தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
பொதுவாக மனிதனுக்கு எந்த வகையிலேனும் தீமை செய்கின்ற எந்த உயிரினமாயினும் அதைக் கொல்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டு. ஆயினும் திரு மக்கா ஹறம் எல்லையிலும், அதற்கு அப்பாலும் கொல்வதற்கு ஆகுமாக்கப்பட்ட உயிரினம் ஐந்து.
அவை: اَلْحَيَّةُ – பாம்பு, اَلْغُرَابُ – காகம், اَلْفَاْرَةُ எலி, اَلْكَلْبُ الْعَقُوْرُ – கடி நாய், اَلْحِدْأَةُ – பருந்து.
பாம்பில் எல்லா வகையையும் கொல்லலாம். நாக பாம்பு – நல்ல பாம்பில் பல வகையுண்டு. அவற்றில் எல்லா வகையையும் கொல்லலாம். ஆயினும் மனிதர்கள் வதியுமிடத்திற்கு அது வந்தால் அடிக்கலாமேயன்றி அது வதியுமிடங்களுக்கு நாம் சென்று அதை தேடி அடிப்பது தேவையற்ற ஒன்றாகும். காடுகள் அது வாழுமிடம். அதைக் கொல்வதற்கென்று அங்கு சென்று கொல்வதால் பாவம் கிடைப்பதற்கு சாத்தியமுண்டு.
சாரைப் பாம்பு என்று பாம்பில் ஒரு வகையுண்டு. இது கடித்தால் விடம் – விஷம் இல்லையென்று முதியவர்கள் சொல்வர். விஷம் உண்டு. ஆயினும் அதிக விஷம் அதில் இல்லை. அது நீர்ப் பாம்பு போன்றது. அது கடித்த ஒருவர் முதுமை அடையும் போது கை கால் நடுக்கம் ஏற்படுமென்று முதியவர்கள் சொல்வர்.
நாக பாம்பு – நல்ல பாம்பை அடித்தால் அதைக் கொல்ல வேண்டும். அடி தவறி அது தப்பினால் ஆறு கடந்தேனும் அடித்தவனைக் காத்திருந்து கடிக்குமென்று முதியவர்கள் சொல்வர். இக்கூற்றை முழுமையாக மறுத்து விட முடியாது.
ஏனெனில் உயிரினங்களிற் சிலவற்றின் கண்ணில் ஒரு மனிதனின் உருவமோ, அல்லது வேறொன்றின் தோற்றமோ பதிவானால் அந்தப் பதிவு அழியாமல் பல வருடங்கள் நிலைத்திருக்குமென்று விலங்கியல் படிக்காத அனுபவ அறிவுள்ளவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
இதை நம்புவதற்கு இலங்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்வு ஆதாரமாக உண்டு. இலங்கையில் கண்டி என்று ஓர் ஊர் உண்டு. இது மலைப் பிரதேசம். இங்கு பௌத்த மதத்தினரின் “பெரஹெர” என்ற நிகழ்வு நடைபெறும். அவற்றில் பெரியது சிறியதென்று இரண்டு வகையுண்டு. “பெரஹெர” யானைகள் அலங்கரிக்கப்பட்டு பாதையில் பவனி வருவதுண்டு. அது சாலையில் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து செல்லும். மக்கள் இரு மருங்கிலும் நின்று பார்த்து மகிழ்வர்.
ஒரு வருடம் நடைபெற்ற நிகழ்வின் போது சாலையோரம் நின்றிருந்த ஒருவன் யானையின் தோல் கனமானதென்று சொல்கிறார்களே அது உண்மையா என்று அறியும் நோக்கில் தனது கையில் எரிந்து கொண்டிருந்த சிகரட்டால் அதன் பின் பக்கம் சுட்டான். யானை அக்கணமே சற்று நேரம் திரும்பிப் பார்த்து விட்டுச் சென்றது. இந்த நிகழ்விலிருந்து ஒரு வருடத்தின் பின் மீண்டும் ஒரு “பெரஹெர” வந்தது. சுடப்பட்ட யானையும் அணியில் வந்தது. முந்தின வருடம் அதற்கு சூடு வைத்த நபர் சாலையோரம் நண்பர்களுடன் ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்த வேளை அவன் கூட நினைக்காமலிருந்த அதே யானை அவனை ஒரு வருடத்தின் பின் இனங்கண்டு தும்பிக்கையால் அவனை ஒரே அடியில் நிலத்தில் அடித்து அவனின் உயிரைப் பறித்தது.
இன்னுமொரு சம்பவம் இலங்கையில் நடந்துள்ளது. யானைப் பாகன் ஒருவன் 21 வருடங்களாக ஒரு யானைக்கு உணவு கொடுத்தல், அதைக் குளத்துக்கு அழைத்துச் சென்று குளிக்க வைத்தல், மற்றும் அதன் பணிகள் அனைத்தையும் அவனே செய்து வந்துள்ளான்.
ஒரு வாகன விபத்தில் அவனின் ஒரு கை இரண்டு துண்டானது. முழுக்கையையும் இழந்த நிலையில் மருத்துவ மனையில் சில நாட்கள் தங்கியிருந்து ஒரு நாள் வீட்டுக்கு வந்தான். அவனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவனைப் பார்ப்பதற்கு அவனின் இல்லத்திற்கு வந்தனர்.
யானை வனவிலங்காயினும் ஏதோ ஒரு வகையில் வீட்டில் துக்க கரமான சம்பவமொன்று நடைபெற்றதை அறிந்து கொண்டது போலும். அவன் விபத்துக்குள்ளான நாளிலிருந்து அது சோகமாகவே இருந்தது. உண்பதையும், குடிப்பதையும் உறங்குவதையும் குறைத்துக் கொண்டது.
ஒரு நாள் கையிழந்த அவன் யானையிடம் வந்து கையைக் காட்டி முறையிட்ட போது அது கண்ணீர் விட்டு அழத் தொடங்கியது. இதைக் கண்ட வீட்டவர்களும், மற்றவர்களும் வாயில் கை வைத்து இது என்ன மிருகமா? மனிதனா? என்று வியந்து நின்றனர்.
ஒரு நாள் அவன் வழமை போல் ஒரு கையாலேயே யானையைக் கழுவிக் கொண்டிருந்தான். அவ்வழியால் தெம்பிலி வியாபாரி ஒருவன் சென்ற போது அவனிடம் ஒரு தெம்பிலி வாங்கிக் குடித்து விட்டு அதன் உள்ளே இருந்த வழுவைச் சாப்பிடுவதற்காக யானையின் நெற்றியில் அதை அடித்து இரண்டாகப் பிழந்தான். எதிர் பாராமல் வெறி கொண்ட அந்த யானை அவ்விடத்திலேயே அவனைக் காலால் மிதித்து கொன்றுவிட்டது. மிருகம் தனது இயற்கைக் குணத்தைக் காட்டிவிட்டது. கோபம் வந்தால் பாசம் பறந்து விடும்.
வனவிலங்குகளுடன் நெருங்கிப் பழகினாலும், அதோடு உயிருக்கு உயிராகப் பழகினாலும் சில சமயம் அதற்கு வெறி வந்து விட்டால் அது மிருகம் என்பதைக் காட்டியே தீரும்.
பல்லி – وَزَغَةٌ
பல்லி என்பது கடும் விஷமுள்ள உயிரினமாகும். இது வீடுகளில் மனிதர்களால் வளர்க்கும் பிராணியில்லாது போனாலும் அது வீடுகளில் தானாக வளரத் தொடங்கிவிடும். இது கடும் விஷமுள்ள பாம்பிடமிருந்தே விடத்தை எடுத்து தனது வாயில் அதைக் களஞ்சியப்படுத்திக் கொள்கிறது. தேவைக்கேற்ப பயன்படுத்துகிறது. சுவர்களில் கொழுகி வைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் படங்களுக்குப் பின்னால் அதிகமாக ஒழித்துக் கொள்ளும். உணவுகள் மூடாமல் திறக்கப்பட்டிருந்தால் அதில் தனது கைவரிசையை காட்டும் சுபாவமுள்ளது.
பல்லி سَاْم اَبْرَصْ – وَزَغَةٌ என்ற இரண்டு பெயர்களால் அழைக்கப்படும். (வஸஙத் – ஸாம் அப்றஸ்)
أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، أَخْبَرَهُ أَنَّ أُمَّ شَرِيكٍ، أَخْبَرَتْهُ أَنَّهَا اسْتَأْمَرَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي قَتْلِ الْوِزْغَانِ «فَأَمَرَ بِقَتْلِهَا»
ஸெய்யிததுனா ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம் பல்லியை கொல்வது பற்றிக் கேட்டபோது ஆம் கொல்லலாம் என்று கூறினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம்,
அறிவிப்பு உம்மு ஷரீக் றழியல்லாஹு அன்ஹா.
وفى الصحيحين أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَمَرَ بِقَتْلِ الْوَزَغِ وَسَمَّاهُ فُوَيْسِقًا» وَقَالَ: كَانَ يَنْفُخُ عَلَى إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلاَمُ
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பல்லிகளைக் கொல்லுமாறு கூறிவிட்டு அதற்கு கெட்டது என்றும் பெயர் வைத்தார்கள்.
ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்.
وفى الحديث الصحيح رِواية أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَتَلَ وَزَغَةً فِي أَوَّلِ ضَرْبَةٍ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً، وَمَنْ قَتَلَهَا فِي الضَّرْبَةِ الثَّانِيَةِ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً، لِدُونِ الْأُولَى، وَإِنْ قَتَلَهَا فِي الضَّرْبَةِ الثَّالِثَةِ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً، لِدُونِ الثَّانِيَةِ»
நபீ அலைஹிஸ்ஸலாம் பின்வருமாறு அருளினார்கள். ஒருவன் பல்லியை ஒரே அடியில் அடித்துக் கொன்றால் அவனுக்கு இன்னின்ன நன்மை உண்டு என்றும், இரண்டாம் அடியில் அடித்தால் அவனுக்கு முந்தினவனின் நன்மையை விடக் குறைந்த இன்னின்ன நன்மை கிடைக்குமென்றும், மூன்றாம் அடியில் அடித்துக் கொண்றால் அவனுக்கு இரண்டாம் அடியில் கொன்றவனுக்கு கிடைத்த நன்மையை விட குறைந்த நன்மை கிடைக்குமென்றும் கூறினார்கள்.
وأيضا أنّ مَنْ قَتَلَ وَزَغًا فِي أَوَّلِ ضَرْبَةٍ، كُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ وَمَنْ قَتَلَهَا فِي الضَّرْبَةِ الثَّانِيَةِ، فَلَهُ دُونَ ذَلِكَ وَإِنْ قَتَلَهَا فِي الضَّرْبَةِ الثَّالِثَةِ، فَلَهُ دُونَ ذَلِكَ،
இன்னும், முதலடியில் கொன்றவனுக்கு நூறு நன்மை என்றும், இரண்டாம் அடியில் கொன்றவனுக்கு அதைவிடக் குறைந்த நன்மை என்றும், மூன்றாம் அடியில் கொன்றவனுக்கு அதைவிடக் குறைவான நன்மையும் கிடைக்குமென்றும் சொன்னார்கள்.
தப்லீக் சகோதரர்களுக்கு ஓர் ஆலோசனை!
நீங்கள் “தஃவா” பணிக்காக ஊர் ஊராகச் சென்று பணி செய்து வருகிறீர்கள். இதற்காக மனைவி மக்களையும், உற்றார் உறவினர்களையும் பிரிகின்றீர்கள். பணச் செலவும் செய்கிறீர்கள். நன்மையை அள்ளிக் கொள்ள அரும்பாடு படுகிறீர்கள். உங்களின் நோக்கம் நன்மை செய்வதாயிருந்தால் அதை வேறு வழியிலும் செய்யலாமல்லவா? இதையும் சற்று சிந்தனை செய்து பாருங்கள். இதற்கு வெளியூர் போகத் தேவையுமில்லை. பயணச் செலவும் தேவையில்லை. ஒரு நீளமான கம்பு மட்டும் போதும். காத்தான்குடியில் வீடு வீடாகச் சென்று அங்குள்ள பல்லிகளை அடித்துக் கொல்லுங்கள். இதில் உங்களுக்கும் நன்மையுண்டு. வீட்டவர்களுக்கும் நன்மையுண்டு. ஒரு வீட்டில் ஒட்டடை இருந்தால் அந்த வீட்டில் “முஸீபத்” துன்பம் இறங்குமென்று சொல்லப்பட்டுள்ளது. அதையும் நீங்கள் கருத்திற் கொள்ளலாமல்லவா?
உங்கள் குழுவை இரண்டு குழுக்களாக்கி ஒரு குழுவை تبليغ பணிக்கும், இன்னொரு குழுவை تَنْظِيْفْ பணிக்கும் நியமிக்கலாம்.