தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
توقيرُ صاحبِ البِدْعَةِ إِعانةٌ لِهَدْمِ الإِسْلام
“பித்அத்” காரனை கண்ணியப்படுத்துதல் “இஸ்லாம்” என்ற மாளிகையை தகர்ப்பதற்கு உதவி செய்தலாகும்.
عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ , قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ وَقَّرَ صَاحِبَ بِدْعَةٍ فَقَدْ أَعَانَ عَلَى هَدْمِ الْإِسْلَامِ “
“பித்அத்” காரனை கண்ணியப்படுத்தினவன் இஸ்லாம் மார்க்கத்தை தகர்ப்பதற்கு நிச்சயமாக உதவி செய்து விட்டான் என்று நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம்: ஷுஅபுல் ஈமான்
அறிவிப்பு: இப்றாஹீம் இப்னு மைஸறா
நான் மேலே எழுதியுள்ள நபீ மொழியின் படி “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கைக்கு முரணான எல்லாக் கொள்கையும் “பித்அத்” என்றே சொல்லப்படும்.
அந்தக் கொள்கைக்கு முரணான கொள்கையுள்ளோர் தமது அமைப்புக்கு என்ன பெயரை வைத்துக் கொண்டாலும் சரியே. எந்த அமைப்பாயினும் அதன் பெயர் பற்றி நாம் சிந்திக்கத் தேவையில்லை. அதன் கொள்கை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும்.
ஒருவன் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கைக்கு முரணானவன் என்பதை அவனிடம் கேட்டுத்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. மார்க்கத்தோடு தொடர்புள்ள விடயங்களில் அவன் எவ்வாறு நடக்கிறான் என்பதை ஆதாரமாகக் கொண்டே அவன் யாரென்று அறிந்து கொள்ளலாம்.
மிக இலகுவான வழிகளை நான் சொல்லித் தருகிறேன். அவை பின்வருமாறு. தாடி வளர்த்திருப்பான். மீசை வழித்திருப்பான். “ஸியாறத்” செய்ய மாட்டான். அதாவது வலீமார்களைத் தரிசிக்கமாட்டான். கத்ம், பாதிஹா, மவ்லித், றாதிப் ஒன்றுமே ஓதமாட்டான். “தாயத்” இஸ்ம் கட்டமாட்டான். தண்ணீர் ஓதிக் குடிக்கமாட்டான். “ஸியாறத்” – கப்றுக்கு முன்னால் கை கட்டி நிற்கமாட்டான், வலீமாரைக் கொண்டு “வஸீலா” தேடமாட்டான். கந்தூரியில் கலந்து கொள்ளமாட்டான். கூட்டு “துஆ” ஓதமாட்டான். தறாவீஹ் 20 “றக்அத்” தொழமாட்டான். இவையும், இன்னுமிவை போன்றவையுமாகும். அடுக்கிக் கொண்டு போனால் விரிந்து விடும். மேற்கண்ட அடையாளங்கள் மிக இலகுவான அடையாளங்களாகும். அல்லாஹ்வுடன் தொடர்பான கொள்கை விடயத்திலும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. அவைதான் நான் மேலே கூறியதைவிட பயங்கரமான அடையாளங்களாகும். நான் அவற்றைத் தொடவில்லை.
மேற்கண்ட கொள்கையுடையோர் அனைவரும் “பித்அத்” காரர்களேயாவர்.
இவர்களுக்கு “ஸலாம்” சொல்லவோ, பதில் சொல்லவோ கூடாது. இவர்களை மார்க்க நடவடிக்கைகளில் பின்பற்றவும் கூடாது. இவர்களைக் கண்ணியப்படுத்தவும் கூடாது. இவர்களைத் திருமணஞ் செய்யவும் கூடாது.
ஆயினும் இவர்களுடன் பேசலாம். வியாபாரம் செய்யலாம். பயணிக்கலாம். இவர்களிடம் உதவி கேட்கலாம். இவர்களுடன் பங்காளனாக தொழில் செய்யலாம். இவர்களிடம் கூலிக்கு வேலை வாங்கலாம். விருந்துக்கு அழைத்தால் போகலாம். நட்பு வைக்கலாம். நோயுற்றால் பார்க்கச் செல்லலாம். இவையாவும் “காபிர்”களுடனும் செய்யலாம்.
வஹ்ஹாபிகளிலும் அதன் கொள்கை விளக்கமுள்ளவர்களான வஹ்ஹாபிஸம் படித்த உலமாஉகளும், கொள்கை விளக்கமுள்ளவர்களுமே கடுமையானவர்கள். இவர்களுடன் அப்பாவிகளிலும் சிலர் உள்ளனர்.
ஆயினும் ஒரு முஸ்லிமை “காபிர்” என்று சொன்னவன் நபீ பெருமானின் பின்வரும் கூற்றின்படி “காபிர்”தான். இதில் சந்தேகத்திற்கோ, இரண்டாம் கருத்துக்கோ இடமில்லை.
عَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ‘ إِذَا قَالَ الرَّجُلُ لِأَخِيهِ: يَا كَافِرُ، فَقَدْ بَاءَ بِهِ أَحَدُهُمَا، إِنْ كَانَ الَّذِي قِيلَ لَهُ كَافِرٌ فَهُوَ كَافِرٌ وَإِلَّا رَجَعَ إِلَى مَنْ قَالَ ‘
ஒரு மனிதன் தனது சகோதரனை நோக்கி “யா காபிர்” காபிரே என்று சொன்னால் அவ்விருவரில் ஒருவர் காபிராகிவிட்டார். சொல்லப்பட்டவன் உண்மையில் அவ்வாறிருந்தால் அவன் காபிர். அவன் அவ்வாறில்லாமல் சொல்லியிருந்தால் சொல்லியவன் காபிர் ஆகிவிடுவான் என நபி அலைஹிஸ் ஸலாது வஸ்ஸாலாம் அவர்கள் அருளினார்கள். (ஆதாரம் அபூ தாவூத்)
என்னையும், எனது கருத்துக்களைச் சரிகண்டவர்களையும் “காபிர்”கள் – “முர்தத்”துகள் என்று சொன்னவர்கள், நம்பினவர்கள் அனைவரும் “காபிர்”கள்தான். அவர்களுக்குப்பின்னால் நின்று தொழுவது முற்றிலும் “ஹறாம்”தான்.
இங்கு இன்னொரு விடயத்தைக் கவனத்திற் கொள்ள வேண்டும். அதாவது என்னையும், என்னுடனுள்ளவர்களையும் ஒருவன் “காபிர்” என்று சொல்கிறான். அவனின் குடும்பத்தவர்களில் எவரும் அவ்வாறு சொல்லவில்லையானால் அவர்களை நாம் காபிர்கள் என்று சொல்லக் கூடாது. நமதூரவர்களில் ஒருவர் நமக்கு “ஸலாம்” சொல்கிறார். அவர் நம்மைக் காபிர் என்று சொன்னவரா? என்பது நமக்குத் தெரியாது போனால் அவருக்கு பதில் கூறலாம். எவன் நம்மைக் காபிர் என்று சொன்னானோ அவன்தான் காபிரேயன்றி அதனால் அவனின் குடும்பத்தை “காபிர்”கள் என்று முடிவு செய்தல் கூடாது.
வஹ்ஹாபிஸக் கொள்கைவாதிகளிற் கூட நம்மைக் காபிர்கள் என்று சொல்லாதவர்கள் பலர் உள்ளனர். இதேபோல் நமது பள்ளிவாயலில் தொழ வராத, நிகழ்வுகளில் கலந்து கொள்ளாதவர்களும் பலர் உள்ளனர். ஆகையால் ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்த நாம் நமது பள்ளிவாயலோடு தொடர்பில்லாத அனைவரையும் நமது எதிரிகளாகவோ, நம்மைக் காபிர்கள் என்று சொல்பவர்களாகவோ முடிவு செய்தல் கூடாது.
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ دَجَّالُونَ كَذَّابُونَ، يَأْتُونَكُمْ مِنَ الْأَحَادِيثِ بِمَا لَمْ تَسْمَعُوا أَنْتُمْ، وَلَا آبَاؤُكُمْ، فَإِيَّاكُمْ وَإِيَّاهُمْ، لَا يُضِلُّونَكُمْ، وَلَا يَفْتِنُونَكُمْ»
இறுதிக் கால கட்டத்தில் பொய்யர்களும், குழப்பவாதிகளும் வந்து நீங்களும், உங்களின் தந்தைமார்களும் கேட்டிராத பல செய்திகள் சொல்வார்கள். அவர்களையும், உங்களையும் நான் எச்சரிக்கிறேன். அவர்கள் உங்களை வழி கெடுக்கவும் வேண்டாம். குழப்பத்தில் ஆக்கிவிடவும் வேண்டாம் என்று நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
(ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்)
“பித்அத்” என்ற சொல்லுக்கு நூதன அனுஷ்டானம் என்று தமிழில் சொல்வர். தமிழில் என்ன பெயர் சொன்னாலும் அது என்ன? எதற்கு “பித்அத்” என்று சொல்லப்படும் என்பதைப் புரிந்து கொண்டால் போதும்.
ஒரு வகையில் அல்லாஹ்வும் “பித்அத்” காரனே! அவனுக்கு “பித்அத்” காரனென்று ஒரு பெயரும் உண்டு. ஒரு காரியத்தை முன்மாதிரியின்றிச் செய்தல் “பித்அத்” எனப்படும். “பதீஉன்” என்பது அவனின் பெயர்களில் ஒன்று.
வஹ்ஹாபிகள் தமது ஆரம்ப உரையிலேயே இந்த நபீ மொழியைக் கூறுவார்கள். அல்ஹம்துலில்லாஹ். அது நல்ல விடயம்தான். அதை நான் குறை கூறமாட்டேன்.
ஆயினும் அவர்கள் அதை தொடங்குவது “பித்அத்” தொடர்பாக பேசி எல்லா “பித்அத்”துகளும் “ழலாலத்” வழிகேடென்று கூறி மக்களை வழி கெடுக்கும் நோக்கத்தில் அவ்வாறு “ஹம்து” சொல்லி ஆரம்பித்தார்களாயின் அவர்களின் “நிய்யத்” அடிப்படை எண்ணமே கெட்டதாகிவிடும். இதற்கு நான் ஆதரவானவன் அல்ல.
வஹ்ஹாபிகள் இவ்வாறு மட்டும்தான் தமது பிரசங்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும், இந்த முறையில் ஆரம்பம் செய்வது மட்டும்தான் சரியானதென்றும் நினைக்கிறார்கள் போலும். இவ்வாறு அவர்கள் நினைத்தால் அது தவறாகும். ஏனெனில் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் தங்களின் 23 வருட பிரச்சார காலத்தில் இவ்வாறு மட்டும்தான் தங்களின் பிரசங்கத்தை ஆரம்பித்தார்கள் என்பது கருத்தல்ல. அவ்வாறிருந்தால் நாம் ஆட்சேபிக்க மாட்டோம். ஆனால் இவ்வாறு மட்டும் பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் ஆரம்பிக்கவில்லை. பலவிதமாக ஆரம்பித்துள்ளார்கள்.
வஹ்ஹாபிகள் இவ்வாறு மட்டும் ஆரம்பம் செய்வது அதில் “பித்அத்” என்ற சொல் இரண்டு இடத்தில் வருவதால் “பித்அத்” என்பது பொதுவாக “ழலாலத்” வழிகேடுதான் என்பதை நிறுவுவதற்காகவே அவ்வாறு மட்டும் ஆரம்பிக்கின்றார்கள் என்று நான் கருதுகிறேன். அவர்கள் ஒரு சமயம் வேறு விதமாகவும் ஆரம்பித்தால் எமக்கு ஆட்சேபிக்க இடமில்லாமற் போய் விடும்.
வஹ்ஹாபீ உலமாஉகள் தவிர மற்ற எல்லா உலமாஉகளும் “பித்அத்” ஐந்து வகையென்றும், அவற்றில் ஒன்று மட்டுமே “ஹறாம்” ஆன “பித்அத்” என்றும் மற்ற நான்கும் ஆகுமான “பித்அத்” என்றும் தெளிவாகச் சொல்கின்றார்கள். நபீ தோழர்களில் மிகப் பிரசித்தி பெற்ற தோழர்களே “பித்அத்” செய்துள்ளார்கள் என்பதற்கு ஸஹீஹான, தெளிவான ஹதீதுகள் ஆதாரங்களாக உள்ளன. இது வஹ்ஹாபீகளுக்கும் நன்றாகத் தெரியும். ஆயினுமவர்கள் இதை மறுத்துக் கொண்டிருப்பது ஏனோ தெரியவில்லை.
இதுகாலவரை பிரச்சாரம் செய்து வந்ததற்கு மாறாக இப்போது சொன்னால் பொது மக்களால் பொல்லடிகளும், சொல்லடிகளும் தம்மைத் தாக்கிவிடுமென்ற பயமாக இருக்கலாமென்று நான் நினைக்கிறேன். அவர்கள் அதற்காக ஒரே படியில் நிற்காமல் விட்டுக் கொடுத்து சத்தியத்தை நிலை நாட்ட முன்வந்தார்களாயின் என்னிடமுள்ள ஜீம் – நூனுடன் தொடர்பான படைகளை அவர்களுக்கு பாதுகாப்பாக வழங்க நான் ஆயித்தமாயுள்ளேன். அவர்கள் நெருப்பிலிருந்து நீருக்கு வந்தார்களாயின் அவர்களுக்கு முதலில் மாலையிட்டும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்பவன் நானாகவே இருப்பேன். ஆயினும் அவர்கள் மனமுரண்டில்லாதவர்களாயிருந்தால் அவர்களுக்கு மக்களிடம் மட்டுமன்றி அல்லாஹ்விடமும், றஸூல் அவர்களிடமும் நல்ல வரவேற்பு உண்டு.
இவ்வாறுதான் எனக்கும், எனது கருத்தை சரி கண்டவர்களுக்கும் “முர்தத்” பத்வா வழங்கிவிட்டு ஆப்பிழுத்த குரங்குகளாகிக் கிடக்கின்ற உலமா சபையுமாகும். இவர்களுக்கு தாம் வழங்கிய பத்வா பிழை என்பதும், எங்களைக் கொலை செய்ய வேண்டுமென்று தமது பத்வாவில் எழுதியது பேத்தனத்தினும் கேடு கெட்ட பேத்தனம் என்பதும், ஒரு தரமாவது என்னிடம் எதுவும் கேட்காமல் பத்வா வழங்கியதும், அறபு பத்வாவில் எனது பெயர் இல்லாதிருக்கும் நிலையில் தமிழ் மொழி பெயர்ப்பில் மட்டும் எனது பெயரை எழுதியதும் முட்டாள் தனமென்று இப்போது நன்றாகத் தெரியும். இவர்களும் வஹ்ஹாபிகள் போல் கல்லடிக்கும், சொல்லடிக்கும் பயந்தே மௌனிகளாக உள்ளார்கள். இவர்களும், அவர்கள் போல் எதையும் யோசிக்காமல் நெருப்பிலிருந்து நீருக்கு வந்தார்களாயின் துன்யாவின் தண்டனையின்றி இவர்கள் நிம்மதியாக வாழ முடியும். இன்றேல் இவ்வுலகிலும் சீனாதான். மறுவுலகிலும் சீனாதான்.
இவர்கள் நான் மேலே எழுதியது போல் இரு கைப்பிடியை ஒரு கைப்பிடியாக மாற்றவில்லையானால் இந்த விவகாரம் ஐ. நா வரை சென்று அகில உலக மக்களே “வஹ்ததுல் வுஜூத்” என்று ஒரு தத்துவம் உண்டு என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். அது எமக்கு “நூறுன் அலா நூர்” போல் ஆகிவிடும். அல்ஹம்துலில்லாஹ்.
ஒரு காலத்தில் எமது பள்ளிவாயலில் ஒலி பெருக்கி பாவிப்பதற்குத் தடை ஏற்படுத்தினார்கள் உலமாக்கள். ஏன்? பொது மக்கள் என் பக்கம் வந்துவிடுவார்கள் என்பதற்காக? ஆனால் இன்று “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் கொடி கட்டி உலகமெங்கும் பறப்பது உலமாக்களுக்கு தெரியாத ஒன்றல்ல. அவர்களால் என்னதான் செய்ய முடியும்? கைபேசியும், “லெப்டெப்”பும் எமக்காக கண்டுபிடித்தாற் போலிருக்கிறது. அல்லாஹ் பெரியவன். கட்டுப்பாடில்லாத எடையற்ற பெரியவன். அவனை நிறுக்கத் தராசில்லை. அதனால்தான் அவனுக்கு எடையில்லை. அவனுக்கு இடமுமில்லை, தலமுமில்லை. ஏன்? இடமாயும், தலமாயும் அவனே இருக்கும் நிலையில் அவனுக்கு இடமும், தலமும் எங்கேயிருக்கப் போகின்றது? “அல்லாஹு அக்பர்” என்ற வசனம் ஐவேளைத் தொழுகையில் 94 தரம் மொழியப்படுகின்றது. ஆயினுமதன் சரியான பொருள் தெரியாமலேயே உலமாக்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். “அல்லாஹு அக்பர்” என்ற வசனத்திற்கு “அல்லாஹு அஃளம்” அல்லாஹ் வலுப்பமானவன் என்று பொருள் சொல்வதேன்? எவரும் விளங்கவில்லை. “அக்பர்” என்ற சொல்லின் விளக்கம் “அஃளம்” என்பதாக இருந்தால் அந்தச் சொல் பாவனைக்கு வராமல் விட்டதேன்?
உலமாஉகளே! விவாதம் வேண்டாம்! ஸூபிஸத்தில் விவாதமில்லை. ஆயினும் கலந்துரையாடல் உண்டு. வருவீர்களா? நீங்கள் இந்த இல்மை என்னிடம் படிக்கத்தான் வேண்டும். நான் உங்களிடம் வேறு அறிவை படிக்கத்தான் வேண்டும். إنّما العلم بالتعلم கல்வி கற்பது கொண்டே கிடைக்கும். கற்றுக் கொள்ளாமல் கிடைக்கும் அறிவும் உண்டு. ஆயினும் அந்த இடத்திற்கு நீங்கள் மட்டுமல்ல நானும் இன்னும் செல்லவில்லை. வாருங்கள். நான் உங்களுடன் உரையாடுவதற்காக அல்ல. இஸ்லாமிய வரலாற்றில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை உணர்த்தும் திருக்குர்ஆன் வசனங்களையும், அதேபோல் ஹதீதுகளையும், மற்றும் இறைஞானிகள், இமாம்கள், மஷாயிகுமார்கள் எழுதிய நூல்களையும் உங்கள் முன் வைக்கிறேன். நீங்களே அவற்றை வாசித்து கலந்துரையாடாமல் சபையில் விளக்கம் சொன்னால் போதும். அவ்வாறு ஒரு ஞானமில்லை என்றால் அவ்வாறு உண்டு என்று எழுதப்பட்ட நூல்களையும், திருக்குர்ஆனையும், அத்தகைய ஹதீதுகள் எழுதப்பட்ட நூல்களையும் நானும் நீங்களும் இணைந்து இலங்கை முழுவதும் சுற்றி ஒன்று திரட்டி “கோல்பேஸ்” மைதானத்தில் எரிப்போம். அழிப்போம். இதற்கு நீங்கள் தயார் என்றால் நானும் தயார்தான். அல்ஹம்துலில்லாஹ். கிதாபுகளை வாசித்து விளக்கம் சொல்லும் முழுப் பொறுப்பையும் ரிஸ்வி சாஹிபு எடுக்க வேண்டும்? இன்றேல் ஒரு காலம் வரும் ஜெனீவாவில் சந்திப்போம்.
இரண்டாவதாக நான் எழுதிய ஹதீதின் விளக்கம் பின்வருமாறு.
“இறுதிக் கால கட்டத்தில்” என்ற பெருமானாரின் அமுத மொழி இக்காலத்தையே குறிக்கிறதென்று நான் கருதுகிறேன். ஏனெனில் இந்த நபீ மொழியில் சொல்லப்பட்ட விடயம் இக்காலத்தில் நடந்து கொண்டிருப்பதை நான் நிதர்சனமாக காணுகிறேன்.
அது எவ்வாறெனில் நீங்களும், உங்களின் தந்தைமார்களும் கேட்டிராத செய்திகளை உங்களிடம் சொல்வார்கள். நீங்களும், அவர்களும் கேட்காத செய்திகள் பல உள்ளன. அவற்றில் கந்தூரி கொடுப்பது “ஹறாம்” என்று சொல்வதும் ஒன்றாகும்.
நபீமார் பெயரிலும், வலீமார் பெயரிலும் மக்கள் தொன்று தொட்டு கந்தூரி கொடுத்து வந்ததே எமக்குத் தெரியும். அது “ஷிர்க்” என்று எவருமே சொல்லவுமில்லை. சொன்னதாக நாம் கேள்விப்படவுமில்லை.
இக்காலத்தில் தான் ஒரு கூட்டம் அது “ஷிர்க்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு சொல்பவர்கள் யாரென்று ஆய்வு செய்தால் அவர்கள் வஹ்ஹாபிகளாகவே உள்ளார்கள். இந்தக் கூட்டம் தவிர வேறு எந்த ஒரு கூட்டமும் கந்தூரி கொடுப்பதை – வலீமார் பெயரில் அன்னதானம் வழங்குவதை தடை செய்யவில்லை.
றபீஉனில் அவ்வல் மாத்தில் ஒவ்வொரு வீட்டிலும், பள்ளிவாயல்களிலும் “ஸுப்ஹான மௌலித்” ஓதும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்த வழக்கமாகும். இவ்வழக்கத்தை செய்து வந்தவர்கள் உலமாஉகளும், பள்ளிவாயல் நிர்வாகிகளுமேயாவர். அது “ஷிர்க்” என்று நாம் கேட்டிராத செய்தியை சொன்னவர்கள் வஹ்ஹாபிகள்தான் வேறு யாருமில்லை.
ஒவ்வொரு வீட்டிலும், பள்ளிவாயல்களிலும் றபீஉனில் ஆகிர் மாதத்தில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் மௌலித் ஓதி கந்தூரி கொடுக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்த வழக்கமேயாகும். எவரும் அது “ஷிர்க்” என்று சொன்னதில்லை. இன்று அவ்வழக்கம் “ஷிர்க்” என்று சொல்பவர்கள் வஹ்ஹாபிகள் மட்டும்தான்.
இவை போல் இன்னும் பல நிகழ்வுகளை “ஷிர்க்” என்றும், “ஹறாம்” என்றும் சொல்லி நிறுத்தியவர்கள் வஹ்ஹாபிகளேயன்றி வேறு யாருமில்லை.
எனவே, நபீ பெருமான் எச்சரித்த பொய்யர்களும், தஜ்ஜால்களும் வஹ்ஹாபிகளேயன்றி வேறு யாருமில்லை.
இந்த நாட்டிலும், இந்தக் காத்தான்குடியிலும் வஹ்ஹாபிஸக் கொள்கையை வளர்த்தவர்கள் உலமாஉகளும், ஊர்த்தலைவர்களுமேயன்றி வேறு யாருமே இல்லை.
வஹ்ஹாபிகளை மடியில் தூக்கி வைத்தும், அவர்களுக்கு மாலை சூடியும், அவர்களைப் பெரிய மனிதர்களாக்கியும் வந்தவர்கள் உலமாக்களும், சம்மேளனமும், ஊர்த்தலைவர்களுமேயாவர். ஊர்த்தலைவர்களும், உலமாஉகளும் அவர்களைக் கண்ணியப்படுத்தி வைத்திருந்ததினால்தான் பொது மக்களும், அவர்களைக் கண்ணியப்படுத்தினார்கள். இறுதியில் அந்த வஹ்ஹாபிகளின் தலைவர்கள் போல் அவர்களும், பொது மக்களையும், மற்ற மதத் தலைவர்களையும் கொன்று குவித்ததினால்தான் இலங்கை வாழ் முஸ்லிம்கள், குறிப்பாக காத்தான்குடி முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்று “சீல்” குத்தப்பட்டுள்ளார்கள். உலமாஉகளையும் திருத்த முடியாது, இவ்வூர் மக்களையும் திருத்த முடியாது. நடப்பவை நடக்கட்டும்.
உள்ளங்கையால் சூரியனை மறைக்க நினைப்பதும், வாயல் ஊதி மாமலையை அசைக்க நினைப்பதும் அறியாமையின் உச்ச கட்டம் என்பதை சிந்தித்துச் செயல்படுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.