தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
ஸூபிஸ சமுகத்திற்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஏப்ரல் மாதம் 14ம் திகதி (அதாவது 13ம் திகதி பின்னேரம்) புனித றமழான் பிறையை எதிர்பார்க்கிறோம்.
சிலர் பிறை காணுமுன் நோன்பு நோற்பார்கள். நமது நாட்டில் பிறை காணாது போனாலும் வெளிநாடுகளில் கண்ட பிறையை ஆதாரமாகக் கொண்டு நோன்பு நோற்பவர்கள் வஹ்ஹாபிகள் மட்டும்தான். அவர்களிலும் சிலர் தலைப்பிறை விடயத்தில் ஸுன்னீகள் போல் செயல்படுபவர்களும் உள்ளனர். அவர்களில் அநேகர் சர்வதேச பிறைக் காரர்களாவர். ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை வாதிகள் நமது நாட்டில் பிறை கண்டால் மட்டுமே நோன்பு எடுப்பார்கள். இவ்விடயத்தில் எனது கருத்து நமது நாட்டில் பிறை காண வேண்டும் என்பதே.
வயது வந்தவர்களுக்கே நோன்பு கடமையாகும். ஆணாயினும், பெண்ணாயினும் 15 வயதை அடைந்தால் நோன்பு கடமைதான். 15 வயதுக்கு முன் ஒரு பெண்ணுக்கு “ஹைழ்” தீட்டு வந்தால் அவளும், அதேபோல் 15 வயதுக்கு முன் ஒரு ஆணுக்கு “நுத்பா” இந்திரியம் வெளியானால் அவனும் வயது வந்தவர்களேயாவர். அவர்கள் மீது நோன்பு கடமை.
றமழான் தலைப்பிறை கண்டால் கண்டவர் பின்வரும் “துஆ”வை ஓதிக் கொள்வது “ஸுன்னத்” ஆகும். இச்சட்டம் ஒவ்வொரு மாத்திற்குமுள்ளதே.
اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ، رَبِّـيْ وَرَبُّكَ اللَّهُ.
தலைப்பிறை கண்டால் கண்டவர் மற்றவருடன் “முஸாபஹா” கை கொடுக்கும் வழக்கம் நமது நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகின்ற ஒரு வழக்கமாகும். இதற்கு நபீ மொழிகளில் ஆதாரம் இருப்பதாக நான் அறியவில்லை. எனினும் இவ்வழக்கம் ஆகுமான “பித்அத்” என்று சொல்ல முடியும். எந்த மாதமாயினும் தலைப்பிறை பார்ப்பதும் “ஸுன்னத்” ஆன விடயம்தான். அதேபோல் அவ்வேளை “துஆ” ஓதுவதும் “ஸுன்னத்” ஆன விடயமேதான். தலைப்பிறை கண்டவர் முதலில் ஒரு ஸாலிஹான – நல்ல மனிதரின் முகம் பார்த்து “ஸலாம்” சொல்வதும், “முஸாபஹா” இரு கைகளையும் கொடுத்து “முஸாபஹா” செய்யும் வழக்கமும் நமது நாட்டில் வழக்கத்தில் உள்ளதாகும். இவ்வாறு செய்தல் “ஸுன்னத்” இல்லாது போனாலும் இவ்வாறு செய்தல் பாவமாகவோ, “ஷிர்க்” ஆகவோ மாட்டது.
ஏதாவது ஒரு செயல் தொன்று தொட்டு ஓர் ஊர் வழக்கத்திலிருந்தால் அச் செயல் மார்க்கத்திற்கு எந்த வகையிலேனும் முரணில்லாமலுமிருந்தால் அதை விடுவதை விட செய்வதே சிறந்ததாகும். وأْمُرْ بِالْعُرْفِ உலக வழக்கத்தைக் கொண்டு ஏவுங்கள். இது அருள் மறை வசனம். நான் இப்போது எழுதுவதொன்றும் வஹ்ஹாபிகளுக்குப் பிடிக்காது. அவர்களுக்குப் பிடிக்கவில்லையானால் அதனால் நமக்கென்ன நட்டம் வரப் போகிறது? அவர்கள் யார்?
தொன்று தொட்டு வழக்கத்திலுள்ளதே “தறாவீஹ்” இருபது “றக்அத்” தொழுவதாகும். வஹ்ஹாபிகள் புதியதொரு மார்க்கத்தைக் கொண்டு வந்து இருபதை எட்டாகக் குறைத்து இதுவே இஸ்லாம் என்று கூறுகின்றனர். அவர்களின் இத்துப் போன கூற்றுக்கு “ஆமாசாமி” போடும் ஊர் தலைவர்களை எண்ணி நான் வேதனைப்படுகிறேன். இன்னும் சில வருடங்களில் அதையும் நாலாக்கி விடுவார்கள் என்று நினைக்கிறேன். அதையும் கடந்தால் தறாவீஹ் என்று ஒரு தொழுகையே இல்லை என்றும் சொல்லிவிடுவார்கள். அவர்கள் புதிய கண்டுபிடிப்பாளர்களல்லவா?
“தறாவீஹ்” இருபது “றக்அத்” என்று மட்டும்தான் என்னால் சொல்ல முடியும். எவருக்கும் அடித்து அப்பம் தீத்த என்னால் முடியாது. “நஸீப்” நற்பாக்கியமுள்ளவன் ஸுன்னீ வழி வந்து இருபது தொழட்டும். நற்பாக்கியமற்றோன் அவன் விரும்பியவாறு செய்யட்டும். எனது முரீதாயினும் என்னால் சொல்லத்தான் முடியும். அவனின் பிடரியை பள்ளிவாயலுக்கு இழுத்து வர முடியாது.
வஹ்ஹாபிஸம் பிறந்த இடமான ஸஊதி நாட்டிலுள்ள, உலகிலுள்ள பள்ளிவாயல்களில் மிகச் சிறந்த பள்ளிவாயலான மக்கா பள்ளிவாயலிலேயே இருபது “றக்அத்” தொழும்போது நமது நாட்டில் எட்டுத் தொழுவது வியப்பாக உள்ளது. வஹ்ஹாபிஸ “மஸ்த்து” எந்த அளவு சிலரின் தலை நரம்புகளைத் தாக்கியுள்ளதென்று பார்த்தீர்களா? அல்லாஹ் எம்மைக் காப்பாற்ற வேண்டும். சில வேளை மூளையின் மெயின் நரம்பு தாக்கப்பட்டால் கடற்கரைதான் கை கொடுக்கும். வஹ்ஹாபிகாள்! இருபது தொழுது பாருங்களேன். இன்பமா சொல்ல முடியாது.
ஸூபிஸ சமுகத்தைச் சேர்ந்த எவரும் வஹ்ஹாபிகளை பின்பற்றி எட்டு “றக்அத்” தொழ வேண்டாமென்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
“ஹிலால்” – هِلَالْ என்றாலும், “கமர்” قَمَرْ என்றாலும் சந்திரன் என்றுதான் பொருள். எனினும் அறபிகள் தலைப்பிறைக்கும், இரண்டாம், மூன்றாம் பிறைகளுக்கும் மட்டுமே هِلَالْ என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள். நாலாம் பிறையிலிருந்துதான் “கமர்” என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள். பூரணையன்று “பத்ர்” بَدْرْ என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள்.
“ஹிலால்” என்ற சொல்லை மூன்று பிறை வரை பயன்படுத்துவதற்கான காரணம் அறபிகள் மூன்று நாள் வரைதான் வளர்பிறையென்று சொல்வார்கள் போலும்.
பண வசதியுள்ளவர்கள் தலைப்பிறை அன்று தமது பக்கத்து வீடுகளில் ஏழைகள் இருந்தால், அல்லது தங்களின் உறவினர்களில் ஏழைகள் இருந்தால் அவர்களுக்கு அரிசி, பேரீத்தம்பழம் கொடுப்பது சிறந்த ஓர் அமலாகும். சிறிதளவேனும், இரண்டு, மூன்று பேர்களுக்கேனும் கொடுத்தால் போதும். கொடுக்கும் போது நோன்பு திறந்தபின் எனக்கும், எனது மக்களுக்கும் “துஆ” செய்யவும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
ஸூபிஸ சமுக இளைஞர்காள்!
கடந்த காலங்கள் போகட்டும். مَضَى مَا مَضَى، فات ما فات இனியாவது புனித றமழானை “ஹயாத்” ஆக்க தலைப்பிறை அன்றே “நிய்யத்” வைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து “தறாவீஹ்” தொழுங்கள். உங்களை தறாவீஹ் தொழுகையில் நான் கண்டால் என் மனம் குளிரும். குளிர்ந்தால் என் கரமும் உயரும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
கச்சவடக் காரர்கள்!
சித்திரை மாது நெருங்கி வருகிறாள். அவளைக் கட்டியணைத்து ஆலிங்கனம் செய்து பயிற்றுவிக்கப்பட்ட நீங்கள் இப்போதும் அதே வேலை நடக்கத்தான் செய்யும். செய்யுங்கள். றமழான் என்று ஓர் அழகியும் எதிர் நோக்குகிறாள். முத்தினவள் கற்பையிழந்தவள். இவளோ கற்பழியாப் பால் குடம். குடித்துப் பாருங்கள். சுவைத்துப் பாருங்கள். இவளையும் விடாதீர்கள். அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் அருள் சொரிவான்.
றமழான் தலைப்பிறை பாருங்கள் அதன் போது பின்வரும் ஓதலை ஓதுங்கள். என்னைவிட உங்களின் மனதிற்கு பிடித்தவர் முகம் பார்த்து ஸலாமுரையுங்கள். கட்டியணைத்து ஆலிங்கனம் செய்து கொள்ளுங்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ العَقَدِيُّ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ سُفْيَانَ الْمَدِينِيُّ قَالَ: حَدَّثَنِي بِلاَلُ بْنِ يَحْيَى بْنِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللهِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَأَى الهِلاَلَ قَالَ: اللَّهُمَّ أَهْلِلْهُ عَلَيْنَا بِاليُمْنِ وَالإِيمَانِ وَالسَّلاَمَةِ وَالإِسْلاَمِ، رَبِّي وَرَبُّكَ اللَّهُ.
தல்ஹா இப்னு உபைதில்லாஹ் அறிவிக்கின்றார்கள். நபீ பெருமான் இலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தலைப்பிறை கண்டால் பின்வருமாறு ஓதுவார்கள்.
اللَّهُمَّ أَهْلِلْهُ عَلَيْنَا بِاليُمْنِ وَالإِيمَانِ وَالسَّلاَمَةِ وَالإِسْلاَمِ، رَبِّي وَرَبُّكَ اللَّهُ.
ஆதாரம்: தாரமீ, துர்முதீ
அறிவிப்பு: தல்ஹா இப்னு உபைதில்லாஹ்
பொருள்: யா அல்லாஹ்! இப்பிறையை எங்களுக்கு அருள் உள்ளதாயும், “ஈமான்” உள்ளதாயும், ஈடேற்றமுள்ளதாயும், இஸ்லாம் உள்ளதாயும் ஆக்கி வைப்பாயாக! பிறையே! எனது றப்பும், உனது றப்பும் அல்லாஹ்தான்.
பிறை பார்க்கும்போதே ஓத வேண்டும். ஓதலை மனனம் செய்யுங்கள் அல்லது எழுதி பார்த்து ஓதுங்கள்.
காதிமுல் கவ்மி,
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
01.04.2021