தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அன்புக்குரிய, என்னை ஒரு முஸ்லிம் என்று ஏற்றுக் கொண்ட இறை பக்தர்களே! ஸூபிஸ சமூகத்தின் உறுப்பினர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்
“ஜும்ஆ” தொழுகை வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் தொழ வேண்டிய ஆண்களுக்கு மட்டும் கடமையான தொழுகையாகும். இக்காலத்தில் இத் தொழுகைக்காக மக்கள் ஒன்று கூடுவதும், உரிய நேரத்திற்கு வருகை தருவதும் மிகக் குறைவாகவே உள்ளன.
நோயாளர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் “ஜும்ஆ” தொழுகைக்கு சமூகம் தருவது அவர்களின் கடமையாகும். மற்றவர் ஜும்ஆத் தொழுகைக்கு வராவிட்டால் அவர்கள் தண்டனைக்குரியவர்களாவர். ஜும்ஆத் தொழுகையின் இரண்டாம் “றக்அத்”தின் – “றுகூஉ”வில் இமாமுடன் சேர்ந்து கொள்ளாதவர்களும் தண்டனைக்குரியவர்களே! ஏனெனில் குறித்த “றுகூஉ”வில் சேர்ந்து கொள்ளாதவர் ஜும்ஆ தொழுகைக்காக “நிய்யத்” செய்து “தக்பீர்” கட்டியிருந்தாலும் அவர் இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “மத்ஹப்” இன் படி நான்கு “றக்அத்” ளுஹ்ர் தொழுகைதான் தொழ வேண்டும். “ஜும்ஆ” தொழுகை என்று எண்ணி இமாம் ”றுகூஉ”வில் இருந்து எழுந்த பின் தொழுகையில் சேர்ந்த ஒருவர் ஸலாம் கொடுத்த பின் ஒரு “றக்அத்” தொழுதால் அது “ஜும்ஆ” தொழுகையாகவும் மாட்டாது. “ளுஹ்ர்” தொழுகையாகவும் மாட்டாது. அவர் நான்கு “றக்அத்” ளுஹ்ர் தொழுகை தொழ வேண்டும். “அஸ்ர்” தொழுகைக்கு முன்னர் அவர் தொழுதால் அது “களா” ஆகமாட்டாது.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اغْتَسَلَ يَوْمَ الجُمُعَةِ غُسْلَ الجَنَابَةِ ثُمَّ رَاحَ، فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ، فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ، فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ، فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الخَامِسَةِ، فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً، فَإِذَا خَرَجَ الإِمَامُ حَضَرَتِ المَلاَئِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ»
“ஜும்ஆ” தொழுகைக்காக பள்ளிவாயலுக்கு வருகின்ற ஒருவர் “ஜனாபத்” உடைய குளிப்பை போன்று குளித்துவிட்டு முதலாம் நேரம் வந்தவராயின் அவர் ஓர் ஒட்டகம் அறுத்து “ஸதகா” தர்மம் செய்த நன்மையையும், இரண்டாம் நேரம் வருவாராயின் ஒரு மாடு அறுத்துக் கொடுத்த நன்மையும், மூன்றாம் நேரம் வருவாராயின் ஓர் ஆடு அறுத்துக் கொடுத்த நன்மையும், நாலாம் நேரம் வருவாராயின் ஒரு கோழி அறுத்துக் கொடுத்த நன்மையும், ஐந்தாம் நேரம் வருவாராயின் ஒரு கோழி முட்டை கொடுத்த நன்மையும் பெறுவார். அதைவிடப் பிந்தி வருபவருக்கு ஒன்றுமே இல்லை என்று அண்ணலெம்பிரான் அஹ்மதெங்கள் கோமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளிச் சென்றார்கள்.
ஆதாரம்: புகாரீ
ஐந்து நேரம் என்பதை எவ்வாறு கணிப்பதென்ற விடயத்தில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
இமாம்களிற் சிலர் வெள்ளிக்கிழமை இரவு மக்ரிப் தொழுகைக்கும், ஜும்ஆவுக்காக பாங்கு சொல்வதற்கும் இடைப்பட்ட நேரம் என்று கூறுவர். இக்கூற்றின் படி எத்தனை மணி நேரங்களுக்கு முன் வர வேண்டுமென்பதை வாசகர்கள் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். இன்னும் சிலர் வெள்ளிக்கிழமை “பஜ்ர்” உதயமான நேரத்திலிருந்து இமாம் “மின்பர்” இல் ஏறும் வரை என்று சொல்கிறார்கள். இந்த இரண்டாம் கருத்தின்படி செயல்படுவது பொருத்தமானதென்று நான் கருதுகிறேன். இதன்படி சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன் பள்ளிவாயலுக்கு வர வேண்டும். இரண்டாம் கருத்தின்படியும் செயல்படாதவர் பாக்கியமற்றவர் என்பது கருத்து.
இன்றுள்ள நமது சகோதரர்களிற் பலர் இமாம் ஜும்ஆப் பிரசங்கத்தை முடித்து தொழுகைக்காக மிமன்பரில் இருந்து இறங்கி استووا للصلاة “இஸ்தவூ லிஸ்ஸலாஹ்” “ஸப்”புகளில் நெருங்கியும், நேராகவும் நின்று கொள்ளுங்கள் என்று சொல்லும் போதே வருகின்றனர். இன்னும் சிலர் இரண்டாம் “றக்அத்”தில் தொழுகையில் சேர்கின்றனர். இன்னும் சிலர் இமாம் “அத்தஹிய்யாத்” ஓதிக் கொண்டிருக்கும் போது வருகிறார்கள். இவ்வாறு ஜும்ஆத் தொழுகைக்கு வருபவர்களில் பலர் பொடு போக்குள்ளவர்களாக உள்ளார்கள். இவர்களில் ஒரு சிலர்தான் உரிய நேரத்தோடு வருகின்றார்கள். அதிகமானோர் உரிய காரணமின்றி சோம்பல், பொடுபோக்கு காரணமாக பிந்துகிறார்கள். இவ்வழக்கத்தை தொடர்ந்து வைத்துக் கொண்டிருப்பது இவர்களுக்கே எதிராக அமைந்து விடும் என்பதை இவர்கள் விளங்கி இனியாவது நேர காலத்துடன் வருவதற்கு முயற்சிக்க வேண்டும்.
ஜும்ஆவில் உறக்கம்:
இமாம் மின்பரில் பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது அதை கேட்டுக் கொண்டிருப்பவர்களிற் சிலர் உறங்குகிறார்கள். சிலர் ஒருத்தூக்கம் தூங்குகின்றார்கள். இன்னும் சிலர் குறட்டையடித்து உறங்குகின்றார்கள். அதன் பிறகு “வுழூ” செய்யாமல் ஜும்ஆ தொழுகின்றார்கள். இவ்வாறு பொது சனம் செய்வது வியப்பில்லை. ஆயினும் ஆலிம் ஸாஹிபும், ஆசிரியர் ஸாஹிபும் (சேர்) குறட்டையடித்துவிட்டு “வுழூ” இல்லாமல் தொழுவது அதிசயமானதேயாகும்.
ஜும்ஆ நேரம் யாருக்காவது தூக்கம் மிகைத்தால் அவர் வெளியே சென்று முகம் கழுவிக் கொள்வது நல்லது.
வெள்ளிக்கிழமை குளித்தல்:
வெள்ளிக்கிழமை குளித்தல் விஷேடமான “ஸுன்னத்” ஆகும். வெள்ளிக்கிழமை இரவு மனைவியுடன் உடலுறவு கொள்வது விஷேட “ஸுன்னத்” ஆகும். இதனால் அன்றிரவு உடலுறவு கொண்டவர் முதலில் முழுக்கை இறுக்கும் “நிய்யத்” வைத்து குளித்தல் வேண்டும். அதை தொடர்ந்து “ஜும்ஆ”வின் “ஸுன்னத்”தான குளிப்பை குளிக்கிறேன் என்று “நிய்யத்” வைத்துக் குளிக்க வேண்டும்.
குளிக்கும் போது “மண சோப்” சவர்க்காரம் பாவிப்பது ஆடம்பரமென்று வயோதிபர்களில் சிலர் நினைப்பதுண்டு. அவர்களின் நினைப்பு தவறானது. அவ்வாறாயின் “அத்தர்” பாவிப்பதும் பிழையாகிவிடும். ஜும்ஆவுக்கு வரும்போது அழகிய உடுப்புக்கள் உடுத்து வருதல் “ஸுன்னத்” ஆன வணக்கமாகும். அத்தர் பாவிப்பதும் விரும்பத்தக்கது. அதோடு பள்ளிவாயலில் “ஹத்யா”வை எதிர் பார்த்து இருக்கும் ஏழைகளுக்கு பணம், அல்லது உணவு அல்லது அவருக்கு பயன் தரக் கூடிய சாப்பாட்டு பார்ஸல் கொடுப்பது ஸுன்னத் ஆன வணக்கமாகும்.
ஜும்ஆவுக்கு பள்ளிவாயலுக்கு வரும்போதும், தொழுகையின் பின் வீடு திரும்பும் போதும் நீளமான வழியை பயன்படுத்துவது சிறந்தது.
இமாம் முதலாம் “குத்பா” ஓதி முடிந்தபின் இரண்டாம் “குத்பா” ஓதுவார். இடைப்பட்ட அந்தச் சிறிது நேரம் “துஆ” ஏற்றுக் கொள்ளப்படும் நேரமாகும்.
“ஜும்ஆ” தொழுது முடிந்த பின் அவசரமாக வெளியேறிவிடாமல் குறைந்தது 10 “ஸலவாத்” சொன்ன பின் செல்வது விரும்பத்தக்கது.
வெள்ளிக்கிழமைகளில் மீன் சாப்பிடாமல் இறைச்சி வகை எதுவாயினும் கறி சமைத்து சாப்பிடுதல் நல்லது. வெள்ளிக்கிழமை سيد الأيام يوم الجمعة நாட்களின் தலைவன் என்றும், سيد الإدام اللحم கறிகளின் தலைவன் இறைச்சி என்றும் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளியுள்ளதால் அவ்வாறு செய்தல் விஷேடமாகும்.
ஒருவன் வெள்ளிக்கிழமை தனது பெற்றோர் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட இடம் சென்று அவர்களை “ஸியாறத்” தரிசிப்பதும் “ஸுன்னத்” ஆகும்.