தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
عَنْ أُبَيٍّ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَعَزَّى بِعَزَاءِ الْجَاهِلِيَّةِ فَأَعِضُّوْهُ بِهَنِ أَبِيهِ وَلَا تُكَنُّوا»
யாராவது ஜாஹிலிய்யா காலத்தவர்கள் தமது பரம்பரையைக் கூறி பெருமை பேசியதுபோல் பேசினால் அவனின் தந்தையின் “அதை” கடிக்குமாறு அவனுக்குச் சொல்லவும் (ஜாடையாக அன்றி தெளிவாக) என்று நபீ பெருமகனார் அருளினார்கள்.
ஆதாரம்: ஸுனனுல் குப்றா
ஆசிரியர்: நஸயீ
“ஜாஹிலிய்யா” காலம் என்பது நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கும், நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கும் இடைப்பட்ட காலத்தைக் குறிக்கும். இக்காலம் சுமார் 600 வருடங்கள் என்று சொல்லப்படுகின்றது. “அல் அய்யாமுல் ஜாஹிலிய்யா” என்றால் அறிவு, மனித பண்பாடு, மற்றும் இரக்கம், நீதி, நேர்மை இல்லாத காலம் என்று சொல்ல முடியும். அந்தக் காலம் நபீ எவரும் இல்லாத காலமாகும்.
அக்காலம் வழிகாட்டிகள் எவரும் இல்லாதிருந்ததால் மக்கள் அனைவரும் மனம் போன போக்கில் மனச் சாட்சி எதுவுமின்றி வாழ்ந்து வந்தனர். தமது பெண்களைத் தாமே கழுத்தை நசுக்கியும், வெட்டியும், அறுத்தும், அடித்தும் கொலை செய்பவர்களாகவும், அதில் இன்பம் காண்பவர்களாகவும், அதை நாகரீகமாகவும் கருதி வாழ்ந்து வந்தனர்.
சண்டையும், அடிதடியும், ஏச்சு பேச்சுகளும் அவர்களிடம் மலிந்து காணப்பட்டன. கண்டதையெல்லாம் கடவுளெனக் கருதி வணங்கி வந்தனர். இருவருக்கிடையில் வாக்கு வாதம், சண்டை ஏற்படுமாயின் ஒவ்வொருவரும் தமது பரம்பரைப் பெருமை பேசுபவர்களாயிருந்தனர். குலப் பெருமை பேசுவதும், குடும்பப் பெருமை பேசுவதும் அவர்களிடம் சர்வ சாதாரண ஒன்றாக காணப்பட்டது. இழி தொழில் செய்வோரை மற்றவர்கள் இழித்துரைத்துப் பேசும் வழக்கம் அவர்களிடம் தலை தூக்கி நின்றது. ஒருவர் மற்றவரை ஏசும் போது நான் யார் தெரியுமா? என் தந்தை யார் தெரியுமா? நான் எக்குலத்தைச் சேர்ந்தவன் தெரியுமா? நான் எத்தனை உயிர்களைக் கொன்று குவித்தவன் என்று தெரியுமா? என்று குலப் பெருமையும், குடும்பப் பெருமையும் பேசுபவர்களாக இருந்தனர். அவர்களில் ஒவ்வொருவரும் தமது முன்னவர்கள் செய்த பஞ்சமா பாதகங்களையும், வீரத்தையும் மெச்சியும், பாராட்டியும் சண்டை செய்பவர்களாகவும் இருந்தனர். அவர்கள் பயன்படுத்திய இழி சொற்கள் எண்ணற்கரியன. இவ்வாறு அன்று வாழ்ந்த “அய்யாமுல் ஜாஹிலிய்யா” மௌட்டீக கால மக்கள் வாழ்ந்து வந்தனர்.
குலப் பெருமை பேசுதல், குடும்பப் பெருமை பேசுதல் போன்ற வழக்கம் எம்பெருமானார் ஏந்தல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “நுபுவ்வத்” எனும் ஒளிச்சுடரைத் தாங்கி வந்த காலம் வரை இருந்தே வந்தது. அந்த ஒளி வந்ததும் உலகமே ஒளிர்ந்தது. ஒருவர் மற்றவருடன் எவ்வாறு பேச வேண்டும், பெற்றோர் தாம் பெற்ற பிள்ளைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும், அவர்களோடு எவ்வாறு பேச வேண்டும், எவ்வாறு மல சலம் கழிக்க வேண்டும், அவ்வேளை எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும், எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும், எவ்வாறு உண்ண வேண்டும், உண்ணும் போது என்ன ஓத வேண்டும், எவ்வாறு உறங்க வேண்டும், உறங்கும் போது என்ன ஓத வேண்டும், பெண்களுக்கு மாதத்தீட்டு வந்தால் அவர்கள் எவ்வாறு குடும்ப வாழ்க்கை நடத்த வேண்டும், கணவன் அவர்களோடு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், ஆண்கள் எவ்வாறு மல சலம் கழிக்க வேண்டும், பெண்கள் எவ்வாறு மல சலம் கழிக்க வேண்டும், வீட்டில் எவ்வாறு ஒழுக்கம் பேண வேண்டும், சபையில் எவ்வாறு ஒழுக்கம் பேண வேண்டும், சிறுவர்கள் பெரியவர்களுடனும், பெரியவர்கள் சிறுவர்களுடனும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அப முடி எவ்வாறு களைய வேண்டும், உடலில், உடையில் மல சலம் பட்டால் எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும், ஆண் எவ்வாறு உறங்க வேண்டும், பெண் எவ்வாறு உறங்க வேண்டும் என்பன போன்ற முழு விபரங்களையும், இன்னுமிவை போன்ற ஒழுக்கங்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்றுக் கொடுத்து மனிதர்களை மனிதர்களாக வாழ வைத்த ஒரேயொரு வழிகாட்டி பெருமானார்தான் என்றால் அது மிகையாகாது.
إِنَّمَا بُعِثْتُ لِأُتَمِّمَ مَكَارِمَ الْأَخْلَاقِ
நற் பண்புகளையும், நல்லொழுக்கங்களையும் நிறைவு செய்வதற்காக நான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளேன் என்று நபீகட்கரசர் அஹ்மத் எங்கள் கோமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
“அய்யாமுல் ஜாஹிலிய்யா” மௌட்டீகக் காலத்தில் இருந்த பழக்க வழக்கங்களில் சில கிராமப்புறங்களில் வாழும் முஸ்லிம்களிடமும், படிப்பறிவில்லாத முஸ்லிம்களிற் சிலரிடம் இப்போதும் இருந்து வருவது மனதுக்கு கவலையானதேயாகும்.
தீக்குணங்கள், தீய பழக்க வழக்கங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு அதற்கான பரிகாரங்களை பெருமானாரவர்கள் விளக்கமாகவும், விரிவாகவும் சொல்லியிருந்தும் கூட, அவற்றை அறிஞர்கள் ஜும்ஆப் பிரசங்கத்திலும், மற்றும் இஸ்லாமிய பிரச்சாரக் கூட்டங்களிலும் பேசியிருந்தும் கூட அவற்றைச் செவியேற்றும் கூட தம்மைத் திருத்திக் கொள்ளாத முஸ்லிம்களை எண்ணி கவலைப்பட்டு கண் கலங்க வேண்டியுள்ளது.
எனவே, முஸ்லிம்களாயினும், பிற மதத்தவர்களாயினும் மற்றவர்கள் மீது பொறாமை கொள்வதையும், புறம் பேசுவதையும், கோள் சொல்வதையும், இருவருக்கிடையில் மூட்டி வைத்து இன்பம் காண்பதையும், பொதுச் சொத்தில் கையாடல் செய்வதையும், மற்றும் தீச் செயல்களையும், தீக்குணங்களையும் விட்டொழித்து இறைவனைச் சந்திப்பதற்குத் தம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
மேலே எழுதிய ஹதீதில் “ஜாஹிலிய்யா” காலத்தவர்கள் போல் குலப் பெருமை, குடும்பப் பெருமை பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நபீ குல வழி வந்த “ஸாதாத்”மார்கள் மௌலானாமார், அஹ்லுல் பைத் என்போர் தம்மை அவ்வாறு சொல்லிக் கொள்வதில் எந்த தவறுமில்லை. எனினும் நபீ குல வழி வராதவர்கள் தம்மை பொய்யாக அவ்வாறு சொல்லி மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதும், புகழ் தேடுவதும் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிவையாகும். யாராவது அவ்வாறு செய்தால் அவர்கள் “ஜாஹிலிய்யா” காலத்தில் குலப் பெருமை பேசிய கூட்டத்தில் சேர்ந்தவர்கள் போன்றவர்களேயாவர்.
ஹதீதில் வந்துள்ள சொற்களுக்கான விளக்கம்:
تَعَزَّى – اِنْتَسَبَ، تَعَزَّى تَعَزِّيًا – اِعْتَزَى لِفُلَانٍ أَوْ إِلَى فُلَانٍ اِنْتَسَبَ إِلَيْهِ، اِعْتَزَى بِعَزَاءِ الْجَاهِلِيَّةِ – اِنْتَسَبَ إِلَيْهِ وَانْتَمَى صِدْقًا أَوْ كَذِبًا، عَضَّ – أَمْسَكَهُ بِأَسْنَانِهِ، أَعَضَّ – الشَّيْئَ جَعَلَهُ يَعَضَّهُ، اَلْهَنُ – كِنَايَةٌ عَمَّا يُسْتَقْبَحُ ذِكْرُهُ مِنْ أَعْضَاءِ الْإِنْسَانِ،
ஜாஹிலிய்யா காலத்தவர்கள் குலப் பெருமை, குடும்பப் பெருமை பேசியது போல் உங்களில் யாராவது பேசினால் அவனைத் தண்டியுங்கள் என்றோ, அவனைத் தடுத்து நிறுத்துங்கள் என்றோ நபீ பெருமான் கூறவில்லை. மாறாக அவனின் தந்தையின் ஆண்குறியை கடிக்குமாறு அவனுக்குச் சொல்லுங்கள் என்றார்கள்.
இவ்வாறு நபீ பெருமான் கூறியதிலிருந்து குலப் பெருமை, குடும்பப் பெருமை பேசுவது மிகவும் கீழ்த்தரமான செயலென்று விளங்குகின்றது.