தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
اِرْحَمُوا مَنْ فِي الأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ
பூமியில் வாழும் உயிரினங்களுக்கு இரக்கம் காட்டுங்கள். வானத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு இரக்கம் காட்டுவார்கள் என்று எம் பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
பூமியிலுள்ள உயிரினங்களுக்கு இரக்கம், அன்பு காட்டுபவர்களுக்கு வானத்திலுள்ளவர்கள் – மலக்குகள் – அமரர்கள் அன்பு காட்டுவார்கள் என்று கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள்.
மேற்கண்ட ஹதீதில் اِرْحَمُوْا – “இர்ஹமூ” என்ற சொல்லும், يَرْحَم “யர்ஹம்” என்ற சொல்லும் வந்திருப்பது நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை நினைவு படுத்துகிறது. இது பரந்த அறிவுள்ளவர்களுக்கு விளங்குமென்று நினைக்கிறேன். ஏனெனில் وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ நாயகமே! உங்களை அகிலத்தார் அனைவருக்கும் “றஹ்மத்” அருளாகவே நான் அனுப்பினேன் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்.
மேற்கண்ட திரு வசனத்தை பின்வரும் ஹதீது உறுதிப்படுத்துகிறது.
قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَنْ يَدْخُلَ رِجْلَ أَحَدِكُمْ شَوْكَةٌ إِلَّا قَدْ وَجَدْتُ أَلَمَهُ
உங்களில் ஒருவனின் காலில் ஒரு முள் குத்தினாலும் அதன் வலியை நான் உணர்கிறேன் என்று அண்ணலெம் பெருமான் அஹ்மத் எங்கள் கோமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
அவர்கள் எறும்பு உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் இரக்கம், அன்பு காட்டுபவர்களாகவே இருந்துள்ளார்கள். அவர்கள் போல் படைப்புகளுக்கு – உயிரினங்களுக்கு அன்பு காட்ட ஒரு ஜீவன் உலகில் இல்லவே இல்லை.
வெளிநாடுகளில் வாழும் வெள்ளைக் காரர்கள் முஸ்லிம்களல்லாதவர்களாயிருந்தாலும் அவர்கள் போல் உயிரினங்களோடு அன்புள்ளோர் வேறு எந்த மதத்தைச் சேர்நதவர்களிலும் இல்லை என்று நிச்சயமாக நான் சொல்வேன்.
ஏனெனில் வெள்ளைக் காரர்கள் உயிரினங்களோடு அன்பு காட்டும் விதம் எம்மாத்திரம் என்பதை பல நிகழ்வுகளின் போது நான் நேரில் கண்டு வியந்திருக்கிறேன். மகிழ்ந்துமிருக்கிறேன்.
இவ்விடயத்தில் முஸ்லிம்களை விட வெள்ளைக்காரர்கள் நூறு வீதம் சிறந்தவர்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்கள் தமது உயிர் போன்றே ஏனைய உயிரினங்களையும் பார்க்கிறார்கள். அவற்றுக்கேற்படும் தாகத்தை தமக்கேற்படும் தாகமாகவும், அவற்றுக்கு ஏற்படுகின்ற பசியை தமக்கு ஏற்படுகின்ற பசியாகவும் உணர்ந்து செயல்படுகிறார்கள். தாம் சாப்பிடும் விலை உயர்ந்த உணவையே தமது வீட்டிலுள்ள நாய்க்கும், பூனைக்கும் கொடுக்கிறார்கள். தாம் அருந்தும் உயர் பானங்களையே அவைகளுக்கும் கொடுக்கிறார்கள். தமது படுக்கை போன்றே அவற்றுக்கும் படுக்கை வசதி செய்து கொடுக்கிறார்கள். குழந்தைப் பாக்கியம் இல்லாத வெள்ளையர்கள் தமது குழந்தைகள் போன்றே நாய், பூனைகளை வளர்க்கிறார்கள்.
லண்டனில் வீடுகளில் பூனை வளர்த்தால் அவற்றுக்கான உணவுச் செலவு, அவற்றைப் பராமரிப்பதற்காக யாருமிருந்தால் அவர்களுக்கான சம்பளம் – மாதக் கொடுப்பனவு எல்லாமே அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. வீட்டிலுள்ள உயிரினங்களுக்கு நோய் ஏற்பட்டால் அரசாங்கம் அதற்கான வைத்தியச் செலவையும் வழங்குகிறது.
கோடீஸ்வரர்களான வெள்ளையர்கள் தமது மறைவுக்குப் பின் தமது சொத்துக்களை பிள்ளைகளுக்கு எழுதுவது போல் தம்மிடமுள்ள நாய், பூனை போன்றவற்றுக்கும் எழுதி வைக்கிறார்கள்.
சுருங்கச் சொன்னால் வெள்ளையர்கள் உயிரினங்களுக்கு எல்லையற்ற அன்பு காட்டியே வளர்க்கிறார்கள்.
அவர்களிடமுள்ள பண்பாடு, உயிரினங்களுடனான அன்பு, இரக்கம் என்பன முஸ்லிம்களிடம் இல்லாதிருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
உயிரினங்களுக்கு இரக்கம் காட்டுதல், அன்பு செலுத்துதல் என்பன அல்லாஹ்வின் அன்பை இழுத்து வருகின்ற நற்செயல்களாகும். நாய், பூனை முதலான வீட்டில் வளரும் உயிரினங்களுக்கு உணவு வழங்குபவன், அவற்றின் பசி, தாகம் தீர்த்து வைப்பவன் பசி, தாகத்தால் ஒருபோதும் மரணிக்கமாட்டான்.
வெள்ளைக் காரர்கள் காட்டு வழிகளால் பயணிக்கும் வேளை மான், மரை போன்ற உயிரினங்கள் ஒரு ஒரு மர ஓட்டையில் மாட்டி வெளியேற முடியாமல் அவதிப்படுவதைக் கண்டால் அதைப் பார்த்துக் கொண்டு செல்லமாட்டார்கள். எந்த வன விலங்குகள் வாழும் அடர்ந்த, பயங்கரமான காடாயிருந்தாலும் கூட தமது வாகனத்தை நிறுத்திவிட்டு தமதுயிரை துச்சமாக நினைத்து அந்த உயிரைக் காப்பாற்றிய பின்புதான் அவர்கள் அந்த இடத்திலிருந்து வெளியேறுவார்கள். இவ்வாறு பல நிகழ்வுகளை நான் நேரில் பார்த்திருக்கிறேன். முஸ்லிம்களில் அதிகமானவர்களுக்கு இப்படியொரு மன நிலையும், துணிவும் ஏற்படுமென்று நான் நம்பவில்லை.
ஆயினும் எவராயினும் முஸ்லிம்களோ, மற்றவர்களோ காட்டு மிருகங்களான சிங்கம், கரடி, புலி சிறுத்தை, யானை முதலானவற்றை தமது வீட்டில் வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆயினும் பாதுகாப்புக்காக மட்டும் நாய் வளர்க்கலாம். அது இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்களின் மத்ஹபில் முழுமையான “நஜீஸ்” அசுத்தமாயிருப்பதால் வீட்டினுள் எடுக்காமல் வெளியில் ஒரு கட்டுப்பாட்டுடன் வளர்க்கலாம். பூனை எங்கேயும் வளர்க்க அனுமதியுண்டு. நபீ தோழர்களிற் சிலர் வளர்த்துள்ளார்கள். வீடுகளில் மானும் வளர்க்கலாம். மலைப் பாம்பு, சாதாரண பாம்பு, குரங்கு, சிங்கம், கரடி, புலி போன்றவற்றையும் முஸ்லிம்கள் வளர்ப்பதும், பிற மதத்தவர்கள் வளர்ப்பதும் உயிருக்கு ஆபத்தானதேயாகும். எவ்வாறு அன்பு காட்டி வளர்த்தாலும் கூட அது விலங்கினத்தைச் சேர்ந்தது. அதன் இயற்கை சுவாபம் சில நேரம் மிகைத்துவிடும். இவ்வாறு நடந்ததற்கு வரலாறுண்டு.
முஸ்லிம்களாகிய நாம் உயிரினங்கள் மீது இரக்கமுள்ளவர்களாக இருந்து கொள்ள வேண்டும். நாயாயினும், பூனையாயினும் அடித்தும், உணவு, நீர் கொடுக்காமல் பட்டினி பசியிலும், தாகத்திலும் போடுவது பெருங்குற்றமாகும்.
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «دَخَلَتِ امْرَأَةٌ النَّارَ فِي هِرَّةٍ رَبَطَتْهَا، فَلَمْ تُطْعِمْهَا، وَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ»
ஒரு பெண் ஒரு பூனையின் விடயத்தில் நரகம் சென்றாள். அவள் பூனையை கட்டி வைத்தாள். அதற்கு அவள் உணவு கொடுக்கவுமில்லை. அது தானாக வெளியே சென்று பூமியிலுள்ள அதன் உணவை உட்கொள்ள விடவுமில்லை என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
இதனால்தானோ என்னவோ பூனைப் பளி பொல்லாதது என்று மக்கள் பேசிக் கொள்வர்.