணைவைத்தல் மறைந்திருப்பது தெளிவாகும்.
இந்த வகை நம்பிக்கையுடையோருக்கே يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا آمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ விசுவாசிகளே! அல்லாஹ்வைக் கொண்டும், அவனின் திருத்தூதரைக் கொண்டும் விசுவாசம் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் கூறியுள்ளான்.
அல்லாஹ் இவ்வசனத்தின் மூலம் விசுவாசம் கொண்டவர்களை அழைத்து மீண்டும் விசுவாசம் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளான். விசுவாசம் கொள்ளாதவர்களையே விசுவாசம் கொள்ளுமாறு சொல்ல வேண்டும். இதுவே நியதி. மாறாக விசுவாசம் கொண்டவர்களை மீண்டும் விசுவாசம் கொள்ளுமாறு சொல்வது “தஹ்ஸீலுல் ஹாஸில்” تحصيل الحاصل நடத்தி முடிந்த ஒன்றை மீண்டும் நடத்துமாறு சொல்வது போன்ற அர்த்தமற்ற ஒன்றாகும். அர்த்தமற்ற எதையும் அல்லாஹ் செய்வதுமில்லை. சொல்வதுமில்லை.
எனவே, “ஈமான்” விசுவாசம் கொண்டவர்களை அழைத்து மீண்டும் விசுவாசம் கொள்ளுமாறு சொல்வதன் மூலம் அவர்கள் முதலில் விசுவாசம் கொண்டது பிழை என்பதினாலாகும். பிழையான விசுவாசம்தான் படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்ற விசுவாசமாகும். (ஹக்கு வேறு கல்கு வேறு என்ற விசுவாசமாகும்)
இந்த விசுவாசம் பிழையானதாயிருப்பதால் பிழையான விசுவாசம் கொண்டுள்ள ஒருவர் எதார்த்தத்தில் விசுவாசி அல்ல.
ஆகையால் பள்ளிவாயல் நிர்வாகி விசுவாசியாக இருக்க வேண்டுமென்பது பிழையான இந்த விசுவாசமுள்ளவரை எடுத்துக் கொள்ளாது. எனவே, பள்ளிவாயல் நிர்வாகியாக இருப்பவர் ஸூபிஸமும், தரீகா ஞானமும் கூறுகின்ற விசுவாசியாக இருக்க வேண்டுமென்பது தெளிவாகிறது. அதாவது சிருட்டி என்பது அல்லாஹ் தானானதேயன்றி அவனுக்கு வேறானதல்ல என்றும், சிருட்டி என்பது அல்லாஹ்வின் “தஜல்லீ” வெளிப்பாடு என்றும் நம்பியவன்தான் பள்ளிவாயல் நிர்வாகியாக இருக்க வேண்டுமென்பது உறுதியாகிவிட்டது.
பள்ளிவாயல் நிர்வாகிக்கு அல்லாஹ் கூறியுள்ள இந்த நிபந்தனையுள்ள ஒருவனை வலை விரித்து தேடிக் கண்டுபிடிப்பது கூட கஷ்டமானதாக, அல்லது அசாத்தியமானதாக இருந்தால் இந்த இடத்திலிருந்து ஒரு படியேனும் இறங்கி அவனுக்குரிய நிபந்தனையை தளர்த்த வேண்டும். தளர்த்துவதென்றால் அந்த நிபந்தனையை முழுமையாக விட்டுவிடாமல் அவன் குறைந்தபட்சம் அல்லாஹ்வுக்கு “வாஜிப்” கடமையான இருபது “ஸிபாத்” தன்மைகளையும், அவனுக்கு “முஸ்தஹீல்” ஆன, அவனில் இருக்க முடியாத இருபது “ஸிபாத்” தன்மைகளையும், அவனுக்கு “ஜாயிஸ்” ஆன, அவனில் இருப்பதற்கு ஆகுமான ஒரு “ஸிபத்” தன்மையையும் அந்த நிர்வாகி அறிந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தல் அவசியம்.
இவ்வாறு முடிவு செய்தால் மட்டும்தான் குறித்த நிபந்தனையுள்ள ஒருவனைத் தேடியாவது எடுக்க முடியும். ஆயினும் இதுவும் கடினமானதே.
இக்காலத்தில் பள்ளிவாயல் நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்படுவோர் அல்லாஹ் கூறிய நிபந்தனைகளை கருத்திற் கொண்டு தெரிவு செய்யப்படாமல் பணம், பட்டம், பதவி என்பவற்றை கருத்திற் கொண்டே தெரிவு செய்யப்படுகிறார்கள். இது முற்றிலும் திருக்குர்ஆனுக்கு முரணானதாகும்.
சுருக்கமென்னவெனில் பள்ளிவாயல் நிர்வாகியாகத் தெரிவு செய்யப்படுபவர் உண்மையான விசுவாசியாக இருக்க வேண்டுமேயன்றி போலியான விசுவாசியாக இருத்தல் கூடாது. ஸூபிஸமும், தரீகாவும் கூறுகின்ற நிபந்தனையுள்ள ஒரு விசுவாசி தெரிவு செய்யப்பட வேண்டும். அத்தகைய ஒருவர் கிடைக்காத போது அல்லாஹ்வின் 41 “ஸிபாத்” தன்மைகளையும் அறிந்த ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும். இதற்கு மாற்றம் செய்வது திருக்குர்ஆனுக்கு மாற்றம் செய்வதாகிவிடும்.
அல்லாஹ் சிருட்டி தானானவனா அல்லது வேறானவனா என்ற விபரமறியாமல் பொதுவாக அல்லாஹ் ஒருவன் உள்ளான் என்று மட்டும் அறிவது “ஈமான்” விசுவாசமாகாது. ஸூபிஸமும், தரீகாவும் கூறும் விசுவாசமே சரியான ஈமானும், விசுவாசமுமாகும். பொதுவாக அல்லாஹ் ஒருவன் உள்ளான் என்று மட்டும் நம்புதல், விசுவாசம் கொள்ளுதல் சரியானதென்று ஒருவன் வாதிட்டால் அவன் அப்புஹாமி, அருணாசலம், பெர்ணந்து போன்ற பிற மதத்தவர்களையும் விசுவாசி என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் இறைவன் ஒருவன் உள்ளான் என்று பொதுவாக நம்பியவர்களேயாவர். அவர்கள் இறைவனை மறுக்கும் நாத்திகர்கள் அல்ல.
மேற்கண்ட மூவரும் இறைவனை நிராகரிக்கும் “முல்ஹித்”கள் அல்ல. நாத்திகர்கள் அல்ல. அவர்களும் “முஃமின்” ஆத்திகர்களேயாவர். அவர்கள் செய்கின்ற தவறு விக்கிரகங்களையும், சிலைகளையும் வணங்குவதேயாகும். இதை இஸ்லாம் சரிகாணவில்லை.
இத்துடன் பள்ளிவாயல் நிர்வாகிக்கு அல்லாஹ் கூறியுள்ள ஐந்து நிபந்தனைகளில் ஒன்று நிறைவுற்றது.
நிபந்தனை இரண்டு: பள்ளிவாயல் நிர்வாகிக்குள்ள இரண்டாவது நிபந்தனை அவன் இறுதி நாளைக் கொண்டு “ஈமான்” விசுவாசம் கொண்டவனாயிருத்தல்.
இன்று வாழும் முஸ்லிம்களில் அநேகர் இந்த நம்பிக்கையுள்ளவர்களேயாவர். இந் நம்பிக்கையிலும் சற்று விளக்கத்துடன் கூடிய நம்பிக்கை இருத்தல் வேண்டும்.
நிபந்தனை மூன்று: ஐந்து நேரம் தொழக்கூடியவனாயிருத்தல். பள்ளிவாயல் நிர்வாகி தொழுபவனாக இருந்தால் போதும். தவிர்க்க முடியாத சில நேரங்களில் தொழுகை தவறினாற் கூட அதைக் “கழா” செய்வதுடன் ஏனைய தொழுகைகளில் பேணுதல் உள்ளவனாக இருப்பதவசியம்.
வெள்ளிக்கிழமை மட்டும், விஷேட தினங்களில் மட்டும் தொழுபவனாக இருத்தல் கூடாது.
நிபந்தனை நான்கு: “ஸகாத்” கொடுப்பவனாக இருத்தல் வேண்டும். இது பணக்காரனாக இருக்கும் நிர்வாகிக்கு மட்டுமுரிய நிபந்தனையாகும். இவர்கூட வருடாந்தம் ஸகாத் கொடுப்பவனாக இருக்க வேண்டுமேயன்றி வாழ்நாளில் ஒரு தரம் மட்டும் கொடுத்தால் போதுமென்ற கொள்கையுள்ளவராக இருப்பது கூடாது.
நிபந்தனை ஐந்து: அல்லாஹ்வை மட்டும் அஞ்சுபவனாக – பயப்படக் கூடியவனாக இருத்தல் வேண்டும். இதன் சுருக்கம் என்னவெனில் பதவியுள்ளவர்களுக்கும், பணமுள்ளவர்களுக்கும் ஒரு நீதியும், அவை இல்லாதவர்களுக்கு இன்னொரு நீதியும் சொல்லக் கூடியவனாக இருத்தல் கூடாது.
ஒரே நேரத்தில் இவ் ஐந்து நிபந்தனைகளும் உள்ள ஒருவர் அல்லாஹ்வின் பள்ளிவாயல் நிர்வாகியாயிருப்பதற்கு பொருத்தமானவர்தான்.
பள்ளிவாயல் நிர்வாகிகளாயிருப்பதற்கு மேற்கண்ட ஐந்து நிபந்தனைகளும் உள்ளவர்கள் உலமாஉகள் – மார்க்கம் கற்றவர்களேயாவர். எந்த ஒரு பள்ளி நிர்வாகமாயினும் அதன் உறுப்பினர்களில் அதிகமானோர் உலமாஉகளாயிருப்பதே எல்லா வகையிலும் சிறந்ததாகும்.
இன்று உலமாஉகள் புறம் தள்ளப்படுகிறார்கள். ஈமானும், இஸ்லாமும் தெரியாத பணம் படைத்தவர்களும், பதவியுள்ளவர்களும், கடும்போக்குவாதிகளுமே தெரிவு செய்யப்படுகிறார்கள். இது திருக்குர்ஆனுக்கும், நபீ வழிக்கும் முற்றிலும் முரணானதாகும்.
கலப்பு நிர்வாகம் கடைசி வரை சரிவராது. ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை வாதிகளும், அதற்கு எதிரான கொள்கைவாதிகளும் கலந்திருக்கின்ற நிர்வாகத்தால் பிரச்சினைகளும், சிக்கல்களும் உருவாகுமேயன்றி தீர்க்கமான எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாமற் போய்விடும். இழுபறியிலேயே காலம் கடந்து செல்லும். உருப்படியான எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற முடியாமற் போய்விடும். கயிறு இழுக்கும் போட்டி பள்ளிவாயல் நிர்வாகத்தில் இருப்பது கூடாது.
கலப்பு நிர்வாகத்தால் பிரச்சினைகள் உருவாகி அடிதடி, கைகலப்புகள் ஏற்படுவதால் எந்த ஊராயினும் அங்கு ஸுன்னீகளுக்கென்று தனியான பள்ளிவாயலும், மற்றவர்களுக்கென்று தனியான பள்ளிவாயலும் இருக்க வேண்டும். அல்லது கலப்பு நிர்வாகத்திலுள்ள மாற்றுக் கொள்கையுடையோர் ஸுன்னீகளின் தீர்மானங்களை எதிர்த்து குழப்பங்களை ஏற்படுத்தாமல் ஸுன்னீகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறுதான் கலப்பு ஜம்இய்யதுல் உலமா சபையின் நிலையுமாகும்.
பள்ளிவாயல் “இமாம்” தொழுகை மற்றும் நிகழ்வுகள் நடத்துபவர் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுள்ளவராகவும், “அஷ்அரிய்யா” கொள்கையுள்ளவராகவும் இருத்தல் அவசியமாகும்.