தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، قَالَ: سَمِعْتُ مُعَاوِيَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ الْمُؤَذِّنِينَ أَطْوَلُ أَعْنَاقًا يَوْمَ الْقِيَامَةِ»
பள்ளிவாயல்களில் ஐங்காலத் தொழுகைக்காக மக்களைப் அழைப்பவர்கள் “முஅத்தின்” مُؤَذِّنُوْنْ என்றழைக்கப்படுவர். இவர்கள் மறுமை நாளில் கழுத்து நீளமானவர்களாக இருப்பார்கள் என்று ஏந்தல் எம்பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
முஅத்தின் சம்பளம் பெற்றுக் கொண்டு வேலை செய்தாலும், சம்பளம் பெறாமல் வேலை செய்தாலும் அவர் கண்ணியப்படுத்தப்பட வேண்டியவர்களில் ஒருவர்தான் என்பதை எவரும் மறந்து விடக் கூடாது. குறிப்பாக பள்ளிவாயல் நிர்வாகத் தலைவரும், ஏனைய நிர்வாக உறுப்பினர்களும் மறந்துவிடக் கூடாது. அவர்களை கீழ்த்தரமாக நடத்தக் கூடாது. பதவித் திமிர் கொண்டும், பணத்திமிர் கொண்டும் அவருடன் நடக்கக் கூடாது.
ஒரு மனிதனின் உடலுக்கு ஏற்றவாறே கழுத்து இருக்க வேண்டும். மனிதர்களுக்கும், ஒட்டகச் சிவிங்கி தவிர்ந்த ஏனைய உயிரினங்களுக்கும் இருப்பது போல் இருந்தால்தான் அது பார்வைக்கு அழகாக இருக்கும்.
ஒட்டகச் சிவிங்கியின் உடலமைப்புக்கு கழுத்து நீளமாயிருப்பதே அதற்கு அழகு. அதில் அழகு பார்த்து ரசிக்கும் அல்லாஹ்வுக்கு இது தெரியும்.
ஆனால் சாதாரண மனிதனுக்கு கழுத்து மட்டும் நீளமாயிருந்தால் அது அழகாக இருக்காது.
இந்த நபீ மொழி அதி நாகரீகமான பாணியில், அதாவது علم البلاغة، علم الفصاحة மொழி நாகரீகக் கலையில் إطلاق الكل وإرادة الجزء என்றும், إطلاق الجزء وإرادة الكل என்றும் ஒரு முறை உண்டு. அதாவது ஒரு பொருளின் அல்லது ஒருவனின் உடலின் ஒரு பகுதியை மட்டும் கூறி அவனை அல்லது அந்தப் பொருளை முழுமையாக கருத்திற் கொள்வது போன்று. மேலே குறித்த ஹதீதின் வசனம் இரண்டாம் பகுதியைச் சேர்ந்தது. இவ்வாறு சொல்லுதல் நாகரீகமேயன்றிப் பிழையல்ல.
உதாரணமாக ரிஸ்வி என்பவன் தலைமறைவு என்பது போன்று. இதன் சுருக்கம் ரிஸ்வி என்பவன் ஆளே இல்லை என்று சொல்லாமல் தலைமறைவு என்று சொல்வது போன்று. தலை என்பது ரிஸ்வியின் உடலில் ஓர் அங்கம்தான். அதைக் கூறி அவனையே கருத்திற் கொள்வது போன்று. ரிஸ்வி தலைமறைவு என்று சொன்னால் ஆளே இல்லை என்றுதான் விளங்க வேண்டுமேயன்றி தலையை மட்டும் யாரோ கொய்து கொண்டு போய்விட்டான் என்பது கருத்தல்ல. இதுவே
إطلاق الجزء وإرادة الكل
எனப்படும். இந்த அடிப்படையிலேயே முஅத்தின் தொடர்பாக நான் எழுதிய ஹதீது அமைந்துள்ளது. இதுவும் ரிஸ்வி தலை மறைவு என்ற உதாரணத்திலுள்ள தத்துவம் போன்றதே. முஅத்தினின் கழுத்து அவனின் உடலில் ஓர் அங்கம்தான். அதைக் கூறி அவனையே முழுமையாக கருத்திற் கொள்ளுதல் என்று விளங்க வேண்டும். அவனின் கழுத்து மட்டுமன்றி அவனே நீளமானவனாயிருப்பான் என்பதே இதன் கருத்தாகும்.
மறுமையில் மஹ்ஷர் மைதானத்தில் அவன் நின்றானாயின் அனைவரும் அவனைக் கண்டு இவன் யார்? இவ்வளவு உயரமாயிருக்கின்றானே என்று வியப்படைவர். அந்த நேரமே முஅத்தினின் சிறப்பு ஜொலிக்கும்.
பள்ளிவாயலின் இமாம் என்பவர் பெருமானார் செய்த பணியைச் செய்கின்றவராவார். இமாம் என்பவர் மிகப் பொறுமைசாலியாக இருத்தல் வேண்டும். ஒரு நேரத் தொழுகைக்கு வராது போனால் போதும். டிக்கட் வெட்டப்படும். மன்னிப்பே கிடைக்காது. அவர் பட்டினி, பசியோடு சாக வேண்டியதுதான். நிர்வாகம் இவர் விடயத்தில் இரக்கம் காட்ட வேண்டும். அதற்காக இவரும் ஊசி ஓட்டையில் உலக்கையை ஓட்டிப் பார்க்க முன்வரக் கூடாது.
பெருமானார் தங்களின் வாழ்வில் ஒரு தரமேனும் பாங்கு சொன்னதில்லை. இதற்குக் காரணம் பாங்கு சொல்லுதல் கீழ்த்தரமான தொழில் என்பதற்காக அல்ல. அவர்கள் பாங்கு சொன்னால் “ஹைய அலஸ்ஸலாஹ் – ஹைய அலல் பலாஹ்” என்ற சத்தத்தைக் கேட்டவர்கள் அனைவரும் உடனே பள்ளிக்கு வருதல் அவர்களின் மீது கடமையாகிவிடும். ஆகையால் தங்களின் “உம்மத்”துகளுக்கு கஷ்டம் கொடுக்க கூடாதென்பதற்காகவே அவர்கள் பாங்கு சொல்லவில்லை.
எனவே, பள்ளிவாயல் இமாம், முஅத்தின் இருவருக்கும் நியாயமான சம்பளம் கொடுக்க நிர்வாகம் முன்வரவேண்டும். றமழான் பெருநாளன்று அவ்விருவரும் மனைவி மக்களுடன் இன்பமாக வாழச் செய்ய வேண்டும். அல்லாஹ் கண்ணியப்படுத்தியவர்களை நாமும் கண்ணியப்படுத்த வேண்டும்.